Friday 27 January 2012

கத்தோலிக்க செய்திகள்: 27 ஜனவரி 2012

1. திருத்தந்தை : விசுவாசத்தைப் புதுப்பித்தல் இன்றையத் திருஅவையின் பணியில் முக்கியத்துவம் பெற வேண்டும்

2. திருப்பீட உயர் அதிகாரி : தொழுநோயை ஒழிப்பதற்கான நடவடிக்கை, நன்மனம் கொண்ட அனைத்து மனிதரின் சேவை 

3. ஒபாமா நிர்வாகம் கர்ப்பத்தை நோயாக நோக்குகிறது : நியுயார்க் பேராயர்  குறை

4. திருப்பீடப் பேச்சாளர் : நாத்சி யூதஇனப் படுகொலைகள் மறக்கப்படக் கூடாது

5. மனித சமுதாயத்தின் கொடூரங்களில் சிறார் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் ஐ.நா.பொதுச் செயலர் கவலை

6. திருத்தந்தையின்  மெக்சிகோத் திருப்பயணத்தின் போது குற்றங்களைத் தவிர்க்குமாறு அந்நாட்டுப் பேராயர் அழைப்பு

7. 2012ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுக்களை முன்னிட்டு பிரிட்டன் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் அறிக்கை

8. போபால் விஷவாயு விபத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் ஒலிம்பிக் மேற்பார்வையாளர் தீர்மானத்திற்கு வரவேற்பு

9. இந்தியா திகார் சிறை கைதிகள் 2,500 பேர் விடுதலை

-------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : விசுவாசத்தைப் புதுப்பித்தல் இன்றையத் திருஅவையின் பணியில் முக்கியத்துவம் பெற வேண்டும்

சன.27,2012. எரிபொருள் இல்லாதது போல அணையும் சுடர் போன்று, இன்று உலகின் பல பாகங்களில் வசுவாசம் அழியக்கூடிய ஆபத்தை எதிர்நோக்குகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்தின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் 70 பிரதிநிதிகளை இவ்வெள்ளிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, விசுவாசத்தைப் புதுப்பித்தல் இன்றையத் திருஅவையின் பணியில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்றார்.
இதற்கு விசுவாச ஆண்டு உதவியாக இருக்கும் என்ற திருத்தந்தை, கடவுள் மீண்டும் இவ்வுலகில் பிரசன்னமாய் இருக்கவும்,  உலகம் முடிவுவரை நம்மை அன்பு செய்யும் கடவுளில் நம்பிக்கை வைக்கும் விசுவாசத்தை மக்கள் அடையவும், விசுவாச ஆண்டு, இறைமக்களின் அனைத்துப் பிரிவினரின் ஒத்துழைப்போடு முயற்சிக்கும் எனத் தான் நம்புவதாகத் தெரிவித்தார்.
கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்துக்கான கருப்பொருளும் இந்தப் பணியோடு நெருங்கிய தொடர்பு கொண்டது என்று கூறிய திருத்தந்தை, கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடலில் சில நல்ல பலன்கள் கிடைத்திருப்பதையும் சுட்டிக் காட்டினார்.

2. திருப்பீட உயர் அதிகாரி : தொழுநோயை ஒழிப்பதற்கான நடவடிக்கை, நன்மனம் கொண்ட அனைத்து மனிதரின் சேவை 

சன.27,2012. தொழுநோயை ஒழிப்பதற்கான நடவடிக்கை, நன்மனம் கொண்ட அனைத்து மனிதரின் சேவையாக இருக்கின்றது என்று திருப்பீட நலவாழ்வுத்துறைத் தலைவர் கூறினார்.
சனவரி 29ம் தேதியான இஞ்ஞாயிறன்று கடைபிடிக்கப்படும் 59வது அனைத்துலக தொழுநோய்த் தினத்திற்காக செய்தி வெளியிட்டுள்ள, திருப்பீட நலவாழ்வுப் பணியாளர் அவைத் தலைவர் பேராயர் Zygmunt Zimowski, தொழுநோயாளிகளும்,  அந்நோயிலிருந்து குணமானவர்களும் தங்களது வளமையான ஆன்மீக மற்றும் மனித மாண்பை வெளிப்படுத்த முடியும் மற்றும் வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இவர்கள், பிறரோடு, குறிப்பாக, இந்நோயால் தாக்கப்பட்டுள்ளவர்களுடன் முழுமையான ஒருமைப்பாட்டை காட்ட வேண்டும் எனவும் அச்செய்தி கேட்டுள்ளது.
அதேசமயம், ஹான்சென் நோய் என அழைக்கப்படும் இத்தொழுநோயை ஒழிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள், இந்நோயை முற்றிலுமாக ஒழிப்பதற்குத் தொடர்ந்து செயல்படுமாறும் பேராயரின் செய்தி வலியுறுத்துகிறது.
உண்மையைச் சொல்லப்போனால், மைக்ரோபாக்டீரியம் லெப்ரே எனப்படும் தொழுநோய்க் கிருமி, உலகில் இன்னும் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை, புதிதாக இந்நோய்க் கிருமிகளால் தாக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், உலக நலாவாழ்வு நிறுவனத்தின் கணிப்புப்படி, இன்றும், உலகில் சுமார் இரண்டு இலட்சம் பேர் தொழுநோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டுள்ளனர் என்றும் பேராயர் Zimowski குறிப்பிட்டுள்ளார்.
இயேசுவால் குணமாக்கப்பட்ட பத்துத் தொழுநோயாளிகளில் ஒருவர், திரும்பி வந்து இயேசுவிடம் நன்றி தெரிவித்த நிகழ்ச்சி பற்றியும் குறிப்பிட்டுள்ள இச்செய்தி, இயேசு அவரிடம் கூறிய வார்த்தைகள், அவரின் அன்பு, குணமான அம்மனிதரை ஒருபோதும் கைவிடாது என்பதைக் காட்டுகின்றன என்றும் கூறியுள்ளார்.
அதேநேரம், தொழுநோயிலிருந்து குணமானவர்கள், தாங்கள் எதிர்கொண்ட துன்பங்களின் அனுபவங்களைக் கொண்டு, முழு மனித மாண்புடன் பிறருக்கு உதவ வேண்டும் என்றும் திருப்பீட நலவாழ்வு அவைத் தலைவரின் செய்தி வலியுறுத்துகிறது.
மேலும், ஒவ்வோர் ஆண்டும் சனவரி, இறுதி ஞாயிறன்று நூற்றுக்கு அதிகமான நாடுகளில், இவ்வுலக தொழுநோய்த் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் 1,20,000க்கு மேற்பட்டோர் இந்நோய்க் கிருமிகளால் தாக்கப்படுகின்றனர் என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.

3. ஒபாமா நிர்வாகம் கர்ப்பத்தை நோயாக நோக்குகிறது : நியுயார்க் பேராயர்  குறை

சன.27,2012. பெண்களின் கருவுறுதலை நோயாக நோக்காத சமய சுதந்திரக் குழுக்களை ஒபாமா நிர்வாகம் அழித்துவிட முயற்சிக்கிறது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் திமோத்தி டோலன் குறை கூறினார்.
Wall Street Journal தினத்தாளில் ஆசிரியர் பகுதியில் இவ்வாறு எழுதியுள்ள, நியுயார்க் பேராயர் டோலன், கத்தோலிக்கத் திருஅவை, ஒவ்வொருவரின் மனச்சான்றின் சுதந்திரம் உட்பட சமய சுதந்திரத்தைப் பாதுகாக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் பல புதிய நலஆதரவுத் திட்டங்களில், கருத்தடைக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு ஒபாமா நிர்வாகம் தீர்மானித்திருப்பது பற்றிக் கருத்து தெரிவித்துள்ள பேராயர் டோலன், கருவுறுதலை நோயாகப் பார்க்காமல் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கத்தோலிக்க மற்றும் பிறரின் மனச்சான்றை மதிக்கத் தவறியுள்ளது என்று குறை கூறியுள்ளார்.
 
4. திருப்பீடப் பேச்சாளர் : நாத்சி யூதஇனப் படுகொலைகள் மறக்கப்படக் கூடாது

சன.27,2012. ஒவ்வொரு மனிதரின் தவிர்க்க இயலாத மனித மாண்பு, மனித உரிமைகளின் உலகளாவியத்தன்மை, மனித உரிமைகளைக் காப்பதற்கான அர்ப்பணம் ஆகியவை பற்றிப் பேசும் போது, இரண்டாம் உலகப் போரின் போது நடத்தப்பட்ட யூதஇனப் படுகொலை குறித்த நினைவு முன்னிறுத்தப்பட வேண்டுமென்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
67 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1945ம் ஆண்டு சனவரி 27ம் நாளன்று, ஆஷ்விஷ் வதைப்போர் முகாமின் கொடூரம் முடிவுக்கு வந்தது, அந்த நாளே அனைத்துலக யூதஇனப் படுகொலை நினைவு தினமாக அனுசரிக்கப்படுகின்றது என்று கூறியுள்ளார் அருள்தந்தை லொம்பார்தி.
Octava Dies என்ற வத்திக்கான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவ்வாறு பேசியுள்ள அருள்தந்தை லொம்பார்தி, 67 ஆண்டுகள் ஒன்றும் சிறிது காலம் அல்ல, அந்த இனப்படுகொலை கொடூரங்களை நேரடியாகப் பார்த்தவர்கள் குறைந்து வருகிறார்கள், அறியாமையினால் மட்டுமல்ல, அரசியல், இன அல்லது மத நோக்கங்களால் இந்நிகழ்வு புறக்கணிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
எனவே அறிவற்ற விதத்தில் நடத்தப்பட இக்கொடுமைகளை மறக்க முடியாது மற்றும் மறக்கக் கூடாது என்றும் உரைத்துள்ள திருப்பீடப் பேச்சாளர், இவ்வுலக தினத்தில் இஸ்ரேல் மக்களோடும் இதில் பாதிக்கப்பட்டவருடனும் நமது தோழமையுணர்வைத் தெரிவிப்போம் என்று கேட்டுள்ளார்.

5. மனித சமுதாயத்தின் கொடூரங்களில் சிறார் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் ஐ.நா.பொதுச் செயலர் கவலை

சன.27,2012. இவ்வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட, இவ்வுலக யூதஇனப் படுகொலை நினைவு தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், மனித சமுதாயத்தின் கொடூரங்களில் சிறார் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று கவலை தெரிவித்துள்ளார்.
நாத்சி கொள்கையாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களால் 15 இலட்சம் யூதச் சிறார் இறந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள பான் கி மூன், நாத்சிக் கொடுமைகளுக்குப் பல்லாயிரக்கணக்கான யூதரல்லாத சிறாரும் பலியாகியுள்ளனர் என்று  குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாண்டு யூதஇனப் படுகொலை நினைவு தினம், சிறாருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றுரைத்த அவர், போரினால் பெற்றோரை இழந்துள்ள மற்றும் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டுள்ள சிறார் பற்றிய கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார்.


6. திருத்தந்தையின்  மெக்சிகோத் திருப்பயணத்தின் போது குற்றங்களைத் தவிர்க்குமாறு அந்நாட்டுப் பேராயர் அழைப்பு

சன.27,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், மெக்சிகோவுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளும் போது, குற்ற நடவடிக்கைகள் நிறுத்தப்படுமாறு அந்நாட்டுக் குற்றக் கும்பல்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் பேராயர் Jose Guadalupe Martin Rabago.
மெக்சிகோ போதைப்பொருள் வியாபாரிகளால் தூண்டப்படும் வன்முறைச்சூழல் நாட்டில் விரைவாகப் பரவி வருகிறது என்று அண்மையில் நிருபர் கூட்டத்தில் குறிப்பிட்ட பேராயர் Martin Rabago, மெக்சிகோ நாடு, அமைதி மற்றும் அருளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ளுமாறும் குற்றக் கும்பல்களைக் கேட்டுள்ளார்.
எனவே திருத்தந்தை மெக்சிகோவுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளும் மகிழ்ச்சியான தருணத்தில், வேதனையையும் மரணத்தையும் கொண்டு வருவதைத் தவிர்த்து நடக்குமாறு, அனைத்து மெக்சிகோ மக்கள் சார்பாக அழைப்பு விடுப்பதாகக் கூறியுள்ளார் பேராயர் Martin Rabago.
குற்றக் கும்பல்களும் மனிதர்களே என்று சொல்லி, அவர்கள் பிறரின் வாழ்வை மதித்து நடக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.
திருத்தந்தையின் மெக்சிகோவுக்கானத் திருப்பயணம் வருகிற மார்ச் 23 முதல் 26 வரை நடைபெறும்.

7. 2012ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுக்களை முன்னிட்டு பிரிட்டன் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் அறிக்கை

சன.27,2012. பிரிட்டனில் இவ்வாண்டு நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு அந்நாட்டுக் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், இங்கிலாந்து அரசியின் வைர விழா, பாரா ஒலிம்பிக் விளையாட்டுகள் என, 2012ம் ஆண்டு பிரிட்டனுக்குக் கொண்டாட்டங்களின் ஆண்டாக இருக்கின்றது என்று அவ்வறிக்கை கூறுகின்றது.
மே முதல் செப்டம்பர் வரை நான்கு மாதங்கள் இடம் பெறும் இக்கொண்டாட்டங்களுக்குக் கிறிஸ்தவ சபைகளும் பல்வேறு மக்களுக்கு உதவும் வழிகள் குறித்தத் தயாரிப்புக்களைத் தொடங்கி விட்டன என்றும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.
வெஸ்ட்மின்ஸ்டர் கத்தோலிக்கப் பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ், கான்டர்பரி ஆங்லிக்கன் பேராயர் ரோவன் வில்லியம்ஸ் உட்பட அனைத்துக் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் அவ்வறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

8. போபால் விஷவாயு விபத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் ஒலிம்பிக் மேற்பார்வையாளர் தீர்மானத்திற்கு வரவேற்பு

சன.27,2012. Dow வேதியல் நிறுவனம், 2012ம் ஆண்டின் ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு நிதியுதவி செய்வதையடுத்து, இந்த இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுக்களைக் கவனிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள மேற்பார்வையாளர் அப்பொறுப்பிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்திருப்பதை போபால் விஷவாயு விபத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் வரவேற்றுள்ளனர்.
ஒலிம்பிக் விளையாட்டு மேற்பார்வையாளர் Meredith Alexander என்பவர் இப்பொறுப்பிலிருந்து விலகுவதாக இவ்வியாழனன்று அறிவித்திருப்பதை மகிழ்ச்சியோடு அவர்கள் வரவேற்றுள்ளனர்.
1984ம் ஆண்டு விஷவாயுக் கசிவுக்கு உள்ளான போபால் யூனியன் கார்பைடு நிறுவனத்தை 2001ம் ஆண்டு Dow வேதியல் கம்பெனி வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள Dow நிறுவனம், வேதியப் பொருட்களைத் தயாரிப்பதில் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. போபால் விஷவாயுக் கசிவினால் சுமார் 25 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

9. இந்தியா திகார் சிறை கைதிகள் 2,500 பேர் விடுதலை

சன.27,2012. இந்தியாவின் 63வது குடியரசு தினத்தை முன்னிட்டு திகார் சிறைக் கைதிகள் 2,500 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, திகார் சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் டெல்லியைச் சேர்ந்த 2,500 கைதிகளை, 63வது குடியரசு தினத்தை முன்னிட்டு விடுதலை செய்ய மாநில அரசு முடிவு செய்து உத்தரவிட்டது. எனினும் தீவிரவாதச் செயல்களுக்காக தண்டனை பெற்றவர்களுக்கு இந்தச் சலுகை அளிக்கப்படமாட்டாது என்றும் அரசு அறிவித்துள்ளது.
அதன்படி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள், 2 மாதத்துக்கு முன்கூட்டியும், 5 முதல் 10 ஆண்டு வரை சிறைத் தண்டனை அனுபவித்தவர்கள் 45 நாட்கள் முன்கூட்டியும், ஒன்று முதல் 5 ஆண்டு வரைத் தண்டனை அனுபவித்தவர்கள் 15 நாட்கள் முன்கூட்டியும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று திகார் சிறை அதிகாரி தெரிவித்தார்.
ஆசியாவிலேயே மிகப் பெரிய சிறையான திகார் சிறையில் ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளின் போது, சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் நடத்தையை கருத்தில் கொண்டு, அவர்களை முன் கூட்டியே விடுதலை செய்யும் உரிமை மாநில அரசுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...