Tuesday, 31 January 2012

robert john kennedy: கத்தோலிக்க செய்திகள்: 31ஜனவரி 2012

robert john kennedy: கத்தோலிக்க செய்திகள்: 31ஜனவரி 2012: 1. இந்திய ஆயர் பேரவைக்கூட்டம் பங்களூருவில் இப்புதனன்று துவங்குகிறது 2. சீனாவில் மேலும் ஐந்து குருக்கள் கைது 3. கிறிஸ்தவர்களுக்கு அதிக...

கத்தோலிக்க செய்திகள்: 31ஜனவரி 2012

 
1. இந்திய ஆயர் பேரவைக்கூட்டம் பங்களூருவில் இப்புதனன்று துவங்குகிறது

2. சீனாவில் மேலும் ஐந்து குருக்கள் கைது

3. கிறிஸ்தவர்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்படும் என‌ வாக்குறுதியளித்துள்ளார் கர்நாடக முதல்வர்

4. பெங்க‌ளூருவில் இயேசு ச‌பை க‌ல்லூரி மீது தாக்குத‌ல்

5. கிறிஸ்தவப்பள்ளிகள் மீதான இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்கள் குறித்து தலத்திருஅவை கவலை

6. உண்ணாநோன்பிற்கும் செபத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளன நாகாலாந்து கிறிஸ்தவ சபைகள்

7. முன்னாள் சர்வதிகாரி மீது விசாரணைகள் துவக்கப்பட்டுள்ளது குறித்து குவாத்தமாலா திருஅவை மகிழ்ச்சி

------------------------------------------------------------------------------------------------------

1. இந்திய ஆயர் பேரவைக்கூட்டம் பங்களூருவில் இப்புதனன்று துவங்குகிறது

சன.31,2012. 'சிறப்பானதொரு இந்தியாவைக் கட்டியெழுப்புவதில் திருஅவையின் பங்கு' என்ற தலைப்பில் இப்புதன் முதல் அடுத்த புதன் வரை இந்திய கத்தோலிக்க ஆயர்களின் எட்டு நாள் கூட்டம் பெங்களூருவில் இடம்பெறுகிறது.
இந்திய ஆயர் பேரவைத் தலைமையகம் டெல்லியிலிருந்து செயலாற்றி வருவதன் ஐம்பதாவது ஆண்டும், கத்தோலிக்க காரித்தாஸ் பிறரன்பு அமைப்பின் ஐம்பதாவது ஆண்டும் நடப்பாண்டில் சிறப்பிக்கப்படுவதையொட்டி இக்கூட்டத்திற்கான தலைப்பு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார் இந்திய ஆயர் பேரவையின் துணைப் பொதுச்செயலர் குரு தாமஸ் செக்குய்ரா.
1962ம் ஆண்டில் இந்திய ஆயர் பேரவையின் தலைமையகம் பெங்களூருவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது.
இந்தியாவிற்கான திருப்பீடத் தூதுவர் பேராயர் சல்வத்தோரே பென்னாக்கியோ துவக்கி வைக்கும் இக்கூட்டத்தில், இந்தியாவின் 160 ஆயர்களுடன் திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி அவை தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சனும் கலந்து கொள்கிறார்.


2. சீனாவில் மேலும் ஐந்து குருக்கள் கைது

சன.31,2012. திருத்தந்தைக்கு விசுவாச‌மாக‌ இருப்ப‌தால் ம‌றைந்து வாழும் நிலைக்குத் த‌ள்ள‌ப்ப‌ட்டுள்ள‌ சீன‌க் க‌த்தோலிக்க‌த் திருஅவையின் ஐந்து குருக்க‌ள் இத்திங்க‌ள‌ன்று சீன‌ ம‌ங்கோலிய‌ எல்லைக்க‌ருகே காவ‌ல்துறையால் கைது செய்ய‌ப்ப‌ட்டு எடுத்துச் செல்ல‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ அப்ப‌குதி திருஅவை வ‌ட்டார‌ங்க‌ள் தெரிவிக்கின்ற‌ன‌.
சீனாவின் Suiyuan ம‌றைமாவ‌ட்ட‌த்தைச் சேர்ந்த‌ இவ‌ர்க‌ள் ஐந்து பேரும் ஒரு பொதுநிலையின‌ரின் வீட்டில் கூடி, குருக்க‌ளின் ப‌ணியிட‌ மாற்ற‌ங்க‌ள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்த‌போது அங்கு புகுந்த‌ 30 காவ‌ல் துறையின‌ர் அவ‌ர்க‌ளைக் கைது செய்து, ம‌றைவான‌ இட‌த்தில் சிறை வைத்துள்ள‌ன‌ர்.
Erenhot என்ற‌ ந‌க‌ரில் கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ இந்த‌ ஐந்து பேரில் ஒருவ‌ர் Suiyuan ம‌றைமாவ‌ட்ட‌ நிர்வாகி, இன்னொருவ‌ர் குரும‌ட‌ அதிப‌ர், ம‌ற்ற‌ மூவ‌ரும் ப‌ங்கு குருக்க‌ளாவ‌ர்.
Suiyuan ம‌றைமாவ‌ட்ட‌த்தில் அரசின் கீழ் இயங்கும் கிறிஸ்தவ சபையில் சேராமல் திருத்தந்தைக்கு விசுவாசமாக இருந்து பணியாற்றும் 30 குருக்களுள் தற்போது 5 பேர் அரசால் கைது செய்யப்பட்டுள்ளது சீனக் கத்தோலிக்கரிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது.


3. கிறிஸ்தவர்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்படும் என‌ வாக்குறுதியளித்துள்ளார் கர்நாடக முதல்வர்

சன.31,2012. 2012-13ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் கிறிஸ்தவர்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்படும் என இஞ்ஞாயிறன்று வாக்குறுதியளித்தார் கர்நாடக முதல்வர் சதானந்த கௌடா.
2011-12ம் நிதியாண்டில் கிறிஸ்தவ வளர்ச்சிப் பணி அவைக்கென ஒதுக்கப்பட்ட 50 கோடி ரூபாயில் 35 கோடி தற்போது வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதியுள்ளது அடுத்த இரண்டு மாதங்களில் வழங்கப்படும் எனவும் உரைத்த கர்நாடக முதல்வர், 2012-13ம் நிதி ஆண்டில் இந்த ஒதுக்கீடு இன்னும் அதிகமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
இதற்கிடையே, அரசு வழங்கும் இந்நிதி ஒதுக்கீடு கிறிஸ்தவ சமூகத்தை விலைக்கு வாங்கும் நோக்கமுடையதாக இருக்கக்கூடாது, ஏனெனில் இதைவிட அதிக அளவு தொகையை, கர்நாடகாவில் சமூகப் பணிகளுக்கென கிறிஸ்தவ சபைகள் செலவழிக்கின்றன என்றார் கிறிஸ்தவ சமூகக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் ஜோசப் டயஸ்.
இத்தகைய சிறு சலுகைகள் வழங்கப்படுவதை விட கர்நாடக கிறிஸ்தவர்களின் உரிமைகள் மதிக்கப்பட்டு அவர்களுக்கு மத சுதந்திரம் வழங்கப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் அவர்.


4. பெங்க‌ளூருவில் இயேசு ச‌பை க‌ல்லூரி மீது தாக்குத‌ல்

சன.31,2012. குடிய‌ர‌சு தின‌த்த‌ன்று தேசிய‌க்கொடியை ஏற்ற‌வில்லை என்ற‌ பொய்க் குற்ற‌ச்சாட்டுட‌ன் க‌ர்நாட‌க‌ மாநில‌த்தில் இயேசு ச‌பை க‌ல்லூரி ஒன்றை தாக்கியுள்ளது இந்து தீவிர‌வாத‌ குழு ஒன்று.
ச‌மூக‌க் கொண்டாட்டங்க‌ள் இட‌ம்பெறும் இக்கல்லூரியின் த‌லைமை நிறுவ‌ன‌மான‌ Jnana Jyoti கட்டிடத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டிருந்த போதிலும், கொடியேற்றவில்லை என்ற குற்றாச்சாட்டுடன் இக்கும்பல் பங்களூருவுக்கு 40 கிலோ மீட்டர் தெற்கேயுள்ள St.Joseph Anegal கல்லூரிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதுடன், கல்லூரி அதிபரையும் தாக்க முயன்றுள்ளது.
இத்தீவிர‌வாதிக‌ளின் தாக்குத‌லின்போது அதைப் பார்த்து மௌன‌ம் காத்த‌ காவ‌ல்துறை, அவ‌ர்க‌ளின் நிர்ப்ப‌ந்த‌த்தின் பேரில் அதிப‌ர் குரு Melvin Mendoncaவை காவ‌ல்நிலைய‌த்திற்கு அழைத்துச்சென்று 9ம‌ணி நேர‌ம் அங்க‌கேயே உட்கார‌ வைத்து விசார‌ணை செய்துள்ள‌து.
இந்த‌த் தீவிர‌வாத‌க் குழுக்க‌ளின் நோக்க‌ம் தேசிய‌க் கொடிக்கு ம‌ரியாதை அளிப்ப‌த‌ல்ல‌, மாறாக‌, த‌லித் ம‌ற்றும் ப‌ழ‌ங்குடி ம‌க்க‌ளுக்கு தாங்க‌ள் ஆற்றிவ‌ரும் சேவையைத் த‌டைச் செய்வ‌தே என்றார் குரு மெல்வின்.


5. கிறிஸ்தவப்பள்ளிகள் மீதான இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்கள் குறித்து தலத்திருஅவை கவலை

சன.31,2012. காஷ்மீரில் மூன்று கிறிஸ்தவ குருக்கள் மாநிலத்தை விட்டு வெளியேற கட்டளையிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தற்போது கிறிஸ்தவப்பள்ளிகளின் மீதான இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல்கள் துவக்கப்பட்டுள்ளதாக கவலையை வெளியிட்டுள்ளனர் அப்பகுதி கிறிஸ்தவர்கள்.
கடந்த 20 ஆண்டுகளில் காஷ்மீரின் கிறிஸ்தவ பள்ளிகள் 20 ஆயிரம் இஸ்லாமியர்களை கிறிஸ்தவ மறைக்கு மாற்றியுள்ளதாக சில இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதைத் தொடர்ந்து, கிறிஸ்தவப் பள்ளிகளின் மீது இஸ்லாமிய சமுதாயத்தின் பகையுணர்வு அதிகரித்து வருவதாக கிறிஸ்தவ சபைகள் தெரிவிக்கின்றன.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளும் பகையுணர்வுகளும் பரப்பப்படுவதால், கிறிஸ்தவர்கள் அச்சத்திலேயே வாழ்வது மட்டுமல்ல, பலர் அம்மாநிலத்திலிருந்து வெளியேறி வருவதையும் சுட்டிக்காட்டும் கிறிஸ்தவக் குழுக்கள், கிறிஸ்தவர்களின் பாதுகாப்பிற்கு உறுதி வழங்க வேண்டுமென காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லாவிற்கு அழைப்பு விடுத்துள்ளன.
ஏறத்தாழ 18 ஆயிரம் கத்தோலிக்கர்களே வாழும் காஷ்மீரில், தலத்திருஅவை ஏறத்தாழ 100 பள்ளிகளை நடத்தி வருகிறது. கிறிஸ்தவப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுள் 99 விழுக்காட்டினர் இஸ்லாமியர் என்பது குறிப்பிடத்தக்கது.


6. உண்ணாநோன்பிற்கும் செபத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளன நாகாலாந்து கிறிஸ்தவ சபைகள்

சன.31,2012. இந்தியாவின் நாகாலாந்து மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண உதவும் நோக்கில், வரும் ஞாயிறை உண்ணாநோன்பு மற்றும் செபத்தின் நாளாக தேசிய அளவில் கடைபிடிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது நாகாலாந்து கிறிஸ்தவ சபைகளின் அவை.
பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டுமெனில், முதலில் நம் பாவங்களுக்கான‌ பரிகாரம் இடம்பெற வேண்டும் என்ற கிறிஸ்தவ சபைகள், ஒரு நாள் முழுவதுமான உண்ணா நோன்பிற்கும் செபத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளன.
நாகாலாந்து மக்களின் அரசியல் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, முதலில் அம்மக்களும், தீவிரவாதிகளும், இந்திய அரசும் தங்களின் பாவங்களுக்காகப் பரிகாரம் செய்ய வேண்டியது இன்றியமையாதது என்பதை வலியுறுத்தும் இந்த அறிக்கை, அமைதிப் பேச்சுவார்த்தைகளை இந்திய அரசு கையாளும் விதம் குறித்து மக்கள் கொண்டுள்ள அதிருப்தியையும் சுட்டிக்காட்டியுள்ளது.


7. முன்னாள் சர்வதிகாரி மீது விசாரணைகள் துவக்கப்பட்டுள்ளது குறித்து குவாத்தமாலா திருஅவை மகிழ்ச்சி

சன.31,2012. குற்றமிழைத்தவர்கள் எவ்வித தண்டனையும் இன்றி தொடர்ந்து தப்பித்து வந்த குவாத்தமாலா நாட்டில் தற்போது, முன்னாள் சர்வாதிகாரி Efrain Rios Montt, கைது செய்யப்பட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது நல்லதொரு முன்மாதிரிகை என தலத்திருஅவை தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது.
இராணுவத்தோடு தொடர்புடையவர்கள், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற எண்ணம் வலுப்பெற்று வந்த ஒரு நாட்டில் தற்போது முன்னாள் சர்வதிகாரி ஒருவர் தண்டனை பெற உள்ளது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்றார் குவாத்தமாலா உயர்மறைமாவட்ட மனித உரிமை அலுவலக இயக்குனர் Estuardo Paredes.
பூர்வீகக் குடிமக்களுக்கு எதிராக இராணுவ ஆட்சித்தலைவர் Rios Montt  தலைமையில் இடம்பெற்ற, தாக்குதல்களில் 1800 பூர்வீகக்குடியினர் கொல்லப்பட்டது குறித்து கடந்த வாரம் இடம் பெற்ற விசாரணைகளில் Rios Montt  மீது குற்றம் சுமத்தப்பட்டு, தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
1960 முதல் 96 வரை குவாத்தமாலாவில் இடம்பெற்ற உள்நாட்டுப்போரில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

robert john kennedy: கத்தோலிக்க செய்திகள்: 30 ஜனவரி 2012

robert john kennedy: கத்தோலிக்க செய்திகள்: 30 ஜனவரி 2012: 1. இறைவனின் அதிகாரம் , சேவை , தாழ்மை , அன்பு ஆகிய பண்புகளைக் கொண்டது - திருத்தந்தை 2. புனித பூமியில் , அமைதி நிலவச் செபிக்க...

கத்தோலிக்க செய்திகள்: 30 ஜனவரி 2012

1.    இறைவனின் அதிகாரம், சேவை, தாழ்மை, அன்பு ஆகிய பண்புகளைக் கொண்டது - திருத்தந்தை

2.    புனித பூமியில், அமைதி நிலவச் செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு

3.    இத்தாலியின் முன்னாள் அரசுத்தலைவரின் மரணத்திற்கு திருத்தந்தையின் இரங்கல் செய்தி

4.    மங்கோலியா நாடு மரணதண்டனைச் சட்டத்தை நீக்க முன்வந்துள்ளது குறித்து
       தலத்திருச்சபை மகிழ்ச்சி

5.    வழிபாட்டு உரிமை கேட்டு இந்தோனேசிய கிறிஸ்தவர்கள் அரசுத்தலைவர் மாளிகை முன்
       போராட்டம்

6.    ஆசியா பீபியின் விடுதலை வேண்டி 560,000 கையெழுத்துக்கள்

7.     காங்கோ குடியசில் காலரா நோயை எதிர்த்துப் போராட ஐ.நா. நிதி உதவி

-------------------------------------------------------------------------------------------

1.     இறைவனின் அதிகாரம், சேவை, தாழ்மை, அன்பு ஆகிய பண்புகளைக் கொண்டது - திருத்தந்தை

சன.30,2012. இறைவனின் அதிகாரம், வல்லமையையும் அதிகாரத்தையும் அடக்கி ஆள்வதையும் கொண்டதல்ல, மாறாக அது சேவை, தாழ்மை, அன்பு ஆகிய பண்புகளைக் கொண்டது என்று இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கப்பர்நாகும் தொழுகைக்கூடத்தில் இயேசு போதித்த போது, தீய ஆவி பிடித்திருந்த ஒருவரைக் குணமாக்கிய இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து உரை வழங்கிய திருத்தந்தை, இயேசுவின் வார்த்தையின் வல்லமை, தீயவைகளை வெளியேற்றுகின்றது என்று கூறினார்.
இம்மூவேளை செப உரையைக் கேட்பதற்காக, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஏறக்குறைய 25 ஆயிரம் திருப்பயணிகளிடம் இவ்வாறு உரைத்த திருத்தந்தை, "கடவுளின் அதிகாரம்" பற்றிச் சிந்திக்கவும் அழைப்பு விடுத்தார்
இறை அதிகாரம், இவ்வுலக அதிகார இயல்பைக் கொண்டதல்ல, ஆனால், அது, இவ்வுலகைப் படைத்த இறைவனின் அன்பின் அதிகாரமாகும், தனது ஒரே மகனை மனித உரு எடுக்கச் செய்ததில், மனிதனைப் போல் தம்மைத் தாழ்த்தியதில், அவ்வதிகாரம் பாவத்தால் மாசடைந்த உலகத்தைக் குணப்படுத்தியது என்றும் திருத்தந்தை கூறினார்.
"இயேசுவின் வாழ்வு முழுவதும், தாழ்மையில் வல்லமையின் மாற்றமாகும், தன்னையே அவர் ஊழியர் என்ற நிலைக்குத் தாழ்த்தினார் என்று Romano Guardini என்பவர் எழுதியுள்ளார் என்றும் அவர் மேற்கோள் காட்டினார்.
மனிதனுக்கு அதிகாரம் என்பது, உடைமைகளைக் கொண்டிருத்தல், ஆளுமை, அடக்கி ஆள்தல், வெற்றி ஆகியவைகளைக் கொண்டது, ஆனால், இறைவனின் அதிகாரம், சேவை, தாழ்மை, அன்பு ஆகிய பண்புகளைக் கொண்டது என்றும் திருத்தந்தை கூறினார்

2.  புனித பூமியில், அமைதி நிலவச் செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு

சன.30,2012. புனித பூமியில், அமைதி எனும் கொடைக்காக ஆண்டவரிடம் மன்றாடுவோம் என்று இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
புனித பூமியில் அமைதி ஏற்படுவதற்காகச் செபிக்கும் அனைத்துலக நாள் இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, இவ்விண்ணப்பத்தை முன்வைத்தார் திருத்தந்தை.
இவ்வுலக நாளையொட்டி, உரோமை நகருக்கும் அகில உலகத்திற்கும் அமைதியைக் குறிக்கும் அடையாளமாக, வத்திக்கான் சன்னலிலிருந்து இரண்டு மாடப்புறாக்களையும் திருத்தந்தை பறக்கவிட்டார். ஆனால் அவை திரும்பி வந்ததால், அவை பாப்பிறையின் இல்லத்தை விட்டுச் செல்ல விரும்பவில்லை என்றும் திருத்தந்தை கூறினார். உரோம் கத்தோலிக்கக் கழகத்தின் இரண்டு இளையோர் இப்புறாக்களைத் திருத்தந்தையிடம் இத்தினத்தன்று கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
மேலும், இஞ்ஞாயிறு "உலகத் தொழுநோய் தினம்" கடைபிடிக்கப்படுகிறது என்பதை நினைவுபடுத்திய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், Raoul Follereau நண்பர்கள் என்ற இத்தாலிய தொழுநோய் ஒழிப்பு அமைப்பினரை வாழ்த்தினார். அத்துடன், இந்நோயால் தாக்கப்பட்டவர்கள் மற்றும் இவர்களுக்கு உதவி செய்பவர்களைத் தான் ஊக்கப்படுத்துவதாகக் கூறினார்.
இந்நோய்த் தாக்குவதற்கான உண்மையான காரணங்களைக் கண்டுபிடிப்பதற்கும், இத்தொழுநோயாளிகள் ஓரங்கட்டப்படுவதல் மற்றும் இவர்களின் வறுமையை  ஒழிப்பதற்கும் பல வழிகளில் தங்களை அர்ப்பணித்து வருபவர்களைத் தான் உற்சாகப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்னும், நம் ஆண்டவர் ஆலயத்தில் அர்ப்பணிக்கப்பட்ட விழாவான வருகிற பிப்ரவரி 2, வியாழனன்று உலகத் துறவியர் தினம் சிறப்பிக்கப்படுகிறது, நமது மனித சமுதாயத்தை விடுவித்துக் குணப்படுத்தும் இறைஇரக்கம், அன்பின் வல்லமையால் நம்மை அருளாலும் நன்மைத்தனத்தாலும் நிரப்புவதற்கு நம் இதயங்களை இட்டுச் செல்ல அன்னைமரியாவிடம் செபிப்போம் என்று ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை

3.  இத்தாலியின் முன்னாள் அரசுத்தலைவரின் மரணத்திற்கு திருத்தந்தையின் இரங்கல் செய்தி

சன.30,2012. இத்தாலியின் முன்னாள் அரசுத்தலைவர் ஆஸ்கார் லூயிஜி ஸ்கால்ஃபரோ இறைபதம் சேர்ந்ததைத் தொடர்ந்து, தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டு, இத்தாலி நாட்டு மக்களுக்கும் முன்னாள் அரசுத்தலைவரின் குடும்பத்திற்கும்  இரங்கற்செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இத்தாலி நாடு அடைந்துள்ள இவ்விழப்பில் தானும் ஆழமான விதத்தில் பங்கு கொள்வதாக தன் செய்தியில் உரைக்கும் திருத்தந்தை, இந்த முன்னாள் அரசுத்தலைவர் தன் கடமைகளைச் சிறப்புடன் ஆற்றியுள்ளதுடன் அறநெறி மற்றும் கிறிஸ்தவ மதிப்பீடுகளைக் கட்டிக்காப்பதில் சிறப்புப் பங்காற்றியதை தான் நன்றியுடன் நினைவு கூர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
1992 முதல் 99 வரை இத்தாலியின் அரசுத்தலைவராக பதவி வகித்த ஸ்கால்ஃபரோ, இஞ்ஞாயிறன்று உரோம் நகரில் தனது 93ம் வயதில் காலமானார்.

4.  மங்கோலியா நாடு மரணதண்டனைச் சட்டத்தை நீக்க முன்வந்துள்ளது குறித்து தலத்திருச்சபை மகிழ்ச்சி

சன.30,2012. மங்கோலியா நாடு மரணதண்டனைச் சட்டத்தை நீக்க முன்வந்துள்ளது, அந்நாட்டு வரலாற்றிலும் மனித உரிமை மதிப்பு நிலையிலும் ஒரு முக்கியமான தருணம் என தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு உலான்பாட்டர் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் வென்சஸ்லாவோ பதில்யா.
பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வழியாகவும் அரசியல் மற்றும் கலாச்சார நிலையிலும் மரணதண்டனைக்கு எதிரான விழிப்புணர்வை மங்கோலியாவில் ஏற்படுத்தியதற்காக கத்தோலிக்க சான் எஜிதியோ குழுவிற்கும், மங்கோலியா சமூகத்திற்கும் தன் நன்றியை வெளியிட்டார் ஆயர் பதில்யா.
மங்கோலியாவில் ஏறத்தாழ 700 அங்கத்தினர்களையேக் கொண்டுள்ள தலத்திருச்சபை, மனித உரிமை மேம்பாட்டிற்கென நற்செய்தி மதிப்பீடுகளுடன் உழைத்து வருவது குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

5.   வழிபாட்டு உரிமை கேட்டு இந்தோனேசிய கிறிஸ்தவர்கள் அரசுத்தலைவர் மாளிகை முன் போராட்டம்

சன.30,2012. தாங்களும் குடிமக்கள் என்ற முறையில் தங்கள் வழிபாட்டு உரிமையை இந்தோனேசிய அரசு மதிக்கவேண்டும் என்ற விண்ணப்பத்துடன் தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள அரசுத்தலைவர் மாளிகை முன் மனித உரிமை நடவடிக்கையாளர்களும் கிறிஸ்தவ சபையினரும் இணைந்து அமைதிப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
2010ம் ஆண்டு கிறிஸ்தவ சபை கோவில் ஒன்றை அரசு அதிகாரிகள் மூடியதைத் தொடர்ந்து, திறந்த வெளியில் வழிபாட்டு நிகழ்ச்சிகளை நடத்திய இக்கிறிஸ்தவ சபையினரை தீவிரவாத முஸ்லீம் குழு ஒன்று தாக்கி வருவதால், வழிபாட்டு உரிமை கேட்டு அரசுத்தலைவர் மாளிகை முன் இஞ்ஞாயிறன்று போராட்டம் மேற்கொள்ளப்பட்ட‌து.
இதற்கிடையே, கிறிஸ்தவ குழுக்கள் மீதான தாக்குதலுக்கு தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ள அந்நாட்டு இஸ்லாமிய குழு ஒன்று, மதசகிப்புத்தன்மையுடன் செயல்படுமாறு தீவிரவாதக் குழுக்களிடம் விண்ணப்பித்துள்ளது.

6.  ஆசியா பீபியின் விடுதலை வேண்டி 560,000 கையெழுத்துக்கள்

சன.30,2012. பொய்யான குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தானில் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள கிறிஸ்தவப் பெண்மணி ஆசியா பீபியின் விடுதலையை வேண்டி ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இறைநிந்தனை என்ற குற்றச்சாட்டின் பேரில் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை நீக்கக் கோரி, லாகூர் நீதிமன்ற‌த்தில் மேல்முறையீடு செய்துள்ள ஆசியா பீபியின் விடுதலைக்கென இணையதளம் வழி 10 இலட்சம் மக்களின் கையெழுத்தைப் பெறும் நோக்கத்துடன் துவக்கப்பட்ட இப்பிரச்சாரத்தைத் தொடர்ந்து, இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஐந்து இலட்சத்து அறுபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் இவ்விண்ணப்பத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இக்கையெழுத்துக்களுடன் கூடிய விண்ணப்பங்கள் அவ்வப்போது அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கான பாகிஸ்தான் தூதரகத்தில் ச‌மர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.

7.  காங்கோ குடியசில் காலரா நோயை எதிர்த்துப் போராட ஐ.நா. நிதி உதவி

சன.30,2012. மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியசில் காலரா நோயை எதிர்த்துப் போராட அவசர கால நிதியுதவியாக 91 இலட்சம் டாலர்களை வழங்கியுள்ளது ஐக்கிய நாடுகள் சபையின் அவசர கால நிதி உதவி அமைப்பு.
காங்கோ குடியரசில் 22,000க்கும் மேற்பட்ட மக்கள் காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 44 இலட்சம் டாலர்களை ஐநாவின் UNICEF அமைப்பிற்கும் 47 இலட்சம் டாலர்களை உலக நல அமைப்பான WHOவிற்கும் வழங்குகிறது CERF என்ற இந்த ஐ.நா.அமைப்பு.
இவ்விரு ஐ.நா.அமைப்புகளும் காங்கோ குடியரசின் அரசு நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் காங்கோவில் 500க்கும் மேற்பட்டோர் காலரா நோய்க்குப் பலியாகியுள்ளனர்.
 

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...