Monday, 23 January 2012

கத்தோலிக்க செய்திகள்: 23 ஜனவரி 2012

1.  திருத்தந்தை : கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு ஒவ்வொரு கிறிஸ்தவரின் மனமாற்றம் தேவை  

2. அமெரிக்காவில் மனித மாண்பு மதிக்கப்படுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுமாறு பேராயர் Chaput அழைப்பு

3.    கர்நாடகாவில் கிறிஸ்தவத்திற்கு எதிரானத் தாக்குதல்களைக் கண்டிக்கும் விதமாக ஊர்வலம்

4.   கிறிஸ்தவப் பள்ளிகளை அரசு கைப்பற்ற வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் ஷாரியா நீதிமன்றம் விண்ணப்பம்

5. 1,300ககும் மேற்பட்ட இளம் நேபாளக் குடியேற்றதாரர்கள் ஏழ்மைக்கும் சுரண்டலுக்கும் பலியாகியுள்ளனர்

6.   போரின் கொடுமைகளிலிருந்து சிறார் பாதுகாக்கப்படுமாறு பான் கி மூன் வேண்டுகோள்

7.    தங்கும் அனுமதி விதிகளை மீறிய 161 முஸ்லிம் மதகுருக்களை வெளியேற்ற இலங்கை அரசு முடிவு

--------------------------------------------------------------------------------------------

1.  திருத்தந்தை : கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு ஒவ்வொரு கிறிஸ்தவரின் மனமாற்றம் தேவை  

சன.23,2012. இயேசு கிறிஸ்துவின் வாழ்வு, மரணம், மற்றும் உயிர்ப்பில் வேரூன்றிய தனிமனித மனமாற்றம் மூலம் மட்டுமே, கிறிஸ்தவ ஒன்றிப்பை அடைய முடியும்என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பாகிய, பாவம் மற்றும் மரணத்தின் மீது அவர் அடைந்த வெற்றியைத் தியானிப்பதற்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம், இவ்வுயிர்ப்பு நிகழ்வானது, அவரில் நம்பிக்கை கொண்டுள்ளவர்களை உருமாற்றுகிறது மற்றும் முடிவில்லாத வாழ்வை அவர்களுக்குத் திறந்து விடுகின்றது  என்று உரைத்தார்.
உலகில் 300க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சபைகள் மற்றும் கிறிஸ்தவச் சமூகங்களால் இம்மாதம் 18 முதல் 25 வரை சிறப்பிக்கப்பட்டு வரும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் குறித்த சிந்தனைகளை இம்மூவேளை செப உரையில் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை, இயேசு கிறிஸ்துவில் கொண்டுள்ள விசுவாசத்தின் உருமாற்றக்கூடிய வல்லமையை உணர்ந்து ஏற்கும் போது, அது, கிறிஸ்தவர்கள் மத்தியில் முழு ஒன்றிப்பு ஏற்படுவதற்கான தேடலிலும் அவர்களுக்கு உதவுகின்றது என்றும் கூறினார்.
இவ்வாண்டு கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்துக்கென, போலந்து கிறிஸ்தவ ஒன்றிப்பு அவை தேர்ந்தெடுத்த, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்குக் கிடைத்த வெற்றியினால் நாம் அனைவரும் மாற்றுரு பெறுவோம் என்ற தலைப்பு பற்றியும் குறிப்பிட்ட அவர், பல்வேறு துன்பங்களுக்கு எதிராகத் துணிவுடன் போராடிய நீண்ட கால வரலாற்றைப் போலந்து நாடு கொண்டுள்ளது என்றும் கூறினார்.
மாற்றம் என்பது முதலில் நம் ஒவ்வொருவரிலும் தொடங்கினால், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான நமது தேடல், உண்மை வடிவம் பெறும் என்பதை, போலந்து நாட்டின் அனுபவம் ஒவ்வொருவருக்கும் விளக்குகின்றது என்றும்  திருத்தந்தை கூறினார்.
நம்மில் கடவுள் செயல்பட அனுமதித்தால், கிறிஸ்துவின் சாயலில் மாற்றுரு பெற நம்மை அனுமதித்தால், உண்மையான வெற்றியாகிய கிறிஸ்துவில் புதுவாழ்வில் நாம் நுழைந்தால் கிறிஸ்தவ ஒன்றிப்பு மிக எளிதில் எட்டக்கூடியதே என்றும் அவர் கூறினார்.
அனைத்துக் கிறிஸ்தவர்கள் மத்தியில் விளங்கும் காணக்கூடிய ஒன்றிப்பு, எப்போதும் கடவுளிடமிருந்து வரும் வேலையாகும் எனவும், நமது பலவீனத்தை ஏற்று இதை ஒரு கொடையாக ஏற்பதற்கு தாழ்மைப்பண்பைக் கடவுளிடம் கேட்போம் என்றும் திருத்தந்தை கூறினார்.
ஒவ்வொரு கொடையும் ஓர் அர்ப்பணமாக மாறுகின்றது எனவும், நமது அன்றாட அர்ப்பணம், நாம் ஒருவர் ஒருவருக்குப் பிறரன்புப் பணி செய்வதாகும் எனவும்  கூறினார் திருத்தந்தை.
வருகிற புதனன்று புனித பவுல் பசிலிக்காவில் நடைபெறும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வார நிறைவு திருவழிபாட்டில் பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் திருத்தந்தை இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார்.
மேலும்,  தூர கிழக்கு நாடுகளில் புதிய  லூனார் ஆண்டைத் தொடங்கும் அனைவருக்கும் தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார் திருத்தந்தை.
தற்போதைய உலகின் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் மத்தியில் இப்புதிய ஆண்டு நீதி மற்றும் அமைதியின் ஆண்டாக அமையட்டும் எனவும், துன்புறுவோர் அனைவருக்கும், குறிப்பாக, இளையோருக்கு இவ்வாண்டு புதிய நம்பிக்கைகளைக் கொண்டு வரட்டும் எனவும் திருத்தந்தை வாழ்த்தினார்.

2.   அமெரிக்காவில் மனித மாண்பு மதிக்கப்படுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுமாறு பேராயர் Chaput அழைப்பு

சன.23,2012. அமெரிக்காவில் செய்யப்படும் கருக்கலைப்புக்களில் 80 விழுக்காடு, உடல் உறுப்புக் குறைபாடு கொண்ட கருக்கள் என்பதால், அந்நாட்டில் மனித மாண்பு மதிக்கப்படுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுமாறு Philadelphia பேராயர் Charles J. Chaput கேட்டுக் கொண்டார்.
தாயின் கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளின் குரோமோசோம்களில் குறைகள் இருப்பதாய் கண்டறியப்பட்டவுடன் அவை கொல்லப்படுகின்றன என்ற பேராயர் Chaput, அக்குழந்தைகள் உண்மையிலேயே வேண்டப்படாதவை என்பதாலும் கொல்லப்படுகின்றன என்று தெரிவித்தார்.
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் துன்பநிலை பற்றி எடுத்துரைத்த அவர், இக்குழந்தைகள், அமெரிக்க சமுதாயத்திற்குச் சுமை அல்ல, மாறாக, அவை சமுதாயத்துக்கு விலைமதிப்பில்லாத கொடையாகும், நமது சமுதாயத்தின் உண்மையான பொருளைக் கண்டுணரக்கூடிய வாயிலாக இருக்கிறார்கள் என்றும் கூறினார்.
இஞ்ஞாயிறன்று நடைபெற்ற 13வது கர்தினால் O’Connor கருத்தரங்கில் தொடக்கவுரையாற்றிய போது இவ்வாறு கூறினார் Philadelphia பேராயர் Chaput. 

3.    கர்நாடகாவில் கிறிஸ்தவத்திற்கு எதிரானத் தாக்குதல்களைக் கண்டிக்கும் விதமாக ஊர்வலம்

சன 23, 2012.  கர்நாடகாவில் கிறிஸ்தவத்திற்கு எதிரானத் தாக்குதல்களைக் கண்டிக்கும் விதமாக இவ்வாரம் வெள்ளியன்று பெரிய அளவிலான ஊர்வலம் ஒன்றிற்கு, மங்களூர் மற்றும் உடுப்பி மாவட்டங்களின் சிறுபான்மை சமூக‌ங்களைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகளும் மதக்குழுக்களும் ஏற்பாடு செய்துள்ளனர்.
கர்நாடகாவின் அனைத்துக் கிறிஸ்தவ சபைகளின் அமைப்பும் இணைந்து நடத்தும் இந்த ஊர்வலம் குறித்து தங்கள் மசூதிகள் வழி ஆதரவு திரட்ட உள்ளதாக இசுலாமிய குருக்கள் அறிவித்துள்ள வேளையில், அனைத்து கிறிஸ்தவப் பங்குத்தளங்களும் இந்த ஊர்வலம்  குறித்து மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என அழைப்பு விடப்பட்டுள்ளது.
ஊர்வலத்திற்கான அரசு அனுமதியையும் பெற்றுள்ள சிறுபான்மைச் சமுதாய மதக் குழுக்கள், இவ்வாரம் புதனன்று பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தவுள்ள‌ன.
மனித உரிமைகளையும் அரசியல‌மைப்பின் வழி பெற்றுள்ள‌ உரிமைகளையும் மீறும் மத அடிப்படைவாதிகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக செபிக்கும் நாளாகவும் இம்மதம் 27ந்தேதியின் நடவடிக்கைகள் இருக்கும் என்று இந்த ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோர் கூறியுள்ளனர்

4.   கிறிஸ்தவப் பள்ளிகளை அரசு கைப்பற்ற வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் ஷாரியா நீதிமன்றம் விண்ணப்பம்

சன 23, 2012.  ஜம்மு-காஷ்மீர் பகுதியில் உள்ள கிறிஸ்தவப் பள்ளி நிர்வாகத்தை அரசு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், அவைகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளது அம்மாநிலத்தின் இசுலாம் மத ஷாரியா நீதிமன்றம்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள புகழ்வாய்ந்த கல்வியாளர்கள் கிறிஸ்தவப் பள்ளிகளின் நிர்வாகத்தில் பங்கேற்க வேண்டும் எனவும், அந்த ஷாரியா நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. கிறிஸ்தவப் பள்ளிகளில் இசுலாமியப் படிப்புகளுக்கென ஒரு வகுப்பு துவக்கப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்துள்ள இந்த மத நீதி மன்றம், சையது முகமது இக்பால் எழுதிய காலை செபம் ஒவ்வொரு நாள் காலையிலும் பள்ளி துவங்குமுன் பாடப்பட வேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளது.
மூன்று கிறிஸ்தவக் குருக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அண்மையில் இந்த ஷாரியா நீதிமன்றம் அறிவித்துள்ள‌தும் இங்கு குறிப்பிடத்தக்கது.

5. 1,300ககும் மேற்பட்ட இளம் நேபாளக் குடியேற்றதாரர்கள் ஏழ்மைக்கும் சுரண்டலுக்கும் பலியாகியுள்ளனர்

சன 23, 2012.  வேலை தேடி வெளிநாடுகளில் குடியேறும் நேபாள இளையோரில் 1,357 பேர் 2009ம் ஆண்டிலிருந்து ஏழ்மையாலும் சுரண்டல்களாலும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
தற்கொலைகள், வன்முறை, கொலை, மனச்சோர்வு மற்றும் ஆரோக்கியமற்ற நிலைகளால் இம்மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறும் நேபாள வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை, பெரும்பானமை மரணங்கள் இஸ்லாமிய நாடுகளில் பணிபுரியும் நேபாள இளையோரிடையே இடம்பெற்றதாகவும் தெரிவிக்கிறது.

6.   போரின் கொடுமைகளிலிருந்து சிறார் பாதுகாக்கப்படுமாறு பான் கி மூன் வேண்டுகோள்

சன.23,2012. போரின் கொடுமைகளிலிருந்து சிறார் பாதுகாக்கப்படுமாறு, யூத இனப்படுகொலை நினைவு நிகழ்ச்சியில் கேட்டுக் கொண்டனர் ஐ.நா.அதிகாரிகள்.
இரண்டாம் உலகப் போரின் போது நாத்சி வதைப்போர் முகாம்களில் கொல்லப்பட்ட சுமார் 60 இலட்சம் யூதர்கள் மற்றும்பிற எண்ணற்ற மக்களின் நினைவாக நியுயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் இவ்வாறு கூறினார்.
யூத இனப்படுகொலையில், 15 இலட்சம் யூதச் சிறார் அழிந்தனர், மாற்றுத்திறனாளிகள், ரோமா, சிந்தி இனத்தவர் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் என்றும் பான் கி மூன் கூறினார்.
பலர் பசியினாலும் நோயினாலும் இறந்தனர், பலர் போரினால் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர், இந்தக் குழந்தைகள் உலகிற்கு எவ்வளவு நல்லவற்றைச் செய்திருப்பார்கள் என்று நமக்கு ஒருபோதும் தெரியாது என்றும் அவர் கூறினார்.
மனித சமுதாயத்தில் சிறார், மிகவும் தனிப்பட்ட விதத்தில் பாதிக்கப்படுகின்றனர், அவர்களுக்கு இவ்வுலகம் எவ்வளவு நல்லது செய்ய முடியும் என்பதை அவர்களுக்குக் காட்ட வேண்டுமென்று ஐ.நா.பொதுச் செயலர் கூறினார்.
ஒவ்வோர் ஆண்டும் சனவரி 27ம் நாள், அனைத்துலக யூத இனப்படுகொலை நினைவு நாள் கடைபிடிக்கப்படுகிறது.

7.    தங்கும் அனுமதி விதிகளை மீறிய 161 இசுலாம் மதகுருக்களை வெளியேற்ற இலங்கை அரசு முடிவு

சன 23, 2012.  தங்கும் அனுமதி விதிகளை மீறியக் காரணத்துக்காக 160 க்கும் அதிகமான இஸ்லாமிய மதகுருக்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவது என்று இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கான அனுமதியுடன் பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவுகள், சில அரபு நாடுகள் மற்றும் இந்தியாவில் இருந்து வந்த இந்த மதகுருக்கள், அனுமதியின்றி இசுலாம் சமூகத்தினருக்கு மத போதனை செய்ததாக அரசு கூறுகிறது.
அனுமதியின்றி மத போதனையில் ஈடுபட்ட இவர்கள் இம்மாதம் 31ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அறிவித்துள்ளது அரசு.
இவர்களது வெளியேற்றம் குறித்த முடிவுகள் தொடர்பில், இலங்கை அரசில் உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...