1. குருத்துவ மாணவர்களுக்கு திருத்தந்தையின் உரை
2. திருத்தந்தை - கிறிஸ்தவ ஒன்றிப்பை, புதுப்பிக்கப்பட்ட உறுதியோடு நோக்க வேண்டும்
3. மூன்று ஐ.நா.ஒப்பந்தங்களை அமல்படுத்துவதற்கு திருப்பீடம் ஒப்புதல்
4. தேர்தல் நம்பகத்தன்மை குறித்து Congo ஆயர்கள் கேள்வி
5. சான் எஜிதியோவின் பிறரன்புப் பணிகளைப் பாராட்டுகிறார் பிலிப்பீன்ஸ் தூதுவர்
6. போஸ்னியாவில் பகையுணர்வுடன் நடத்தப்படுவதாக அருட்சகோதரிகள் கவலை
7. பாகிஸ்தானில் காரித்தாஸ் பிறரன்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
8. இந்தியச் சிறைக் கைதிகள் மரணம் குறித்து மனித உரிமை அமைப்பு கவலை
------------------------------ ------------------------------ ------------------------------ -
1. குருத்துவ மாணவர்களுக்கு திருத்தந்தையின் உரை
சன 26, 2012. குருத்துவ மாணவர்களின் இறையியல் கல்வி செப வாழ்வுடன் நெருங்கிய தோழமை கொண்டதாக இருக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இத்தாலியின் உம்பிரியா, கலாபிரியா மற்றும் கம்பாஞ்ஞா மாநிலங்களில் 1912ம் ஆண்டு துவக்கப்பட்ட குருமடங்கள் தற்போது தங்கள் நூறாமாண்டைக் கொண்டாடி வருவதையொட்டி அவைகளின் அதிபர்களையும் குருமட மாணவர்களையும் இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, அப்பகுதிகளின் ஆன்மீக மற்றும் கலாச்சாரப் பாரம்பரியங்களைப் பாராட்டியதுடன், இக்குருமடங்களின் வளர்ச்சியில் துவக்க காலத்தில் சிறப்புப் பங்காற்றியுள்ள இயேசு சபையினரின் பணிகளுக்கும் தன் நன்றியை வெளியிட்டார்.
பல்வேறு பொருளாதார நெருக்கடிகளால் இந்த இத்தாலிய மாநிலங்கள் துன்பங்களை அனுபவித்தாலும், தங்களின் ஆன்மீகப் பாரம்பரியங்களிலும் பக்தி முறைகளிலும் உயிர்த்துடிப்புடன் இருப்பது, புதுப்பிக்கப்பட்ட புதிய நற்செய்தி அறிவித்தலுக்கு இட்டுச் செல்ல வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் குருமட அதிபர்களிடமும் குருமட மாணவர்களிடமும் முன்வைத்தார் திருத்தந்தை.
தங்கள் வாழ்வில் புனிதத்துவத்தை ஊக்குவிப்பவர்களாகவும் நம்பிக்கைக்குரிய சாட்சிகளாகவும் பணிபுரியக்கூடிய நற்செய்திப் பணியாளர்களின் தேவை எக்காலத்தையும் விட தற்போது அதிகம் அதிகமாக உள்ளது என மேலும் கூறினார் திருத்தந்தை.
2. திருத்தந்தை - கிறிஸ்தவ ஒன்றிப்பை, புதுப்பிக்கப்பட்ட உறுதியோடு நோக்க வேண்டும்
சன.26,2012. கிறிஸ்தவ சபைகளுக்கு இடையே நிலவும் பிரிவினைகளின் வேதனையை இந்நாட்களில் அனுபவிக்கும் கிறிஸ்தவர்களாகிய நாம், எதிர்காலத்தை நம்பிக்கையோடு நோக்கவோம் என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான 45வது செப வாரத்தை நிறைவுசெய்த மாலை திருவழிபாட்டில் இப்புதனன்று மறையுரையாற்றிய திருத்தந்தை, கடவுளின் விருப்பமான கிறிஸ்தவ ஒன்றிப்பைத் துணிவோடும் தாராள உள்ளத்தோடும் அடைவதற்கு, நமது உறுதிப்பாட்டைப் புதுப்பிப்போம் என்றும் கூறினார்.
கிறிஸ்துவின் வெற்றி என்பது, கிறிஸ்துவோடும் பிறரோடும் நாம் வாழ்வின் நிறைவைப் பகிர்ந்து கொள்வதைத் தடுக்கும் அனைத்தையும் மேற்கொள்வதாகும் என்று கூறிய திருத்தந்தை, "அனைத்தும், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வெற்றியினால் மாற்றம் அடையும்” (cf.1கொரி.15.51-58) என்ற இச்செபவாரத்தின் கருப்பொருள் பற்றியும் பேசினார்.
ஆதித்திருஅவையைத் துன்புறுத்திய சவுல், இயேசுவின் நற்செய்தியின் அயராத திருத்தூதரான இந்தப் புதிரான மாற்றம், நீண்ட காலம் சிந்தித்ததன் பயனாகவோ, சொந்த முயற்சியின் பயனாகவோ இடம் பெறவில்லை, மாறாக, தமது மறைபொருளான வழிகளில் செயல்படும் கடவுளின் திருவருளால் நிகழ்ந்தது என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.
நாமும், நமது செபத்தால் கிறிஸ்துவின் சாயலாக மாற முடியும், இது சிறப்பாக, கிறிஸ்தவ ஒன்றிப்பில் உண்மையாகின்றது என்று, தனது மறையுரையில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
உரோம் புனித பவுல் பசிலிக்காவில் இடம் பெற்ற இம்மாலைத் திருவழிபாட்டில், கான்டர்பரி பேராயரின் உரோம் பிரதிநிதி, கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தலைவர் ரிச்சர்டுசன், போலந்து கிறிஸ்தவ சபைக் குழுக்கள், இன்னும் பிற கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
3. மூன்று ஐ.நா.ஒப்பந்தங்களை அமல்படுத்துவதற்கு திருப்பீடம் ஒப்புதல்
சன.26,2012. போதைப்பொருள் மற்றும் மயக்க மருந்துகள், சட்டத்துக்குப் புறம்பே வியாபாரம் செய்யப்படுவதற்கு எதிரான ஐ.நா. ஒப்பந்தத்தை அமல்படுத்துவதாக இவ்வியாழனன்று அறிவித்துள்ளது திருப்பீடம்.
1988ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி வியன்னாவில் நிறைவேற்றப்பட்ட இவ்வுலக ஒப்பந்தத்தில், அதே நாளில் திருப்பீடம் கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை அமல்படுத்துவதன் மூலம், போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும், சட்டத்துக்குப் புறம்பே இடம் பெறும் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் மயக்க மருந்துகள் குறித்த பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் எடுக்கப்படும் உலக அளவிலான முயற்சிகளுக்குத் திருப்பீடம் தனது அறநெறி ஆதரவைக் கொடுக்கத் தீர்மானித்துள்ளது.
இவ்வொப்பந்தத்தில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே கையெழுத்திட்டுள்ளார். அத்துடன், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்வதைத் தடைசெய்வதற்கான அனைத்துலக ஒப்பந்தத்தையும், நாடுவிட்டு நாடு இடம் பெறும் திட்டமிட்டக் குற்றத்திற்கெதிரான ஐ.நா. ஒப்பந்தத்தையும் திருப்பீடம் ஏற்பது குறித்த ஆவணங்களிலும் கர்தினால் பெர்த்தோனே கையெழுத்திட்டுள்ளார்.
இதன் மூலம், பயங்கரவாதத்தை ஒடுக்குவதிலும் தடைசெய்வதிலும், இத்தகையக் குற்றங்களுக்குப் பலியாகுவோரைப் பாதுகாப்பதிலும் உலக அளவில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குத் திருப்பீடம் தனது நன்னெறி சார்ந்த ஆதரவை அளிக்கின்றது என்று கூறப்பட்டுள்ளது.
திருப்பீடம், தனது இயல்பு மற்றும் தனது மறைப்பணித் தன்மையோடு ஒத்திணங்கும் விதத்தில், மக்களிடையே சகோதரத்துவம், நீதி, அமைதி மற்றும் மனித உரிமைகளைக் காப்பதற்கான உலகளாவிய நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
4. தேர்தல் நம்பகத்தன்மை குறித்து Congo ஆயர்கள் கேள்வி
சன.26,2012. Congo நாட்டின் தேர்தல் குளறுபடிகள் குறித்த பெரும் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அதற்குப் பொறுப்பானவர்கள், தவறுகளைத் துணிவுடன் ஏற்று தீர்வுகளைத்தர முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
Congo நாட்டில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல்களின் சட்டப்பூர்வமான நிலைப்பாடு குறித்துக் கேள்வியெழுப்பியுள்ள ஆயர்கள், தேர்தல் அதிகாரிகள் தங்கள் செயல்பாடு குறித்து ஆய்வு செய்து, தேவையெனில் பதவி விலகும் துணிவை வெளிப்படுத்த வேண்டும் என்றனர்.
மக்களை அச்சுறுத்தி வாக்குகளைப் பெற்றதாகவும், தேர்தல் பெட்டிகள் ஒரு சிலராலேயே கள்ள ஓட்டுகளால் நிரப்பப்பட்டதாகவும் ஆயர்கள் தங்கள் அண்மை அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
5. சான் எஜிதியோவின் பிறரன்புப் பணிகளைப் பாராட்டுகிறார் பிலிப்பீன்ஸ் தூதுவர்
சன.26,2012. இத்தாலியில் விபத்துக்குள்ளான Costa Concordia உல்லாசக் கப்பலில் பணியாற்றிய வெளிநாட்டவர்களுக்கு உடனடியாக வந்து உதவிகளைப் புரிந்ததற்காக சான் எஜிதியோ என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பிற்குத் தன் நன்றியை வெளியிட்டுள்ளார் திருப்பீடத்திற்கான பிலிப்பீன்ஸ் தூதுவர்.
கப்பல் விபத்துக்குள்ளாகிய போது பலர் வெளியேற உதவிய இந்த வெளிநாட்டுபணியாளர்களுள் 180 பிலிப்பீன்ஸ் நாட்டவர்களும் 170 இந்தோனேசியர்களும் எவ்வித உதவிகளும் மாற்று உடைகளும் இன்றி தவித்தபோது கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பான சான் எஜிதியோ அமைப்பு சென்று, அவர்களை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க உதவியது குறிப்பிடத்தக்கது.
உதவி என அழைப்பு விடுக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே காலணிகள், போர்வைகள், மேலங்கிகள் என, பல அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி உதவியது இவ்வமைப்பு.
6. போஸ்னியாவில் பகையுணர்வுடன் நடத்தப்படுவதாக அருட்சகோதரிகள் கவலை
சன.26,2012. Bosnia-Herzegovina நாட்டில் கத்தோலிக்க அருட்சகோதரிகள் மிகவும் பகையுணர்வுடன் நடத்தப்படுவதாக அங்குப் பணிபுரியும் சபை ஒன்றின் மாநிலத்தலைவி தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.
போஸ்னியாவைச் சேர்ந்த தாங்களே மதத்தின் அடிப்படையில் வேற்று நாட்டவர்கள் போல் நடத்தப்படுவதாக உரைத்த கிறிஸ்துவின் பிரான்சிஸ்கன் கன்னியர் சபை மாநிலத் தலைவி அருட்சகோதரி இவங்கா மிஹாலியேவிச், சில கடைக்காரர்கள் தங்களுக்கு ரொட்டியை விற்கவும் மறுக்கிறார்கள் என்றார்.
போஸ்னிய இசுலாமியர்களைவிட தங்களை மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து குடியேறிய இசுலாமியர்களே அதிக அளவில் பாகுபாட்டுடன் நடத்துவதாகவும், அநாகரீக வார்த்தைகளால் தங்களைப் பழிப்பதாகவும் மேலும் தெரிவித்தார் அவர்.
7. பாகிஸ்தானில் காரித்தாஸ் பிறரன்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சன.26,2012. பாகிஸ்தானில் வெளிநாட்டு பிறரன்புப் பணியாளர்கள் பாகிஸ்தான் இசுலாம் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்படுவதன் காரணமாக அந்நாட்டிற்கான வெள்ள நிவாரணப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.
நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் வெளிநாட்டுப் பணியாளர்களை கடத்தி, பிணையத்தொகை கேட்கவும் அரசுகளிடமிருந்து சில சலுகைகளை மிரட்டிப் பெறவும் இசுலாமிய தீவிரவாதக் குழுக்கள் முயன்று வருவதால் பணியிடங்களுக்கு வெளிநாட்டவரை அனுப்புவது சிரமமாக உள்ளது என்ற பாகிஸ்தான் காரித்தாஸ் அதிகாரி Amjad Gulzar, இம்மாதத்தில் இதுவரை நான்குபேர் உட்பட கடந்த ஆறு மாதங்களில் ஏழு வெளிநாட்டுப் பணியாளர்கள் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
2010ம் ஆண்டின் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து உதவிகளை ஆற்றி வரும் கத்தோலிக்க காரித்தாஸ் பிறரன்பு அமைப்பு, இதுவரை 1150 குடும்பங்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகளை வழங்கியுள்ளது. இதில் பெரும்பான்மையினோர் இசுலாமியர்.
8. இந்தியச் சிறைக் கைதிகள் மரணம் குறித்து மனித உரிமை அமைப்பு கவலை
சன.26,2012. 2011ம் ஆண்டில், சிறையில் கைதிகளின் மரணங்களையும், சிறைக்கைதிகள் கொடுமைப்படுத்தப்படுவதையும் இந்திய அரசு தடுக்கத் தவறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது Human Rights Watch என்ற மனித உரிமைகள் கழகம்.
மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் பத்திரிகைத்துறையும், சமூகக் குழுக்களும் பலம் பொருந்தியவைகளாக இருந்து, நீதித்துறையும் பெரும் மதிப்புக்குரியதாக இருக்கின்றபோதிலும் மனித உரிமை மீறல்களும் தொடர்வதாகக் கூறுகிறது இவ்வமைப்பு.
மனித உரிமைகளில் ஈடுபடுவோர் தண்டனையின்றி தப்புவதற்கு உதவும் சட்டங்கள் திருத்தியமைக்கப்படவேண்டும் என அழைப்பு விடுக்கும் Human Rights Watchன் அறிக்கை, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இயைந்த வகையில் கல்வி மற்றும் நல ஆதரவுத் திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு மக்கள் எளிதாகப் பெறுவதற்கு வழிவகைச் செய்யப்படவேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளது.
No comments:
Post a Comment