Tuesday, 17 January 2012

கத்தோலிக்க செய்திகள்: 16 ஜனவரி 2012

1. திருத்தந்தையின் மூவேளை செப உரை

2. பொதுநிலையினரின் பங்களிப்பை ஊக்குவிக்க சீரோ மலபார் ரீதி திருஅவையின் முடிவுகள்

3. மாவோயிஸ்ட்களின் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முன்னேற்றப் பணிகளை மேற்கொள்ள காரித்தாஸுக்கு இந்திய அரசு அழைப்பு

4. அரசின் கண்ணோட்டத்தில் அனைத்து பாகிஸ்தான் மக்களும் சமமாகக் கருதப்பட வேண்டும் - பாகிஸ்தான் ஆயர்

5. மத உரிமைகளுக்காகப் போராட அமைக்கப்பட்டுள்ள ஈக்குவதோர் ஆயர் பேரவையின் புதிய அமைப்பு

6. ஐரோப்பாவில் எயிட்ஸ் நோயாளிகளிடையே பணீயாற்ற கிறிஸ்தவ சபைகளுக்கு அரசுகள் அழைப்பு

7. தென் கொரியாவின் மறைமாவட்டங்களில் அணு எதிர்ப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன

8. புகைப்பழக்கத்தால் பெருமளவு மரணம் - உள்ளூர் ஆய்வில் அதிர்ச்சி

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் மூவேளை செப உரை

சன.16,2012. இளையோர் ஒவ்வொருவரும் தனி மனிதராக தங்கள் வளர்ச்சியில் மட்டுமல்ல, இறை அழைப்பிற்கு பதிலுரைக்கும் வழியிலும் மேம்பாட்டைக் கண்டுகொள்ள சமூகத்தின் அனைத்துப் படியிலுள்ளோரும் உதவவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தேவ அழைத்தலைக் குறித்து உரைக்கும் இஞ்ஞாயிறு திருப்பலி வாசகங்களை மேற்கோள்காட்டி தன்  ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை, இறைவனுக்கும் அவரின் மக்களுக்கும் பணி செய்வதற்கான சிறப்பு அர்ப்பண அழைப்பில் இளையோர் பதிலுரைக்க உதவுவதில் ஆன்மீக வழிகாட்டிகளின் பங்கை தான் வலியுறுத்திக் கூற விரும்புவதாகத் தெரிவித்தார். அதேவேளை ஒருவரின் அழைப்பில் குடும்பங்கள் ஆற்றும் சிறப்புப் பணியையும் சுட்டிக்காட்டினார் அவர்.
மூவேளை செப உரையை ஆற்றி, மக்களாடு இணைந்து செபித்த பின், உலகக் குடிபெயர்வோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் தினம் குறித்த தன் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். அமைதியில் வாழும் நோக்கில் புது இடங்களைத் தேடி குடிபெயர்வோர் இவர்கள் என்றார்.
இம்மாதம் 18 முதல் 25 வரை சிறப்பிக்கப்பட உள்ள கிறிஸ்தவ ஐக்கியத்திற்கான செப வாரம் குறித்தும் எடுத்துரைத்தத் திருத்தந்தை, கிறிஸ்தவ சபைகளிடையே முழு ஐக்கியம் எனும் கொடை கிட்ட அனைவரும் செபிக்குமாறும் விண்ணப்பித்தார்.
                                                                         

2. பொதுநிலையினரின் பங்களிப்பை ஊக்குவிக்க சீரோ மலபார் ரீதி திருஅவையின் முடிவுகள்

சன.16,2012. திருஅவையின் செயல்பாடுகள் இவ்வுலகில் இன்னும் வெளிப்படுவதற்கு பொதுநிலையினரின் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்று கேரளாவின் சீரோ மலபார் ரீதி திருஅவை முடிவுகள் எடுத்துள்ளது.
கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள சீரோ மலபார் ரீதி தலைமைப் பேராயர் ஜார்ஜ் ஆலஞ்சேரியின் தலைமையில் நடைபெற்ற சீரோ மலபார் திருஅவையின் உயர்மட்டக் கூட்டத்தில் குழந்தைகள், இளையோர், பெண்கள் என்று பொதுநிலையினரின் பல பிரிவுகள் மேற்கொள்ளக்கூடிய செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டன.
இவ்வுயர்மட்டக் கூட்டத்தில் கீழைரீதி சபைகளின் திருப்பேராயத் தலைவர் கர்தினால் Leonardo Sandri உட்பட 43 ஆயர்கள் கலந்து கொண்டனர் என்று UCAN செய்திக்குறிப்பு கூறுகிறது.
பொது நிலையினரின் பங்களிப்பு இல்லையெனில் கத்தோலிக்கத் திருஅவை இயங்குவதும், வளர்வதும் இயலாது என்பதால், அவர்களது பங்களிப்பை ஊக்கப்படுத்தும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்று கத்தோலிக்க கீழைரீதி சபைகளின் சார்பில் பேசிய அருள்தந்தை Paul Thelakat கூறினார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் ஐம்பதாம் ஆண்டைக் கொண்டாடும் இவ்வாண்டில், நலவாழ்வு, கல்வி, வரலாறு, இலக்கியம், அறிவியல், வேளாண்மை, ஊடகங்கள் என பலத் துறைகளிலும் பொதுநிலையினர் முயற்சிகளை மேற்கொள்ளும் வகையில் செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்று UCAN செய்திக்குறிப்பு மேலும் கூறுகிறது.


3. மாவோயிஸ்ட்களின் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முன்னேற்றப் பணிகளை மேற்கொள்ள காரித்தாஸுக்கு இந்திய அரசு அழைப்பு

சன.16,2012. இந்தியாவில் மாவோயிஸ்ட்களின் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முன்னேற்றப் பணிகளை மேற்கொள்ள காரித்தாஸ் அமைப்பை அணுகியுள்ளோம் என்று இந்திய அமைச்சர் ஒருவர் கூறினார்.
கத்தோலிக்கத் திருஅவையின் காரித்தாஸ் போன்ற பிறரன்பு அமைப்புக்கள் வழியாகவும், இன்னும் பிற மதங்களின் பிறரன்பு அமைப்புக்கள் வழியாகவும் சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஓடிஸா ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட்களின் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முன்னேற்றப் பணிகளை மேற்கொள்ள இந்திய அரசு முயன்று வருவதாக கிராம முன்னேற்றத் துறையின் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறினார்.
காரித்தாஸ் போன்ற பிறரன்பு அமைப்புக்கள் மதங்களைக் கடந்து பணிகள் செய்யும் ஒரு பொது அமைப்பு என்ற கண்ணோட்டத்தில் இந்த அழைப்பை இவ்வமைப்பிற்கு அனுப்பியுள்ளதாக அமைச்சர் ரமேஷ் எடுத்துரைத்தார்.
அமைச்சர் ரமேஷை இவ்வாரத்தில் சந்தித்து முன்னேற்ற பணிகள் பற்றி அவருடன் கலந்து பேச இருப்பதாக, இந்த மூன்று மாநிலங்களிலும் ஏற்கனவே பணிகள் செய்துவரும் காரித்தாஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருள்தந்தை வர்கீஸ் மட்டமனா கூறினார்.
இந்த முன்னேற்றப் பணிகளில் ஈடுபட ராமகிருஷ்ணா அறக்கட்டளையையும் இந்திய அரசு அணுகியுள்ளதென்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


4. அரசின் கண்ணோட்டத்தில் அனைத்து பாகிஸ்தான் மக்களும் சமமாகக் கருதப்பட வேண்டும் - பாகிஸ்தான் ஆயர்

சன.16,2012. சாதி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகிஸ்தான் அரசு செயல்படக்கூடாது என்றும், அரசின் கண்ணோட்டத்தில் அனைத்து பாகிஸ்தான் மக்களும் சமமாகக் கருதப்படவேண்டும் என்றும் பாகிஸ்தான் ஆயர் ஒருவர் கூறினார்.
இவ்வாண்டின் முதல் நாள் கொண்டாடப்பட்ட அகிலஉலக அமைதி நாளுக்கென திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வெளியிட்ட அமைதிச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு பைசலாபாத் மறைமாவட்டம் அண்மையில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் அம்மறைமாவட்டத்தின் ஆயர் ஜோசப் கூட்ஸ் இவ்வாறு பேசினார்.
பாகிஸ்தான் நாட்டின் தந்தை என்று அழைக்கப்படும் அலி ஜின்னா மதத்தையும் அரசையும் பிரிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய ஆயர் கூட்ஸ், நாட்டில் உள்ள பல்வேறு மதங்கள், இனங்கள் ஆகியவை நமது பன்முகக் கலாச்சாரத்தை உலகறியச் செய்யும் ஒரு வழியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
உலக அமைதிச் செய்தியில் இளையோர் மீது தனி அக்கறையைத் திருத்தந்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பதைக் கூறிய பைசலாபாத் குருகுல முதல்வர் அருள்தந்தை Khalid Rasheed Asi, இளையோரை மத நல்லிணக்கத்திலும், சமுதாய நீதியிலும் வளர்ப்பது அரசின் தலையாயக் கடமை என்று வலியுறுத்தினார்.


5. மத உரிமைகளுக்காகப் போராட அமைக்கப்பட்டுள்ள ஈக்குவதோர் ஆயர் பேரவையின் புதிய அமைப்பு

சன.16,2012. மதச்சுதந்திரம் என்ற அடிப்படை உரிமை, தனி மனிதரிலும், சமுதாயத்திலும் மதிக்கப்படவேண்டிய ஒன்று என அழைப்பு விடுத்துள்ளது ஈக்குவதோர் ஆயர் பேரவையின் நிரந்தர அவை.
மதநம்பிக்கையாளர்களுக்கான சம உரிமைகள் மற்றும் சுதந்திரம் குறித்து புதிய திட்டம் மற்றும் தேசிய அளவிலான புது அமைப்பு ஒன்றையும் உருவாக்கியுள்ள ஈக்குவதோர் ஆயர்கள், சிறுபான்மை மதத்தவர் மற்றும் பழங்குடியினரின் உரிமைகள் மதிக்கப்பட கத்தோலிக்கப் பள்ளிகள் மற்றும் திருஅவை நிறுவனங்கள் வழியாக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர்.
தனிமனிதச் சுதந்திரம், மனச்சான்றிற்குக் கீழ்ப்படிதல், பன்மை நிலை, மதங்களின் கூட்டு வாழ்வு, தகவலைப் பெறுவதற்கும் கருத்துக்களை வெளியிடுவதற்கும் உரிமை போன்றவை மதிக்கப்பட வேண்டும் எனவும் ஆயர்கள் ஈக்குவதோர் அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும், ம‌த‌க்கொண்டாட்ட‌ங்க‌ள், ம‌த‌ங்களின் புனித‌ இட‌ங்க‌ள், க‌ல்ல‌றைக‌ள், மற்றும்  பொது இட‌ங்களிலும் த‌னியார் இட‌ங்களிலும் ம‌த‌ச்சின்ன‌ங்க‌ளைக் கொண்டிருக்க‌ உரிமை போன்ற‌வை ம‌திக்க‌ப்ப‌ட‌வேண்டும் என‌வும் அர‌சுக்கு விண்ண‌ப்பித்துள்ள‌னர் ஆயர்கள்.
ஈக்குவதோர் ஆயர்களால் புதிதாகத் துவக்கப்பட்டுள்ள அமைப்பு, அரசுக்கும் மதக்குழுக்களுக்குமிடையே உறவுகளை வளர்க்கவும், கல்வி, கலாச்சாரம், குடும்பநலன், கலை போன்றவைகளை முன்னேற்றவும் தனிக்கவனம் செலுத்தப் பாடுபடும் என ஆயர்கள் மேலும் தெரிவித்தனர்.


6. ஐரோப்பாவில் எயிட்ஸ் நோயாளிகளிடையே பணீயாற்ற கிறிஸ்தவ சபைகளுக்கு அரசுகள் அழைப்பு

சன.16,2012. ஹெச்.ஐ.வி. நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்டோர் மற்றும் எயிட்ஸ் நோயாளிகளிடையே தங்கள் பணிகளை அதிகரித்து அவர்களின் துன்பம் போக்க உதவுமாறு ஐரோப்பிய நாடுகளின் கிறிஸ்தவ சபைகளுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது ஐரோப்பிய ஐக்கிய அவை.
ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் எயிட்ஸ் நோயாளிகளிடையே தங்கள் பணிகளைச் சிறப்புற ஆற்றி வரும் கிறிஸ்தவ சபைகள், இரஷ்யாவிலும் உக்ரைனிலும் இத்தகையப் பணிகளை அதிகரிக்கவேண்டும் என விண்ணப்பிக்கிறது ஐரோப்பிய ஐக்கிய அவை.
ஏற்கனவே இரஷ்ய கிறிஸ்தவ சபைகளின் உதவியை அந்நாட்டு அரசு நாடியுள்ளதும், எயிட்ஸ் நோயாளிகளிடையே கிறிஸ்தவ சபைகள் தங்கள் பணிகளை அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
2001 முதல் 2010 வரை ஹெச்.ஐ.வி. நோய்க்கிருமிகளால் புதிதாகப் பாதிக்கப்பட்டோரில்  90 விழுக்காட்டினர் இரஷ்யா மற்றும் உக்ரைனைச் சார்ந்தவர்கள் என்கிறது WHO எனும் உலக நல அமைப்பு.
2010ம் ஆண்டில் 3 கோடியே 40 இலட்சம் மக்கள் இந்நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், கடந்த 30 ஆண்டுகளில் 2 கோடியே 50 இலட்சம் பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளதாகவும் ஐ.நா. அமைப்பு தெரிவிக்கிறது.


7. தென் கொரியாவின் மறைமாவட்டங்களில் அணு எதிர்ப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன

சன.16,2012. ஆயர்களின் ஆதரவோடு தென் கொரியாவின் மறைமாவட்டங்களில் அணு எதிர்ப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இத்திங்களன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரிய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி பணிக்குழுவின் முயற்சியால், Andong, Busan, Daegu, Wonju ஆகிய நான்கு மறைமாவட்டங்களில் அணு உலைகளுக்கு எதிரான கிழக்குக் கடற்கரை உறுதுணைக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தென் கொரியாவில் Samcheok மற்றும் Yeongdeok ஆகிய இரு நகரங்களில் புதிய அணு உலைகளை அரசு கட்டாமல் இருப்பதற்கு இக்குழு தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்ளும் என்று இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான அருள்தந்தை Vincentius Kim Jun-han கூறினார்.
தென் கொரியாவில் இயங்கி வரும் அணு உலைகளின் தற்போதைய நிலை, முக்கியமாக அவைகளில் கடைபிடிக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய ஓர் அறிக்கையை மக்களுக்கு அளிக்குமாறு அரசை வலியுறுத்துவதும் இந்த அமைப்பின் ஒரு முக்கிய நோக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் தற்போது 21 அணு உலைகள் இயங்கி வருகின்றன. மேலும் 11 புதிய அணு உலைகளைக் கட்ட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.


8. புகைப்பழக்கத்தால் பெருமளவு மரணம் - உள்ளூர் ஆய்வில் அதிர்ச்சி

சன.16,2012. தமிழகத்தின் பெரியகுளம் நகராட்சியில் கடந்த ஆண்டு இறந்த ஆண்களில் 40 விழுக்காட்டினர் புகைபழக்கத்தால் இறந்தது அங்கு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பெரியகுளம் நகராட்சி நலவாழ்வுப் பிரிவு நடத்திய ஆய்வின்படி, கடந்தஆண்டு உயிரிழந்த 320 ஆண்களில் 40 விழுக்காட்டினர் புகை பிடிப்பவர்களாகவும், புகையிலை பயன்படுத்துபவராகவும், 25 விழுக்காட்டினர் குடிப்பழக்கம் உள்ளவராகவும் இருந்துள்ளனர். இவர்களில், 30 விழுக்காட்டினர் நீரழிவு நோயாளிகள். 25 முதல் 40 வயதுக்குள் 160 பேர் இறந்துள்ளனர். 2010ம் ஆண்டு 25 விழுக்காட்டினர் மட்டுமே புகைப்பழக்கத்தால் இறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து வெளியிட்ட நலவாழ்வுத்துறை துணை இயக்குனர் சண்முகசுந்தரம், அரசு மருத்துவ மனை மற்றும் ஆரம்ப நலவாழ்வு நிலையங்களில் புகைபிடிப்பதால் உடல் நலப்பாதிப்பு, மரணம் நிகழ்வதைப் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.
 

No comments:

Post a Comment