Saturday 14 January 2012

கத்தோலிக்க செய்திகள்: 11 ஜனவரி 2012

1. புலம்பெயர்ந்தோரின் மனித உரிமைகளை ஊடகங்கள் மதிக்க வேண்டும் - பேராயர் வேலியோ

2. இங்கிலாந்தில் வாழும் கத்தோலிக்கர்களின் விசுவாச வாழ்வைத் தூண்டும் குடியேற்றதாரருக்கு நன்றி கூறும் ஆயர் Patrick Lynch

3. பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் கிறிஸ்துவின் உருவம் தாங்கிய ஒரு ஊர்வலத்தில் 85 இலட்சம் மக்கள்

4. இல்லங்களில் பணிபுரிவோருக்குப் பாதுகாப்பு வழங்கும் சட்டங்களை இந்திய அரசு அமல்படுத்த வேண்டும் - இந்தியத் துறவியர்

5. அகில உலகின் 40க்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்கள் வட கொரிய அரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ள திறந்த கடிதம்

6. மனம் திறந்த உரையாடல்களில் ஈடுப ட வில்லையெனில் நைஜீரியாவில் இன்னும் பல மரணங்கள் நிகழும்

7. அனைத்து குழந்தைகளுக்கும்  தரமான, சரிசமமான கல்வியை வழங்க வேண்டியது நமது கடமை

8. பிரான்ஸ் நாட்டில் சட்டத்துக்குப் புறம்பே வாழும் அயல் நாட்டினர் வெளியேற்றம்

------------------------------------------------------------------------------------------------------
1. புலம்பெயர்ந்தோரின் மனித உரிமைகளை ஊடகங்கள் மதிக்க வேண்டும் - பேராயர் வேலியோ

சன.11,2012. மனித குடும்பத்தில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் குடியேற்றம், புலம்பெயர்தல் ஆகிய செயல்பாடுகள்  புதிய வழிகளில் நற்செய்தியை அறிவிக்கும் பணிக்கு அளிக்கப்பட்டுள்ள ஒரு நல்ல வாய்ப்பு என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் உலக நாள் சனவரி 15, வருகிற ஞாயிறன்று  கொண்டாடப்படுவதையொட்டி, குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான மேய்ப்புப்பணி திருப்பீட அவையின் தலைவரும், அண்மையில் திருத்தந்தையால் கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ளவருமான பேராயர் Antonio Maria Veglio, இவ்வுலக நாளைக் குறித்து தன் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
குடியேற்றம், புலம் பெயர்தல் ஆகியவற்றால் பல்வேறு சமுதாய, கலாச்சார, மற்றும் மத பண்புகளின் சங்கமம் நிகழ்கிறது என்று கூறிய பேராயர் வேலியோ, இந்தச் சங்கமத்தின் மூலம் இயேசு கிறிஸ்துவை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ளும் உரையாடல்களும் இடம்பெறுகின்றன என்று எடுத்துரைத்தார்.
இந்த உலக நாளுக்கென திருத்தந்தை வழங்கியுள்ள செய்தியில் நாடு விட்டு நாடு செல்லும் மக்களுக்கு செய்யப்படும் மேய்ப்புப் பணிகள் இன்னும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளதை பேராயர் சுட்டிக் காட்டினார்.
ஊடகங்கள் புலம்பெயரும் மக்களை தவறான வழிகளில் சித்தரிப்பதை சரிசெய்யவேண்டும் என்று திருத்தந்தை தன் செய்தியில் விடுத்துள்ள அழைப்பையும் நினைவுறுத்தி, புலம்பெயர்ந்தோரின் மனித உரிமைகளை ஊடகங்கள் மதிக்க வேண்டும் என்றும் பேராயர் வேலியோ வலியுறுத்தினார்.


2. இங்கிலாந்தில் வாழும் கத்தோலிக்கர்களின் விசுவாச வாழ்வைத் தூண்டும் குடியேற்றதாரருக்கு நன்றி கூறும் ஆயர் Patrick Lynch

சன.11,2012. குடியேறிவரும் விசுவாசிகளின் வருகையால், இங்கிலாந்தின் கத்தோலிக்கத் திருஅவை பெரிதும் பயன் பெறுகிறது என்று இங்கிலாந்து ஆயர் ஒருவர் கூறினார்.
இஞ்ஞாயிறு கொண்டாடப்படும் குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் உலக நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள ஆயர் Patrick Lynch, இங்கிலாந்தில் உள்ள பல பங்குச் சமுதாயங்கள் பன்னாட்டவரின் வருகையால் பயனடைந்துள்ளன என்று கூறினார்.
ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் இருந்து இங்கிலாந்தில் குடியேறியுள்ள கத்தோலிக்கர்கள் இறைவார்த்தையைக் கேட்பதிலும், திருவழிபாடுகளில் கலந்து கொள்வதிலும் காட்டும் ஆர்வம், இங்கிலாந்தில் வாழும் கத்தோலிக்கர்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றது என்று ஆயர் Lynch சுட்டிக் காட்டினார்.
இங்கிலாந்தில் வாழும் கத்தோலிக்கர்களின் விசுவாச வாழ்வைத் தூண்டும் குடியேற்றதாரருக்கு ஆயர் Lynch தன் நன்றியையும் இச்செய்தில் தெரிவித்துள்ளார்.


3. பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் கிறிஸ்துவின் உருவம் தாங்கிய ஒரு ஊர்வலத்தில் 85 இலட்சம் மக்கள்

சன.11,2012. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களால், விசுவாசிகள், தயக்கத்திற்குப் பதில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்று பிலிப்பின்ஸ் தலத்திருஅவையின் ஆயர் ஒருவர் கூறினார்.
இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், பிலிப்பின்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் கிறிஸ்துவின் உருவம் தாங்கிய ஓர் ஊர்வலத்தில் 85 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இத்திங்களன்று கலந்துகொண்டனர் என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய மணிலா பேராயர் Antonio Tagle இவ்வாறு கூறினார்.
கறுப்பு நாசரேத்தூர் மனிதர் (Black Nazarene) என்று புகழ்பெற்ற கிறிஸ்துவின் உருவம் பல அற்புத சக்திகள் கொண்டது என்று நம்பி வரும் பிலிப்பின்ஸ் மக்கள் ஒவ்வோர் ஆண்டும் மணிலா நகரில் இவ்வூர்வலத்தை நடத்தி வருகின்றனர்.
கருமை நிறத்தில் உள்ள கிறிஸ்து சிலுவை சுமந்து செல்வதுபோல் அமைந்துள்ள இந்த திரு உருவத்தைத் தொடும் அனைவருக்கும் புதுமைகள் நடக்கும் என்று பிலிப்பின்ஸ் மக்கள் நம்பி வருகின்றனர்.
அல்கெய்தாவுடன் தொடர்பு கொண்டுள்ளதாய் கருதப்படும் Moro Islamic Liberation Front (MILF) என்ற அடிப்படைவாதக் குழு ஒன்று இவ்வாண்டு நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் குண்டு வெடிப்பை நிகழ்த்தலாம் என்று கூறப்பட்டாலும், இவ்வாண்டு ஊர்வலத்தில் வழக்கத்திற்கும் அதிகமாக கூட்டம் நிறைந்திருந்தது என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.


4. இல்லங்களில் பணிபுரிவோருக்குப் பாதுகாப்பு வழங்கும் சட்டங்களை இந்திய அரசு அமல்படுத்த வேண்டும் - இந்தியத் துறவியர்

சன.11,2012. இல்லங்களில் பணிபுரிவோருக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்கும் சட்டங்களை இந்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்று இந்தியத் தலத்திருஅவையின் துறவியர் வலியுறுத்தி வருகின்றனர்.
இல்லங்களில் பணிபுரிவோருக்கு பணிபாதுகாப்பு, உடல்நல பாதுகாப்பு ஆகியவை இல்லாததால் அவர்கள் பெருமளவு தவறான வழிகளில் பயன்படுத்தப்படுகின்றனர் என்று அருள்சகோதரி Rosily Panjikaren  கூறினார்.
இத்திங்களன்று மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் 600க்கும் அதிகமான இல்லப் பணியாளர்கள் மேற்கொண்ட ஒரு ஊர்வலத்தில் இந்தியாவின் பல்வேறு துறவியரும் கலந்துகொண்டனர்.
இல்லங்களில் பணிசெய்வோரே இந்தியாவில் பெருமளவில் அநீதிகளைச் சந்தித்து வருகின்றனர் என்று இறைவார்த்தை துறவு சபையின் தலைவரான அருள்தந்தை நிக்கோலஸ் மார்திஸ் கூறினார்.
இந்திய அரசு இப்பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டங்களை இயற்ற வேண்டும் என்ற ஒரு கோரிக்கையில் 25,000 கையெழுத்துக்களைப் பெறும் ஒரு முயற்சியில் அருள்சகோதரி Panjikaren இறங்கியுள்ளார்.
அருள்சகோதரியின் இந்த முயற்சிக்கு தன் ஆதரவு உண்டு என்று இந்தூர் பணித்துறை உதவி கமிஷனர் R.G. பாண்டே கூறினார்.


5. அகில உலகின் 40க்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்கள் வட கொரிய அரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ள திறந்த கடிதம்

சன.11,2012. பல ஆண்டுகளாய் மனித உரிமைகளை மறுத்து, வட கொரிய மக்களை வன்மையாய் அடக்கி ஆளும் அரசின் போக்கு மாறவேண்டும் என்று வட கொரிய அரசுத் தலைவருக்கு திறந்த கடிதம் ஒன்றை, அகில உலகின் 40க்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்கள் அனுப்பியுள்ளன.
தன்னுடைய தந்தை, தாத்தா ஆகியோரின் பிறந்தநாள்களை நினைவுகூரும் வண்ணம் வருகிற பிப்ரவரி முதல் தேதி பொது மன்னிப்பு வழங்கப்படும் நாளாக இருக்கும் என்று வட கொரிய அரசுத் தலைவர் Kim Jong-un விடுத்துள்ள ஓர் அறிக்கையை அடுத்து, உலக பிறரன்பு சேவை நிறுவனங்கள் தங்கள் கருத்துக்களை இக்கடிதத்தில் வெளியிட்டுள்ளன.
FIDES செய்தி நிறுவனத்திற்கு கிடைத்த இக்கடிதத்தில், வட கொரிய மக்கள் இன்னும் உணவு பற்றாக்குறையால் அவதியுறும் நிலையைப் போக்க அந்நாட்டின் அரசு தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வட கொரியாவின் சிறைகளில் 2 இலட்சத்திற்கும் 5 இலட்சத்திற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் மக்கள் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்றும், கிறிஸ்தவர்கள் அந்நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகள் என கருதப்படுவதால் கடுமையான துன்பங்களை அவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது என்றும் இக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


6. மனம் திறந்த உரையாடல்களில் ஈடுபடவில்லையெனில் நைஜீரியாவில் இன்னும் பல மரணங்கள் நிகழும்

சன.11,2012. நைஜீரியாவில் வாழும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் மனம் திறந்த உரையாடல்களில் ஈடுபடவில்லையெனில் அந்நாட்டில் இன்னும் பல மரணங்கள் நிகழும் என்று Aid to the Church in Need என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பின் தலைவர் கூறினார்.
கடந்த கிறிஸ்மஸ் நாளன்று நைஜீரியாவில் ஆரம்பமான வன்முறைத் தாக்குதல்கள் தற்போதும் தொடர்வதாகவும், இச்செவ்வாயன்று முடிந்த 24 மணி நேர வன்முறைகளில் 30க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் ICN கத்தோலிக்க செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
கிறிஸ்தவர்கள் நைஜீரியாவின் வட பகுதியை விட்டு நீங்க வேண்டும் என்று போகோ ஹாராம் என்ற அடிப்படைவாதக் குழுவினர் தொடர்ந்து எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
இந்த அடிப்படைவாதக் குழுவினரை கட்டுப்படுத்த அரசு, காவல்துறை மற்றும் இராணுவம் ஆகிய அதிகார அமைப்புக்கள் சரியான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ளவில்லையெனில் அந்நாட்டில் மரணங்கள் இன்னும் அதிகமாகும் என்று Aid to the Church in Need இயக்குனர் Neville Kyrke-Smith கூறினார்.
கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள் மக்களை ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தையும் இயக்குனர் Kyrke-Smith எடுத்துரைத்தார்.


7. அனைத்து குழந்தைகளுக்கும்  தரமான, சரிசமமான கல்வியை வழங்க வேண்டியது நமது கடமை

சன.11,2012. தகவல் பரிமாற்றம் மற்றும், தொடர்புத்துறை தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி உலகமனைத்திலும் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும்  தரமான, சரிசமமான கல்வியை வழங்க வேண்டியது நமது கடமை என்று UNESCO தலைமை இயக்குனர் Irina Bokova  கூறினார்.
ஐ.நா.வின்  கல்வி மற்றும் கலாச்சார நிறுவனம் இச்செவ்வாய் முதல் வியாழன் வரை லண்டன் மாநகரில் நடத்தி வரும் உலக நாடுகளின் கல்வி அமைச்சர்கள் உச்சி மாநாட்டின் துவக்க விழாவில் இச்செவ்வாய் உரையாற்றிய UNESCO இயக்குனர் இவ்வாறு கூறினார்.
'சிறந்தவைகளிலிருந்து கல்வி கற்று உலக மாற்றத்தை உருவாக்க' என்ற மையக் கருத்தில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில், தற்போது உலகில் பயன்படுத்தப்படும் பல உயர்ந்த தொடர்பு முறைகளை கல்வித் துறையில் எவ்வாறு புகுத்துவது என்பது குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன என்று ஐ.நா.செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
அடிப்படை கல்வியில் அனைத்துக் குழந்தைகளும் 2015ம் ஆண்டிற்குள் சேர்க்கப்பட வேண்டும் என்ற இலக்குடன் 2000மாம் ஆண்டிலிருந்து ஆரம்பமான முயற்சிகள் இன்னும் தகுந்த பலனைத் தரவில்லை என்று Irina Bokova சுட்டிக் காட்டினார்.
உலகில் தற்போது 79 கோடியே 30 இலட்சம் முதிர்ந்த வயதுடையோர் கல்வி அறிவின்றி உள்ளனர் என்று கூறும் ஐ.நா.வின் அறிக்கை, 1 கோடியே 90 இலட்சம் ஆசிரியர்கள் உலகெங்கும் நியமனம் செய்யப்பட்டால்தான் 2015ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் அடிப்படை கல்வியைத் தர முடியும் என்று கூறுகிறது.


8. பிரான்ஸ் நாட்டில் சட்டத்துக்குப் புறம்பே வாழும் அயல் நாட்டினர் வெளியேற்றம்

சன.11,2012. பிரான்ஸ் நாட்டில் சரியான ஆவணங்களின்றி, சட்டத்துக்குப் புறம்பே வாழும் வெளி நாட்டவரை வெளியேற்றுவதில் அந்நாட்டினர் அதிக ஆர்வம் காட்டுவதாக ஒரு புள்ளி விபர ஆய்வறிக்கை கூறுகிறது.
பிரான்சில் கடந்த 2011ம் ஆண்டிலிருந்து இதுவரை 32,912 பேர் வெளியேற்றப்பட்டுவிட்டனர் என்று அவ்வாய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களில் ருமேனியர்களின் எண்ணிக்கையே அதிகமெனவும், வெளிநாட்டவர்கள் தங்குவதற்கு அனுமதியளிக்கும் வசதி, கடந்த 2011ம் ஆண்டிலிருந்து 3.6 விழுக்காடு குறைந்திருக்கிறது எனவும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த நபரை மணந்து குடியுரிமை பெறுவதில் 2010ம் ஆண்டில் பெரிதும் தடைகள் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் கடந்த 2011ம் ஆண்டு 31 பேருக்கு இதில் தடை ஏற்படுத்தப்பட்டது எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.
ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரம் சீர் குலைந்ததால் பிரான்சுக்கு வரும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் பலர் கருதுகின்றனர்.
பிரான்சில் சில நாட்களுக்கு முன்பு புதிதாக ஒரு சட்டம் உருவாகி, வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் தொகையைக் குறைக்க முயற்சிகள் நடந்து வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...