Tuesday 17 January 2012

கத்தோலிக்க செய்திகள்: 17 ஜனவரி 2012

1.  சீனாவில் சிறைவைக்கப்பட்டிருக்கும் ஆயர்கள் மற்றும் குருக்கள் விடுவிக்கப்பட மீண்டும் அழைப்பு

2.  இணைய தளத்தில் கத்தோலிக்கர்களின் இருப்பு, தேவையான ஒன்று

3.  கோவில் நிலத்தை அபகரித்த பாகிஸ்தான் அரசுக்கு தல திருஅவை கண்டனம்

4.  வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொணர நைஜீரிய ஆயர் பேரவை அழைப்பு

5.  திருப்பீடத்திற்கான தூதரகத்தை மூடுவதற்கு அயர்லாந்து அரசு எடுத்த முடிவுக்கு அந்நாட்டு  மக்கள் எதிர்ப்பு

6.  அனைத்து மக்களும் சக்திகளைப் பயன்படுத்தும் வகையில் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் - .நா.பொதுச் செயலர்

7.  உடல் பருமனால் இந்தியாவில் 5.50 கோடி பேர் பாதிப்பு

------------------------------------------------------------------------------------------------------

1.  சீனாவில் சிறைவைக்கப்பட்டிருக்கும் ஆயர்கள் மற்றும் குருக்கள் விடுவிக்கப்பட மீண்டும் அழைப்பு

சன.17,2012. சீனாவில் கைதுசெய்து சிறைவைக்கப்பட்டிருக்கும் ஆயர்கள் மற்றும் குருக்கள் அரசால் விடுவிக்கப்படுவது, சீனா குறித்த எண்ணம் சர்வதேச அளவில் மேம்பட உதவும் என உரைத்தார் நற்செய்தி அறிவிப்புக்கான திருப்பேராயத்தின் செயலர் பேராயர் Savio Hon Tai-fai.
அரசுக் காவலில் காணாமற் போனவர்கள் மற்றும் கட்டாய வேலை முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ள கத்தோலிக்கத் தலைவர்கள் குறித்து சீன அரசு மௌனம் காத்தாலும் கத்தோலிக்கர்கள் ஒரு நாளும் அவர்களை மறந்து விட முடியாது என்றார் பேராயர்.
மறைசாட்சிகளான இவர்கள், நம் நற்செய்தி அறிவித்தலை பலன் தரும் ஒன்றாக மாற்றியுள்ளதுடன், இவ்வுலகிலுள்ள அனைத்து விசுவாசிகளின் வீரத்துவ எடுத்துக்காட்டாகவும் உள்ளார்கள் என்றார் பேராயர் Hon Tai-fai.
சீன கத்தோலிக்க குருக்களும் ஆயர்களும் தவறு செய்திருந்தால் அவர்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படவேண்டுமேயொழிய, தனிமைச் சிறைகளுக்கு அல்ல என அரசைக் குறைகூறியுள்ளார் பேராயர் Hon Tai-fai.

2.  இணைய தளத்தில் கத்தோலிக்கர்களின் இருப்பு, தேவையான ஒன்று

சன.17,2012. இணைய தளத்தில் கத்தோலிக்கர்களின் இருப்பு, தேவையான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்றார் திருப்பீட சமூகத்தொடர்பு அவையின் தலைவர் பேராயர் கிளவ்தியோ செல்லி.
சுவிட்சர்லாந்தின் மெர்ஸி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய பேராயர் செல்லி, 2009ம் ஆண்டில் 44கோடி கத்தோலிக்கர்கள் இணையதளத்தைப் பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்றைய நவீன சமூகம் தகவல்களின் காலத்திலிருந்து உரையாடலின் காலத்திற்கு கடந்து வந்துள்ளது என்பதையும் குறிப்பிட்டுப் பேசிய பேராயர் செல்லி, திருத்தந்தையர்கள் 6ம் பால், இரண்டாம் ஜான் பால் மற்றும் 16ம் பெனடிக்ட், தகவல் தொடர்புத் துறைக்கு ஆற்றியுள்ள பங்களிப்பு, கத்தோலிக்க விசுவாசத்தை எடுத்துரைக்க நம் ஒவ்வொருவருக்கும் உதவுவதாக உள்ளது எனவும் கூறினார்.

3.  கோவில் நிலத்தை அபகரித்த பாகிஸ்தான் அரசுக்கு தல திருஅவை கண்டனம்

சன.17,2012. நில அபகரிப்பிலிருந்து கோவில் நிலத்தைக் காப்பாற்றவே அதனை நிர்மூலமாக்கி கைப்பற்றியதாக பாகிஸ்தான் அரசு தற்போது நியாயப்படுத்த முயல்வது குறித்து தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு கத்தோலிக்கத் தலைவர்கள்.
தற்போது கைப்பற்றப்பட்டுள்ள நிலத்திற்கு அருகாமையில் 1264 சதுர மீட்டர் நிலத்தை தலத் திருஅவைக்கு லாகூர் மாநில அரசு வழங்க உள்ளதுடன் ஒரு பள்ளியையும் முதியோர் இல்லத்தையும் மாநில அரசு கட்டிகொடுக்க உள்ளதாக அறிவித்தார் லாகூர் மாநில அரசின் சிறுபான்மை துறை அமைச்சர் கம்ரன் மைக்கில்.
ஆனால், தகுந்த காரணங்கள் இன்றி கோவிலை இடித்ததை அரசு நியாயப்படுத்தியுள்ளதையும், நிலம் வழங்க முன்வந்துள்ளதையும் எற்க மறுத்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
அநியாயமாக திருஅவையிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களும் கட்டிடங்களும் திருப்பி வழங்கப்படும் வரை தங்கள் எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடர உள்ளதாக அறிவித்தார் அருள்தந்தை மோரிஸ் ஜலால்.
கோவில்களையும் மதச்சின்னங்களையும் விவிலியங்களையும் சேதப்படுத்தியவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என அழைப்பு விடுத்த முன்னாள் ஆங்கிலிக்கன் ஆயர் மனோ ருமால்ஷா, தங்கள் புனித நூலின் ஒரு பக்கத்தைக் கிழித்தாலே பல ஊர்களையும் நகர்களையும் கொளுத்துவோர், மற்ற மதத்தவரின் உணர்வுகளையும் மதிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

4.  வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொணர நைஜீரிய ஆயர் பேரவை அழைப்பு

சன.17,2012. நைஜீரியா நாட்டைச் செயலிழக்கச் செய்திருக்கும் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொணர அந்நாட்டு அரசும் தொழிலாளர்கள் அமைப்புக்களும் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நைஜீரிய ஆயர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த வாரம் திங்கள் முதல் நைஜீரியாவில் பெட்ரோல் விலையேற்றத்தை மையப்படுத்தி நடந்து வரும் வேலை நிறுத்தம் அந்நாட்டினை மேலும் வறுமைக்கு இட்டுச் செல்லும் வழி என்று நைஜீரிய ஆயர்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
ஏழைகளை மனதில் வைத்து போராடுவதாக ஒவ்வொரு குழுவும் கூறி வந்தாலும், இந்த வேலை நிறுத்தத்தால், ஏழைகளே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆயர் பேரவையின் தலைவரான பேராயர் Felix Alaba Job கூறினார்.
கடந்த ஒரு வாரமாக நடைபெறும் இந்த வேலைநிறுத்தத்தை நாட்டின் மீது அக்கறையில்லாத சமூக விரோதிகள் முன்னின்று நடத்துவதுபோல் உள்ளது என்றும் ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையே, நைஜீரிய அரசுத் தலைவர் பெட்ரோல் விலையைக் குறைப்பதாக இத்திங்களன்று அறிவித்ததைத் தொடர்ந்து, எட்டு நாட்களாக நடைபெற்ற இந்த வேலைநிறுத்தத்தை நிறுத்திவிட்டு, இச்செவ்வாய் முதல் மீண்டும் பணிகளைத் தொடர்வதாக தொழிலாளர்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது என்று ஊடகங்கள் கூறுகின்றன.

5.  திருப்பீடத்திற்கான தூதரகத்தை மூடுவதற்கு அயர்லாந்து அரசு எடுத்த முடிவுக்கு அந்நாட்டு  மக்கள் எதிர்ப்பு

சன.17,2012. திருப்பீடத்திற்கான தூதரகத்தை மூடுவதற்கு அயர்லாந்து அரசு எடுத்த முடிவு அந்நாட்டின் பெரும்பான்மை மக்களால் எதிர்க்கப்பட்டதாக அண்மையில் Irish Examiner என்ற நாளிதழ் வெளியிட்ட செய்தி கூறுகிறது.
வத்திக்கான் நாட்டிற்கான தூதரகத்தை மூட உள்ளதாக அயர்லாந்து வெளியுறவு அமைச்சர் Eamon Gilmore அறிவித்தவுடன் மக்களிடமிருந்து வெளியுறவு அமைச்சகத்துக்கு வந்த செய்திகளுள் 93 விழுக்காடு, அந்த முடிவை விமர்சித்து எதிர்ப்பதாகவே இருந்தது என்கிறது இச்செய்தி.
தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வெளியுறவு அமைச்சகத்திலிருந்து இத்தகவலைப் பெற்று வெளியிட்டுள்ளது Irish Examiner நாளிதழ்.

6.  அனைத்து மக்களும் சக்திகளைப் பயன்படுத்தும் வகையில் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் - .நா.பொதுச் செயலர்

சன.17,2012. எதிர்காலத்தின் சக்தியைக் குறித்து சிந்திக்கும் நாம் அனைத்து மக்களும் சக்திகளைப் பயன்படுத்தும் வகையில் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று .நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
தேவைகளுக்கு உட்பட்ட வகையில் பயன்படுத்தி பாதுகாக்கக்கூடிய சக்தி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் 2012ம் ஆண்டு, அகிலஉலக பாதுக்கக்கக்கூடிய சக்தி ஆண்டென .நா. அறிவித்துள்ளது. இந்த அகில உலக ஆண்டை அபுதாபியில் நடைபெறும் ஒரு பன்னாட்டு கருத்தரங்கில் அதிகாரப் பூர்வமாகத் துவக்கி வைத்த பான் கி மூன், சக்தியைப் பற்றிய ஆய்வுகள் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும் இவ்வாறு கூறினார்.
இத்திங்கள் முதல் வியாழன் வரை அபுதாபியில் நடைபெறும் உலக எதிர்காலச் சக்தி உச்சி மாநாட்டில் உரையாற்றிய .நா.பொதுச் செயலர், மில்லேன்னிய இலக்குகளை அடைவதற்கு உலகின் சக்திகளை நாம் பயன்படுத்தும் வழிகள் மிகவும் முக்கியமான ஒரு வழி என்று கூறினார்.
சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவும், சுற்றுச்சூழலை தகுந்த வகையில் பயன்படுத்தவும் அடிப்படையாக இருப்பது நாம் பயன்படுத்தும் சக்திகளே என்று பான் கி மூன் சுட்டிக்காட்டினார்.
குறைந்த விலையில் எரிசக்தியை மக்களுக்குத் தரக்கூடிய அறிவியல் கண்டுபிடிப்புக்கள் நமக்கு அவசரமாகத் தேவை என்று இந்த மாநாட்டின் தலைவர் Nassir Abdulaziz Al-Nasser கூறினார்.
உலகில் இன்று வாழும் மனிதர்களில் ஐந்தில் ஒருவர் மின்சக்தி இல்லாமல் வாழ்கின்றனர் என்றும், 300 கோடிக்கும் அதிகமான மக்கள் சமைப்பதற்கு விறகு, கரி, மிருகக் கழிவுகள் ஆகியவற்றையே எரிசக்தியாகப் பயன்படுத்துகின்றனர் என்றும் .நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.

7.  உடல் பருமனால் இந்தியாவில் 5.50 கோடி பேர் பாதிப்பு

சன.17,2012. இந்தியாவில் ஐந்தரை கோடி பேர், உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என புனேயைச் சேர்ந்த பிரபல  மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உடல் பருமனைக் குறைப்பதற்காக, 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ள, புனேயைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சஷாங்கா  ஷா, நாட்டில் 5 கோடியே 50 இலட்சம் பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றம், மரபணு பிரச்னை, உடல் உழைப்பின்மை, உள்ளிட்ட பல காரணங்களால் உடல் பருமன் ஏற்படுகிறது எனவும் கூறினார்.
இந்த உடல் பருமன் நீரிழிவு, இதய நோய்கள் உள்ளிட்ட நோய்களுக்கு காரணமாக அமைகிறது' என மேலும் கூறினார் மருத்துவர் ஷா.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...