Monday, 2 January 2012

Catholic News - hottest and latest - 30 December 2011

1. வத்திக்கான் : 2011ம் ஆண்டில் 25 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் திருத்தந்தை 16ம் பெனடிக்டைப் பார்த்துள்ளனர்

2. திருப்பீடச் சமூகத்தொடர்பு அவைக்கு, உறுப்பினர்கள் மற்றும் ஆலோசகர்களாக இரண்டு இந்தியர்கள் நியமனம்

3. 2012ம் ஆண்டில் திருத்தந்தையின் முக்கிய நிகழ்வுகள்

4. 2011ம் ஆண்டில் 26 மேய்ப்புப்பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

5. வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னை திருத்தலத்திற்கு வயது ஐம்பது

6. பெரு நாட்டில் 2012ம் ஆண்டு, புதிய நற்செய்தி அறிவிப்புக்கான ஒப்புரவு ஆண்டு

7. குடும்பங்களின் உரிமைகள் மதிக்கப்படுவதை வலியுறுத்தி மத்ரித்தில் பேரணி

8. சுனாமி விவிலியப் பிரதிகள் பேரிடரைப் புரி்ந்து கொள்ள உதவுகின்றன

------------------------------------------------------------------------------------------------------

1. வத்திக்கான் : 2011ம் ஆண்டில் 25 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் திருத்தந்தை 16ம் பெனடிக்டைப் பார்த்துள்ளனர்

டிச.30,2011. 2011ம் ஆண்டில் 25 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் திருத்தந்தை 16ம் பெனடிக்டைப் பார்த்துள்ளனர் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது.
திருத்தந்தை நிகழ்த்தும் திருப்பலிகள், திருவழிபாடுகள், புதன் பொது மறைபோதகங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு இலவச நுழைவுச் சீட்டுகளை வழங்கும் வத்திக்கான் நிர்வாக அமைப்பு இந்தப் புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது.
இவ்வாண்டு மே மாதம் முதல் நாளன்று திருத்தந்தை 2ம் ஜான் பால் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்ட திருப்பலியில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் 5 இலட்சம் பேர் நுழைவுச் சீட்டுகளுடன் பங்கு பெற்றனர் என்று அந்த வத்திக்கான் அமைப்பு கூறியது. எனினும், அந்நாளில் இந்தப் பேதுரு வளாகத்திலும் அதற்கு அருகிலுள்ள பகுதிகளிலும் நின்று இத்திருப்பலியில் கலந்து கொண்டவர்கள் பத்து இலட்சத்துக்கு அதிகம் என்று இத்தாலிய காவல்துறை கணித்துள்ளது.
2011ம் ஆண்டில் திருத்தந்தை நடத்திய 45 புதன் பொது மறைபோதகங்களில் சுமார் நான்கு இலட்சம் பேரும்  ஞாயிறு மூவேளை செப உரைகளில் 12 இலட்சத்துக்கு மேற்பட்டோரும் கலந்து கொண்டனர் எனவும் வத்திக்கான் வெளியிட்ட புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
மேலும், வத்திக்கானில் திருத்தந்தை சந்தித்த சிறப்புக் குழுக்களில் சுமார் ஒரு இலட்சத்து இரண்டாயிரம் பேர் இருந்தனர் எனவும், திருத்தந்தை நிகழ்த்திய திருவழிபாடுகளில் சுமார் 8 இலட்சத்து 46 ஆயிரம் பேர் பங்கு பெற்றனர் எனவும் வத்திக்கான் நிர்வாக அமைப்பு கூறியது.
மொத்தத்தில், 2011ம் ஆண்டில் திருத்தந்தையைச் சந்தித்த மக்களின் எண்ணிக்கை, 2010ம் ஆண்டைவிட அதிகம் என்று கூறும் அவ்வமைப்பு, 2010ம் ஆண்டில் சுமார் 23 இலட்சம் பேர்  திருத்தந்தையைச் சந்தித்தனர் என்று தெரிவித்தது.


2. திருப்பீடச் சமூகத்தொடர்பு அவைக்கு, உறுப்பினர்கள் மற்றும் ஆலோசகர்களாக இரண்டு இந்தியர்கள் நியமனம்

டிச.30,2011. இரண்டு இந்தியர்கள் உட்பட 9 புதிய உறுப்பினர்கள் மற்றும் 10 ஆலோசகர்களைத் திருப்பீடத்தின் சமூகத்தொடர்பு அவைக்கு இவ்வியாழனன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ், குரோவேஷிய கர்தினால் யோசிப் போஷானிச், திருப்பீடத்தின் புதிய நற்செய்தி அறிவிப்பு அவையின் தலைவர் பேராயர் சால்வாத்தோரே ஃபிசிக்கெல்லா உட்பட 9 பேரை உறுப்பினர்களாகத் திருப்பீடத்தின் சமூகத்தொடர்பு அவைக்கு நியமித்துள்ளார் திருத்தந்தை.
உரோம் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தின் சமூகத்தொடர்புத்துறை இயக்குனர் இயேசு சபை அருள்தந்தை அகுஸ்தீன் சவரிமுத்து உட்பட இரண்டு குருக்கள், ஓர் அருட்சகோதரி, 5 ஆண்கள், 2 பெண்கள் என 10 பேரை ஆலோசகர்களாகவும் அந்த அவைக்கு நியமித்துள்ளார் திருத்தந்தை.
தமிழகத்தைச் சேர்ந்த இயேசு சபை அருள்தந்தை முனைவர் அகுஸ்தீன் சவரிமுத்து, பாப்பிறைப் பல்கலைக்கழகத்தின் சமூகத்தொடர்புத்துறையில் பேராசிரியராகப் பணியைத் தொடங்கி, தற்போது அத்துறையின் இயக்குனராகப் பணியாற்றி வருகிறார்.


3. 2012ம் ஆண்டில் திருத்தந்தையின் முக்கிய நிகழ்வுகள்

டிச.30,2011. இலத்தீன் அமெரிக்காவுக்குத் திருப்பயணம், புதிய நற்செய்தி அறிவிப்பு பற்றிய உலக ஆயர்கள் மாமன்றம், விசுவாச ஆண்டைத் தொடங்கி வைத்தல், புதிய புனிதர்களை அறிவித்தல் உட்பட பல நிகழ்ச்சிகள் திருத்தந்தையின் 2012ம் ஆண்டின் குறிப்பேட்டில் உள்ளன.
2012ம் ஆண்டு ஏப்ரலில் 85 வயதை எட்டும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், வருகிற மார்ச் மாதத்தில் மெக்சிகோவுக்கும் கியூபாவுக்கும் திருப்பயணம் மேற்கொள்வார் எனவும், உலகக் கத்தோலிக்கரில் ஏறக்குறைய பாதிப்பேர் வாழும் இலத்தீன் அமெரிக்காவுக்கு இத்திருப்பயணம் ஓர் உந்துதலாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
புதிய நற்செய்தி அறிவிப்பு பற்றிய உலக ஆயர்கள் மாமன்றம் 2012ம் ஆண்டு அக்டோபர் 7 முதல் 28 வரை வத்திக்கானில் நடைபெறும் என்றும், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டை முன்னிட்டு வருகிற அக்டோபர் 11ம் தேதி விசுவாச ஆண்டு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகள் தவிர, வழக்கமான புதன் பொது மறைபோதகங்கள், மூவேளை செப உரைகள், சிறப்புச் சந்திப்புக்கள், திருவழிபாடுகள் எனப் பல நிகழ்வுகள் திருத்தந்தையின் குறிப்பேட்டில் உள்ளன.


4. 2011ம் ஆண்டில் 26 மேய்ப்புப்பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

டிச.30,2011. ஆசியாவில் நான்கு பேர் உட்பட உலகளாவியத் திருச்சபையில், 2011ம் ஆண்டில் 26 மேய்ப்புப்பணியாளர்கள்   கொல்லப்பட்டுள்ளனர் என்று Fides செய்தி நிறுவனம் அறிவித்தது.
2011ம் ஆண்டில் தங்களது கிறிஸ்தவ விசுவாசத்திற்காகக் கொடூரமாய்க் கொல்லப்பட்ட ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர் மற்றும் பொதுநிலை விசுவாசிகள் குறித்த ஆண்டறிக்கையை வெளியிட்ட Fides செய்தி நிறுவனம், இவ்வாண்டில் 18 அருட்பணியாளர்கள், நான்கு அருட்சகோதரிகள் மற்றும் 4 பொதுநிலை விசுவாசிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், அக்கண்டத்தில் 13 அருட்பணியாளர்களும் 2  பொதுநிலை விசுவாசிகளும் கொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.
ஆப்ரிக்காவில் 2 அருட்பணியாளர்கள், 3அருட்சகோதரிகள் மற்றும் ஒரு பொதுநிலை விசுவாசியும், ஆசியாவில் 2 அருட்பணியாளர்கள், ஓர் அருட்சகோதரி மற்றும் ஒரு பொதுநிலை விசுவாசியும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தும்கா நகருக்கு அருகில் கடந்த நவம்பர் 15ம் தேதி இரவு அருட்சகோதரி வல்சா ஜான் கொடூரமாய்க் கொல்லப்பட்டார். இச்சகோதரி கடந்த 12 ஆண்டுகளாக அப்பகுதியின் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர் நலனுக்காக வேலை செய்து வந்தவர்.
2010ம் ஆண்டில் அகில உலகத் திருச்சபையில் 25 மேய்ப்புப்பணியாளர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாண்டில் இவ்வெண்ணிக்கை அதிகரித்துள்ளது.


5. வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னை திருத்தலத்திற்கு வயது ஐம்பது

டிச.30,2011. தமிழ்நாட்டின் வேளாங்கண்ணியிலுள்ள ஆரோக்ய அன்னை திருத்தலம், பசிலிக்கா நிலைக்கு உயர்த்தப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டையொட்டி, 2012ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒருமணி நேரம் திருநற்கருணை ஆராதணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கீழை நாடுகளின் லூர்து என்றழைக்கப்படும் வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னை திருத்தலத்தை, அருளாளர் திருத்தந்தை 23ம் ஜான், 1962ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி பசிலிக்கா நிலைக்கு உயர்த்தினார்.
இந்த வேளாங்கண்ணி பசிலிக்காவை, அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால், 2002ம் ஆண்டில், கீழை நாடுகளின் லூர்து என்றழைத்தார்.
இந்தப் பொன்விழா பற்றி ஆசியச் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அப்பசிலிக்கா அதிபர் அருட்பணி ஏ.மைக்கிள், இந்த ஜூபிலி ஆண்டைக் கொண்டாடும் விதமாக, விடியற்கால விண்மீன் என்ற பெயரில் புதிய, பெரிய ஆலயம் கட்டத் தீர்மானித்திருப்பதாகக் கூறினார்.
2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இடம் பெற்ற சுனாமியின் போது வேளாங்கண்ணியில் சுமார் 850 பேர் இறந்தனர், 300 பேர் ஆழிப்பேரலைகளில் அடித்துச் செல்லப்பட்டனர், ஆயினும், இந்தப் பசிலிக்காவில் இருந்தவர்கள் காப்பாற்றப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


6. பெரு நாட்டில் 2012ம் ஆண்டு, புதிய நற்செய்தி அறிவிப்புக்கான ஒப்புரவு ஆண்டு

டிச.30,2011. தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில் 2012ம் ஆண்டை, புதிய நற்செய்தி அறிவிப்புக்கான ஒப்புரவு ஆண்டு என அறிவித்துள்ளார் அந்நாட்டின் ஹூவான்காயோ உயர்மறைமாவட்ட பேராயர் Pedro Barreto Jimeno.
ஹூவான்காயோ உயர்மறைமாவட்டம் உருவாக்கப்பட்டதன் 67ம் ஆண்டு கொண்டாட்டத்தின் போது இதனை அறிவித்தார் பேராயர் Barreto Jimeno.


7. குடும்பங்களின் உரிமைகள் மதிக்கப்படுவதை வலியுறுத்தி மத்ரித்தில் பேரணி

டிச.30,2011. திருக்குடும்பத் திருவிழாவாகிய டிசம்பர் 30ம் தேதி இஸ்பெயின் மத்ரித்தில் பல ஆயர்கள், குருக்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் குடும்பங்களின் உரிமைகள் மதிக்கப்படுவதற்காக பேரணி ஒன்றை நடத்தினர்.
குழந்தைப் பிறப்புக்களை ஊக்குவிக்கவும் குடும்ப வாழ்வைப் பாதுகாக்கவும் குடும்பங்களின் உரிமைகள் மதிக்கப்படவும் இப்பேரணியில் வலியுறுத்தப்பட்டது.
இக்காலத்திய சமுதாயம் பொருளாதாரத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், குடும்ப  விழுமியங்களிலும் கவனம் செலுத்த வேண்டுமென்று இஸ்பெயின் ஆயர் ஹூவான் ஹோசே ஒமெல்லா கூறினார்.


8. சுனாமி விவிலியப் பிரதிகள்பேரிடரைப் புரி்ந்து கொள்ள உதவுகின்றன

டிச.30,2011. இவ்வாண்டு மார்ச் 11ம் தேதி ஜப்பானைத் தாக்கிய சுனாமியில் சேதமடையாமல் இருந்த ஆயிரக்கணக்கான விவிலியப் பிரதிகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன என்று ஆசியச் செய்தி நிறுவனம் அறிவித்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பான் எதிர்நோக்கிய இந்தச் சுனாமிப் பேரிடர் பற்றிப் புரிந்து கொள்ள இப்பிரதிகள் உதவுகின்றன என்று, அவற்றை வாங்கும் மக்கள் கூறுவதாக ஆசியச் செய்தி நிறுவனம் கூறியது.
இந்த விவிலியப் பிரதிகளை வெளியிட்ட அச்சகம் சுனாமி அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அந்த இடத்தில் மூவாயிரம் விவிலியப் பிரதிகள் மட்டும் சேதமடையாமல் இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...