1. மும்பை துணை ஆயர் Penhaவின் பணி ஓய்வைத் திருத்தந்தை ஏற்றார்
2. எல்லா இடங்களிலும் மனிதரின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது திருஅவையின் பணி - திருப்பீடச் செயலர்
3. இந்தியாவில், கடந்த ஆண்டில் இரண்டாயிரத்துக்கு அதிகமானக் கிறிஸ்தவர்கள், அடக்குமுறைகளை எதிர்நோக்கினர் – CSF அறிக்கை
4. காஷ்மீர் இசுலாமிய நீதிமன்றம், ஒரு கத்தோலிக்க மறைபோதகர் மற்றும் ஒரு பிரிந்த கிறிஸ்தவசபை போதகர் மீது புகார்
5. 650 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பதற்கு மியான்மார் திருஅவை வரவேற்பு
6. “உரையாடலில் ஆசியக் கலாச்சாரங்கள்” : ஆசிய வல்லுனர்கள் கூட்டம்
7. திருத்தந்தையின் அமைதியின் விழுமியங்களை நேபாளக் கத்தோலிக்கப் பள்ளிகள் கடந்த 60 வருடங்களாகப் போதித்து வருகின்றன
8. ஆசிய-பசிபிக் பகுதியில், தரமான கல்வியை வழங்குவதற்கு யூனிசெப் முயற்சி
9. இந்தியாவில் அரசு நிர்வாகப் பணியிலுள்ள அதிகாரிகள், திறமை குறைந்தவர்கள் - ஹாங்காங் கன்சல்டன்ஸி நிறுவனம் கணிப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ----------------------
1. மும்பை துணை ஆயர் Penhaவின் பணி ஓய்வைத் திருத்தந்தை ஏற்றார்
சன.14,2012. மும்பை உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராகப் பணியாற்றிய ஆயர் Bosco Penha அவர்கள் பணி ஓய்வு பெறுவதை இச்சனிக்கிழமை ஏற்றுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருஅவைச் சட்டம் எண்கள் 411 மற்றும் 401.1ன்படி ஆயர் Bosco Penha அவர்களின் பணி ஓய்வை ஏற்றுள்ளார் திருத்தந்தை.
2. எல்லா இடங்களிலும் மனிதரின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது திருஅவையின் பணி - திருப்பீடச் செயலர்
சன.14,2012. எல்லா இடங்களிலும், எல்லாக் காலங்களிலும் மனிதரின் அடிப்படை உரிமைகளையும் கடமைகளையும் பாதுகாத்து அவற்றை அறிவிக்க வேண்டியது திருஅவையின் பணியாக இருக்கின்றது என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே கூறினார்.
வத்திக்கான் நாட்டின் நீதித்துறை அமைப்பின் ஆண்டுத் தொடக்கவிழாத் திருப்பலியை இச்சனிக்கிழமை நிகழ்த்தி மறையுரையாற்றிய கர்தினால் பெர்த்தோனே, மனிதரின் அடிப்படை உரிமைகளையும் கடமைகளையும் பாதுகாத்து அவற்றை அறிவிப்பதில், திருஅவைப் பணியாளர்கள் எடுத்துக்காட்டாய்த் துலங்குமாறும் வலியுறுத்தினார்.
வத்திக்கான் நாட்டின் நீதித்துறை அமைப்பில் பணியாற்றுவோர், திருஅவையின் இப்பணியில் ஒத்துழைப்பு கொடுத்து உலகில் திருஅவையின் சாட்சிகளாக வாழவேண்டிய பொறுப்பையும் கொண்டுள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வுலகில் கடவுளின் அன்பு மற்றும் நீதியின் அடையாளமாகவும், அவற்றின் கருவிகளாகவும் வாழ அழைக்கப்பட்டுள்ளதையும் கர்தினால் நினைவுபடுத்தினார்.
3. இந்தியாவில், கடந்த ஆண்டில் இரண்டாயிரத்துக்கு அதிகமானக் கிறிஸ்தவர்கள், அடக்குமுறைகளை எதிர்நோக்கினர் – CSF அறிக்கை
சன.14,2012. இந்தியாவில், கடந்த ஆண்டில் 2141 கிறிஸ்தவர்கள், காழ்ப்புணர்வையும், தாக்குதல்களையும் அடக்குமுறைகளையும் எதிர்நோக்கினர் என்று "Catholic Secular Forum" (CSF) என்ற ஓர் அமைப்பு வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் அவர்களின் ஆதரவுடன், இந்தியக் கத்தோலிக்கரால் ஆரம்பிக்கப்பட்ட CSF என்ற இந்தக் கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைப்பு, 2011ம் ஆண்டில் இந்தியாவில் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கிய அடக்குமுறைகள் குறித்து வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில், இந்துத் தீவிரவாதக் குழுக்களால் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள், 2012ம் ஆண்டில் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு 3 முதல் 5 என நடத்தப்பட்ட தாக்குதல்களில், குறைந்தது ஆயிரம் கிறிஸ்தவக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
கிறிஸ்தவ மறைபோதகர்கள், கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்கள், இது இந்துமதத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது என்று இந்துத் தீவிரவாதக் குழுக்கள் கூறிவருவது உண்மையல்ல என்று கூறும் இவ்வறிக்கை, 1972ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 2.6 விழுக்காடாக இருந்த கிறிஸ்தவர்கள், 1981ம் ஆண்டில் 2.44 விழுக்காடாகவும், 2001ம் ஆண்டில் 2.30 விழுக்காடாகவும் குறைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கிறது.
4. காஷ்மீர் இசுலாமிய நீதிமன்றம், ஒரு கத்தோலிக்க மறைபோதகர் மற்றும் ஒரு பிரிந்த கிறிஸ்தவசபை போதகர் மீது புகார்
சன.14,2012. இந்தியாவின் காஷ்மீரில் மதமாற்றப் பணிகளில் ஈடுபட்டார்கள் என்று சொல்லி, ஒரு கத்தோலிக்க மறைபோதகர் மற்றும் ஒரு பிரிந்த கிறிஸ்தவசபை போதகர் மீது குற்றம் சாட்டியுள்ளது காஷ்மீரிலுள்ள இசுலாமிய நீதிமன்றம்.
இந்நடவடிக்கை, கிறிஸ்தவர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது என்று CSF அமைப்பு வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள கத்தோலிக்க மறைபோதகரான அருள்தந்தை Jim Borst, காஷ்மீர் மக்களின் முன்னேற்றத்திற்காக ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளாக உழைத்து வருபவர். புனித வளன் மில்கில் சபையைச் சேர்ந்த இக்குருமீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் பொய்யானது என்றும், பல முஸ்லீம் தலைவர்கள் இக்குரு நடத்தும் பள்ளியில் பயின்றவர்கள் என்றும் இவ்வறிக்கை கூறுகின்றது.
காஷ்மீரில் தனிமனிதச் சுதந்திரமும் சமய சுதந்திரமும் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றன என்று அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.
மேலும், குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரிந்த கிறிஸ்தவசபைப் போதகர் Chander Mani Khanna, 15 இளம் முஸ்லீம் சிறுவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்தார் என்று சொல்லி கைது செய்யப்பட்டுள்ளார் என்று பீதெஸ் நிறுவனம் கூறுகிறது.
5. 650 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பதற்கு மியான்மார் திருஅவை வரவேற்பு
சன.14,2012. மியான்மார் அரசுத்தலைவர் தெய்ன் செய்ன் அறிவித்த பொது மன்னிப்பின்கீழ், 650 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பதை வரவேற்றுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
இவ்வெள்ளியன்று யான்கூனில் பொதுக்கூட்டத்தை நிறைவு செய்த மியான்மார் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையத் தலைவர் ஆயர் Raymond Saw Po Ray, அரசின் இந்நடவடிக்கை, அந்நாட்டில் தனிமனித சுதந்திரம் மதிக்கப்படுவதில் மேலும் முன்னேற்றத்தைக் கொண்டுவரும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.
மியான்மாரில் அமைதி, சுதந்திரம் மற்றும் நீதியுடன்கூடிய வருங்காலத்தைக் கட்டி எழுப்புவதில் தலத்திருஅவையும், கிறிஸ்தவர்களும் முக்கியமான அங்கம் வகிப்பார்கள் என்பதில் தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் ஆயர் போ ராய் கூறினார்.
மியான்மாரில் மனச்சான்றின் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பது, பன்னாட்டுச் சமூகம் வலியுறுத்தி வரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மியான்மார் அரசு விடுதலை செய்துள்ள 650 கைதிகளில் 302 பேர் அரசியல் கைதிகள் என்று இச்சனிக்கிழமை உள்விவகாரத்துறை அமைச்சர் Ko Ko கூறியுள்ளார்.
6. “உரையாடலில் ஆசியக் கலாச்சாரங்கள்” : ஆசிய வல்லுனர்கள் கூட்டம்
சன.14,2012. ஆசியச் சமுதாயம், தற்போது எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது பற்றியும், அச்சமுதாயத்தின் தற்போதைய தேவைகளை நிறைவேற்றுவது பற்றியும் ஆசியப் பல்சமயக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இவ்வெள்ளியன்று பாங்காக்கில் முடிவடைந்த மூன்று நாள் கூட்டத்தில் கிறிஸ்தவம், புத்தம், இந்து, இசுலாம், கன்பூசியம், ஜைனம், தாவோயிசம், இன்னும் பிற மரபு மதங்களின் பிரதிநிதிகள் என சுமார் 50 வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் குவாஹாட்டி பேராயர் தாமஸ் மெனாம்பரம்பில் முன்னின்று நடத்திய இக்கூட்டத்தில், பன்மைக் கலாச்சாரத்தையும் பல்சமய உரையாடலையும் ஊக்குவிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
7. திருத்தந்தையின் அமைதியின் விழுமியங்களை நேபாளக் கத்தோலிக்கப் பள்ளிகள் கடந்த 60 வருடங்களாகப் போதித்து வருகின்றன
சன.14,2012. நேபாளத்தில் கடந்த அறுபது ஆண்டுகளாக கத்தோலிக்கப் பள்ளிகள், அமைதி மற்றும் நீதியின் விழுமியங்களைக் கற்பித்து வருவதால் அவை சிறந்த பள்ளிகளாக நோக்கப்படுகின்றன என்று நேபாள இயேசு சபை வட்டார அதிபர் கூறினார்.
நேபாளத்தில் கடந்த 35 ஆண்டுகளாக கல்விப் பணியில் ஈடுபட்டுள்ள இயேசு சபை அருள்தந்தை இலாரன்ஸ் மணியார் ஆசியச் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், இத்தகைய விழுமியங்களின் அடிப்படையில் செயல்படாத பள்ளிகளில், சிறுபான்மையினர்மீது இந்துத் தீவிரவாதமும் சகிப்பற்றதன்மையும் பரவலாகக் காணப்படுகின்றன என்று கூறினார்.
நேபாள அரசர் பிரேந்திராவும் அரசி ஐஸ்வரியாவும், இந்தியாவின் டார்ஜிலிங் மற்றும் கர்சியாங்கிலுள்ள இயேசு சபைப் பள்ளிகளில் கற்றதன் பயனாக, 1950ம் ஆண்டில் நேபாளத்தில் பள்ளியைத் திறக்க இயேசு சபையினர் அழைக்கப்பட்டனர். தற்சமயம் இயேசு சபையினர், நேபாளத்தில் 33 நடுத்தரப் பள்ளிகள், நான்கு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரியை நடத்துகின்றனர்.
நேபாளத்தின் 2 கோடியே 90 இலட்சம் மக்களில், 3 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.
8. ஆசிய-பசிபிக் பகுதியில், தரமான கல்வியை வழங்குவதற்கு யூனிசெப் முயற்சி
சன.14,2012. ஆசிய-பசிபிக் பகுதியில், சிறார் பள்ளிக்குச் செல்வதற்கும், அவர்கள் தரமான கல்வியைப் பெறுவதற்கும் ஐ.நா.வின் சிறார் நிதி நிறுவனமான யூனிசெப் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையின் மூலம், ஆசிய-பசிபிக் பகுதியில் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் சுமார் 2 கோடியே 60 இலட்சம் சிறார் பலன் அடைவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
பங்களாதேஷ், பூட்டான், சீனா, இந்தியா, லாவோஸ், மங்கோலியா, நேபாளம், பாப்புவா நியு கினி, பிலிப்பீன்ஸ், கிழக்குத் திமோர், வியட்நாம் போன்ற நாடுகள், யூனிசெப் நிறுவனத்தின் இந்நடவடிக்கையால் பலன் பெறும் என்றும் ஐ.நா. கூறியுள்ளது.
9. இந்தியாவில் அரசு நிர்வாகப் பணியிலுள்ள அதிகாரிகள், திறமை குறைந்தவர்கள் - ஹாங்காங் கன்சல்டன்ஸி நிறுவனம் கணிப்பு
சன.14,2012. இந்தியாவில் அரசு நிர்வாகப் பணியிலுள்ள அதிகாரிகள், ஆசியாவிலுள்ள மற்ற எந்த நாட்டைக் காட்டிலும் திறமை குறைந்தவர்களாக உள்ளனர் என ஹாங் காங்கைச் சார்ந்த அரசியல் மற்றும் பொருளாதார கன்சல்டன்ஸி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆசிய நாடுகளின் அரசு அமைப்பு முறை, அதிகாரிகளின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறமையற்ற அதிகாரிகள் உள்ள பட்டியலில் 10 புள்ளிகளுக்கு 9.21 புள்ளிகள் பெற்று இந்தியாதான் முதல் இடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து வியட்நாம் (8.54), இந்தோனேசியா (8.37), பிலிப்பின்ஸ் (7.57), சீனா (7.11), மலேசியா (5.89), தென் கொரியா (5.87), ஜப்பான் (5.77), தைவான் (5.57), தாய்லாந்து (5.25), ஹாங் காங் (3.53), சிங்கப்பூர் (2.25) ஆகிய நாடுகள் வருகின்றன என அதில் மேலும் கூறப்பட்டுள்ளது
இந்தியாவைப் பொறுத்தமட்டில் அந்நாடு சந்தித்து வரும் ஊழல், உள்கட்டமைப்பு பற்றாக்குறை உள்ளிட்ட முக்கியமான பிரச்சனைகள் அனைத்துக்கும் அதிகாரிகளின் திறன் குறைவே காரணம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அதிகாரிகளில் பெரும்பாலானோர் இரகசியமாக கையூட்டு வாங்குபவர்களாகவும், தனியார் நிறுவனங்களுக்கு உதவி செய்து ஆதாயம் அடைபவர்களாகவும் இருக்கின்றனர். இதுபோன்ற அதிகாரிகளுடன் தனியார் நிறுவனங்களும் இணங்கிச் சென்று அதிக ஆதாயம் அடைகின்றன. அவர்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன என மேலும் அதில் கூறப்பட்டுள்ளது.
தாங்கள் எடுக்கும் முடிவு எதிர்பார்த்த பலனைக் கொடுக்காதபோது, அதற்குத் தார்மீகப் பொறுப்பேற்கும் மனப்பக்குவமும் இந்திய அதிகாரிகளுக்கு இல்லை. தங்களது முடிவு தவறாக இருந்தாலும் அதை நியாயப்படுத்துவதில்தான் முனைப்புகாட்டுகின்றனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment