1. இந்திய ஆயர் பேரவைக்கூட்டம் பங்களூருவில் இப்புதனன்று துவங்குகிறது
2. சீனாவில் மேலும் ஐந்து குருக்கள் கைது
3. கிறிஸ்தவர்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்படும் என வாக்குறுதியளித்துள்ளார் கர்நாடக முதல்வர்
4. பெங்களூருவில் இயேசு சபை கல்லூரி மீது தாக்குதல்
5. கிறிஸ்தவப்பள்ளிகள் மீதான இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்கள் குறித்து தலத்திருஅவை கவலை
6. உண்ணாநோன்பிற்கும் செபத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளன நாகாலாந்து கிறிஸ்தவ சபைகள்
7. முன்னாள் சர்வதிகாரி மீது விசாரணைகள் துவக்கப்பட்டுள்ளது குறித்து குவாத்தமாலா திருஅவை மகிழ்ச்சி
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. இந்திய ஆயர் பேரவைக்கூட்டம் பங்களூருவில் இப்புதனன்று துவங்குகிறது
சன.31,2012. 'சிறப்பானதொரு இந்தியாவைக் கட்டியெழுப்புவதில் திருஅவையின் பங்கு' என்ற தலைப்பில் இப்புதன் முதல் அடுத்த புதன் வரை இந்திய கத்தோலிக்க ஆயர்களின் எட்டு நாள் கூட்டம் பெங்களூருவில் இடம்பெறுகிறது.
இந்திய ஆயர் பேரவைத் தலைமையகம் டெல்லியிலிருந்து செயலாற்றி வருவதன் ஐம்பதாவது ஆண்டும், கத்தோலிக்க காரித்தாஸ் பிறரன்பு அமைப்பின் ஐம்பதாவது ஆண்டும் நடப்பாண்டில் சிறப்பிக்கப்படுவதையொட்டி இக்கூட்டத்திற்கான தலைப்பு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார் இந்திய ஆயர் பேரவையின் துணைப் பொதுச்செயலர் குரு தாமஸ் செக்குய்ரா.
1962ம் ஆண்டில் இந்திய ஆயர் பேரவையின் தலைமையகம் பெங்களூருவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது.
இந்தியாவிற்கான திருப்பீடத் தூதுவர் பேராயர் சல்வத்தோரே பென்னாக்கியோ துவக்கி வைக்கும் இக்கூட்டத்தில், இந்தியாவின் 160 ஆயர்களுடன் திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி அவை தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சனும் கலந்து கொள்கிறார்.
2. சீனாவில் மேலும் ஐந்து குருக்கள் கைது
சன.31,2012. திருத்தந்தைக்கு விசுவாசமாக இருப்பதால் மறைந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சீனக் கத்தோலிக்கத் திருஅவையின் ஐந்து குருக்கள் இத்திங்களன்று சீன மங்கோலிய எல்லைக்கருகே காவல்துறையால் கைது செய்யப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அப்பகுதி திருஅவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் Suiyuan மறைமாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள் ஐந்து பேரும் ஒரு பொதுநிலையினரின் வீட்டில் கூடி, குருக்களின் பணியிட மாற்றங்கள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தபோது அங்கு புகுந்த 30 காவல் துறையினர் அவர்களைக் கைது செய்து, மறைவான இடத்தில் சிறை வைத்துள்ளனர்.
Erenhot என்ற நகரில் கைது செய்யப்பட்ட இந்த ஐந்து பேரில் ஒருவர் Suiyuan மறைமாவட்ட நிர்வாகி, இன்னொருவர் குருமட அதிபர், மற்ற மூவரும் பங்கு குருக்களாவர்.
Suiyuan மறைமாவட்டத்தில் அரசின் கீழ் இயங்கும் கிறிஸ்தவ சபையில் சேராமல் திருத்தந்தைக்கு விசுவாசமாக இருந்து பணியாற்றும் 30 குருக்களுள் தற்போது 5 பேர் அரசால் கைது செய்யப்பட்டுள்ளது சீனக் கத்தோலிக்கரிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது.
3. கிறிஸ்தவர்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்படும் என வாக்குறுதியளித்துள்ளார் கர்நாடக முதல்வர்
சன.31,2012. 2012-13ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் கிறிஸ்தவர்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்படும் என இஞ்ஞாயிறன்று வாக்குறுதியளித்தார் கர்நாடக முதல்வர் சதானந்த கௌடா.
2011-12ம் நிதியாண்டில் கிறிஸ்தவ வளர்ச்சிப் பணி அவைக்கென ஒதுக்கப்பட்ட 50 கோடி ரூபாயில் 35 கோடி தற்போது வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதியுள்ளது அடுத்த இரண்டு மாதங்களில் வழங்கப்படும் எனவும் உரைத்த கர்நாடக முதல்வர், 2012-13ம் நிதி ஆண்டில் இந்த ஒதுக்கீடு இன்னும் அதிகமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
இதற்கிடையே, அரசு வழங்கும் இந்நிதி ஒதுக்கீடு கிறிஸ்தவ சமூகத்தை விலைக்கு வாங்கும் நோக்கமுடையதாக இருக்கக்கூடாது, ஏனெனில் இதைவிட அதிக அளவு தொகையை, கர்நாடகாவில் சமூகப் பணிகளுக்கென கிறிஸ்தவ சபைகள் செலவழிக்கின்றன என்றார் கிறிஸ்தவ சமூகக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் ஜோசப் டயஸ்.
இத்தகைய சிறு சலுகைகள் வழங்கப்படுவதை விட கர்நாடக கிறிஸ்தவர்களின் உரிமைகள் மதிக்கப்பட்டு அவர்களுக்கு மத சுதந்திரம் வழங்கப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் அவர்.
4. பெங்களூருவில் இயேசு சபை கல்லூரி மீது தாக்குதல்
சன.31,2012. குடியரசு தினத்தன்று தேசியக்கொடியை ஏற்றவில்லை என்ற பொய்க் குற்றச்சாட்டுடன் கர்நாடக மாநிலத்தில் இயேசு சபை கல்லூரி ஒன்றை தாக்கியுள்ளது இந்து தீவிரவாத குழு ஒன்று.
சமூகக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் இக்கல்லூரியின் தலைமை நிறுவனமான Jnana Jyoti கட்டிடத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டிருந்த போதிலும், கொடியேற்றவில்லை என்ற குற்றாச்சாட்டுடன் இக்கும்பல் பங்களூருவுக்கு 40 கிலோ மீட்டர் தெற்கேயுள்ள St.Joseph Anegal கல்லூரிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதுடன், கல்லூரி அதிபரையும் தாக்க முயன்றுள்ளது.
இத்தீவிரவாதிகளின் தாக்குதலின்போது அதைப் பார்த்து மௌனம் காத்த காவல்துறை, அவர்களின் நிர்ப்பந்தத்தின் பேரில் அதிபர் குரு Melvin Mendoncaவை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று 9மணி நேரம் அங்ககேயே உட்கார வைத்து விசாரணை செய்துள்ளது.
இந்தத் தீவிரவாதக் குழுக்களின் நோக்கம் தேசியக் கொடிக்கு மரியாதை அளிப்பதல்ல, மாறாக, தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு தாங்கள் ஆற்றிவரும் சேவையைத் தடைச் செய்வதே என்றார் குரு மெல்வின்.
5. கிறிஸ்தவப்பள்ளிகள் மீதான இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்கள் குறித்து தலத்திருஅவை கவலை
சன.31,2012. காஷ்மீரில் மூன்று கிறிஸ்தவ குருக்கள் மாநிலத்தை விட்டு வெளியேற கட்டளையிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தற்போது கிறிஸ்தவப்பள்ளிகளின் மீதான இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்கள் துவக்கப்பட்டுள்ளதாக கவலையை வெளியிட்டுள்ளனர் அப்பகுதி கிறிஸ்தவர்கள்.
கடந்த 20 ஆண்டுகளில் காஷ்மீரின் கிறிஸ்தவ பள்ளிகள் 20 ஆயிரம் இஸ்லாமியர்களை கிறிஸ்தவ மறைக்கு மாற்றியுள்ளதாக சில இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதைத் தொடர்ந்து, கிறிஸ்தவப் பள்ளிகளின் மீது இஸ்லாமிய சமுதாயத்தின் பகையுணர்வு அதிகரித்து வருவதாக கிறிஸ்தவ சபைகள் தெரிவிக்கின்றன.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளும் பகையுணர்வுகளும் பரப்பப்படுவதால், கிறிஸ்தவர்கள் அச்சத்திலேயே வாழ்வது மட்டுமல்ல, பலர் அம்மாநிலத்திலிருந்து வெளியேறி வருவதையும் சுட்டிக்காட்டும் கிறிஸ்தவக் குழுக்கள், கிறிஸ்தவர்களின் பாதுகாப்பிற்கு உறுதி வழங்க வேண்டுமென காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லாவிற்கு அழைப்பு விடுத்துள்ளன.
ஏறத்தாழ 18 ஆயிரம் கத்தோலிக்கர்களே வாழும் காஷ்மீரில், தலத்திருஅவை ஏறத்தாழ 100 பள்ளிகளை நடத்தி வருகிறது. கிறிஸ்தவப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுள் 99 விழுக்காட்டினர் இஸ்லாமியர் என்பது குறிப்பிடத்தக்கது.
6. உண்ணாநோன்பிற்கும் செபத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளன நாகாலாந்து கிறிஸ்தவ சபைகள்
சன.31,2012. இந்தியாவின் நாகாலாந்து மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண உதவும் நோக்கில், வரும் ஞாயிறை உண்ணாநோன்பு மற்றும் செபத்தின் நாளாக தேசிய அளவில் கடைபிடிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது நாகாலாந்து கிறிஸ்தவ சபைகளின் அவை.
பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டுமெனில், முதலில் நம் பாவங்களுக்கான பரிகாரம் இடம்பெற வேண்டும் என்ற கிறிஸ்தவ சபைகள், ஒரு நாள் முழுவதுமான உண்ணா நோன்பிற்கும் செபத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளன.
நாகாலாந்து மக்களின் அரசியல் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, முதலில் அம்மக்களும், தீவிரவாதிகளும், இந்திய அரசும் தங்களின் பாவங்களுக்காகப் பரிகாரம் செய்ய வேண்டியது இன்றியமையாதது என்பதை வலியுறுத்தும் இந்த அறிக்கை, அமைதிப் பேச்சுவார்த்தைகளை இந்திய அரசு கையாளும் விதம் குறித்து மக்கள் கொண்டுள்ள அதிருப்தியையும் சுட்டிக்காட்டியுள்ளது.
7. முன்னாள் சர்வதிகாரி மீது விசாரணைகள் துவக்கப்பட்டுள்ளது குறித்து குவாத்தமாலா திருஅவை மகிழ்ச்சி
சன.31,2012. குற்றமிழைத்தவர்கள் எவ்வித தண்டனையும் இன்றி தொடர்ந்து தப்பித்து வந்த குவாத்தமாலா நாட்டில் தற்போது, முன்னாள் சர்வாதிகாரி Efrain Rios Montt, கைது செய்யப்பட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது நல்லதொரு முன்மாதிரிகை என தலத்திருஅவை தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது.
இராணுவத்தோடு தொடர்புடையவர்கள், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற எண்ணம் வலுப்பெற்று வந்த ஒரு நாட்டில் தற்போது முன்னாள் சர்வதிகாரி ஒருவர் தண்டனை பெற உள்ளது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்றார் குவாத்தமாலா உயர்மறைமாவட்ட மனித உரிமை அலுவலக இயக்குனர் Estuardo Paredes.
பூர்வீகக் குடிமக்களுக்கு எதிராக இராணுவ ஆட்சித்தலைவர் Rios Montt தலைமையில் இடம்பெற்ற, தாக்குதல்களில் 1800 பூர்வீகக்குடியினர் கொல்லப்பட்டது குறித்து கடந்த வாரம் இடம் பெற்ற விசாரணைகளில் Rios Montt மீது குற்றம் சுமத்தப்பட்டு, தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
1960 முதல் 96 வரை குவாத்தமாலாவில் இடம்பெற்ற உள்நாட்டுப்போரில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment