1. இறைவனின் அதிகாரம், சேவை, தாழ்மை, அன்பு ஆகிய பண்புகளைக் கொண்டது - திருத்தந்தை
2. புனித பூமியில், அமைதி நிலவச் செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு
3. இத்தாலியின் முன்னாள் அரசுத்தலைவரின் மரணத்திற்கு திருத்தந்தையின் இரங்கல் செய்தி
4. மங்கோலியா நாடு மரணதண்டனைச் சட்டத்தை நீக்க முன்வந்துள்ளது குறித்து
தலத்திருச்சபை மகிழ்ச்சி
5. வழிபாட்டு உரிமை கேட்டு இந்தோனேசிய கிறிஸ்தவர்கள் அரசுத்தலைவர் மாளிகை முன்
போராட்டம்
6. ஆசியா பீபியின் விடுதலை வேண்டி 560,000 கையெழுத்துக்கள்
7. காங்கோ குடியசில் காலரா நோயை எதிர்த்துப் போராட ஐ.நா. நிதி உதவி
------------------------------ ------------------------------ ------------------------------ -
1. இறைவனின் அதிகாரம், சேவை, தாழ்மை, அன்பு ஆகிய பண்புகளைக் கொண்டது - திருத்தந்தை
சன.30,2012. இறைவனின் அதிகாரம், வல்லமையையும் அதிகாரத்தையும் அடக்கி ஆள்வதையும் கொண்டதல்ல, மாறாக அது சேவை, தாழ்மை, அன்பு ஆகிய பண்புகளைக் கொண்டது என்று இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கப்பர்நாகும் தொழுகைக்கூடத்தில் இயேசு போதித்த போது, தீய ஆவி பிடித்திருந்த ஒருவரைக் குணமாக்கிய இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து உரை வழங்கிய திருத்தந்தை, இயேசுவின் வார்த்தையின் வல்லமை, தீயவைகளை வெளியேற்றுகின்றது என்று கூறினார்.
இம்மூவேளை செப உரையைக் கேட்பதற்காக, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஏறக்குறைய 25 ஆயிரம் திருப்பயணிகளிடம் இவ்வாறு உரைத்த திருத்தந்தை, "கடவுளின் அதிகாரம்" பற்றிச் சிந்திக்கவும் அழைப்பு விடுத்தார்.
இறை அதிகாரம், இவ்வுலக அதிகார இயல்பைக் கொண்டதல்ல, ஆனால், அது, இவ்வுலகைப் படைத்த இறைவனின் அன்பின் அதிகாரமாகும், தனது ஒரே மகனை மனித உரு எடுக்கச் செய்ததில், மனிதனைப் போல் தம்மைத் தாழ்த்தியதில், அவ்வதிகாரம் பாவத்தால் மாசடைந்த உலகத்தைக் குணப்படுத்தியது என்றும் திருத்தந்தை கூறினார்.
"இயேசுவின் வாழ்வு முழுவதும், தாழ்மையில் வல்லமையின் மாற்றமாகும், தன்னையே அவர் ஊழியர் என்ற நிலைக்குத் தாழ்த்தினார் என்று Romano Guardini என்பவர் எழுதியுள்ளார் என்றும் அவர் மேற்கோள் காட்டினார்.
மனிதனுக்கு அதிகாரம் என்பது, உடைமைகளைக் கொண்டிருத்தல், ஆளுமை, அடக்கி ஆள்தல், வெற்றி ஆகியவைகளைக் கொண்டது, ஆனால், இறைவனின் அதிகாரம், சேவை, தாழ்மை, அன்பு ஆகிய பண்புகளைக் கொண்டது என்றும் திருத்தந்தை கூறினார்.
2. புனித பூமியில், அமைதி நிலவச் செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு
சன.30,2012. புனித பூமியில், அமைதி எனும் கொடைக்காக ஆண்டவரிடம் மன்றாடுவோம் என்று இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
புனித பூமியில் அமைதி ஏற்படுவதற்காகச் செபிக்கும் அனைத்துலக நாள் இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, இவ்விண்ணப்பத்தை முன்வைத்தார் திருத்தந்தை.
இவ்வுலக நாளையொட்டி, உரோமை நகருக்கும் அகில உலகத்திற்கும் அமைதியைக் குறிக்கும் அடையாளமாக, வத்திக்கான் சன்னலிலிருந்து இரண்டு மாடப்புறாக்களையும் திருத்தந்தை பறக்கவிட்டார். ஆனால் அவை திரும்பி வந்ததால், அவை பாப்பிறையின் இல்லத்தை விட்டுச் செல்ல விரும்பவில்லை என்றும் திருத்தந்தை கூறினார். உரோம் கத்தோலிக்கக் கழகத்தின் இரண்டு இளையோர் இப்புறாக்களைத் திருத்தந்தையிடம் இத்தினத்தன்று கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
மேலும், இஞ்ஞாயிறு "உலகத் தொழுநோய் தினம்" கடைபிடிக்கப்படுகிறது என்பதை நினைவுபடுத்திய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், Raoul Follereau நண்பர்கள் என்ற இத்தாலிய தொழுநோய் ஒழிப்பு அமைப்பினரை வாழ்த்தினார். அத்துடன், இந்நோயால் தாக்கப்பட்டவர்கள் மற்றும் இவர்களுக்கு உதவி செய்பவர்களைத் தான் ஊக்கப்படுத்துவதாகக் கூறினார்.
இந்நோய்த் தாக்குவதற்கான உண்மையான காரணங்களைக் கண்டுபிடிப்பதற்கும், இத்தொழுநோயாளிகள் ஓரங்கட்டப்படுவதல் மற்றும் இவர்களின் வறுமையை ஒழிப்பதற்கும் பல வழிகளில் தங்களை அர்ப்பணித்து வருபவர்களைத் தான் உற்சாகப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்னும், நம் ஆண்டவர் ஆலயத்தில் அர்ப்பணிக்கப்பட்ட விழாவான வருகிற பிப்ரவரி 2, வியாழனன்று உலகத் துறவியர் தினம் சிறப்பிக்கப்படுகிறது, நமது மனித சமுதாயத்தை விடுவித்துக் குணப்படுத்தும் இறைஇரக்கம், அன்பின் வல்லமையால் நம்மை அருளாலும் நன்மைத்தனத்தாலும் நிரப்புவதற்கு நம் இதயங்களை இட்டுச் செல்ல அன்னைமரியாவிடம் செபிப்போம் என்று ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை.
3. இத்தாலியின் முன்னாள் அரசுத்தலைவரின் மரணத்திற்கு திருத்தந்தையின் இரங்கல் செய்தி
சன.30,2012. இத்தாலியின் முன்னாள் அரசுத்தலைவர் ஆஸ்கார் லூயிஜி ஸ்கால்ஃபரோ இறைபதம் சேர்ந்ததைத் தொடர்ந்து, தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டு, இத்தாலி நாட்டு மக்களுக்கும் முன்னாள் அரசுத்தலைவரின் குடும்பத்திற்கும் இரங்கற்செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இத்தாலி நாடு அடைந்துள்ள இவ்விழப்பில் தானும் ஆழமான விதத்தில் பங்கு கொள்வதாக தன் செய்தியில் உரைக்கும் திருத்தந்தை, இந்த முன்னாள் அரசுத்தலைவர் தன் கடமைகளைச் சிறப்புடன் ஆற்றியுள்ளதுடன் அறநெறி மற்றும் கிறிஸ்தவ மதிப்பீடுகளைக் கட்டிக்காப்பதில் சிறப்புப் பங்காற்றியதை தான் நன்றியுடன் நினைவு கூர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
1992 முதல் 99 வரை இத்தாலியின் அரசுத்தலைவராக பதவி வகித்த ஸ்கால்ஃபரோ, இஞ்ஞாயிறன்று உரோம் நகரில் தனது 93ம் வயதில் காலமானார்.
4. மங்கோலியா நாடு மரணதண்டனைச் சட்டத்தை நீக்க முன்வந்துள்ளது குறித்து தலத்திருச்சபை மகிழ்ச்சி
சன.30,2012. மங்கோலியா நாடு மரணதண்டனைச் சட்டத்தை நீக்க முன்வந்துள்ளது, அந்நாட்டு வரலாற்றிலும் மனித உரிமை மதிப்பு நிலையிலும் ஒரு முக்கியமான தருணம் என தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு உலான்பாட்டர் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் வென்சஸ்லாவோ பதில்யா.
பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வழியாகவும் அரசியல் மற்றும் கலாச்சார நிலையிலும் மரணதண்டனைக்கு எதிரான விழிப்புணர்வை மங்கோலியாவில் ஏற்படுத்தியதற்காக கத்தோலிக்க சான் எஜிதியோ குழுவிற்கும், மங்கோலியா சமூகத்திற்கும் தன் நன்றியை வெளியிட்டார் ஆயர் பதில்யா.
மங்கோலியாவில் ஏறத்தாழ 700 அங்கத்தினர்களையேக் கொண்டுள்ள தலத்திருச்சபை, மனித உரிமை மேம்பாட்டிற்கென நற்செய்தி மதிப்பீடுகளுடன் உழைத்து வருவது குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
5. வழிபாட்டு உரிமை கேட்டு இந்தோனேசிய கிறிஸ்தவர்கள் அரசுத்தலைவர் மாளிகை முன் போராட்டம்
சன.30,2012. தாங்களும் குடிமக்கள் என்ற முறையில் தங்கள் வழிபாட்டு உரிமையை இந்தோனேசிய அரசு மதிக்கவேண்டும் என்ற விண்ணப்பத்துடன் தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள அரசுத்தலைவர் மாளிகை முன் மனித உரிமை நடவடிக்கையாளர்களும் கிறிஸ்தவ சபையினரும் இணைந்து அமைதிப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
2010ம் ஆண்டு கிறிஸ்தவ சபை கோவில் ஒன்றை அரசு அதிகாரிகள் மூடியதைத் தொடர்ந்து, திறந்த வெளியில் வழிபாட்டு நிகழ்ச்சிகளை நடத்திய இக்கிறிஸ்தவ சபையினரை தீவிரவாத முஸ்லீம் குழு ஒன்று தாக்கி வருவதால், வழிபாட்டு உரிமை கேட்டு அரசுத்தலைவர் மாளிகை முன் இஞ்ஞாயிறன்று போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே, கிறிஸ்தவ குழுக்கள் மீதான தாக்குதலுக்கு தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ள அந்நாட்டு இஸ்லாமிய குழு ஒன்று, மதசகிப்புத்தன்மையுடன் செயல்படுமாறு தீவிரவாதக் குழுக்களிடம் விண்ணப்பித்துள்ளது.
6. ஆசியா பீபியின் விடுதலை வேண்டி 560,000 கையெழுத்துக்கள்
சன.30,2012. பொய்யான குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தானில் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள கிறிஸ்தவப் பெண்மணி ஆசியா பீபியின் விடுதலையை வேண்டி ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இறைநிந்தனை என்ற குற்றச்சாட்டின் பேரில் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை நீக்கக் கோரி, லாகூர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள ஆசியா பீபியின் விடுதலைக்கென இணையதளம் வழி 10 இலட்சம் மக்களின் கையெழுத்தைப் பெறும் நோக்கத்துடன் துவக்கப்பட்ட இப்பிரச்சாரத்தைத் தொடர்ந்து, இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஐந்து இலட்சத்து அறுபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் இவ்விண்ணப்பத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இக்கையெழுத்துக்களுடன் கூடிய விண்ணப்பங்கள் அவ்வப்போது அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கான பாகிஸ்தான் தூதரகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.
7. காங்கோ குடியசில் காலரா நோயை எதிர்த்துப் போராட ஐ.நா. நிதி உதவி
சன.30,2012. மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியசில் காலரா நோயை எதிர்த்துப் போராட அவசர கால நிதியுதவியாக 91 இலட்சம் டாலர்களை வழங்கியுள்ளது ஐக்கிய நாடுகள் சபையின் அவசர கால நிதி உதவி அமைப்பு.
காங்கோ குடியரசில் 22,000க்கும் மேற்பட்ட மக்கள் காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 44 இலட்சம் டாலர்களை ஐநாவின் UNICEF அமைப்பிற்கும் 47 இலட்சம் டாலர்களை உலக நல அமைப்பான WHOவிற்கும் வழங்குகிறது CERF என்ற இந்த ஐ.நா.அமைப்பு.
இவ்விரு ஐ.நா.அமைப்புகளும் காங்கோ குடியரசின் அரசு நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் காங்கோவில் 500க்கும் மேற்பட்டோர் காலரா நோய்க்குப் பலியாகியுள்ளனர்.
No comments:
Post a Comment