Sunday, 8 January 2012

கத்தோலிக்க செய்திகள்: 06 ஜனவரி 2012

1. பேராயர் ஜார்ஜ் அலஞ்சேரி உட்பட 22 புதிய கர்தினால்கள்

2. திருத்தந்தை : திருஅவை உலகுக்கு கிறிஸ்துவின் ஒளியை வழங்குகிறது

3. திருத்தந்தை : கடவுளின் இதமான மொழியை கூர்ந்தறியும் இதயத்தைக் கொண்டவர்களாக ஆயர்கள் விளங்க வேண்டும்

4. பல்சமயத் தலைவர்கள்  :  இலங்கையில் நிலைத்த அமைதி ஏற்படுவதற்கு, உள்நாட்டுப் போர் குறித்த அறிக்கையின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படுவது  அவசியம்

5. மியான்மார் கைதிகள் விடுதலை குடும்பங்களுக்கு ஏமாற்றம்

6. இந்தியத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம்

7. துரித உணவுகளால் சிறுவர்களின் மூளை பாதிப்படையும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

------------------------------------------------------------------------------------------------------

1. பேராயர் ஜார்ஜ் அலஞ்சேரி உட்பட 22 புதிய கர்தினால்கள்

சன.06,2012. இந்தியாவின் சீரோ-மலபார் ரீதி திருஅவையின் தலைவராகிய எர்ணாகுளம் அங்கமலி உயர் பேராயர் ஜார்ஜ் அலஞ்சேரி உட்பட 22 புதிய கர்தினால்களின் பெயர்களை இவ்வெள்ளிக்கிழமை அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இவ்வெள்ளிக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருக்காட்சிப் பெருவிழாத் திருப்பலியை நிகழ்த்திய பின்னர், வத்திக்கான் மாளிகையில் வழக்கமான ஜன்னல் வழியே நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, வருகிற பிப்ரவரி 18ம் தேதி புதிய கர்தினால்களின் திருநிலைப்பாடு இடம் பெறும் எனவும் அறிவித்து அவர்களின் பெயர்களை மகிழ்வோடு அறிவிப்பதாகக் கூறி அவற்றை வெளியிட்டார். 
திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயத் தலைவர் பேராயர்  Fernando Filoni, வத்திக்கான் பாவமன்னிப்புச்சலுகை நீதிமன்றத் தலைவர் பேராயர் Manuel Monteiro de Castro, உரோம் மேரி மேஜர் பசிலிக்கா தலைமைக்குரு பேராயர் Santos Abril Y Castellò, திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் புலம் பெயர்வோர் அவைத் தலைவர் பேராயர் Antonio Maria Veglio, வத்திக்கான் நகர நாட்டின் பாப்பிறை அவைத் தலைவரும் வத்திக்கான் நகர நாட்டின் நிர்வாகியுமான பேராயர் Giuseppe Bertelli, திருப்பீடச்சட்டப்பிரிவு அவைத் தலைவர் பேராயர் Francesco Coccopalmerio, திருப்பீட துறவறத்தார் பேராயத் தலைவர் பேராயர் JOÃO Braz de Aviz, எருசலேம் புனிதக் கல்லறை அமைப்புத் தலைவர்  பேராயர் EDWIN FREDERIK O'BRIEN, திருப்பீடச் சொத்து நிர்வாகத்துறைத் தலைவர் பேராயர் Domenico Calcagno, திருப்பீடப் பொருளாதாரத்துறைத் தலைவர் பேராயர் Giuseppe Versaldi, இந்தியாவின் சீரோ-மலபார் ரீதி திருஅவையின் தலைவராகிய எர்ணாகுளம் அங்கமலி உயர் பேராயர் GEORGE Alencherry, கனடாவின் டொரோன்ட்டோ பேராயர் Thomas Christopher Collins, செக் குடியரசின் பிராக் பேராயர் Dominik Duka, நெதர்லாந்தின் Utrecht பேராயர் Willem Jacobus Eijk, இத்தாலியின் பிளாரன்ஸ் பேராயர் Giuseppe Betori, அமெரிக்க ஐக்கிய நாட்டு நியுயார்க் பேராயர் Timothy Michael Dolan, ஜெர்மனியின் பெர்லின் பேராயர் Rainer Maria Woelk, சீன மக்கள் குடியரசின் ஹாங்காங் ஆயர் John Tong Hon ஆகியோரைக் கர்தினால்களாக அறிவித்துள்ளார் திருத்தந்தை.
மேலும், ஒரு திருஅவையின் தந்தையாகவும் மேய்ப்பராகவும் இருக்கும் ஒருவர் மற்றும் திருஅவையின் சேவையில் குறிப்பிடத்தக்கப் பணியாற்றிய மூன்று அருட்பணியாளர்களையும் கர்தினால் நிலைக்கு உயர்த்துவதாக அறிவித்தார் திருத்தந்தை.
ரொமேனியாவின் Făgăraş மற்றும் Alba Iulia பேராயரான முதுபெரும் தலைவர் Lucian Muresan, லுவெய்ன் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் சமய வரலாற்று முன்னாள் பேராசிரியர் Namur மறைமாவட்டத்தின் அருட்பணி Julien Ries, பல்வேறு உரோம் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றிய அகுஸ்தீன் சபை அருள்தந்தை Prospero Grech, உரோம் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் இயேசு சபை அருள்தந்தை Karl Becker ஆகியோரையும் கர்தினால் நிலைக்கு உயர்த்துவதாக அறிவித்தார் திருத்தந்தை.
மொத்தத்தில் 18 பேராயர்கள், ஓர் ஆயர் மற்றும் 3 அருட்பணியாளர்களை, கர்தினால் நிலைக்கு உயர்த்தியுள்ள திருத்தந்தை, இவர்களுக்காகச் செபிக்குமாறும் கேட்டுள்ளார்.

2. திருத்தந்தை : திருஅவை உலகுக்கு கிறிஸ்துவின் ஒளியை வழங்குகிறது

டிச.06,2012. இப்பெருவிழா நாளில் நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, நம் ஆண்டவர் உலகுக்குத் தம்மை வெளிப்படுத்திய திருக்காட்சிப் பெருவிழாவாகிய  இந்நாளில்  நாம் பெற்ற விசுவாசத்திற்கு நன்றி செலுத்துவோம் என்று கூறினார்.
உலகளாவியத் திருஅவையின் திருப்பணிக்கு, விசுவாசிகள் தங்களது சொல்லாலும் செயலாலும் சாட்சிய வாழ்வு வாழுமாறும் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
இந்த உலகத்தில் அத்தனை வளங்கள் இருந்த போதிலும் அது, மனித சமுதாயத்தை வழிநடத்தக்கூடிய ஒளியைக் கொடுப்பதற்கு இயலாமல் இருக்கின்றது, ஆயினும், திருஅவை இறைவார்த்தை வழியாக நற்செய்தி ஒளியை ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் கொடுக்கின்றது என்றும்  திருத்தந்தை கூறினார்.

3. திருத்தந்தை : கடவுளின் இதமான மொழியை கூர்ந்தறியும் இதயத்தைக் கொண்டவர்களாக ஆயர்கள் விளங்க வேண்டும்

சன.06,2012. கடவுளின் இதமான மொழியை கூர்ந்தறியும் இதயத்தைக் கொண்ட மனிதர்களாவும், உண்மையைப் பகுத்து அறியக்கூடியவர்களாகவும் ஆயர்கள் விளங்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இவ்வெள்ளிக்கிழமை நிகழ்த்திய திருக்காட்சிப் பெருவிழாத் திருப்பலியில் இரண்டு புதிய திருப்பீடத் தூதர்களைப் பேராயர்களாகத் திருநிலைப்படுத்தி மறையுரை ஆற்றிய திருத்தந்தை, ஆயர்கள் கடவுளின் உண்மை வழியில் செல்லக்கூடியவர்களாக இருக்க வேண்டுமென்று கூறினார்.
கடவுளை அறியும் ஒருவரால் மட்டுமே பிறரைக் கடவுளிடம் இட்டுச் செல்ல முடியும் என்றும் கூறிய திருத்தந்தை, மனிதருக்காக ஏங்கும் கடவுளைப் பெற்று, பின்னர் மனிதருக்கு அவரையே வழங்குவது ஆயர்களுடைய பணியாகும் என்றும் கூறினார்.
விண்மீன்கூட்டம் அல்லது சூப்பர்நோவா அல்லது வால்விண்மீன் என, கீழ்த்திசை மூன்று ஞானிகளை வழிகாட்டிய விண்மீன் பற்றி வல்லுனர்கள் பலவாறு பேசினாலும், நம்மை வழிநடத்தும் உண்மையான சூப்பர்நோவாவாகிய மாபெரும் விண்மீன் இயேசு கிறிஸ்துவே என்றும் திருத்தந்தை கூறினார்.
புனிதர்கள் கடவுளின் விண்மீன்கள் என்றும் உரைத்த அவர், கடவுளின் ஒளியை உலகுக்குக் காட்டுவதற்கானப் பணியைப் பெற்றுள்ள ஆயர்கள், தங்கள் பணியைத் திறம்படச் செய்வதற்குப் புனிதர்களின் பரிந்துரையை வேண்டுவோம் எனத் தெரிவித்தார்.   
அயர்லாந்துக்கானப் புதிய திருப்பீடத் தூதர் பேரருட்திரு Charles John Brown, ஜார்ஜியா மற்றும் அர்மேனியாவுக்கானத் திருப்பீடத் தூதர் பேரருட்திரு Marek Solczynski ஆகிய இருவரையும் இப்பெருவிழாத் திருப்பலியில் பேராயர்களாகத் திருநிலைப்படுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

4. பல்சமயத் தலைவர்கள்  :  இலங்கையில் நிலைத்த அமைதி ஏற்படுவதற்கு, உள்நாட்டுப் போர் குறித்த அறிக்கையின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படுவது  அவசியம்

சன.06,2012. இலங்கையில் 2009ம் ஆண்டில் முடிவுற்ற உள்நாட்டுப் போர் குறித்த அறிக்கை முன்வைத்த பரிந்துரைகள் செயல்படுத்தப்படுமாறு கத்தோலிக்கம் உள்ளிட்ட அந்நாட்டுப் பல்சமயத் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இலங்கையின் கிறிஸ்தவம், புத்தம், இசுலாமியம், இந்து ஆகிய மதங்களின் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய நிருபர் கூட்டத்தில் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இலங்கையில் நிலைத்த அமைதி ஏற்படுவதற்கு, உள்நாட்டுப் போர் குறித்த அறிக்கையின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படுவது இன்றியமையாதது என்று இத்தலைவர்கள் கூறியுள்ளனர்.
இக்கூட்டத்தில் பேசிய கத்தோலிக்க அருட்பணியாளர் மெர்வின் பெர்ணான்டோ, மக்களின் உண்மையான மனக்குறைகள் தீர்க்கப்படுவதற்கு அரசியல்ரீதியாகத் தீர்வு காணப்பட வேண்டுமென்று அந்த அறிக்கை பரிந்துரைக்கின்றது என்பதைக் குறிப்பிட்டார்.
மேலும், இக்கூட்டத்தில் பேசிய புத்தமதக் குரு Bellanvila Wimalarathana Thero, மீண்டும் ஓர் இனச்சண்டை ஏற்படாமல் இருப்பதற்கு அந்த அறிக்கையின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படுவது அவசியம் என்று கூறினார்.

5. மியான்மார் கைதிகள் விடுதலை குடும்பங்களுக்கு ஏமாற்றம்

சன.06,2012. மியான்மார் நாட்டின் சுதந்திரதினக் கொண்டாட்டங்களின் போது, மனச்சான்றின் கைதிகள் மிகக் குறைந்த அளவே விடுதலை செய்யப்பட்டிருப்பது எதிர்க்கட்சியினருக்கும் குடும்பத்தினருக்கும் ஏமாற்றத்தை அளித்திருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன.
மியான்மாரின் சுதந்திரதினமான சனவரி 4ம் தேதியன்று அரசு வழங்கும் பொது மன்னிப்பின் அடிப்படையில், அந்நாட்டில் கைதிகளின் தண்டனைக் காலம் குறைக்கப்படுவது அல்லது கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கமாக இடம் பெற்று வருகிறது.
ஆண்டுதோறும் இடம் பெறும் இந்நடவடிக்கையில் இப்புதனன்று சுமார் ஏழாயிரம் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர் எனவும், 33 மரண தண்டனை கைதிகளின் தண்டனை, ஆயுட்தண்டனையாகக் குறைக்கப்பட்டது எனவும் New Light of Myanmar என்ற மியான்மார் அரசின் தினத்தாள் அறிவித்தது.
ஆயினும், மனச்சான்றின் கைதிகளில் 12 பேரே விடுதலை செய்யப்பட்டனர் என அந்நாட்டின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
மியான்மார் சிறைகளில் இன்னும் 1,500 அரசியல் கைதிகள் இருக்கின்றனர் என்று ஊடகங்கள் கணித்துள்ளன.

6. இந்தியத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம்

சன.06,2012. வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளிகளுக்கான புதிய ஓய்வூதிய மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்திற்கு இந்திய நடுவணரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.
இத்திட்டத்தின்படி, ஆண்டுக்கு ஆயிரம் முதல் பன்னிரெண்டாயிரம் வரை செலுத்தும் தொழிலாளர்களுக்கு இந்திய அரசின் பங்களிப்பாக ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும்.
பெண் தொழிலாளர்களுக்கு இந்திய அரசின் பங்களிப்பான ஆயிரம் ரூபாய் தவிர வெளிநாடுவாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் கூடுதலாக இன்னொரு ஆயிரம் ரூபாயும் அளிக்கப்படும்.
வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்களை மனதில் வைத்து கொண்டுவரப்பட்டிருக்கும் இந்தத் திட்டம், அடிப்படையில் வரவேற்கத்தக்கது என்றாலும், வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இது போதுமானதாக இருக்குமா என்கிற சந்தேகம் இருப்பதாக பால் பாஸ்கர் கூறினார்.
வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியத் தொழிலாளர்களின் பிரச்சனைகளைப் பல ஆண்டுகளாக கையாண்டுவரும் அமைதி அறக்கட்டளையின் நிறுவன இயக்குனர் பால் பாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

7. துரித உணவுகளால் சிறுவர்களின் மூளை பாதிப்படையும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

சன.06,2012. பிட்ஸா, பர்கர் உள்ளிட்ட பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவுகளை உட்கொள்ளும் சிறாரின் மூளையில் பாதிப்பு ஏற்படும் என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இவ்வகை உணவுகளில் உள்ள Trans fats எனப்படும் கொழுப்பே இதற்குக் காரணம் என்றும் அந்த ஆய்வு எச்சரித்துள்ளது.
இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள் நடத்திய ஆய்வில், இந்தக் கொழுப்பு அதிகமுள்ள கேக், பிட்சா, பர்கர், சாக்கோ டிரிங்க், சிப்ஸ், கேண்டி ஆகியவற்றை அதிகம் சாப்பிடும் இளையோருக்கு உயிரணு எண்ணிக்கையிலும் பாதிப்பு ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அன்றாட உணவில் 2 கிராம் டிரான்ஸ் பேட் போதுமானது என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் பதப்படுத்தப்பட்ட உணவை அதிகம் உட்கொள்ளும் சிறுவர்களின் மூளையிலும் பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் 14 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment