Wednesday 11 January 2012

கத்தோலிக்க செய்திகள்: 10 ஜனவரி 2012

1. புதிய கர்தினால்கள் திருச்சடங்கில் மாற்றங்கள்

2. புனிதபூமிக் கிறிஸ்தவர்கள் தனியாக இல்லை, ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க ஆயர்கள் உறுதி

3. நைஜீரியக் கிறிஸ்தவர்கள் வன்முறைக்குப் பயந்து புலம் பெயரமாட்டார்கள், அந்நாட்டுக் கர்தினால் உறுதி

4. மதுபானங்களைக் கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிக்கு அயர்லாந்து ஆயர்கள் வரவேற்பு

5. இந்தியாவில் வீட்டுப் பணியாளரைப் பாதுகாப்பதற்குப் புதிய சட்டம் தேவை - அருட்சகோதரி

6. புனித Joan of Arcக்கின் பெருமைகளைச் சுட்டிக்காட்டிய பிரெஞ்ச் அரசுத் தலைவர்

7. ஊட்டச்சத்து குறைபாடு தேசிய அவமானம் : இந்தியப் பிரதமர்

8. ரூபாய் 20 ஆயிரம் கோடியில் நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம் : உருவாக்குகிறது இந்திய அரசு

9. முடக்குவாத நோய்ப் பாதிப்பு தமிழ்நாட்டில் குறைந்துள்ளது

----------------------------------------------------------------------------------------------------------------

1. புதிய கர்தினால்கள் திருச்சடங்கில் மாற்றங்கள்

சன.10,2012. கத்தோலிக்கத் திருஅவையில் கர்தினாலாக உயர்த்தப்படுவது, ஓர் அருளடையாளம் அல்லது ஏறக்குறைய அருளடையாளம் போன்றது என்ற எண்ணத்தைத் தவிர்க்கும் நோக்கத்தில், வருகிற பிப்ரவரியில் நடைபெறும் 22 புதிய கர்தினால்கள் நிகழ்வுத் திருவழிபாட்டில் மாற்றங்கள் இடம் பெறும் என்று திருப்பீடச் சார்புத் தினத்தாள் லொசர்வாத்தோரே ரொமானோ கூறியது.
புதிய கர்தினால்களாக உயர்த்தப்படும் திருவழிபாட்டுச் சடங்கில், இதுவரை இடம் பெற்று வந்தவைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு அது எளிமையாக்கப்படும் என்று லொசர்வாத்தோரே ரொமானோ மேலும் கூறியது.
பிப்ரவரி 18ம் தேதி நடைபெறும் திருவழிபாட்டுச் சடங்கில் புதிய கர்தினால்கள், சிவப்புத் தொப்பிகளையும், கர்தினால்களுக்குரிய மோதிரங்களையும், உரோமையில் அவர்களுக்கெனக் குறிக்கப்பட்ட ஆலயங்களின் பெயர்களையும் பெறுவார்கள் எனவும் அத்தினத்தாள் அறிவித்தது.
இந்நிகழ்வுக்கு அடுத்த நாள் வழக்கமாக இடம்பெறும் மோதிரம் பெறும் திருப்பலி, இவ்வாண்டு இடம்பெறாது என்றும் அத்தினத்தாள் கூறியது.
எனினும், பிப்ரவரி 19ம் தேதி புதிய கர்தினால்கள் திருத்தந்தையுடன் சேர்ந்து நன்றித் திருப்பலி நிகழ்த்துவார்கள் எனவும், கர்தினாலாக உயர்த்தப்படுவது ஒரு திருவழிபாட்டு நிகழ்வு என்ற எண்ணத்தைக் கொடுக்காமல், அந்நிகழ்வு, ஒரு செபச்சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத் தற்போது மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன எனவும் லொசர்வாத்தோரே ரொமானோ கூறியது.
கேரளாவின் சீரோ-மலபார் ரீதித் திருஅவைத் தலைவர் பேராயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி உட்பட 18 பேராயர்கள், ஓர் ஆயர் மற்றும் மூன்று அருள்தந்தையர்கள், வருகிற பிப்ரவரி 18ம் தேதி கர்தினால்களாக உயர்த்தப்படவிருக்கிறார்கள்.

2. புனிதபூமிக் கிறிஸ்தவர்கள் தனியாக இல்லை, ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க ஆயர்கள் உறுதி

சன.10,2012. புனிதபூமிக் கிறிஸ்தவர்கள் தனியாக இல்லை, அவர்களுக்காக மேற்கத்தியக் கிறிஸ்தவர்கள் செபிக்கிறார்கள், அவர்களைத் தாங்கள் மறக்கவில்லை என்ற உறுதியை வழங்கியுள்ளனர் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க ஆயர்கள்.
புனிதபூமிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க ஆயர்கள், பாலஸ்தீனாவின் காசாவில் இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழாவன்று திருப்பலி நிகழ்த்திய போது இவ்வாறு புனிதபூமிக் கிறிஸ்தவர்களிடம் தெரிவித்தனர்.
இத்திருப்பலியின் இறுதியில் பேசிய பிரான்சின் Evry ஆயர் Michel Dubost, பிரான்சின் புறநகர்ப் பகுதியிலுள்ள, ஐரோப்பாவிலே பெரிய சிறையான Evry சிறையைப் பார்வையிட்ட போது அங்குள்ள கைதிகளிடம், புனிதபூமிக் கிறிஸ்தவர்களுக்காகச் செபிக்குமாறுக் கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார்.
காசாவின் சுமார் 15 இலட்சம் மக்களில் 2,500 பேர் கிறிஸ்தவர்கள். இவர்களில் 300 பேரே கத்தோலிக்கர்.

3. நைஜீரியக் கிறிஸ்தவர்கள் வன்முறைக்குப் பயந்து புலம் பெயரமாட்டார்கள், அந்நாட்டுக் கர்தினால் உறுதி

சன.10,2012. நைஜீரியாவின் வடக்குப் பகுதியில், போக்கோ ஹராம் என்ற இசுலாம் தீவிரவாத அமைப்பால் கிறிஸ்தவர்களுக்கு வன்முறை அச்சுறுத்தல்கள் இருக்கின்ற போதிலும், அப்பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள் புலம் பெயரமாட்டார்கள் என்று அந்நாட்டுக் கர்தினால் Anthony Olubunmi Okogie உறுதி கூறினார்.
நைஜீரியத் திருஅவை, உறுதியாகவும் உயிர்த்துடிப்புடனும் இருக்கின்றது, அது அச்சுறுத்தலுக்குப் பயப்படாது என்று, Vatican Insider என்ற இதழுக்குப் பேட்டியளித்த Lagos பேராயர், கர்தினால் Okogie, இயேசு சிலுவையில் இறந்தது போல், நைஜீரியத் திருஅவையும் விசுவாசத்திற்காகத் தியாகம் செய்வதற்குத் தயாராக இருக்கின்றது என்று கூறினார்.
போக்கோ ஹராம் என்ற இசுலாம் தீவிரவாத அமைப்பு, நைஜீரியாவின் வடக்குப் பகுதியிலுள்ள பெரும்பான்மையான முஸ்லீம்களின் பிரதிநிதிகள் அல்ல என்பதையும் கர்தினால் எடுத்துக் கூறினார்.
இருந்த போதிலும், கிறிஸ்தவர்களை வன்முறைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கு அரசு விருப்பம் காட்டுவது போல் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் கிறிஸ்மஸ் காலத்தில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டனர். இவ்வன்முறைகளில் 30 பேர் இறந்தனர். தற்போது அந்நாடு முழுவதும் 24 மணிநேரம் ஊரடங்கு சட்டமும் போடப்பட்டுள்ளது. 

4. மதுபானங்களைக் கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிக்கு அயர்லாந்து ஆயர்கள் வரவேற்பு

சன.10,2012. அயர்லாந்து நாட்டில், மதுபானங்கள் விற்பனையில் விலையேற்றம் செய்ய எண்ணும் அரசின் முயற்சியை அயர்லாந்து ஆயர்கள் வரவேற்றுள்ளனர்.
மலிவாக, எளிதாக மதுபானங்கள் கிடைப்பதால், தனிமனித வாழ்விலும் குடும்பங்களிலும் பெருகி வரும் துன்பங்களையும், மதுபானம் அருந்துவதால் ஏற்படும் உடல் நலக்குறைவு, வேலைகளுக்குச் செல்லாமல் இருக்கும் நிலை ஆகிய சமுதாயப் பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டி, அயர்லாந்து ஆயர்கள் அரசின் இப்புதிய முயற்சியை வரவேற்றுள்ளனர்.
அயர்லாந்தில் பெருகி வரும் மதுபான பயன்பாட்டினால் ஒவ்வோர் ஆண்டும் அரசுக்கு 370 கோடி யூரோ, அதாவது, ஏறத்தாழ 2220 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்று ICN கத்தோலிக்க செய்தி நிறுவனம் கூறுகிறது.
மதுபானங்களை பொறுப்புடன் பயன்படுத்துதலை ஏற்றுக் கொள்ளலாம் என்றும், பொறுப்பின்றி நடந்து கொள்பவர்களை கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கைகள் தேவை என்றும் ஆயர் Éamonn Walsh  கூறினார்.
மதுபானங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் எந்த ஒரு விளையாட்டையும், பொது விழாக்களையும் எடுத்து நடத்த அனுமதி மறுப்பது, மதுபான விளம்பரங்கள் தொலைக்காட்சி, வானொலி ஆகிய பொது ஊடகங்களில் இடம்பெறாமல் தடுப்பது, போன்ற பரிந்துரைகளை அயர்லாந்து ஆயர்கள் அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர்.

5. இந்தியாவில் வீட்டுப் பணியாளரைப் பாதுகாப்பதற்குப் புதிய சட்டம் தேவை - அருட்சகோதரி

சன.10,2012. இந்தியாவில் வீட்டுவேலை செய்யும் தொழிலாளரைப் பாதுகாக்கவும் அவர்களுக்குரிய தொழிலாளர் உரிமைகள் உறுதி செய்யப்படவுமென புதிய சட்டத்தைக் கொண்டு வருமாறு நடுவண் அரசை வலியுறுத்தியுள்ளார் அருட்சகோதரி ஒருவர்.
மத்திய பிரதேச மாநிலத்தின் இன்டோரில் இத்திங்களன்று நடைபெற்ற ஊர்வலத்தில் உரையாற்றிய அருட்சகோதரி Rosily Panjikaren, வீடுகளில் வேலைசெய்யும் தொழிலாளர் பாலியல்ரீதியான கொடுமைகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும், அத்தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கு சட்டரீதியாக எந்த அமைப்பும் கிடையாது என்றும் கூறினார்.
இப்பணியாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகப் பேசுவதற்கு தனிப்பட்ட பதிவுசெய்யப்பட்ட கழகம் தேவை என்றும் அச்சகோதரி அழைப்பு விடுத்தார்.
அனைத்துலக வீட்டுப்பணியாளர் தினமான இத்திங்களன்று இடம் பெற்ற ஊர்வலத்தில் 600க்கும் மேற்பட்டோர் பங்கு கொண்டனர்.

6. புனித Joan of Arcக்கின் பெருமைகளைச் சுட்டிக்காட்டிய பிரெஞ்ச் அரசுத் தலைவர்

சன.10,2012. கத்தோலிக்கத் திருஅவையைப் பொறுத்தவரை Joan of Arc ஒரு புனிதர், பிரான்ஸ் நாட்டைப் பொறுத்தவரை, நாட்டுப்பற்றுக்கு அவர் தலை சிறந்த ஓர் எடுத்துக்காட்டு என்று பிரெஞ்ச் அரசுத் தலைவர் Nicolas Sarkozy கூறினார்.
Joan of Arc பிறந்த 600ம் ஆண்டு நிறைவாக இப்புனிதர் பிறந்த Domremy என்ற நகரில் அண்மையில் நிகழ்ந்த ஒரு திருப்பலியில் கலந்து கொண்ட பிரெஞ்ச் அரசுத் தலைவர் Sarkozy, புனித Joan of Arcக்கின் பெருமைகளைச் சுட்டிக் காட்டினார்.
1412ம் ஆண்டு புனித Joan of Arc பிறந்ததை நினைவு கூர்ந்து, பிரான்ஸ் நாட்டில் 6ம் நூற்றாண்டு கொண்டாட்டம் இவ்வாண்டு முழுவதும் சிறப்பிக்கப்பட விருக்கின்றது என்று CNS செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இச்சிறப்பு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, பிப்ரவரி மாதம் Domremy நகர் நோக்கி ஒரு திருப்பயணமும், மேமாதம் அந்நகரில் பிரான்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Andre Vingt-Trois தலைமையில் ஜுபிலித் திருப்பலியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில ஆக்கிரமிப்பிற்கு எதிராக பிரான்ஸ் நாட்டைக் காப்பதற்காக போராடிய 19 வயதான Joan of Arcக்கை ஆங்கிலேயர்கள் நெருப்பில் எரித்தனர். இவரது வீரத்தையும், விசுவாசத்தையும் சிறப்பித்து 1920ம் ஆண்டு புனிதராக உயர்த்தப்பட்ட இவர், பிரான்ஸ் நாட்டின் பாதுகாவலராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

7. ஊட்டச்சத்து குறைபாடு தேசிய அவமானம் : இந்தியப் பிரதமர்

சன.10,2012. இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருப்பவர்களின் எண்ணிக்கை, ஏற்றுக்கொள்ளமுடியாத அளவுக்கு அதிகமாகஇருப்பதாகவும், இது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள அவமானம் எனவும் பிரதமர் மன்மோகன்சிங் இச்செவ்வாயன்று கவலை தெரிவித்துள்ளார்.
HUNGaMA என்ற தலைப்பில், ஊட்டச்சத்துக் குறைபாடு பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டபோது உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங் இவ்வாறு கூறினார்.
இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி, பாராட்டப்படும் விதத்தில் உயர்ந்திருந்தாலும், ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, நாம் இந்தக் குறைபாட்டை அகற்றுவதற்கான நடவடிக்கையில் வேகமாக முன்னேறவில்லை என்பதையே காட்டுகின்றது என்றும் அவர் கூறினார்.
நாட்டின் 9 மாநிலங்களில் 112 மாவட்டங்களில் 73 ஆயிரத்துக்கு அதிகமான வீடுகளில் இந்தப் புள்ளி விபரங்கள் திரட்டப்பட்டிருப்பதாகவும், ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட சிறாரிடமும் 74 ஆயிரம் தாய்மாரிடம் பேசி இவ்வறிக்கையைத் தயாரித்திருப்பது அசாதாரண விடயம் என்றும் மன்மோகன்சிங் கூறினார்.
இந்தியாவில் 6 வயதுக்குட்பட்ட ஏறக்குறைய 16 கோடிக் குழந்தைகள் உள்ளனர் என்றுரைத்த பிரதமர், அறிவியலாளர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், கலைஞர்கள், தொழிலாளர்கள், சமூகநலப்பணியாளர்கள் என இவர்கள்தான் பிற்காலத்தில் நாட்டிற்காக உழைக்கவிருப்பவர்கள் என்று கூறினார். 
ஊட்டச்சத்து குறைபாடு நீக்கிட அரசு முனைந்து செயல்பட்டு வருகிறது. பல்முக விழிப்புணர்வுத் திட்டங்கள் 200 மாவட்டங்களில் செயல்படுத்தப்படவிருக்கிறன. இந்நிலை முற்றிலும் சீர்செய்யப்பட வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது என்பது நமக்கு ஏற்பட்டுள்ள தேசிய அவமானமாக இருக்கிறது. மாநில அரசுகளும் இது தொடர்பான திட்டத்திற்குத் துணையாக நின்று செயலாற்ற வேண்டும் என்றும் இந்தியப் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

8. ரூபாய் 20 ஆயிரம் கோடியில் நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம் : உருவாக்குகிறது இந்திய அரசு

சன.10,2012. ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்று, நகர்புற வாழ்வாதாரத் திட்டத்தை, இருபதாயிரம் கோடி ரூபாய்ச் செலவில் உருவாக்க, இந்திய நடுவண் அரசு திட்டமிட்டுள்ளது.
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, மத்திய அரசு கடந்த 2006ம் ஆண்டில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என்ற, நூறு நாள் வேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டத்தால் நல்ல பலன் ஏற்பட்டதால், நகர்புற இளைஞர்களைக் கருத்தில் கொண்டு நகர்புற வாழ்வாதாரத் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டும், உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம், இருபதாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
நாடு முழுவதும் உள்ள நகர்ப்புறக் குடிசைப் பகுதிகளில், 9 கோடியே 30 இலட்சம் பேர் வாழ்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தொழில் பயிற்சி, சுயவேலை வாய்ப்பு போன்றவற்றை அளித்து, பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு உரிய வேலை வாய்ப்பை அளிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
12வது ஐந்தாண்டு திட்டத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள, இத்திட்டம் குறித்த விதிமுறைகள் தற்போது வகுக்கப்பட்டு வருகின்றன.

9. முடக்குவாத நோய்ப் பாதிப்பு தமிழ்நாட்டில் குறைந்துள்ளது

சன.10,2012. தமிழகத்தில் முடக்குவாத நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் தெரிவித்தார்.
இராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூட்டு, தசை மற்றும் இணைப்புத் திசு நோய்களியல் துறையின் 40வது ஆண்டு விழாவை தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் வி.எஸ்.விஜய் இதனை அறிவித்தார்.
மூட்டு நோய்களில் ஒன்றான முடக்குவாதம் வந்தால், ஒரு மனிதனை முற்றிலுமாக முடக்கிவிடும். இந்த நோயை முழுவதுமாக குணப்படுத்த முடியாது என்றாலும், இதற்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்தில் முடக்குவாத நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...