Sunday, 22 January 2012

கத்தோலிக்க செய்திகள்: 20 ஜனவரி 2012

1. திருத்தந்தை : புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியில் திருஅவை, இளம் அருட்பணியாளரிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறது

2. திருத்தந்தை - Neocatechumenate இக்காலத்திற்குத் தூய ஆவி வழங்கியுள்ள சிறப்புக் கொடை

3. வத்திக்கானில், புதிய அறிவியல்-விசுவாச நிறுவனம்

4. கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள், கிறிஸ்துவை அடிப்படையாகக் கொண்ட, மனிதன் பற்றிய கண்ணோட்டத்தை வழங்க வேண்டும் திருப்பீட அதிகாரி

5. தென்னாப்ரிக்காவின் பாதுகாப்பு மசோதா, நாட்டின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் -  கேப்டவுண் பேராயர்

6. இந்தியா தலையிட யாழ் ஆயர் கோரிக்கை

7. இலங்கையின் மனிதவள மேம்பாட்டிற்கு நூறு கோடி : இந்தியா!

8. இந்தியாவில் மரணதண்டனையை இரத்து செய்ய கிறிஸ்தவ சபைகள் வலியுறுத்தல்

9. இந்தியாவின் மறைபோதகர்கள் 166 நாடுகளில் பணி செய்கின்றனர்

10. உலகில் அதிகரிக்கும் சட்டவிரோத கருக்கலைப்புக்கள்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியில் திருஅவை, இளம் அருட்பணியாளரிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறது

சன.20,2012. எந்தவிதப் பாரபட்சமுமின்றி, சகோதரத்துவத்திற்கும் திருஅவையின் உணர்வுக்கும் திறந்த மனம் கொண்டதாய், தூய வாழ்வில் வளர்வதற்கு மிகுந்த ஆவல் கொண்டதாய் ஓர் அருட்பணியாளரின் வாழ்வு அமைய வேண்டும் எனத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
உரோம் Capranica குருத்துவப் பயிற்சி நிறுவனத்தின் சுமார் எழுபது உறுப்பினர்களை இவ்வெள்ளிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இப்பயிற்சி  நிறுவனத்தின் பாதுகாவலராகிய புனித ஆக்னஸ் பற்றியும் எடுத்துச் சொன்னார்.
விசுவாசத்திற்கு வீரமுடன் சாட்சியம் பகிரும் ஒரு மனிதர், கிறிஸ்துவுக்காக, கிறிஸ்துவில், கிறிஸ்துவோடு வாழும் ஒருவராக இருக்க வேண்டும் என்பதை, கன்னியும் மறைசாட்சியுமான புனித ஆக்னசின் வாழ்வு உணர்த்துகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
குருத்துவ வாழ்வுக்கானப் பயிற்சியும், எல்லா நிலைகளிலும் ஒருங்கிணைந்ததாய், இறைவனோடும், தன்னோடும் தான் வாழும் குழுவோடும் ஓர் உறுதியான ஆன்மீக வாழ்வால் வழிநடத்தப்பட்டதாய் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நற்செய்தி மற்றும் புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியில் திருஅவை, இளம் அருட்பணியாளரிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறது என்றும் உரைத்த திருத்தந்தை, இந்நிறுவனத்தில் வாழ்வோர், தங்களது அன்றாட வாழ்வில் கிறிஸ்துவோடு ஆழமாக ஒன்றித்திருப்பதன் மூலம், உண்மை மற்றும் மகிழ்வோடு குழுவில் வாழ முடியும் என்றும் தெரிவித்தார்.
கர்தினால் தொமினிக்கோ காப்ரானிக்காவால் 555 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இக்குருத்துவப் பயிற்சி நிறுவனத்தின் மரபுகளைக் கட்டிக் காக்குமாறும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.
சனவரி 21ம் தேதி புனித ஆக்னஸ் திருவிழா சிறப்பிக்கப்படுகின்றது

2. திருத்தந்தை - Neocatechumenate இக்காலத்திற்குத் தூய ஆவி வழங்கியுள்ள சிறப்புக் கொடையாக

சன.20,2012. வயது வந்தோரை கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதிப்படுத்தும் Neocatechumenate என்ற பணியில் ஈடுபட்டுள்ளோர், தங்களது விசுவாச வாழ்வின் அழகையும் கிறிஸ்தவராய் இருப்பதன் மகிழ்வையும் மீண்டும் கண்டுணர அழைக்கப்படுகிறார்கள் என்று திருத்தந்தை கூறினார்.
Neocatechumenal Way என்ற இயக்கத்தைச் சேர்ந்த சுமார் ஏழாயிரம் பேரை பாப்பிறை ஆறாம் பவுல் அரங்கத்தில் இவ்வெள்ளிக்கிழமை சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இக்காலத்திற்குத் தூய ஆவி வழங்கியுள்ள சிறப்புக் கொடையாக இவ்வியக்கத்தினரைத் திருஅவை நோக்குவதாகவும் கூறினார்.
இவர்களின் பணி விலைமதிப்பற்றது என்றும், எப்பொழுதும் அப்போஸ்தலிக்கத் திருஅவையோடும் திருஅவையின் மேய்ப்பர்களோடும் இணைந்து செயல்படுமாறும் திருத்தந்தை இக்குழுவினரைக் கேட்டுக் கொண்டார்.
மேலும், திருப்பீட இறைவழிபாடு மற்றும் திருவருட்சாதனப் பேராயம், 15 ஆண்டுகளாக நடத்திய ஆய்வுக்குப் பின்னர் இந்த இயக்கத்திற்கான திருவழிபாட்டு முறைமை இவ்வெள்ளியன்று அங்கீகரிக்கப்பட்டது. இதன்படி, 17 புதிய மறைப்பணிக் குழுவினரை இந்நாளில் திருத்தந்தை உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பினார்.
12 குழுக்கள் ஐரோப்பாவுக்கும், 4 குழுக்கள் அமெரிக்காவுக்கும், மற்றொன்று, ஆஸ்திரேலியா, பாப்புவா நியூ கினி மற்றும் உக்ரேய்னுக்கும் செல்கின்றனர்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கடந்த ஆண்டுகளில், ஏற்கெனவே 40 குழுக்களை உலகின் பல இடங்களுக்கும்  அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வியக்கம் சுமார் 10 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. தற்போது உலகில் சுமார் நாற்பதாயிரம் குழுக்கள் நற்செய்திப்பணியிலும் ஈடுபட்டுள்ளன.

3. வத்திக்கானில், புதிய அறிவியல்-விசுவாச நிறுவனம்

சன.20,2012. அறிவியலுக்கும் இறையியலுக்கும் இடையே மெய்யியல் பாலம்ஒன்றை அமைக்கும் நோக்கத்தில், வத்திக்கானில் புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
STOQ என்ற இப்புதிய, அறிவியல்-விசுவாச நிறுவனம், திருப்பீட கலாச்சார அவையின் தலைவர் கர்தினால் ஜான்பிராங்கோ ரவாசியின் தலைமையின்கீழ் செயல்படும்.
கர்தினால் ரவாசியின் விண்ணப்பத்தின் பேரில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உருவாக்கியுள்ள இப்புதிய நிறுவனம் பற்றிப் பேசிய, திருப்பீட கலாச்சார அவையின் நேரடிப் பொதுச் செயலர் பேரருட்திரு Jose Sanchez de Toca Y Alameda, இந்நிறுவனத்தின் நோக்கம் பற்றி விளக்கினார்.
அறிவியல், இறையியல், மற்றும் மெய்யியல் பற்றிய தாகத்தைத் தணிப்பதற்கு உதவியாக 2003ம் ஆண்டில், திருத்தந்தை அருளாளர் 2ம் ஜான் பால் அவர்களால் உருவாக்கப்பட்ட STOQ திட்டத்தின் பணியின் பயனாய், இப்புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.   

4. கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள், கிறிஸ்துவை அடிப்படையாகக் கொண்ட, மனிதன் பற்றிய கண்ணோட்டத்தை வழங்க வேண்டும் திருப்பீட அதிகாரி

சன.20,2012. கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள், கிறிஸ்துவை அடிப்படையாகக் கொண்ட, மனிதன் பற்றிய கண்ணோட்டத்தை வழங்க வேண்டுமென்று திருப்பீட இறைவழிபாடு மற்றும் திருவருட்சாதனப் பேராயத் தலைவர் கர்தினால் Antonio Canizares கேட்டுக் கொண்டார்.
இஸ்பெயினின் அவிலா பல்கலைக்கழகப் பிரதிநிதிகளுடன் திருத்தந்தையைச் சந்தித்த பின்னர் நிருபர்களிடம் பேசிய  கர்தினால் Canizares, கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் மனிதன் பற்றிய கண்ணோட்டங்கள், கிறிஸ்துவைப் பற்றிய உண்மைகளைப் பிரதிபலிப்பதாய் இருக்க வேண்டும் என்று கூறினார்.
இப்புதனன்று திருத்தந்தையைச் சந்தித்த இப்பிரதிநிதிகள், கடந்த ஆகஸ்ட் 12 முதல் 14 வரை அவிலாவில் நடைபெற்ற முதல் உலக கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத் தொகுப்பை அவரிடம் கொடுத்தனர்.

5. தென்னாப்ரிக்காவின் பாதுகாப்பு மசோதா, நாட்டின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் -  கேப்டவுண் பேராயர்

சன.20,2012. தென்னாப்ரிக்காவின் தகவல் பெறும் சுதந்திரத்தையும், ஒளிவு மறைவில்லா நிர்வாகத்தையும் பாதுகாக்கும் நோக்கத்தில், அந்நாட்டின் முக்கிய பாதுகாப்பு மசோதாவில் மாற்றம் கொண்டுவரப்படுமாறு வலியுறுத்தியுள்ளார் Cape Town பேராயர் Stephen Brislin.
குடிமக்கள் சமுதாயத்தின் உறுப்பினர்கள் என்பது மட்டுமல்ல, பொதுநலனுக்குச் சேவைபுரிய வேண்டிய தார்மீகக் கடமையையும் கேப்டவுண் கத்தோலிக்கத் திருஅவை கொண்டுள்ளது என்பதால், இம்மசோதாவிற்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய கடமையைக் கொண்டுள்ளது என்றும் பேராயர் Brislin கூறினார்.
நாட்டின் தகவல் பாதுகாப்பு மசோதா, ஏற்கனவே  தென்னாப்ரிக்காவின் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆயினும் அது தற்போது, நாடாளுமன்றத்தின் மேல்சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இம்மசோதா சட்டமாக்கப்பட்டால், அதனை மீறுகிறவர்களுக்கு 25 வருடச் சிறைத்தண்டனையும் உண்டு.
இம்மசோதா, நாட்டின் பாதுகாப்பு அமைச்சருக்கு அதிகமான அதிகாரங்களை வழங்குகின்றது எனவும், தகவல் பெறும் உரிமை கொண்ட பொது மக்களுக்கு அவ்வுரிமையை இது கட்டுப்படுத்துகின்றது எனவும் பேராயர் தெரிவித்தார்.

6. இந்தியா தலையிட யாழ் ஆயர் கோரிக்கை

சன.20,2012. இலங்கை அரசுக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் இந்தியா மூன்றாம் தரப்பாகச் செயல்படுவதற்கு முன்வர வேண்டும் என்று யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சௌந்தரநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் இது தொடர்பான கடிதம் ஒன்றையும் யாழ் ஆயர் கொடுத்தார் என்று பிபிசி செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகள் துரிதமாகவும், பயனுள்ளதாகவும் அமைவதற்கு இந்தியா அதில் நேரடியாகப் பங்கெடுக்க வேண்டும். அவ்வாறான பங்களிப்பின் மூலம் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காணமுடியும் என்ற நோக்கத்திலேயே இந்த வேண்டுகோளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் முன்வைத்திருப்பதாக யாழ் ஆயர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009 ம் ஆண்டு விடுதலைப்புலிகள், இலங்கை இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்ட பின்னர், இந்தியாவின் முன் முயற்சியின் மூலமாகவே, தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆகவே பேச்சுவார்த்தைகள் பலனுள்ளதாக அமைவதற்கு இந்தியா அதில் நேரடியாகப் பங்கெடுக்க வேண்டும் என்பது தமிழ் மக்களின் விருப்பமாக இருப்பதாகவும் யாழ் ஆயர் கூறுகின்றார்.

7. இலங்கையின் மனிதவள மேம்பாட்டிற்கு நூறு கோடி : இந்தியா!

சன.20,2012. இலங்கையின் மனித வளத்தை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, நூறு கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி உதவியை வழங்குவதற்கு இந்திய அரசு தீர்மானித்திருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அறிவித்தார்.
இலங்கையில் தனது நான்கு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இவ்வியாழனன்று நாடு திரும்புகையில் நிருபர்களிடம் பேசிய எஸ்.எம்.கிருஷ்ணா, இந்த நிதி உதவி, இளங்கலை, முதுநிலை மற்றும் முனைவர் படிப்புகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு பிரித்து அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இப்படிப்புகளுக்கு, இந்தியா நிதியுதவி செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரிக்கும் என்றும் தெரிவித்த அவர், இவ்வுதவியினால், இலங்கையில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கும என்றும் கூறினார்.
மாணவர்களின் கல்விக் கட்டணம், புத்தகங்கள், தங்கிப் படிக்கும் செலவு போன்றவை இந்திய அரசின் நிதி உதவியில் வழங்கப்படும் என்றும் கிருஷ்ணா கூறினார்.
மேலும், இந்திய நிதி உதவியில், காலே-ஹிக்காடுவா இடையே அமைக்கப்பட்டுள்ள இரயில் போக்குவரத்தையும் இப்பயணத்தின் போது எஸ்.எம்.கிருஷ்ணா தொடங்கி வைத்ததார்.
தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்க வகைசெய்யும் சட்டத்திருத்தத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன

8. இந்தியாவில் மரணதண்டனையை இரத்து செய்ய கிறிஸ்தவ சபைகள் வலியுறுத்தல்

சன.20,2012. இந்தியாவில் மரணதண்டனை நிறைவேற்றும் சட்டம் இரத்து செய்யப்படுமாறு நாட்டின் கிறிஸ்தவ சபைகளும் பொது மக்கள் சமுதாயமும் நடுவண் அரசை விண்ணப்பித்துள்ளன.
இந்திய அரசு, மரணதண்டனையை இரத்து செய்வதற்குத் தான் கொண்டுள்ள அர்ப்பணத்தை, வருகிற மே மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா.மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டுமெனவும் கிறிஸ்தவ சபைகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இவ்வாண்டு மே மாதத்தில் ஐ.நா.வில் சமர்ப்பிப்பதற்கென, இந்திய வெளிவிவகார அமைச்சகம் மனிதஉரிமைகள் குறித்த தேசிய அளவிலான அறிக்கை ஒன்றைத் தயார் செய்துள்ளது. இவ்வறிக்கையை வைத்தே பொதுநல சமூகம், மரணதண்டனையை இரத்து செய்யக் கோரிக்கை எழுப்பி வருகிறது. 
1950ம் ஆண்டின் இந்திய அரசியல் அமைப்பில் மரணதண்டனை நிறைவேற்றும் சட்டம் குறிக்கப்பட்டிருந்தாலும் 2004ம் ஆண்டிற்குப் பின்னர் நாட்டில் மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. எனினும், இந்தியச் சிறைகளில், 400க்கும் மேற்பட்ட மரணதண்டனை கைதிகள் உள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.  

9. இந்தியாவின் மறைபோதகர்கள் 166 நாடுகளில் பணி செய்கின்றனர்

சன.20,2012. நீண்ட காலமாக மறைபோதகத் தளமாக இருந்து வந்த இந்தியா, வெளிநாடுகளுக்கு அதிகமான மறைபோதகர்களை அனுப்பும் நாடுகளில் ஒன்றாகத் தற்போது மாறியுள்ளது என்று இந்தியத் திருஅவை அறிவித்தது.
பெங்களூரில் இம்மாதத்தில் இந்திய ஆயர்களும் துறவு சபை அதிபர்களும் நடத்திய கூட்டத்தில் இவ்வாறு அறிவிக்கப்பட்டது.
தற்போது இந்தியாவின் மறைபோதகர்கள் 166 நாடுகளில் சுமார் 15 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள் என்று இக்கூட்டத்தில் தெரிவித்தார் அருட்பணி பல்த்தசார் காஸ்தெலினோ.
இவ்வெண்ணிக்கை வருங்காலத்தில் அதிகரிக்கும் என்றும் கூறிய அவர், தற்போது, 214க்கும் அதிகமான துறவு சபைகள், தங்களது இந்திய மறைபோதகர்களை மறைப்பணித்தளங்களுக்கு அனுப்பியுள்ளன என்றும் கூறினார்.

10. உலகில் அதிகரிக்கும் சட்டவிரோத கருக்கலைப்புக்கள்

சன.20,2012. உலக அளவில் நடக்கும் அனைத்துவகையான கருக்கலைப்புகளிலும் சரிபாதியானவை முறையான மருத்துவக் கண்காணிப்பு இல்லாத பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்கள் என்று உலக நலவாழ்வு நிறுவனத்தின் புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இப்படியான பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்களில் பெரும்பாலனவை ஆப்ரிக்கா மற்றும் ஆசிய கண்டங்களைச் சேர்ந்த வளர்ந்து வரும் நாடுகளில் நடப்பதாகவும் இவ்வறிக்கை கூறுகிறது.
உலக அளவில் நடக்கும் பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்களால் ஏற்படும் உயிரிழப்புக்களில் ஏறக்குறைய பாதியளவு, ஆப்ரிக்காவில் நடப்பதாகவும் அந்நிறுவன அறிக்கை கூறுகிறது.
உலக அளவில் ஏற்படும் கர்பபகாலப் பெண்கள் இறப்பில் 13 விழுக்காடு, ஆப்ரிக்காவிலும் ஆசியாவிலும் நடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
முறைகேடான கருக்கலைப்பின் போது ஆண்டுதோறும் இறக்கும் நாற்பத்து ஏழாயிரம் பெண்களில், இருபத்து ஒன்பதாயிரம் பெண்கள், ஆப்ரிக்கக் கண்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, கடந்த பத்து ஆண்டுகளாக படிப்படியாக குறைந்துவந்த கருக்கலைப்புக்களின் எண்ணிக்கை தற்போது ஒருவித தேக்க நிலையை அடைந்திருப்பதாக கூறுகிறார்கள்.
இப்பிரச்சனை இந்தியாவில் இன்னும் மோசமாக இருப்பதாக மகப்பேறு மருத்துவர்களுக்கான சங்கத்தின் முன்னாள் தலைவி ஜயஸ்ரீ கஜராஜ் கூறுயுள்ளார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...