Saturday, 14 January 2012

கத்தோலிக்க செய்திகள்: 12 ஜனவரி 2012

1. உலகில் நிலவும் பொருளாதாரப் பிரச்சனையை பணத்தைக் கொண்டு மட்டும் சீர்செய்யமுடியாது - திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

2. திருத்தந்தையின் புதன் மறைபோதகத்தில் கலந்து கொண்ட கியூபா நாட்டு முதலை

3. கியூபா நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கர்களுக்கு மியாமி உயர்மறைமாவட்டம் ஏற்பாடு செய்துள்ள திருப்பயணம்

4. ஈராக் நாட்டு கிர்குக் நகரில் பேராயர் இல்லத்தின் மீது தாக்குதல்

5. பாகிஸ்தான் அரசால் லாகூரில் கிறிஸ்தவ கோவில் இடிப்பு

6. கந்தமால் வன்முறைகளுக்கு ஒடிசா மாநில அரசும் உடந்தை

7. ஒவ்வொரு நாடும் முன்னேற்றப் பாதையைப் பற்றிய தெளிவான முடிவுகளை எடுக்கவேண்டும் - ஐ.நா.பொதுச் செயலர்

8. அறிவியல்: இருண்ட பொருள் வரைபடம் தயார்

------------------------------------------------------------------------------------------------------

1. உலகில் நிலவும் பொருளாதாரப் பிரச்சனையை பணத்தைக் கொண்டு மட்டும் சீர்செய்யமுடியாது - திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

சன.12,2012. உரோம் நகரிலும், லாசியோ மாநிலத்திலும் வாழ்வோர் மத்தியில் விருந்தோம்பல் பண்பு உள்ளதென்பதை கடந்த மேமாதம் நாம் கண்கூடாகக் கண்டோம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
உரோம் நகர் மற்றும் லாசியோ மாநில அரசு அதிகாரிகளை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை அவர்களுக்கு வழக்கமான புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறிய வேளையில், திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள் அருளாளராக உயர்த்தப்பட்ட நிகழ்வின்போது உரோம் நகரும் லாசியோ மாநிலமும் உரோம் நகருக்கு வந்தோரை வரவேற்றதைச் சிறப்பாக குறிப்பிட்டுப் பேசினார்..
ஒவ்வோர் ஆண்டும் இவ்வதிகாரிகளைத் திருப்பீடத்தில் சந்தித்து, புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறும் திருத்தந்தை, கடந்த ஆண்டு இத்தாலியும் இன்னும் பல நாடுகளும் சந்தித்த பொருளாதாரப் பின்னடைவைக் குறித்துப் பேசினார்.
உலகின் பல பகுதிகளில் நிலவும் பொருளாதாரப் பிரச்சனையை பணத்தைக் கொண்டு மட்டும் சீர்செய்யமுடியாது என்றும், நன்னெறி மதிப்பீடுகள் மனிதகுலத்தில் குறைந்து வருவதே இந்தப் பிரச்சனையின் பின்னணியில் உள்ள உண்மை என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
சுயநலம் மிக ஆழமாக வேரூன்றிவிட்ட நமது சமுதாயம் மனித உறவுகளைப் பற்றி கவலைகொள்ளாமல் வாழ்வதே பல பின்னடைவுகளுக்குக் காரணம் என்று திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.
குடும்ப உறவுகள் குறித்துப் பேசிய திருத்தந்தை, திருமண உறவால் எழுப்பப்படும் குடும்பமே உறுதியான நன்னெறிகளை வளர்க்கும் நல்லதொரு விளைநிலம் என்று விவரித்தார்.
தன் உரையின் பிற்பகுதியில் இளையோரைக் குறித்து பேசிய திருத்தந்தை, பொருளாதாரப் பிரச்சனைகள் சூழ்ந்துள்ள இவ்வுலகில், விரைவாகப் பணம் கிடைக்கும் வழிகளை இளையோர் தேடிச் செல்வதற்கு சட்டத்திற்குப் புறம்பான பல அமைப்புக்கள் உள்ளன என்பதை ஓர் எச்சரிக்கையாகக் கூறினார்.
ஒருவருக்கொருவர் ஆதரவாய் விளங்கும் மனித சமுதாயம், ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் தரும் விருந்தோம்பல், நன்னெறிகளுக்கும், சட்டங்களுக்கும் உட்பட்ட ஒரு சமுதாயம் ஆகியவற்றைக் கட்டி எழுப்புவதில் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும் என்று தன் உரையின் இறுதியில் அரசு அதிகாரிகளிடம் விண்ணப்பித்தார் திருத்தந்தை.


2. திருத்தந்தையின் புதன் மறைபோதகத்தில் கலந்து கொண்ட கியூபா நாட்டு முதலை

சன.12,2012. இப்புதனன்று நடைபெற்ற திருத்தந்தையின் மறைபோதகத்தில் கியூபா நாட்டில் அழிந்து வரும் இனமென்று கருதப்படும் ஒரு முதலையும் கலந்து கொண்டது.
உரோம் நகரில் உள்ள 'Bioparco' என்ற மிருகக் காட்சி சாலை தன் நூற்றாண்டைக் கொண்டாடும் இவ்வாண்டின் துவக்கத்தில் திருத்தந்தையின் ஆசீரைப் பெற வந்திருந்த இம்மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் தங்களுடன் இந்த முதலையையும் எடுத்து வந்திருந்தனர்.
இந்த மிருகக்காட்சி சாலையில் பாதுகாக்கப்படும் 1200 மிருகங்களின் ஒரு பிரதிநிதியாக இந்த கியூபா நாட்டு முதலை இருந்ததென்றும், திருத்தந்தை கியூபா நாட்டுக்கு மார்ச் மாதம் செல்லும் வேளையில் இந்த முதலையும் அந்நாட்டிற்கு அனுப்பப்படும் என்றும் மிருகக்காட்சி சாலை அதிகாரி Paolo Giuntarelli கூறினார்.
கியூபாவின் அழிந்துவரும் மிருக இனங்களின் வரிசையில் உள்ள இந்த முதலை இனம், கடந்த சில ஆண்டுகளில் 80 விழுக்காடு அழிந்துவிட்டதென்று ஒரு செய்திக் குறிப்பு கூறுகின்றது.


3. கியூபா நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கர்களுக்கு மியாமி உயர்மறைமாவட்டம் ஏற்பாடு செய்துள்ள திருப்பயணம்

சன.12,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வருகிற மார்ச் மாதம் கியூபா நாட்டிற்கு திருப்பயணம் மேற்கொள்ளும் வேளையில், அமெரிக்காவில் வாழும் கியூபா நாட்டுக் கத்தோலிக்கர்கள் நூற்றுக்கணக்கில் அங்கு திருப்பயணமாகச் செல்வார்கள் என்று தான் நம்புவதாக மியாமி பேராயர் Thomas Wenski  கூறினார்.
அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாநிலத்தில் வாழும் கியூபா நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கர்களுக்கு மியாமி உயர்மறைமாவட்டம் திருப்பயணம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக செய்தியாளர்களிடம் கூறிய பேராயர் Wenski, திருத்தந்தையின் திருப்பயணம் கியூபாவுக்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும் இடையே இன்னும் வலுவான ஒப்புரவை உருவாக்கும் என தான் நம்புவதாகக் கூறினார்.
கியூபாவின் பாதுகாவலராக விளங்கும் பிறரன்புக் கன்னியின் திரு உருவம் கண்டுபிடிக்கப்பட்டு நானூறு ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி திருத்தந்தை அந்நாட்டிற்கு மேற்கொள்ளும் திருப்பயணம் அமைகிறது என்று கத்தோலிக்க செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன..
கியூபா நாட்டின் புரட்சியின்போது, அந்நாட்டிலிருந்து வெளியேறி, அமெரிக்காவில் குடியேறிய பலர், அந்நாட்டிற்கு மீண்டும் திரும்பிச் செல்ல முடியாமல் இருந்தனர். 2009ம் ஆண்டு முதல் இவ்விரு நாடுகளுக்கும் இடையே பயணங்கள் மேற்கொள்ளும் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால், அமெரிக்காவில் வாழ்வோர் தங்கள் உறவினர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


4. ஈராக் நாட்டு கிர்குக் நகரில் பேராயர் இல்லத்தின் மீது தாக்குதல்

சன.12,2012. ஈராக் நாட்டு கிர்குக் நகரில் அமைந்துள்ள கல்தேய ரீதிப் பேராயர் லூயிஸ் சாகோ அவர்களின் இல்லம் இப்புதனன்று தாக்கப்பட்டது.
பாக்தாதிலிருந்து வந்ததாகக் கருதப்படும் மூன்று தீவிரவாதிகள் பிற்பகல் 1 மணி அளவில் மேற்கொண்ட இத்தாக்குதலில், பேராயரும், ஆயர் இல்லத்தில் இருந்தவர்களும் எந்த பாதிப்புக்களுக்கும் உள்ளாகவில்லை. தாக்குதலை மேற்கொண்ட மூவரில் இருவர் கொல்லப்பட்டனர். மூன்றாவது ஆள் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும், பேராயரின் இல்லத்திற்கு அருகில் வாழும் ஈராக் பாராளு மன்ற உறுப்பினர் Jala Niftajiயின் இல்லம் தாக்குதலின்  இலக்காக இருந்திருக்கலாம் என்றும் ஊடகங்கள் கணிக்கின்றன.
இத்தாக்குதல் நடப்பதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் பேராயர் சாகோவும் பிற குருக்களும் அன்னை மரியா பங்குக் கோவிலுக்குச் சென்று திரும்பியதாக ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
ஈராக்கில் தற்போது வலுவான அரசு இல்லாததால் மக்கள் இன்னும் அச்சத்தில் வாழ்கின்றனர் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


5. பாகிஸ்தான் அரசால் லாகூரில் கிறிஸ்தவ கோவில் இடிப்பு

சன.12,2012. பாகிஸ்தானின் லாகூரில் கிறிஸ்தவ கோவில் ஒன்றையும் அருகிலிருந்த ஒரு தையல் பள்ளியையும் நகராட்சி அதிகாரிகள் இச்செவ்வாயன்று இடித்துத் தள்ளியதை எதிர்த்து, ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் இப்புதனன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில் சொத்துக்களைக் காப்பாற்று”, “நிலங்களை அபகரிக்கும் முதலைகளை எதிர்க்கிறோம் என்ற கோஷங்களுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் மூன்று மணி நேரங்கள் நீடித்ததாக ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.
இந்த இடிபாடுகளால் கோவிலில் வைக்கப்பட்டிருந்த விவிலியம் மற்றும் பிற வழிபாட்டுப் பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளன என்று பாகிஸ்தான் கத்தோலிக்க ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுவின் தலைவர் அருள்தந்தை Emmanuel Yousaf Mani, கூறினார்.
லாகூர் பிறரன்பு சங்கம் 1887ம் ஆண்டு அனைத்து அரசு விதி முறைகளுடன் வாங்கிய அந்த நிலத்தின் பத்திரங்களை அருள்தந்தை Mani செய்தியாளர்களிடம் காண்பித்தார்.
சட்டத்திற்குப் புறம்பான வழியில், எவ்வித அதிகாரமும் இல்லாமல் அரசு அதிகாரிகளே நிலங்களை பறிப்பதற்கு மேற்கொண்ட இந்த செயல்பாடு, பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மீது அரசு காட்டும் அக்கறையின்மையின் மற்றொரு வெளிப்பாடு என்று தல கத்தோலிக்கத் திருஅவை வெளியிட்ட ஓர் அறிக்கை கூறுகிறது.


6. கந்தமால் வன்முறைகளுக்கு ஒடிசா மாநில அரசும் உடந்தை

சன.12,2012. ஒடிசாவின் கந்தமால் பகுதியில் 2007ம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளுக்கு ஒடிசா மாநில அரசும் உடந்தையாக இருந்தது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் கூறினார்.
கந்தமால் கலவரங்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ள நீதிபதி சரத் சந்திர மோகபத்ரா ஆய்வுக் குழுவின் முன் இத்திங்களன்று பேசிய ஒடிசாவின் முன்னாள் நீதித் துறை அமைச்சர் நரசிங்க மிஷ்ரா, கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் நடப்பதை ஒடிசா அரசு தடுப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறினார்.
இந்த ஆய்வுக் குழுவின் முன் தான் இன்னும் அதிக தகவல்களைச் சமர்பிக்க முடியும் என்று மிஷ்ரா கூறியதால், இந்த விசாரணை மார்ச் மாதம் வரை ஒத்தி வைக்கப் பட்டுள்ளது என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
நரசிங்க மிஷ்ராவைப் போன்ற ஓர் உயர் அரசியல் தலைவர் இவ்வாறு கூறியிருப்பது வன்முறைகளைத் தாங்கிவரும் கிறிஸ்தவர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது என்றும், இந்த வாக்குமூலம் அரசின் தரப்பில் ஆய்வு மேற்கொண்டுள்ள குழுவின் மீது தாக்கங்களை உருவாக்கும் என்றும் கட்டக் புபனேஸ்வர் உயர்மறைமாவட்டத்தின் சமுதாயப் பணி இயக்குனர் அருள்தந்தை மனோஜ் குமார் நாயக் கூறினார்.


7. ஒவ்வொரு நாடும் முன்னேற்றப் பாதையைப் பற்றிய தெளிவான முடிவுகளை எடுக்கவேண்டும் - ஐ.நா.பொதுச் செயலர்

சன.12,2012. இந்த ஆண்டு ஜூன் மாதம் ரியோ நகரில் நடைபெற உள்ள Rio+20 என்ற அனைத்துலக உச்சி மாநாட்டிற்கு முன்னர் ஒவ்வொரு நாடும் தொடர்ந்து செயலாற்றக்கூடிய முன்னேற்றப் பாதையைப் பற்றிய தெளிவான முடிவுகளை எடுக்கவேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டார்.
வளரும் நாடுகள் G-77 என்ற பெயரில் இணைக்கப்பட்டுள்ள 130 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் சீனப் பிரதிநிதி ஆகியோர் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் இப்புதனன்று பேசிய பான் கி மூன், ஜூன் மாதம் ரியோ நகரில் நடைபெற உள்ள உச்சி மாநாட்டின் முக்கியத்துவம் பற்றி மீண்டும் நினைவு படுத்தினார்.
1964ம் ஆண்டு 77 நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட G-77 என்ற உலகளாவிய இந்த அமைப்பில் தற்போது 130 நாடுகள் உள்ளன. இது ஐ.நா.வின் அங்கத்தினர் நாடுகளில் இரண்டில் ஒரு பங்கு என்றும், இந்நாடுகளில் உள்ள மக்கள்தொகை உலக மக்கள்தொகையில் 60 விழுக்காடு என்றும் கணிக்கப்படுகிறது.
மில்லேன்னிய இலக்குகளை அடைதல் என்ற திட்டங்களின் ஒரு பகுதியாக விளங்கும் வறுமை ஒழிப்பு என்ற திட்டத்தில் G-77 நாடுகள் அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் இன்னும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பான் கி மூன் கேட்டுக் கொண்டார்.
மில்லேன்னிய இலக்குகளை அடைவதற்கு உலக சமுதாயம் வகுத்துள்ள 2015 என்ற காலக்கெடு நெருங்கி வரும் சூழலில், இந்த இலக்குகள் அனைத்தையும் அடைவதற்கு உலக நாடுகள் இன்னும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் ஐ.நா.பொதுச் செயலர் வலியுறுத்தினார்.


8. அறிவியல்: இருண்ட பொருள் வரைபடம் தயார்

சன.12,2012. யுனிவர்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பிரபஞ்சம் அல்லது பேரண்டத்தில் பெரும்பகுதியாக இருப்பதுடார்க் மேட்டர் என்கிற விவரிக்கமுடியாத இருண்ட பொருள்.
நம் கண்களால் சாதாரணமாக பார்க்கமுடியாத இந்த இருண்டபொருள் குறித்து அறிவியல் உலகில் நீண்டநாட்களாகவே அறியப்பட்டிருந்தாலும், பேரண்டத்தில் இந்த விவரிக்க முடியாத இருண்ட பொருள் எவ்வளவு தூரம் பரவியிருக்கிறது, பேரண்டத்தின் எந்தெந்த பகுதிகளில் இந்த இருண்டபொருள் காணப்படுகிறது என்பது குறித்த வரைபடம் எதுவும் இதுவரை தயாரிக்கப்படவில்லை.
அப்படியானதொரு வரைபடம் தயாரிப்பதில் வானியல் அறிவியலாளர்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருப்பதாக அமெரிக்காவின் ஹூஸ்டனில் இவ்வியாழனன்று நிறைவுற்ற 219வது வானிலை ஆய்வு பற்றிய கருத்தரங்கில் அறிவித்திருக்கிறார்கள்.
அமெரிக்க வானியல் ஆய்வு மையத்தின் ஆய்வாளர்கள் இத்தகைய வரைபடம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். இது விவரிக்கமுடியாத இருண்ட பொருள் குறித்த முழுமையான வரைபடம் இல்லை என்றாலும், விவரிக்க முடியாத இருண்ட பொருள் குறித்து இதுவரை தொகுக்கப்பட்ட வரைபடங்களிலேயே இது தான் பெரிய வரைபடமாக கருதப்படுகிறது.
இதில் ஆர்வம்தரும் தகவல் என்னவெனில் பிரபஞ்சத்தின் மிகச்சிறியதொரு பகுதியைத்தான் இவர்கள் அடையாளம் கண்டிருக்கிறார்கள். அதாவது நூறுகோடி ஆண்டுகள் ஒளி பயணிக்கக்கூடிய தூரத்தில் இருக்கும் வானத்தில் இருக்கும் இருண்டபொருளைத்தான் இவர்கள் தற்போது அடையாளம் கண்டிருக்கிறார்கள்.
இவர்கள் பார்த்த இந்த குறிப்பிட்ட பேரண்டத்தின் ஒரு பகுதியில், ‘கேலக்ஸிஸ் எனப்படும் அண்டங்களை சுற்றி இந்த விவரிக்கமுடியாத இருண்ட பொருளானது சங்கிலித்தொடராக காணப்படுவதாகவும், பிறகு திடீரென ஒன்றுமே இல்லாத வெற்றிடத்தில் இது சென்று முடிவதாகவும் இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
 

1 comment:

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...