Wednesday, 18 January 2012

கத்தோலிக்க செய்திகள்: 18 ஜனவரி 2012

1. குவஹாத்தி பேராயர் தாமஸ் மேனம்பரம்பில் பணி ஒய்வும், பேராயர் ஜான் மூலச்சிறா பொறுப்பு ஏற்பும்

2. இப்புதன்கிழமை முதல் உலகெங்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் கொண்டாடப்படுகிறது

3. வத்திக்கான் செய்திகள் வலைதளத்தை ஒவ்வொரு நாளும் 10,000 பேருக்கு மேல் பார்வையிடுகின்றனர்

4. கல்வி உரிமைச் சட்டம் இந்தியாவில் கிறிஸ்தவ பள்ளிகளுக்குத் தொல்லைகள் தரும்

5. காங்கோ நாட்டில் அமைதியை வளர்க்க கோவில்களில் சனிக்கிழமைகளில் மூவேளை செப நேரத்தில் மணியோசை எழுப்பப்படும்

6. Aung San Suu Kyi தேர்தல்களில் போட்டியிடுவதற்கு மியான்மார் மக்கள் ஆர்வம்

7. பேச்சுவார்த்தைகளில் விரைவான முன்னேற்றம் இலங்கையில் தேவை - இந்திய வெளியுறவு அமைச்சர்

------------------------------------------------------------------------------------------------------
1. குவஹாத்தி பேராயர் தாமஸ் மேனம்பரம்பில் பணி ஒய்வும், பேராயர் ஜான் மூலச்சிறா பொறுப்பு ஏற்பும்

சன.18,2012. அஸ்ஸாம் மாநிலத்தின் குவஹாத்தி பேராயர் தாமஸ் மேனம்பரம்பில் வயது காரணமாக பணி ஒய்வு பெறுவதைத் தொடர்ந்து, அந்த உயர்மறைமாவட்டத்தின் பொறுப்பை வாரிசுரிமைப் பேராயர் ஜான் மூலச்சிறா இப்புதன் முதல் ஏற்றுக் கொண்டார்.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பேராயர் மூலச்சிறா, 1951ம் ஆண்டு கேரளாவின் புதுசேரிகடவு எனுமிடத்தில் பிறந்து, 1978ம் ஆண்டு தேஜ்பூர் மறைமாவட்டக் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 2007ம் ஆண்டு Diphu மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்ட இவர், 2011ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி முதல் குவஹாத்தியின் வாரிசுரிமைப் பேராயராகச் செயலாற்றி வந்தார்.
இப்புதன் முதல் பணி ஓய்வுபெறும் பேராயர் மேனம்பரம்பில், கேரளாவின் பாலையில் 1936ம் ஆண்டு பிறந்து, 1965ம் ஆண்டு சலேசிய சபையில் குருவாகவும், 1981ம் ஆண்டு ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார். 1981ம் ஆண்டு முதல் 11 ஆண்டுகள் Dibrugarh ஆயராகவும், 1992ம் ஆண்டு முதல் பணி ஒய்வு பெறும்வரை குவஹாத்தி பெருமறைமாவட்டத்திலும் பணியாற்றியுள்ளார்.


2. இப்புதன்கிழமை முதல் உலகெங்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் கொண்டாடப்படுகிறது

சன.18,2012. இப்புதன்கிழமை முதல் அடுத்த புதன்கிழமை கொண்டாடப்படும் புனித பவுல் அடியாரின் மனமாற்றத் திருவிழா வரை உலகெங்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரம் கொண்டாடப்படுகிறது.
இவ்வொன்றிப்பு செப வாரம் குறித்து கடந்த ஞாயிறு மூவேளை செபத்தின்போதும், இப்புதன் பொது மறைபோதகத்தின்போதும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார்.
 “நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வெற்றி வழியாக நாம் அனைவரும் மாற்றுரு பெறுவோம் என்று கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் புனித பவுல் அடியார் கூறியுள்ள கூற்று இவ்வாண்டின் மையப் பொருளாகக் கொண்டாடப்படுகிறது.
இவ்வாண்டின் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தில் பயன்படுத்தப்படும் செபங்களை போலந்து நாட்டில் உள்ள கத்தோலிக்கத் திருஅவை, ஆர்த்தடாக்ஸ் சபை, மற்றும் பிற கிறிஸ்தவ சபைகள் இணைந்து தயாரித்துள்ளன.
உலகெங்கும் உள்ள 349 கிறிஸ்தவ சபைகளின் ஒருங்கிணைந்த அமைப்பான WCC என்று அழைக்கப்படும் உலகக் கிறிஸ்தவ சபைகளின் குழு ஒவ்வோர் ஆண்டும் இந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தைக் கொண்டாடி வருகிறது. கத்தோலிக்கத் திருஅவை இந்தக் குழுவில் ஓர் உறுப்பினர் இல்லையெனினும், WCCயின் முயற்சியான கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தில் பங்கேற்று வருகிறது.


3. வத்திக்கான் செய்திகள் வலைதளத்தை ஒவ்வொரு நாளும் 10,000 பேருக்கு மேல் பார்வையிடுகின்றனர்

சன.18,2012. திருப்பீடம் உருவாக்கியுள்ள செய்திகள் வலைத்தளத்தை ஒவ்வொரு நாளும் 10,000 பேருக்கு மேல் பார்வையிடுவது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
திருப்பீடத்தின் சமூகத்தொடர்பு அவையின் தலைவரான பேராயர் Claudio Maria Celli, CNA கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திற்கு அண்மையில் அளித்த பேட்டியொன்றில், வத்திக்கான் செய்தி வலைத்தளம் ஆரம்பித்து ஒரு சில மாதங்களே ஆகியிருந்தாலும், அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்திருப்பது திருப்தியைத் தருகிறது என்று கூறினார்.
2011ம் ஆண்டு கிறிஸ்மஸ் நாளன்று 16,000 பேர் இந்த வலைத்தளத்தைப் பார்வையிட்டனர் என்பதைக் கூறிய பேராயர் செல்லி, இவர்களில் 52 விழுக்காட்டினர் முதன்முறையாக பார்வையிடுபவர்கள் என்ற தகவலையும் வெளியிட்டார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் www.news.va என்ற பெயரில் ஆரம்பித்து வைக்கப்பட்ட வத்திக்கான் செய்தி வலைத்தளம், ஆங்கிலம், இஸ்பானியம், இத்தாலியம், ஆகிய மொழிகளில் தற்போது இயங்கி வருகின்றது. இந்த சனவரி மாதத்தில் பிரெஞ்ச் மொழியிலும் பிப்ரவரி மாதத்தில் போர்த்துகீசிய மொழியிலும் இந்த வலைத்தளம் இயங்க உள்ளது.
நற்செய்திப் பணிகளில் புதிய முறைகளைக் கையாளுவதை ஊக்கப்படுத்தும் திருத்தந்தை, துவங்கவிருக்கும் விசுவாச ஆண்டில் புதிய சமூகத்தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டை மேலும் ஊக்கப்படுத்துகிறார் என்று பேராயர் செல்லி எடுத்துரைத்தார்.


4. கல்வி உரிமைச் சட்டம் இந்தியாவில் கிறிஸ்தவ பள்ளிகளுக்குத் தொல்லைகள் தரும்

சன.18,2012. கல்வி உரிமைச் சட்டம் என்ற பிரச்சனைக்குரிய ஒரு சட்டத்தின் மூலம் கிறிஸ்தவ பள்ளிகளுக்கு நேரவிருக்கும் தொல்லைகளை எதிர்க்க வேண்டும் என்று டில்லி உயர்மறைமாவட்ட துணை ஆயர் Franco Mulakkal கூறினார்.
சிறுபான்மை மொழி மற்றும் மதத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் விருப்பப்படி கல்வி முறையை உருவாக்கி, தங்கள் கல்வி நிறுவனங்களை நடத்துவதற்கு இந்தியச் சட்டம் 31 பிரிவு 1 தந்துள்ள உரிமையில் இப்புதிய சட்டம் தலையிடுகிறது என்று இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் கல்வி மற்றும் கலாச்சார அலுவலகத்தின் செயலர் அருள்தந்தை Kuriala Chittattukalam கூறினார்.
அரசின் இந்த தலையீடு தங்கள் கல்வி நிறுவனங்களைப் பெருமளவு பாதிக்கும் என்பதால், கிறிஸ்தவப் பள்ளிகளைச் சிலநாட்கள் மூடிவிட்டு, குழந்தைகளின் பெற்றோர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றும், இந்த வழிமட்டுமே அரசின் கவனத்தை இப்பிரச்சனையின்  பக்கம் திருப்பும் என்றும் ஆயர் Mulakkal கூறினார்.
இச்சட்டத்தின் மூலம், கல்விக் கூடங்களில் நுழையும் மாணவர்கள், வகுப்புக்களை நடத்தும் முறை, தேர்வுகளின் முடிவுகள் என்று பல அம்சங்களிலும் அரசின் தலையீடு இருப்பதை பல கிறிஸ்தவப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வன்மையாக விமர்சித்துள்ளனர்.


5. காங்கோ நாட்டில் அமைதியை வளர்க்க கோவில்களில் சனிக்கிழமைகளில் மூவேளை செப நேரத்தில் மணியோசை எழுப்பப்படும்

சன.18,2012. சனவரி மாதம் முழுவதும் காங்கோ நாட்டில் அமைதியை வளர்க்கும் நோக்கத்துடன் அந்நாட்டில் உள்ள அனைத்து கத்தோலிக்கக் கோவில்களிலும் சனிக்கிழமைகளில் மூவேளை செப நேரத்தில் மணியோசை எழுப்பப்படும் என்று காங்கோ ஆயர் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
மரியன்னையை நோக்கி மனங்களை எழுப்பும் இந்த மூவேளை செப நேரத்தில் தங்கள் நாட்டில் அமைதி வேரூன்ற மக்கள் சிறப்பாக மன்றாட வேண்டுமேன்று ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை முதல் ஆரம்பமான இந்த முயற்சி வன்முறையற்ற வகையில் காங்கோ நாட்டிற்கு அமைதியைக் கொண்டு வரும் என்று தாங்கள் நம்புவதாக ஆயர் பேரவையின் இந்த அறிக்கையை வெளியிட்ட ஆயர் பேரவைச் செயலர் அருள்தந்தை Leonard Santedi கூறினார்.
குடியரசின் விதி முறைகளைப் பின்பற்றி தேர்தல்கள் நடைபெற்று, தலைவர்களைத் தேர்ந்தேடுப்பதற்குப் பதில் மறைமுகமான வழிகளில் தலைவர்கள் பதவியேற்றிருப்பது நாட்டிற்கே ஓர் அவமானம் என்று கூறிய ஆயர்கள், காங்கோ மக்கள் தங்கள் அரசை அமைக்கும் முயற்சிகளுக்கு அகில உலகச் சமுதாயம் ஆதரவு தர வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்.


6. Aung San Suu Kyi தேர்தல்களில் போட்டியிடுவதற்கு மியான்மார் மக்கள் ஆர்வம்

சன.18,2012. பல ஆண்டுகளாக மியான்மாரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த Aung San Suu Kyi, வருகிற ஏப்ரல் முதல் தேதி அந்நாட்டில் நடைபெற உள்ள தேர்தல்களில் போட்டியிடுவதற்கு தன் பெயரைப் பதிவு செய்ய இப்புதனன்று சென்றபோது, நூற்றுக்கணக்கான மக்கள் அவரை ஆர்வத்துடன் பின்தொடர்ந்தனர்.
சமாதானத்துக்கான நொபெல் விருதைப் பெற்றுள்ள Aung San Suu Kyi, 1990ம் ஆண்டு தேர்தல்களில் பெருமளவு வெற்றிபெற்றாலும், அவரைப் பதவியேற்க விடாமல் தடுத்த அந்நாட்டு இராணுவ ஆட்சி, கடந்த 20 ஆண்டுகளாக அவரை வீட்டுக்காவலில் வைத்திருந்தது.
கடந்த ஆண்டு இவரை விடுதலை செய்ததோடு, குடியரசை நோக்கி அந்நாடு முன்னேறுவதற்கு அந்நாட்டின் இராணுவ ஆட்சி ஒரு சில முயற்சிகளை மேற்கொண்டது. இம்முயற்சிகளின் ஒரு பகுதியாக, கடந்த வாரம் சனவரி 13ம் தேதி அந்நாட்டில் சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.
மியான்மார் அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை உலகின் பல நாடுகள் வரவேற்றுள்ளன என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.
அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் அனைத்தும் மியான்மாருடன் எவ்வித அரசியல் தொடர்பும், வர்த்தகத் தொடர்பும் கொள்ளாமல் இருப்பது குறிப்பிடத் தக்கது.


7. பேச்சுவார்த்தைகளில் விரைவான முன்னேற்றம் இலங்கையில் தேவை - இந்திய வெளியுறவு அமைச்சர்

சன.18,2012. இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையில் நடந்துவரும் பேச்சுவார்த்தை முயற்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு நான்கு நாள் பயணமொன்றை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர், கொழும்பில் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையில் போர் முடிந்து இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர், அண்மையில் வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளுக்கு மதிப்பளித்து இலங்கை அரசு அவற்றை நடைமுறைப்படு்த்த வேண்டும் என்று ஊடகவியலாளர்கள் முன்னிலையில் சுட்டிக்காட்டினார்.
இந்த நான்கு நாள் பயணத்தை திங்கட்கிழமை துவங்கிய எஸ்.எம்.கிருஷ்ணா, தெற்கிலும் வடக்கிலும் இந்திய முதலீட்டில் நடந்துவரும் வேலைத்திட்டங்களையும் சென்று பார்வையிடவுள்ளார்.


No comments:

Post a Comment