1. திருத்தந்தை : புதிய நற்செய்தி அறிவிப்பில் புதுப்பிக்கப்பட்ட ஆர்வம் தேவை
2. கராச்சி உயர் மறைமாவட்டத்திற்குப் புதிய பேராயர்
3. இக்கால உலகின் பிரச்சனைகளுக்குப் பொதுநிலையினர் இயக்கங்கள் பதில் சொல்கின்றன – வத்திக்கான் அதிகாரி
4. புரட்சிக் குழுக்களின் குடியரசு தினப் புறக்கணிப்பு குறித்து திருஅவைத் தலைவர்கள் கவலை
5. இந்தியாவில் 13 சிறுமிகளுக்கு ஒருவர் வீதம் ஆறு வயதை எட்டுவதில்லை
6. கத்தோலிக்க மற்றும் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கு இடையே ஒன்றிப்பை ஊக்குவித்தனர் அச்சபைகளின் தலைவர்கள்
7. ஏமனில் 7,50,000 சிறார் ஊட்டச்சத்துக் குறைவுள்ளவர்கள்
8. ஈராக்கில் ஒரே நாளில் 34 பேருக்கு மரண தண்டனை
9. நடைபாதைகளில் ஏழைகள் தூக்கம் : இந்திய உச்சநீதிமன்றம் கவலை
------------------------------ ------------------------------ ------------------------------ -
1. திருத்தந்தை : புதிய நற்செய்தி அறிவிப்பில் புதுப்பிக்கப்பட்ட ஆர்வம் தேவை
சன.25,2012. மறை அறிவிக்கும் பணியானது, எல்லாக் கண்டங்களிலுள்ள ஒவ்வொரு கிறிஸ்தவர் மற்றும் ஒவ்வொரு கிறிஸ்தவ சமூகத்தின் முக்கிய கடமையாகும் என்று திருத்தந்தை சுட்டிக் காட்டியுள்ளார்.
இவ்வாண்டு உலக மறைபரப்பு தினத்திற்கென திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தியில், “நான் நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!”(1கொரி.9 :16) என்ற புனித பவுலின் வார்த்தைகள் ஒவ்வொரு கிறிஸ்தவரிலும் ஆழமாக ஒலிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மறைபோதகத்தளங்கள், இளம் திருஅவைகள், அண்மையில் உருவாக்கப்பட்ட மறைப்பணித்தளங்கள், மறைப்பணியாளர்கள் இன்னும் தேவைப்படும் இடங்கள் என அனைத்து இடங்களும் மறைப்பணிப் பண்பைக் கொண்டுள்ளன எனக் கூறியுள்ளார் திருத்தந்தை.
உலகின் பல பகுதிகளிலிருந்து பல அருட்பணியாளரும் இருபால் துறவியரும், பல பொதுநிலையினரும், ஏன் முழுக்குடும்பங்களுமே தங்களது நாடுகளை விட்டு விட்டுப் பிற திருஅவைகளுக்குச் சென்று கிறிஸ்துவின் பெயரை அறிவித்து அதற்குச் சாட்சிகளாக இருக்கின்றனர், இச்செயலானது, திருஅவைகள் மத்தியில் ஆழமான உறவையும் அன்பையும் பகிர்வையும் வெளிப்படுத்துவதாக இருக்கின்றது என்றும் திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.
மிகவும் ஏழ்மையில் வாடுவோருக்கு நீதி, ஒதுக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு, ஒதுக்குப்புறங்களில் வாழ்வோருக்கு மருத்துவ உதவி, கிராமங்களில் கல்வி பெற வாய்ப்புகள் எனப் பல பிறரன்புப் பணிகளும் இந்நற்செய்தி அறிவிக்கும் பணியில் செய்யப்படுகின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.
புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி என்ற தலைப்பில் வருகிற அக்டோபரில் நடைபெறவிருக்கும் உலக ஆயர் மாமன்றத்தில், ஆசியா, ஆப்ரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, ஓசியானியா ஆகிய பகுதிகளிலிருந்து அதிக எண்ணிக்கையில் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது வளமையான மறைப்பணி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள் என்றும் திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.
மேற்கத்திய உலகில் மட்டுமல்ல, மனித சமுதாயத்தில் பெருமளவில் ஏற்பட்டுள்ள விசுவாச நெருக்கடி, நற்செய்தி அறிவிப்புக்கான ஆர்வத்துக்கு முன்வைக்கும் தடைகளில் ஒன்றாக இருக்கின்றது என்றும் உலக மறைபரப்புத் தினச் செய்தியில் சுட்டிக் காட்டியுள்ள திருத்தந்தை, புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியில் புதுப்பிக்கப்பட்ட ஆர்வம் தேவை என்றும் கூறியுள்ளார்.
வருகிற அக்டோபர் 21ம் தேதி சிறப்பிக்கப்படும் உலக மறைபரப்பு தினத்திற்கானத் திருத்தந்தையின் செய்தி இப்புதனன்று வெளியிடப்பட்டது.
2. கராச்சி உயர் மறைமாவட்டத்திற்குப் புதிய பேராயர்
சன.25,2012. பாகிஸ்தானின் கராச்சி உயர் மறைமாவட்டப் புதிய பேராயராக, ஆயர் ஜோசப் கூட்ஸ் அவர்களை, இப்புதனன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கராச்சி உயர் மறைமாவட்டத்தை இதுவரை நிர்வகித்து வந்த பேராயர் Evarist Pinto அவர்களின் பணி ஓய்வை, திருஅவைச் சட்டம் 401.1ன்படி ஏற்றுக் கொண்ட திருத்தந்தை, இதுவரை Faisalabad ஆயராகப் பணியாற்றிய ஆயர் ஜோசப் கூட்ஸ் அவர்களை, கராச்சி உயர் மறைமாவட்டத்தின் புதிய பேராயராக நியமித்துள்ளார்.
1945ம் ஆண்டு, Amritsar ல் பிறந்த ஆயர் கூட்ஸ், 1988ம் ஆண்டு மே 5ம் தேதி ஹைதராபாத் வாரிசு ஆயராக நியமனம் செய்யப்பட்டு, 1990ம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாந்தேதி அம்மறைமாவட்ட ஆயராகப் பொறுப்பேற்றார். 1998ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி Faisalabad ஆயராக நியமிக்கப்பட்டார்.
கராச்சி மறைமாவட்டம், 1948ம் ஆண்டு மே 20ம் தேதி, பம்பாய் உயர்மறைமாவட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டது. பின்னர் அது 1950ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி, உயர்மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது. தற்போது கராச்சி உயர்மறைமாவட்டத்தில், ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட கத்தோலிக்கர் உள்ளனர்.
3. இக்கால உலகின் பிரச்சனைகளுக்குப் பொதுநிலையினர் இயக்கங்கள் பதில் சொல்கின்றன – வத்திக்கான் அதிகாரி
சன.25,2012. கத்தோலிக்கத் திருஅவையில் செயல்படும் பொதுநிலை விசுவாசிகளின் இயக்கங்கள், திருஅவைக்குக் கொடையாகவும், நவீன சமூதாயம் முன்வைக்கும் இன்னல்களுக்குப் பதில் சொல்வதாயும் இருக்கின்றன என்று திருப்பீட பொதுநிலையினர் அவைத் தலைவர் கர்தினால் Stanislaw Rylko தெரிவித்தார்.
திருஅவையில் செயல்பட்டு வரும் பொதுநிலையினர் இயக்கங்களும், புதிய சமூகங்களும் இக்காலத்திய நமது திருஅவைக்கு இவ்வுலகம் முன்வைக்கும் சவால்களுக்குத், தூய ஆவியின் காலத்திற்கேற்றப் பதிலாக இருக்கின்றன என்றும் கர்தினால் Rylko கூறினார்.
இஸ்பெயினில் 1944ம் ஆண்டு தொடங்கப்பட்ட Cursillo என்ற பொதுநிலையினர் இயக்கம் நடத்திய ஆயிரமாவது தியானத்தில் கோர்தோபா பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய கர்தினால் Rylko, இவ்வாறு கூறினார்.
உண்மையான புனிதக் கிறிஸ்தவர்கள் இவ்வுலகிற்குத் தேவைப்படுகிறார்கள் என்றுரைத்த கர்தினால் Rylko, இக்காரணத்தினாலேயே, பொதுநிலையினர் இயக்கங்களும், கழகங்களும், மறைப்பணியாளராக, நற்செய்தி அறிவிப்பாளராக, ஒன்றிப்பின் உண்மையான பள்ளிகளாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
4. புரட்சிக் குழுக்களின் குடியரசு தினப் புறக்கணிப்பு குறித்து திருஅவைத் தலைவர்கள் கவலை
சன.25,2012. வடகிழக்கு இந்தியாவை நாட்டின் பிற பகுதிகளோடு நன்றாக ஒருங்கிணைப்பதற்கு மிகத் தீவிரமான முயற்சிகள் எடுக்கப்படுமாறு, அப்பகுதியின் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவ்வியாழனன்று நடைபெறும் குடியரசு தினக் கொண்டாட்டங்களைப் புறக்கணிக்குமாறு அப்பகுதியின் 12 புரட்சிக் குழுக்கள் அழைப்பு விடுத்திருப்பதை முன்னிட்டு இப்புதனன்று இவ்வாறு இந்திய நடுவண் அரசுக்கு விண்ணப்பித்துள்ளனர் திருஅவைத் தலைவர்கள்.
புரட்சிக் குழுக்களின் இவ்வழைப்புக் குறித்து கருத்து தெரிவித்த, வடகிழக்கு இந்திய அமைதி அவையின் உறுப்பினராகிய பேராயர் தாமஸ் மெனாம்பரம்பில், உடனடித் தீர்வுகளைவிட, உணர்வுப்பூர்வமான ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியம் என்று தெரிவித்தார்.
மேலும், மியான்மாரிலிருந்து செயல்படும் இந்தியப் புரட்சிக் குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக மியான்மார் அரசு அறிவித்திருப்பதாகச் சொல்லப்படுவதும், புரட்சிக் குழுக்களின் குடியரசு தினப் புறக்கணிப்புக்குக் காரணம் என ஊடகங்கள் கூறுகின்றன.
இதற்கிடையே, அசாம் மாநிலத்தின் குவாஹாட்டியில் சுமார் 700 புரட்சியாளர்கள் இச்செவ்வாயன்று ஆயுதங்களுடன் சரணடைந்துள்ளனர்.
5. இந்தியாவில் 13 சிறுமிகளுக்கு ஒருவர் வீதம் ஆறு வயதை எட்டுவதில்லை
சன.25,2012. இந்தியாவில் 13 சிறுமிகளுக்கு ஒருவர் வீதம், ஆறு வயதுக்கு மேல் உயிர் வாழ்வதில்லை என்று, இந்தியத் தேசிய சிறுமிகள் தினமான இச்செவ்வாயன்று கூறினார் மருத்துவர் Pascoal Carvalho.
இந்தியாவில் குடும்பங்களிலும் வெளியிலும் பெண் குழந்தைகளின் உரிமைகள் மீறப்படுவதும் அக்குழந்தைகளுக்கு எதிரான எல்லாவிதமானப் பாகுபாடுகளும் களையப்பட வேண்டும் என்றும் மருத்துவர் Carvalho கேட்டுக் கொண்டார்.
கருவிலே பாலினம் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்படுவது மற்றும் பெண்சிசுக்கொலைகளினின்று சிறுமிகள் காப்பாற்றப்படுமாறும், திருப்பீட வாழ்வுக் கழகத்தின் உறுப்பினராகிய மருத்துவர் Carvalho வலியுறுத்தினார்.
சனவரி 24ம் தேதி, தேசிய சிறுமிகள் தினமாகக் கடைபிடிக்கப்படும் என்று 2009ம் ஆண்டில் இந்திய அரசு அறிவித்தது. 1966ம் ஆண்டு சனவரி 24ம் தேதி, திருமதி இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்தியக் கத்தோலிக்கத் திருஅவை, அன்னைமரியா பிறந்த விழாவான செப்டம்பர் 8ம் தேதியன்று, தேசிய சிறுமிகள் தினத்தைச் சிறப்பிக்கின்றது.
அக்டோபர் 11ம் தேதி உலகப் சிறுமிகள் தினம்.
6. கத்தோலிக்க மற்றும் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கு இடையே ஒன்றிப்பை ஊக்குவித்தனர் அச்சபைகளின் தலைவர்கள்
சன.25,2012. பிரித்தானிய சமுதாயத்தில், மதத்தின் மீதான வெறுப்புணர்வு அதிகரித்து வரும் வேளை, அந்நாட்டில் கத்தோலிக்க மற்றும் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கு இடையே ஒன்றிப்பு ஊக்கப்படுத்தப்படுமாறு இவ்விரு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் பரிந்துரைத்தனர்.
வளர்ந்து வரும் உலகாயுதப் போக்கின் கடும் அச்சுறுத்தல்களையும், பொதுவாக, மதம், குறிப்பாக, கிறிஸ்தவம் ஓரங்கட்டப்படும் நிலையையும் தாங்கள் எதிர்நோக்கி வருவதாக காப்டிக் ஆர்த்தடாக்ஸ் ஆயர் Angaelos கூறினார்.
இன்றைய உலகில் கிறிஸ்தவத்தை வாழ்ந்து அதற்குச் சாட்சியாக இருப்பதன் பொருளையும் மதிப்பையும் வாழ்ந்து சொல்லிக் கொடுக்க வேண்டிய தேவை, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபைகளின் உறுப்பினர்கள் என்ற முறையில் தங்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை ஆயர் Angaelos வலியுறுத்திக் குறிப்பிட்டார்.
கத்தோலிக்க மற்றும் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபைகள் இணைந்து இவ்வாரத்தில் அறிக்கை வெளியிட்ட நிகழ்ச்சியில் இவ்வாறு கூறினார் ஆயர் Angaelos.
7. ஏமனில் 7,50,000 சிறார் ஊட்டச்சத்துக் குறைவுள்ளவர்கள்
சன.25,2012. ஏமனில் ஐந்து வயதுக்கு உட்பட்ட 7,50,000 சிறார் ஊட்டச்சத்துக் குறைவினால் துன்புறுகின்றனர் என்று ஐ.நாவின் குழந்தை நல அமைப்பான யூனிசெப் அறிவித்தது.
சுமார் 2 கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஏமன் நாட்டின் சில பகுதிகளில் 2000மாம் ஆண்டில் இருந்ததைவிட தற்போது ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள சிறாரின் எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளது என்றும் யூனிசெப் அதிகாரி மரியா காலிவிஸ் கூறினார்.
ஏமன் நாடு இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு அந்நாட்டின் உள்கட்டமைப்புக்குச் சர்வதேச சமுதாயம் உதவுமாறும் யூனிசெப் கேட்டுள்ளது.
8. ஈராக்கில் ஒரே நாளில் 34 பேருக்கு மரண தண்டனை
சன.25,2012. ஈராக்கில் ஒரே நாளில் பெண்கள் உட்பட 34 பேருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சட்டப்படி வெளிப்படையாக விசாரணை நடந்திருந்தால்கூட, ஒரே நாளில் 34 பேரை தூக்கில் போட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளை கூறியுள்ளார்.
ஈராக்கில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் மட்டுமின்றி பொருட்களுக்குச் சேதம் விளைவிக்கும் குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்ட 2 பெண்கள் உட்பட 34 பேருக்கு ஈராக்கில் கடந்த 19ம் தேதி ஒரே நாளில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஈராக்கில் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 1,200 பேருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாதத்தில் 64 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
9. நடைபாதைகளில் ஏழைகள் தூக்கம் : இந்திய உச்சநீதிமன்றம் கவலை
சன.25,2012. "இந்தியா சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆன பின்னும், நடைபாதைகளிலும், திறந்த வெளிகளிலும், கடும் பனிப்பொழிவில் பொதுமக்கள் படுத்துத் தூங்கும் நிலை உள்ளது. வீடுகள் இல்லாத மக்கள் தூங்குவதற்கு, இரவு நேர தற்காலிகத் தங்கும் வசதிகளை மாநில அரசுகள் அமைத்துத் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வீடுகள் இல்லாத ஏழை மக்கள் தூங்குவதற்கு, இரவு நேரத் தங்குமிட வசதி அமைத்துத் தருவது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தல்வீந்தர் பண்டாரி, தீபக் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வட கிழக்கு மாநிலங்கள் உட்பட பல மாநிலங்களில், தற்போது கடும் பனிப் பொழிவு நிலவுகிறது. இந்தக் கடும் குளிரிலும், வீடுகள் இல்லாத ஏழை மக்கள், திறந்தவெளிகளிலும், நடைபாதைகளிலும் படுத்துத் தூங்குவது, கவலை அளிக்கிறது. வசிப்பிடம் என்பது மக்களின் அடிப்படை உரிமை. ஏழை மக்களின் வாழ்க்கை பாதுகாக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர்.
காஷ்மீர், இமாச்சல், உத்தரகண்ட், பஞ்சாப், அரியானா, இராஜஸ்தான், உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநில அரசுகள், இதுபோன்ற வீடுகள் இல்லாத மக்களுக்கு, இரவு நேரங்களில் தங்குவதற்குத் தற்காலிகமான கூரை வசதிகளுடன் கூடிய வசதியை அமைத்துத் தர வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.
No comments:
Post a Comment