1. திருத்தந்தை : “அமைதியும் வார்த்தையும் : நற்செய்தி அறிவிப்பின் பாதை”
2. கிறிஸ்தவ சபைகளிடையே நட்புணர்வு அதிகரித்து வருவது மகிழ்ச்சி தருவதாக உள்ளது
3. கொல்கத்தாவின் St.Xavier கல்லூரியை தன்னாட்சிப் பல்கலைக்கழகமாக மாற்ற முதல்வர் விருப்பம்
4. அதிகாரப் பூர்வமற்ற கிறிஸ்தவக் குழுக்கள் பாகிஸ்தான் கிறிஸ்தவர்களிடையே பிளவுகளை உருவாக்கி வருகின்றன
5. இசுலாமிய தீவிரவாதக் குழுவின் தாக்குதல் குறித்து நைஜீரிய ஆயர்கள் கவலை
6. பொருளாதார வளர்ச்சி தக்க வைக்கப்பட அடுத்த பத்து ஆண்டுகளில் 60 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்
7. நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தநாள நோய் வரும் வாய்ப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
------------------------------ ------------------------------ ------------------------------ -
1. திருத்தந்தை : “அமைதியும் வார்த்தையும் : நற்செய்தி அறிவிப்பின் பாதை”
சன.24,2012. ஒருவர் ஒருவருடன் நன்கு தொடர்பு கொள்வதற்கு அமைதி மிகவும் முக்கியம் என்றும், ஒவ்வொருவரும் தங்களை அமைதிப்படுத்த வேண்டுமெனவும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியுள்ளார்.
வருகிற மே மாதம் 20ம் தேதி சிறப்பிக்கப்படும் 46வது அனைத்துலக சமூகத் தொடர்பு நாளுக்கெனச் செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை, இணையதளங்கள் மற்றும் 24 மணிநேர செய்திகளால் நிறைந்துள்ள இவ்வுலகில், நினைப்பதற்கும் சிந்திப்பதற்கும் ஒதுக்கப்படும் விலைமதிப்பற்ற நேரம், மிகுந்த மதிப்பைக் கொண்டிருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
பிறர் தங்களிடம் சொல்வதையும், தாங்கள் பிறரிடம் சொல்வதையும் சிந்திப்பதற்கு மக்கள் அதிக நேரம் கொடுப்பதன் மூலம், பிறர் சொல்வதைக் கேட்பதற்கும், பிறரோடு நன்கு தொடர்பு கொள்வதற்கும் சிறிது மௌனம் காப்பது உதவியாக இருக்கின்றது என்று அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
அமைதி காப்பதன் மூலம், பிறர் பேசவும், பிறர் தன்னைப் பற்றி வெளிப்படுத்தவும் நாம் அவர்களை அனுமதிக்கிறோம், அதேசமயம், நாம் நமது வார்த்தைகளுக்கும் கருத்துக்களுக்கும் மட்டும் உட்பட்டு இருப்பதைத் தவிர்க்கிறோம் என்றும் அச்செய்தி கூறிகிறது.
மகிழ்ச்சியும் ஏக்கமும் துன்பமும் அமைதியில் வெளிப்படுத்தப்பட முடியும் எனவும், உண்மையில் இவ்வமைதி, தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு வல்லமைமிக்க வழியாக இருக்கின்றது எனவும் திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.
அமைதியும் வார்த்தையும் சமூகத் தொடர்பின் இரு கூறுகள் என்றுரைத்துள்ள திருத்தந்தை, மக்களுக்கிடையே உண்மையான உரையாடலும், ஆழமான உறவும் ஏற்பட வேண்டுமெனில், அமைதியும் வார்த்தையும் எப்பொழுதும் சமத்துவநிலையில் வைக்கப்பட வேண்டும், ஒன்றுடன் ஒன்று இணைந்து செல்வதாய் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
சிலவேளைகளில், மிக முக்கிய உண்மையான தொடர்பு, ஆழ்ந்த அமைதியில் இடம் பெறுகின்றது, அன்பு செய்யும் மனிதருக்கு இடையே இடம் பெறும் அடையாளங்கள், முகபாவனைகள், உடல்மொழி ஆகியவற்றால் ஒருவர் ஒருவருக்குத் தங்களை வெளிப்படுத்துகின்றனர் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
செபத்திற்கும், தியானத்திற்கும், இறைவனோடு அமைதியில் உறவாடவும் அமைதி உதவுகின்றது என்றும் அவரின் செய்தி கூறுகின்றது.
“அமைதியும் வார்த்தையும் : நற்செய்தி அறிவிப்பின் பாதை” என்ற தலைப்பில் திருத்தந்தை வெளியிட்டுள்ள இச்செய்தியை, திருப்பீட சமூகத்தொடர்பு அவைத் தலைவர் பேராயர் Claudio Maria Celli தலைமையிலான குழு இச்செவ்வாயன்று நிருபர் கூட்டத்தில் வெளியிட்டது.
பத்திரிகையாளரின் பாதுகாவலராகிய புனித பிரான்சிஸ் தெ சேல்ஸ் விழாவான சனவரி 24ம் தேதி திருத்தந்தையின் உலக சமூகத் தொடர்பு நாளுக்கான செய்தி ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. உலக சமூகத் தொடர்பு நாள், கத்தோலிக்கத் திருஅவையில் தூய ஆவிப் பெருவிழாவுக்கு முந்தைய ஞாயிறு சிறப்பிக்கப்படுகின்றது.
84 வயதாகும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தன்னிலே அமைதியானவர், மெதுவாகப் பேசுபவர், பிறர் சொல்வதை நன்கு உற்றுக் கேட்பவர், இறையியலாளர் மற்றும் இசைப்பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
2. கிறிஸ்தவ சபைகளிடையே நட்புணர்வு அதிகரித்து வருவது மகிழ்ச்சி தருவதாக உள்ளது
சன.24,2012. கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவிப்பதற்கு, சந்தேகம், சோம்பல், பொறுமையின்மை என்ற மூன்று எதிரிகளையும் வெற்றிகாண வேண்டிய அவசியம் உள்ளது என்றார் பிரிட்டன் கர்தினால் Cormac Murphy-O'Connor.
கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கு எதிராகச் செயல்படும் இம்மூன்று எதிரிகளையும் வெற்றி கொள்வதோடு, இவ்வொன்றிப்பிற்காகத் தொடர்ந்து செபிப்பதும் கிறிஸ்தவர்களின் கடமை என்றார் கர்தினால் O'Connor.
கிறிஸ்தவ ஒன்றிப்புக் கனவு உயிரோட்டமுடையதாக இருக்க வேண்டுமெனில் செபமும், மக்களிடையே ஒன்றிப்பு முயற்சிகளும் இன்றியமையாதவை என்ற அவர், அண்மைக் காலங்களில் கிறிஸ்தவ சபைகளிடையே நட்புணர்வு அதிகரித்து வருவது மகிழ்ச்சி தரும் ஒன்றாக உள்ளது என்றார்.
உலகாயுதப் போக்குகளால் கவரப்பட்டுள்ள இவ்வுலகிற்கு கிறிஸ்தவர்களின் ஒன்றிணைந்த சாட்சியத்தின் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார் கர்தினால் O'Connor.
கருவில் உருவானது முதல் இயற்கை மரணம் வரை வாழ்வைப் பாதுகாத்தல், ஏழை எளியோருக்கு உதவுதல், குடும்பங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுதல் போன்றவைகள் குறித்தும் தன் கருத்துக்களை வழங்கி, அவைகளில் அனைத்துக் கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிணைந்த பணியையும் வலியுறுத்தினார் இங்கிலாந்து கர்தினால் O'Connor.
3. கொல்கத்தாவின் St.Xavier கல்லூரியை தன்னாட்சிப் பல்கலைக்கழகமாக மாற்ற முதல்வர் விருப்பம்
சன.24,2012. கொல்கத்தாவில் இயேசு சபையினரால் நடத்தப்படும் St Xavier கல்லூரி, தன்னாட்சிப் பல்கலைக்கழகமாக மாற விரும்பினால் அதற்கு அரசு தன்னாலான உதவியைச் செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மமதா பேனர்ஜி.
இம்மாநிலத்தின் முதல் தன்னாட்சிப் பலகலைக்கழகமாக செயின்ட் சேவியர் கல்லூரி மாற வேண்டும் எனத் தான் ஆவல் கொள்வதாகவும் கூறிய அவர், கலகத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுரஞ்சன் தாஸ் இதற்கான பரிசீலனைகளைத் துவக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த இயேசு சபை கல்லூரியை மேலும் விரிவுபடுத்த நிலம் ஒதுக்குவது குறித்துத் தான் ஆலோசித்து வருவதாகவும் கூறினார் முதல்வர் பேனர்ஜி.
பெல்ஜியம் இயேசு சபையினரால் 151 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்கத்தாவில் துவக்கப்பட்ட இக்கல்லூரி, இந்தியாவில் தர வரிசையில் முதல் 10 கல்லூரிகளுள் ஒன்றாக உள்ளது.
4. அதிகாரப் பூர்வமற்ற கிறிஸ்தவக் குழுக்கள் பாகிஸ்தான் கிறிஸ்தவர்களிடையே பிளவுகளை உருவாக்கி வருகின்றன
சன.24,2012. பாகிஸ்தான் நாட்டில் வியாபார நோக்குடன் செயல்படும் அதிகாரப் பூர்வமற்ற கிறிஸ்தவக் குழுக்கள், கிறிஸ்தவர்களிடையே பிளவுகளை உருவாக்கி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளன அந்நாட்டுக் கிறிஸ்தவ சபைகள்.
பாகிஸ்தானில் தங்களைத் தாங்களே குருக்களாகவும் ஆயர்களாகவும் அறிவித்துச் செயல்படும் சில கிறிஸ்தவக் குழுக்களின் நடவடிக்கைகளால், கிறிஸ்தவர்கள் குறித்த தப்பெண்ணம் பரவி வருவதாக உரைத்த அந்நாட்டின் கத்தோலிக்க மற்றும் பிரிந்த கிறிஸ்தவ சபைத் தலைவர்கள், இத்தகைய சவால்களை எதிர்கொள்ள கிறிஸ்தவ சபைகளிடையே கூட்டுக்குழு ஒன்று உருவாக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.
வன்முறைகளால் எழும் பிரச்னைகளைச் சமாளிக்கவும் கிறிஸ்தவ சபைகளிடையே கூட்டுக்குழு ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்ற அழைப்பும் முன்வைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் மத அடிப்படையிலான பாகுபாட்டு நிலைகளாலும் தீவிரவாதப் போக்குகளாலும் பல ஆண்டுகளாகப் பிரச்னைகளை அனுபவித்து வரும் கிறிஸ்தவ சபைகள், தற்போது சில அதிக்கரப்பூர்வமற்ற கிறிஸ்தவக் குழுக்களினால் எழும் சவால்களையும் சமாளிக்க வேண்டியுள்ளது என்றார் கிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் கத்தோலிக்க குரு ஒருவர்.
5. இசுலாமிய தீவிரவாதக் குழுவின் தாக்குதல் குறித்து நைஜீரிய ஆயர்கள் கவலை
சன 24, 2012. நைஜீரியாவின் வடக்கு நகர் ஒன்றில் இசுலாமியத் தீவிரவாதக் குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது, ஆழமான சமூகப் பிரிவினைகளுக்கும் மக்கள் குடிபெயர்வுக்கும் இட்டுச்செல்லும் அபாயம் இருப்பதாக, தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டின் இரு ஆயர்கள்.
ஒன்றிணைந்த நைஜீரிய நாட்டிற்கான நம்பிக்கையை இத்தகைய நிகழ்வுகள் சிதைப்பதாக உள்ளன என்றார் அந்நாட்டு பேராயர் Ignatius Ayau Kaigama.
இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் வடபகுதியில் இசுலாமிய சட்டத்தை புகுத்த முயலும் ஒரு தீவிரவாதக் குழு, Kano என்ற நகரை கடந்த வார இறுதியில் தாக்கியதில் 150க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பான்மையினோர் இசுலாமியர்.
அரசு கட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலில் சில திருஅவைக் கட்டிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன என்றார் Kano நகர் ஆயர் John Namaza Niyiring.
இத்தகையத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக மேலும் வன்முறைகள் தலைதூக்கலாம் என்ற தன் அச்சத்தையும் வெளியிட்டுள்ளார் பேராயர் Kaigama.
6. பொருளாதார வளர்ச்சி தக்க வைக்கப்பட அடுத்த பத்து ஆண்டுகளில் 60 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்
சன.24,2012. உலகில் பொருளாதார வளர்ச்சி தக்கவைக்கப்பட வேண்டுமெனில் அடுத்த பத்து ஆண்டுகளில் 60 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என அறிவித்துள்ளது ஐ.நா. அமைப்பு.
உலகில், அதிலும் குறிப்பாக வளரும் நாடுகளில், குறைந்த ஊதியத்துடன் வேலையில் அமர்த்தப்பட்டுள்ள 90 கோடிப் பேருக்கு, நியாயமான வேலைகளை உருவாக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைக்கும் ஐநாவின் ILO என்ற அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பு, பொருளாதார வளர்ச்சி உலகில் தக்கவைக்கப்படவேண்டுமெனில், வரும் 10 ஆண்டுகளில் 60 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.
அண்மைப் பொருளாதார நெருக்கடிகளால் 20 கோடிப் பேர் வேலை வாய்ப்பின்றி இருப்பதையும் ILO அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
7. நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தநாள நோய் வரும் வாய்ப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
சன.24,2012. "நீரிழிவு நோயாளிகளில் 15 விழுக்காட்டினர், இரத்தநாள நோய்க்கு ஆளாகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் தங்கள் கால்களை இழக்க நேரிடுகிறது' என, மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையின், இரத்தநாளங்கள் மற்றும் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை நிபுணர் சரவணன் தெரிவித்தார்.
இந்தியாவில், ஆறு கோடியே, 20 இலட்சம் பேருக்கு, நீரிழிவு நோயும், ஏழு கோடியே, 70 இலட்சம் பேருக்கு, இந்நோய் வருவதற்கான அறிகுறியும் உள்ளதென நிருபர்களிடம் கூறிய அவர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 15 விழுக்காட்டினர் "பெரிபரல் வாஸ்குலர்' எனப்படும், இரத்தநாள நோய்க்கு ஆளாகின்றனர் என்றும் கூறினார்.
இவர்களுக்கு, இதயத்திலிருந்து கால்களுக்கு இரத்தம் செல்லப் பயன்படும் இரத்தக் குழாய்கள் பாதிப்படைந்து, கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடுகிறது. உணர்ச்சியற்ற நிலையில் உள்ள கால்களில், எளிதில் புண்கள் ஏற்பட்டு, நோயாளிகள் தங்கள் கால் விரல்களையோ, காலையோ இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றும் சரவணன் கூறினார்.
நடக்கும்போது காலில் ஏற்படும் வலி, கால் மற்றும் கால் விரல்களின் நிறம் மாறுவது போன்றவை, இந்நோய்க்கான பொதுவான அறிகுறிகள். இந்நோய் முற்றிய நோயாளிகளை, "எண்டோவாஸ்குலர், ஆஞ்சியோபிளாஸ்டிக், ஸ்டென்ட்ஸ்' போன்ற நவீன சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் இந்நோயால் சுமார் ஒரு கோடிப் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
No comments:
Post a Comment