Sunday 8 January 2012

கத்தோலிக்க செய்திகள்: 05 ஜனவரி 2012

1. விசுவாச ஆண்டிற்கானத் திட்டங்கள் வெளியிடப்படவுள்ளன

2. தொமினிக்கன் குடியரசு நாட்டில் மதிப்புள்ள வகையில் தேர்தலை நடத்தி முடிக்குமாறு கர்தினால் Rodriguez அழைப்பு

3. கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியரையும் விரோதிகளாகக் காட்டிவரும் ஊடகங்களால் நைஜீரியா மேலும் அழிவை நோக்கிச் செல்லும் - பேராயர் Onaiyekan

4. வடகொரியாவில் 66 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் தேவையான உணவின்றி வாடுகின்றனர் - அகில உலக காரித்தாஸ் அமைப்பு

5. இந்தியாவில் பரவிவரும் வாடகைத் தாய்மை என்ற எண்ணத்திற்கு கிறிஸ்தவ, இஸ்லாமியத் தலைவர்கள் எதிர்ப்பு

6. மனித விற்பனையைத் தடுக்கும் முயற்சிகளில் கல்கத்தா உயர்மறைமாவட்டம்

7. திருத்தந்தை வழங்கிய 45வது உலக அமைதி நாள் செய்தியை ஆதரித்து பாகிஸ்தானில் அமைதி ஊர்வலங்கள்

8. பாகிஸ்தானில் UNICEF உருவாக்கிய 35 பள்ளிகள்

------------------------------------------------------------------------------------------------------

1. விசுவாச ஆண்டிற்கானத் திட்டங்கள் வெளியிடப்படவுள்ளன

சன.05,2012. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டைச் சிறப்பிக்கும் விதமாக, இவ்வாண்டு அக்டோபர் 11ம் தேதி ஆரம்பிக்கப்படவுள்ள விசுவாச ஆண்டிற்கானத் திட்டங்களைத் திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயம் இச்சனிக்கிழமை வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விசுவாச வாசலைத் தேடும் மக்களுக்கு உதவக் கூடியவர்களாக நாம் அனைவரும் மாறும் பொருட்டு, நம்பிக்கைக்குரிய மகிழ்ச்சிநிறை சாட்சிகளாகவும் விசுவாசத்தை மீண்டும் கண்டு கொள்பவர்களாகவும், இயேசுவை நோக்கிய நம் மனமாற்றத்தை      புதுப்பிப்பவர்களாகவும் வாழ இவ்விசுவாச ஆண்டின் நடவடிக்கைகள் உதவும் என்றும் அப்பேராயம் கூறியது.
வருகிற அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு, கிறிஸ்தவ விசுவாசத்தைப் பரப்புவதற்குப் புதிய நற்செய்தி அறிவிப்பு என்பது தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளதையும் இப்பேராயம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
அகில உலகத் திருஅவை, ஆயர் பேரவைகள், மறைமாவட்டங்கள், பங்குத்தளங்களும் இயக்கங்களும் என நான்கு படிகளில் இந்த விசுவாச ஆண்டின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு, திருத்தந்தை 2ம் ஜான் பால் வெளியிட்ட, கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி நூலின் இருபதாம் ஆண்டு போன்றவையும் இந்த விசுவாச ஆண்டில் சிறப்பிக்கப்படும் எனவும் அப்பேராயம் கூறியது.
2012ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி தொடங்கும் விசுவாச ஆண்டு, 2013ம் ஆண்டு நவம்பர் 24 ம் தேதி நிறைவடையும்.


2. தொமினிக்கன் குடியரசு நாட்டில் மதிப்புள்ள வகையில் தேர்தலை நடத்தி முடிக்குமாறு கர்தினால் Rodriguez அழைப்பு

சன.05,2012. தென் அமெரிக்காவின் தொமினிக்கன் குடியரசு நாட்டில் இவ்வாண்டு மேமாதம் நிகழவிருக்கும் அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வன்முறைகளைக் களைந்து, மதிப்புள்ள வகையில் தேர்தலை நடத்தி முடிக்குமாறு அந்நாட்டு கர்தினால் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.
புத்தாண்டையொட்டி Santo Domingo பேராலயத்தில், நாட்டின் துணை அரசுத்தலைவர், மற்றும் பிற நாட்டுத் தூதர்கள் கலந்து கொண்ட திருப்பலியில் புத்தாண்டு சிறப்புச் செய்தியை வழங்கிய அம்மறைமாவட்டத்தின் பேராயரான கர்தினால் Nicolas de Jesus Lopez Rodriguez, மேமாதம் 20ம் தேதி நடைபெறவிருக்கும் அரசுத்தலைவர் தேர்தல் பற்றி குறிப்பிட்டுப் பேசினார்.
தொமினிக்கன் குடியரசு நாட்டில் அண்மைக்காலங்களில் பெருகிவரும் வன்முறைகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய கர்தினால் Rodriguez, இவ்வன்முறைகள் குடும்பங்களில் பெண்களுக்கு பெருமளவில் இழைக்கப்படுகிறதென்றும், பொதுவாழ்வில் வன்முறைகளின் ஒரு முக்கிய காரணம் போதைப் பொருள் வர்த்தகம் என்றும் சுட்டிக் காட்டினார்.


3. கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியரையும் விரோதிகளாகக் காட்டிவரும் ஊடகங்களால் நைஜீரியா மேலும் அழிவை நோக்கிச் செல்லும் - பேராயர் Onaiyekan

சன.05,2012. ஆப்ரிக்காவின் நைஜீரியாவில் தற்போது உருவாகியுள்ள பதட்ட நிலைகள் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே நிகழும் மோதல்கள் என்று ஊடகங்கள் கூறிவருவதை அந்நாட்டின் பேராயர் ஒருவர் வன்மையாக கண்டித்துள்ளார்.
கிறிஸ்மஸ் நாளன்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களுக்கு போகோ ஹராம் என்ற அடிப்படைவாத இஸ்லாமிய குழு பொறுப்பேற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி பேசிய அபுஜா பேராயர் John Olurunfemi Onaiyekan, அந்நாட்டில் தற்போது நிலவும் போராட்டங்களை இரு மதங்களுக்கிடையில் உருவாகியுள்ள மோதல்களாக ஊடகங்கள் கூறிவருவது பொறுப்பற்ற ஒரு செயல் என்று வன்மையாக கண்டித்துள்ளார்.
திருப்பீடத்தின் சார்பாக இயங்கிவரும் Aid to the Church in Need என்ற கத்தோலிக்க பிறரன்பு நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில், நைஜீரியாவின் பல ஊர்களில் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இணைந்து வாழ்கின்றனர் என்றும், ஒரு சில குடும்பங்களில் இவ்விரு மதங்களையும் சார்ந்தவர்கள் உள்ளனர் என்றும் பேராயர் Onaiyekan சுட்டிக் காட்டினார்.
இவ்விரு மதத்தவரையும் விரோதிகளாக உருவாக்கிவரும் ஊடகங்களால் இந்த நாடு மேலும் அழிவை நோக்கிச் செல்லும் ஆபத்து உள்ளதென்று அவர் குறிப்பிட்டுக் கூறினார்.
போகோ ஹராம் என்ற அடிப்படைவாதக் குழு இஸ்லாமியக் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படுகிறதென்பதையும், இக்குழுவால் இஸ்லாமியரும் வன்முறைகளுக்கு உள்ளாகின்றனர் என்றும்  பேராயர் கூறினார்.
உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் நைஜீரியாவில் வாழும் கிறிஸ்தவர்களுக்காக செபிக்கும்படி பேராயர் Onaiyekan தன் பேட்டியின் இறுதியில் அழைப்பு விடுத்துள்ளார்.


4. வடகொரியாவில் 66 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் தேவையான உணவின்றி வாடுகின்றனர் - அகில உலக காரித்தாஸ் அமைப்பு

சன.05,2012. பிறரன்புப் பணி நாடுகளுக்கிடையே உள்ள எல்லைகளைக் கடந்தது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
வடகொரியாவில் வளர்ந்து வரும் கவலைக்குரிய சூழல் குறித்து அண்மையில் Seoul நகரில் அகில உலக காரித்தாஸ் அமைப்பு நடத்திய ஒரு கூட்டத்தில் பேசிய கொரியாவின் திருப்பீடத் தூதர் பேராயர் Osvaldo Padilla இவ்வாறு கூறினார்.
பல அரசியல் தடைகள் இருந்தாலும், அவைகளைத் தாண்டி வட கொரியாவில் காரித்தாஸ் அமைப்பு மேற்கொண்டு வரும் பணிகளைக் குறித்தும் பேராயர் Padilla இக்கூட்டத்தில் எடுத்துரைத்தார்.
வடகொரிய அரசுத் தலைவரின் மரணம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது, ஆயினும் அந்நாட்டில் உணவின்றி வாடும் பல்லாயிரம் மக்கள் உலகின் கவனத்தை அதிகம் ஈர்க்க வேண்டும் என்று அகில உலக காரித்தாஸ் அமைப்பு கூறியுள்ளது.
பல வழிகளிலும் ஆசிய நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள வடகொரியா, வெள்ளம், கடும் பனிக்காலம் மற்றும் பழமையான வேளாண்மை முறைகள் ஆகிய பிரச்சனைகளால் கடும் உணவு பற்றாக்குறையைச் சந்தித்து வருகிறது என்று காரித்தாஸ் அமைப்பின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
காரித்தாஸ் வெளியிட்ட விவரங்களின்படி, 2 கோடியே 45 இலட்சம் மக்கள்தொகை கொண்ட வடகொரியாவில் 66 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் தேவையான உணவின்றி வாடுவதாகக் கூறப்பட்டுள்ளது.
வட, தென் கொரிய நாடுகளுக்கிடையில் சுமுகமான உறவுகள் இல்லாத ஒரு சூழலிலும், தென் கொரிய காரித்தாஸ் அமைப்பு வட கொரியாவின் அவசரத் தேவைகளை நிறைவு செய்து வருகிறதென்று ICN கத்தோலிக்க செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


5. இந்தியாவில் பரவிவரும் வாடகைத் தாய்மை என்ற எண்ணத்திற்கு கிறிஸ்தவ, இஸ்லாமியத் தலைவர்கள் எதிர்ப்பு

சன.05,2012. இயற்கைக்கு முரணான செயற்கை முறைகளில் குழந்தையைப் பெற்றுக் கொள்வதை கத்தோலிக்கத் திருஅவை ஏற்றுக் கொள்ளாது என்று நன்னெறி இறையியலாளரான அருள்தந்தை சூசை ஆரோக்கியசாமி கூறினார்.
மனைவி அல்லாமல் மற்றொரு பெண்ணின் உதரத்தில் ஆணின் உயிரணுக்களை செலுத்தி, குழந்தையை உருவாக்கும் வாடகைத்தாய் என்ற எண்ணம் இந்தியாவில் பரவி வருவதற்கு கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வாடகைத் தாய்மை என்பது இயற்கைக்கு முரணானது என்றும், விவிலியப் படிப்பினைகளுக்கு எதிரானது என்றும் அருள்தந்தை ஆரோக்கியசாமி எடுத்துரைத்தார்.
வாடகைத் தாய்மை என்பது நன்னெறிக்கு முரணானது என்பது மட்டுமல்ல, அதனால் பல்வேறு உளநல ரீதியான பிரச்சனைகளும் உருவாகும் என்று மனநல மருத்துவர் Anita Chauhan கூறினார்.
இயற்கையில் கருவுற்று குழந்தை பிறப்பதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முறையையும் இஸ்லாம் நியதிகள் ஏற்றுக் கொள்ளாது என்று இந்திய இஸ்லாம் தலைமைப் போதகர் Umer Ahmed Ilyasi கூறினார்.
உடலையும், மனதையும் பாதிக்கும் இந்த செயற்கை முறையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, குழந்தையற்ற பெற்றோர் அனாதைக் குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்று இஸ்லாம் தலைவர் Ahmed Ilyasi பரிந்துரைத்தார்.
வாடகைத் தாய்மை என்பது இந்துமத கோட்பாடுகளிலும் ஐயங்களை உருவாக்கும் ஒரு போக்கு என்று இராமகிருஷ்ணா அறக்கட்டளையைச் சார்ந்த சுவாமி சாந்தாத்மானந்த் கூறியதுடன், அனாதைக் குழந்தைகளை தத்தெடுக்கும் முறை வரவேற்கப்பட வேண்டியதொன்று என்ற பரிந்துரையை அவரும் வலியுறுத்தினார்.


6. மனித விற்பனையைத் தடுக்கும் முயற்சிகளில் கல்கத்தா உயர்மறைமாவட்டம்

சன.05,2012. மனித விற்பனை, முக்கியமாக, பெண் குழந்தைகள் மற்றும் இளம் பெண்களின் விற்பனை இந்தியா சந்திக்கும் ஒரு பெரும் கொடுமை என்று கல்கத்தா உயர்மறைமாவட்டம் கூறியது.
இந்தியத் திருஅவை சந்தித்து வரும் இந்த பெரும் சவாலைக் குறித்து FIDES செய்தி நிறுவனத்திற்கு கல்கத்தா உயர்மறைமாவட்டம் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது.
இவ்வறிக்கையின்படி, ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் ஏறத்தாழ 6 கோடி பேர் மனித விற்பனைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
கல்கத்தா தலத்திருஅவையின் Seva Kendra Calcutta என்ற சமூகப்பணி மையத்தின் வழியாக 50 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் ஒவ்வொரு குழுவிலும் செயல்படும் 30 இளையோர் கிராமங்களுக்குச் சென்று மனித விற்பனைகள் நடைபெறுகின்றனவா என்று கண்காணித்து வருகின்றனர் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


7. திருத்தந்தை வழங்கிய 45வது உலக அமைதி நாள் செய்தியை ஆதரித்து பாகிஸ்தானில் அமைதி ஊர்வலங்கள்

சன.05,2012. புத்தாண்டு நாளுக்கென நீதியிலும் அமைதியிலும் இளையோருக்கு கல்வி புகட்டுவது என்ற மையக்கருத்தில் 45வது உலக அமைதி நாள் செய்தியை திருத்தந்தை வழங்கியதை ஆதரித்து பாகிஸ்தானின் பைசலாபாத் மற்றும் தாண்ட்லியான்வாலா (Tandlianwala) ஆகிய இரு இடங்களில் அமைதி ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.
Peace and Human Development (PHD) மற்றும் Association of Women for Awareness and Motivation (AWAM) என்ற இருவேறு அமைப்புக்களால் நடத்தப்பட்ட இந்த ஊர்வலங்களில் இளையத் தலைமுறையைச் சார்ந்த கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் கலந்து கொண்டனர்.
இளைய தலைமுறையை நீதியிலும் அமைதியிலும் வளர்ப்பதற்கு கல்வி ஒரு முக்கிய வழி என்று திருத்தந்தை கூறியிருப்பது மிகவும் பொருத்தமானதே என்று ஊர்வலத்தில் கலந்து கொண்ட நசீம் அந்தனி கூறினார்.
மனித உரிமைகள், அமைதி, ஒப்புரவு, மத நல்லிணக்கம் ஆகிய பல அழகிய அம்சங்கள் பாகிஸ்தானில் பாடத்திட்டங்களாக வழங்கப்படுவது அவசியம் என்றும் நசீம் அந்தனி எடுத்துரைத்தார்.
பல மதங்களையும், கலாச்சாரங்களையும் கொண்ட பாகிஸ்தானில் சகிப்புத் தன்மையை வளர்க்கும் முயற்சிகளில் அரசு பெருமளவு ஈடுபடவேண்டும் என்று AWAM அமைப்பின் தலைவர் நாசியா சர்தார் கூறினார்.


8. பாகிஸ்தானில் UNICEF உருவாக்கியுள்ள 35 பள்ளிகள்

சன.05,2012. 2010ம் ஆண்டு வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் UNICEF எனும் ஐ.நா.கல்வி மற்றும் கலாச்சார அமைப்பு உருவாக்கிய 35 பள்ளிகளை அம்மாநிலத்தின் கல்வித்துறையிடம் இப்புதனன்று ஒப்படைத்தது.
நெதர்லாந்து தூதரகம், மற்றும் OPEC நிறுவனம் உட்பட பல்வேறு உலக நிறுவனங்கள் வழங்கிய நிதி உதவியைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த 35 பள்ளிகளில் 4,500 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்று ஐ.நா.செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
வெள்ளத்தில் அழிக்கப்பட்ட பல பள்ளிகளின் குழந்தைகளுக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக கூடாரங்களில் அமைக்கப்பட்ட பள்ளிகளில் UNICEF பணியாளர்கள் கல்வி புகட்டி வந்தனர் என்றும் இச்செய்திக் குறிப்பு கூறுகிறது.
குழந்தைகளுக்கு கல்வியுடன் சேர்த்து, நலவாழ்வு, சுத்தமான சூழ்நிலை, தகுந்த உடல்பயிற்சிகள் மற்றும் மனநலப் பயிற்சிகள் ஆகிய அனைத்தையும் வழங்குவதே இப்பள்ளிகளின் இலக்காக இருக்கும் என்று UNICEF அதிகாரி Karen Allen கூறினார்.

 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...