Tuesday, 31 January 2012

கத்தோலிக்க செய்திகள்: 28 ஜனவரி 2012

 
1. புனித பூமியின் அமைதிக்காக 2,500 நகரங்களில் செபம்

2. ஆயர்கள் கூட்டம் : சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவதில் தலத்திருஅவையின் பங்கு 

3. இவாஞ்சலிக்கல் சபைப் போதகரை இந்துத் தீவிரவாதிகள் நிர்வாணமாக்கி அடித்துள்ளனர்

4. இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் கருக்கலைப்புச் சட்டத்துக்கு எதிர்ப்பு

5. போக்கோ ஹராம் முஸ்லீம் தீவிரவாதிகள் பிரச்சனைக்கு அரசியல்ரீதியான தீர்வு அவசியம் - அபுஜா பேராயர்

6. உலகின் சிறாருக்கு உதவுவதற்கென சுமார் 130 கோடி டாலருக்கு யுனிசெப் வேண்டுகோள்

7. லிபியச் சிறைகளில் சித்ரவதைகள்

8. டாவோஸ் 2012: உலகமயமாதலும் மனித உரிமைகளும்

9. இலங்கையில் அதிகரிக்கும் வர்த்தகப் பற்றாக்குறை

-------------------------------------------------------------------------------------------

1. புனித பூமியின் அமைதிக்காக 2,500 நகரங்களில் செபம்

சன.28,2012. புனித பூமியில் அமைதி ஏற்பட வேண்டும் எனும் நோக்கத்திற்காக, உலகில் குறைந்தது 2,500 நகரங்களின் மக்கள் இஞ்ஞாயிறன்று செபிக்கவிருக்கின்றனர்.
எருசலேம் இலத்தீன்ரீதி முதுபெரும் தலைவருடன் சேர்ந்து சில கத்தோலிக்க இளையோர் கழகங்கள் எடுத்த முயற்சியினால் புனித பூமிக்காகச் செபிக்கும் சர்வதேச செப நாள் உருவாக்கப்பட்டது.
இதன்படி இஞ்ஞாயிறன்று நான்காவது சர்வதேச செப நாள் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தன்று எருசலேம் திருக்கல்லறை பசிலிக்காவில் திருப்பலியும் நடைபெறும்.
இந்நாளைச் சிறப்பிக்கும் இளையோருக்குச் செய்தியும் அனுப்பியுள்ளார் திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன்.
இளையோர், அமைதியின் ஊற்றாகத் திகழ முடியும் எனவும், கிறிஸ்துவின் திருஅவையின் இளம் முகங்களை உலகுக்குக் காட்டும் இவ்விளையோருக்கு நன்றி கூறுவதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் டர்க்சன்.

2. ஆயர்கள் கூட்டம் : சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவதில் தலத்திருஅவையின் பங்கு 

சன.28,2012. நல்ல வழிகளைச் சுட்டிக் காட்டுவதில் திருஅவையின் பங்கு என்ற தலைப்பில், வருகிற பிப்ரவரி ஒன்று முதல் 8 வரை, இந்தியக் கத்தோலிக்க ஆயர்களின் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
பெங்களூரின் புனித ஜான் தேசிய நலவாழ்வு மையத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், இலத்தீன், சீரோ-மலபார், சீரோ- மலங்கரா ஆகிய மூன்று ரீதிகளைச் சேர்ந்த 160க்கும் மேற்பட்ட ஆயர்களும், திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் போன்ற முக்கிய பிரமுகர்களும், இந்திய வல்லுனர்களும் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சமுதாயத்தில் நற்செய்தி விழுமியங்களைப் பரப்புவதற்குப் புதிய யுக்திகளையும் கொள்கைகளையும் அமைப்பது, உலகாயுதப் போக்கு, மதத் தீவிரவாதம், பொருளாதார நெருக்கடி ஆகியவைகளால் ஏற்படும் பிரச்சனைகளுக்குப் பதில் சொல்வது போன்றவை இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
இளையோருக்கு நற்செய்தி அறிவித்தல், இந்து மற்றும் இசுலாம் தீவிரவாதிகளால் நடத்தப்படும் கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைக்குத் தீர்வு போன்ற தலைப்புகள், இக்கூட்டத்தில் சிறப்பாக இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியக் கத்தோலிக்க ஆயர்களின் இத்தகைய கூட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்றது.

3. இவாஞ்சலிக்கல் சபைப் போதகரை இந்துத் தீவிரவாதிகள் நிர்வாணமாக்கி அடித்துள்ளனர்

சன.28,2012. கர்நாடக மாநிலத்தில், 27 வயது நிரம்பிய Chandrakanth Kalappa Chavan என்ற கிறிஸ்தவ சபைப் போதகரை, இந்துத் தீவிரவாதிகள் நிர்வாணமாக்கி, மானமிழக்கச் செய்து, அடித்து, கேலி செய்து, நான்கு மணி நேரங்களுக்கு ஒரு கம்பத்தில் கட்டிப் போட்டிருந்தனர் என்று பீதெஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது. 
Uttara Kannada மாவட்டத்தில், Haliyal என்ற நகரத்திலுள்ள இந்துத் தீவிரவாதக் கும்பல் ஒன்று, "New Life Fellowship" என்ற இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த இப்போதகரை, அக்கும்பல், வார்த்தைகளால் விவரிக்க முடியாத இத்தகைய கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கிறது என்று அச்செய்தி நிறுவனம் மேலும் அறிவித்தது.
இம்மாதம் 24ம் தேதி ஒரு கிறிஸ்தவப் பெண்ணின் வீட்டில் செபம் நடந்து கொண்டிருந்த போது, சுமார் 20 தீவிரவாதிகள் சேர்ந்து இதனைச் செய்துள்ளனர்.
இந்தியாவில் கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகள் அதிகரித்து வரும்வேளை, 2011ம் ஆண்டில், இரண்டாயிரத்துக்கு அதிகமான வன்முறை நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில், கர்நாடக மாநிலத்தில் மட்டும், ஒரு நாளைக்கு 3 முதல் 5 வீதம் ஆயிரத்துக்கு மேற்பட்ட தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன என்று ஒரு கத்தோலிக்க அரசு-சாரா அமைப்பு அறிவித்தது.

4. இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் கருக்கலைப்புச் சட்டத்துக்கு எதிர்ப்பு

சன.28,2012. இலங்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கருக்கலைப்புச் சட்டத்துக்குத் தங்களது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர் அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள்.
நியாயப்படுத்தப்படாத கர்ப்பங்களுக்கு மட்டுமே கருக்கலைப்பு செய்ய அனுமதியளிக்கப் பரிந்துரை செய்துள்ள இலங்கை அரசின் மசோதா குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இலங்கை ஆயர்கள், ஒரு குழந்தை, தாயின் வயிற்றில் பாதுகாக்கப்படவில்லையெனில், மனித சமுதாயம் பாதுகாப்பாக இருக்காது என்று கூறுகிறது.  
கருக்கலைப்பைச் சட்டமாக்குவதற்கு எடுக்கப்படும் எந்த முயற்சியையும் தாங்கள் புறக்கணிப்பதாக ஆயர்களின் அறிக்கை மேலும் கூறுகிறது.
இலங்கையில் கருக்கலைப்பு, சட்டப்படி அங்கீகரிக்கப்படவில்லை. எனினும், அண்மை ஆண்டுகளில் அந்நாட்டில் கருக்கலைப்பு அதிகரித்திருப்பதாக அந்நாட்டு நலவாழ்வு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட குடும்ப நலஅமைப்பு தெரிவித்தது.
2008ம் ஆண்டில் ஒரு நாளைக்கு சுமார் 700 வீதம் இடம் பெற்ற கருக்கலைப்புகள், 2011ம் ஆண்டில் ஒரு நாளைக்கு சுமார் ஆயிரமாக உயர்ந்ததாகவும், தலைநகர் கொழும்புவில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 500 வீதம் இடம் பெறுவதாகவும் சொல்லப்படுகிறது.

5. போக்கோ ஹராம் முஸ்லீம் தீவிரவாதிகள் பிரச்சனைக்கு அரசியல்ரீதியான தீர்வு அவசியம் - அபுஜா பேராயர்

சன.28,2012. ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் இடம் பெறும் Boko Haram முஸ்லீம் தீவிரவாதிகள் பிரச்சனையை, பாதுகாப்புத் துறையினால் மட்டும் தீர்க்க முடியாது, ஆனால் இதற்கு அரசியல்ரீதியான தீர்வு அவசியம் என்று அபுஜா பேராயர் John Olorunfemi Onaiyekan கூறினார்.
நைஜீரியாவின் வட பகுதியிலுள்ள அனைத்து அரசியல் அமைப்புகளும் இவ்விவகாரத்தில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றுரைத்த பேராயர் Onaiyekan, வன்முறைகளைத் தூண்டிவிடும் செயல்களைக் களைவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.
நைஜீரியா போன்ற பெரிய நாட்டில் ஒவ்வொருவரின் பாதுகாப்புக்கும் உறுதி அளிப்பது இயலாத காரியம், ஏனெனில் நாட்டின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு ஆயுதங்களைக் கடத்துவது மிக எளிது என்ற அபுஜா பேராயர், இருந்த போதிலும், Boko Haram தீவிரவாதிகளின் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டுமெனப் பரிந்துரைத்தார்.
அண்மையில், கானோ நகரில் இடம் பெற்ற தாக்குதலில் சுமார் 185 பேர் இறந்தனர். இது தொடர்பாக, சுமார் 200 Boko Haram அமைப்பின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.    

6. உலகின் சிறாருக்கு உதவுவதற்கென சுமார் 130 கோடி டாலருக்கு யுனிசெப் வேண்டுகோள்

சன.28,2012. 25க்கும் மேற்பட்ட நாடுகளில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் சிறாருக்கு 128 கோடி டாலர் நிதியுதவிக்கு விண்ணப்பித்துள்ளது ஐ.நா.வின் குழந்தை நல நிறுவனமான யுனிசெப்.
ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகளின் சிறாருக்குப் பெருமளவான நிதியுதவி தேவைப்படுகிறது என்று ஜெனீவாவில் இவ்வெள்ளியன்று அறிக்கை வெளியிட்ட யுனிசெப் கூறியது.
இதற்கிடையே, ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகளில், பசியினால் தினமும் 100 முதல் 200 சிறார் வரை இறக்கின்றனர் என்று பீதெஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது.
கடந்த ஆண்டில் இப்பகுதியில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குறைந்தது 35 ஆயிரம் சிறார் பசியினால் இறந்தனர், இவ்வெண்ணிக்கை 65 ஆயிரமாகக்கூட இருக்கலாம் என்று மனிதாபிமான நிறுவனங்கள் கூறுகின்றன.
சொமாலியாவில் மட்டும், மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் ஊட்டச்சத்துக் குறைவால் துன்புறுகின்றனர்.
மேலும், பசிக்கொடுமையினால், சொமாலியா, கென்யா, எரிட்ரியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளிலிருந்து அகதிகள் முகாம்களுக்குக் குடும்பங்கள், தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன என்றும் மனிதாபிமான நிறுவனங்கள் கூறுகின்றன.

7. லிபியச் சிறைகளில் சித்ரவதைகள் 

சன.28,2012. லிபியச் சிறைகளிலுள்ள முன்னாள் அதிபர் கடாஃபியின் ஆதரவாளர்கள் சித்ரவதைப்படுத்தப்படுவதாகப் புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று பிபிசி அறிவித்தது.
மேலும், லிபியாவில் செயல்படுகின்ற கட்டுப்பாட்டுக்குள் இல்லாத ஆயுதக்குழுக்கள் அங்கு அமைதியின்மையை அதிகரிக்கச் செய்திருப்பதுடன், சட்டத்துக்குப் புறம்பாக ஆயிரக்கணக்கான மக்களைத் தடுப்புக்காவல் முகாம்களில் வைத்திருப்பதாக ஐ.நா.வின் லிபியாவுக்கான தூதர் இயான் மார்ட்டின் கூறியுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு அவையில் உரையாற்றிய இயான் மார்ட்டின், அண்மையில் பானி வாலிட் நகரில் நடந்த மோதல்களும், பென்காசி நகரில் காணப்படுகின்ற அமைதியின்மையும், இந்த ஆயுதக்குழுக்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது தொடர்பில் அரசின் இயலாமையைக் கோடிட்டுக் காட்டுகின்றன என்று கூறினார்.
அதேவேளை, கடாபியின் முன்னாள் ஆதரவாளர்கள் ஆயுதக் குழுக்களால் சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளையும் கூறியுள்ளார்.
''2011ம் ஆண்டின் மார்ச் மாதம் முதல் டிசம்பர் வரை 60 இடங்களில் உள்ள தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8,500 பேரை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பார்வையிட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டிருப்போரில் பெரும்பான்மையானவர்கள் கடாஃபியின் ஆதரவாளர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள்.
அவர்களில் பெரும்பான்மையானவர்கள் சஹாரா பாலைவனத்துக்குத் தெற்கே உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

8. டாவோஸ் 2012: உலகமயமாதலும் மனித உரிமைகளும்

சன.28,2012. உலகத்தாராளமயமாதலுக்கும் மனித உரிமைகளுக்கும் இடையிலுள்ள தொடர்புகளை உலகத் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்று உணவுக்கான உரிமைத் தொடர்பான ஐநாவின் சிறப்பு நிபுணர் ஆலிவர் டி ஷூட்டர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டு டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் 42வது உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்களிடம் இவ்விண்ணப்பத்தை அவர் முன்வைத்தார்.
உலகமயமாக்குதலால் பாதிக்கப்பட்ட தனிப்பட்ட நபர்கள் குறித்து கண்மூடித்தனமாக இருக்காமல், மனித உரிமைகளையும் அவற்றின் நீடித்த வளர்ச்சியையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், ஐநாவின் மனித உரிமைகளுக்கான உயர் அதிகாரி சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்காக எடுக்கப்படுகின்ற முயற்சிகளில் உலகமயமாதலில் மனித உரிமைகள் சார்ந்த விழுமியங்களை உறுதிப்படுத்துவது புதிய கோணமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாடற்ற உலகமயமாதலின் அடையாளங்களாக உலகில் பரவலான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்திருப்பது குறித்து இப்போதாவது கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

9. இலங்கையில் அதிகரிக்கும் வர்த்தகப் பற்றாக்குறை

சன.28,2012. இலங்கையில் இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையேயுள்ள வர்த்தகப் பற்றாக்குறை, இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமாக உள்ளது என்று அந்நாட்டின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2010ம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது 2011 ம் ஆண்டு இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறை 238 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று மத்திய வங்கியின் அறிக்கை கூறுகிறது.
இலங்கையின் பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில் இது ஓர் அபாயகரமான நிலையையே காட்டுகிறது என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இந்தப் பற்றாக்குறை குறுகிய காலத்தில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிப்பது ஆரோக்கியமான பொருளாதார நிலையாகக் கருத முடியாது எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதும், நாட்டில் நடைபெற்று வரும் பொருளாதார மேம்பாட்டுக்கு கூடுதலாக இறக்குமதிகளைச் செய்ய வேண்டியுள்ளதும், இந்த வர்த்தகப் பற்றக்குறைக்கு ஒரு முக்கிய காரணம் என இலங்கை அரசு கூறுகிறது.

No comments:

Post a Comment