Thursday, 5 January 2012

கத்தோலிக்க செய்திகள்: 03 ஜனவரி 2012

 
1. நோயாளிகளும் வயதானவர்களும் திருநற்கருணையை அடிக்கடிப் பெறுவதற்கு வாய்ப்புக்கள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும், திருத்தந்தை வலியுறுத்தல்

2. மதவன்முறைகளைக் கட்டுப்படுத்தும் சட்டம் எந்த ஒரு குடியரசுக்கும் மிகவும் முக்கியம் - இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை

3. இந்த ஆண்டிலாவது ஒரிஸ்ஸா கிறிஸ்தவர்களுக்கு தகுந்த நீதி கிடைக்க வேண்டும் - அனைத்திந்திய கிறிஸ்தவ அவை

4. பிலிப்பீன்சில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருஅவை சார்பில் 1000 வீடுகள்

5. வன்முறைகள் களையப்பட வெனிசுவேலா கர்தினால், நாட்டு மக்களுக்கு அழைப்பு

6. அயர்லாந்து வளர்ச்சிக்கு திருஅவை ஆற்றியுள்ள பங்கு மிக முக்கியமானது -  Dublin பேராயர்

7. பிரேசில் நாட்டில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள்

8. ஈராக்கில் இதுவரை நடந்த தாக்குதல்களில் 1,62,000 பேர் உயிரிழப்பு

------------------------------------------------------------------------------------------------------
1. நோயாளிகளும் வயதானவர்களும் திருநற்கருணையை அடிக்கடிப் பெறுவதற்கு வாய்ப்புக்கள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும், திருத்தந்தை வலியுறுத்தல்

சன.03,2012. உடல்நலம் அல்லது வயது காரணமாக வழிப்பாட்டுத்தலங்களுக்குச் செல்ல இயலாதவர்கள், திருநற்கருணையை அடிக்கடிப் பெறுவதற்கு வாய்ப்புக்களை அமைத்துக் கொடுப்பதில் உலகளாவியத் திருஅவையும் பங்குச் சமூகங்களும் சிறப்புக் கவனம் செலுத்துமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வலியுறுத்தியுள்ளார்.
உடல்நலமில்லாதவர்களும் முதியவர்களும் தங்களது வாழ்க்கையைக் கிறிஸ்துவின் அன்புக்காக அர்ப்பணிப்பதன் வழியாக கிறிஸ்துவோடு தங்களுக்குள்ள உறவை உறுதிப்படுத்துவதற்கு இதன்மூலம் வாய்ப்பைப் பெறுகிறார்கள் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார். 
இதனாலே மருத்துவமனைகளிலும் முதியோர் இல்லங்களிலும் பணிசெய்யும் குருக்கள், நோயாளரின் திருப்பணியாளர்கள் என்று உண்மையிலேயே உணருவது முக்கியம் எனவும் அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
வருகிற பிப்ரவரி 11ம் தேதி லூர்து அன்னை திருவிழாவன்று திருஅவையில் சிறப்பிக்கப்படும் 20வது அனைத்துலக நோயாளர் தினத்திற்கென இச்செவ்வாயன்று வெளியிடப்பட்ட திருத்தந்தையின் செய்தியில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது”(லூக்.17:19) என்ற தலைப்பில் சிறப்பிக்கப்படவிருக்கின்ற இந்த 20வது அனைத்துலக நோயாளர் தினம், இவ்வாண்டு அக்டோபர் 11ம் தேதி தொடங்கவிருக்கும் அனைத்துலக விசுவாச ஆண்டின் மையப் பொருளை மீண்டும் கண்டுணரக்கூடியதாகவும் இருக்கின்றது என்றும் திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.
ஒருவர் குணமடைவதற்கு, குணமாக்கும் திருவருட்சாதனங்கள் குறித்த முக்கியத்துவத்தையும் விவரித்துள்ள திருத்தந்தை, ஒப்புரவு திருவருட்சாதனம், நோயில் பூசுதல் திருவருட்சாதனம், திருநற்கருணை திருவருட்சாதனம் ஆகிய மூன்றும் ஒருவர் உடலிலும் உள்ளத்திலும் குணமடைய உதவுவன என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
நல்ல சமாரித்தன் என்ற தலைப்பில் 2013ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி ஜெர்மனியில் வெகு ஆடம்பரமாக நடைபெறவிருக்கும் அனைத்துலக நோயாளர் தினம் பற்றியும் இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.


2. மதவன்முறைகளைக் கட்டுப்படுத்தும் சட்டம் எந்த ஒரு குடியரசுக்கும் மிகவும் முக்கியம் - இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை

சன.03,2012. மதவன்முறைகளைக் கட்டுப்படுத்தும் சட்டம் ஒன்று அமைவது எந்த ஒரு குடியரசுக்கும் மிகவும் முக்கியம் என்று இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை கூறியுள்ளது.
புது டில்லியில் தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மத வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் சட்ட வரைவு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாமல் இருப்பது குறித்து தங்கள் கவலையை வெளியிட்ட கத்தோலிக்க ஆயர் பேரவை இவ்வாறு கூறியது.
சோனியா காந்தியின் தலைமையில் இயங்கும் நாட்டு ஆலோசனை அவையினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த சட்ட வரைவு, நாட்டின் எந்த மாநிலத்திலும் நடைபெறும் மத வன்முறைகளை, மாநில அரசுகளின் அழைப்பு இல்லாமலேயே மத்திய அரசு கட்டுப்படுத்த தேவையான அதிகாரம் வழங்கும் அம்சங்களைப் பரிந்துரைக்கிறது.
2003ம் ஆண்டு குஜராத்தில் இஸ்லாமியருக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளும் 2008ம் ஆண்டில் ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளும் இந்த சட்ட வரைவைப் பரிந்துரைக்க காரணமாய் இருந்தன என்று சொல்லப்படுகிறது.
எதிர்கட்சிகளும், மற்ற சமுதாய அமைப்புக்களும் இந்த சட்ட வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.


3. இந்த ஆண்டிலாவது ஒரிஸ்ஸா கிறிஸ்தவர்களுக்கு தகுந்த நீதி கிடைக்க வேண்டும் - அனைத்திந்திய கிறிஸ்தவ அவை

சன.03,2012. வன்முறைகளுக்கு உள்ளான கிறிஸ்தவர்களுக்கு புலர்ந்திருக்கும் இந்த ஆண்டிலாவது தகுந்த நீதி கிடைக்க வேண்டும் என்று ஒரிஸ்ஸாவில் வாழும் கிறிஸ்தவர்கள் கூறியுள்ளனர்.
புத்தாண்டையொட்டி புபனேஸ்வரில் கூடி வந்த அனைத்திந்திய கிறிஸ்தவ அவை, கிறிஸ்தவர்கள் அரசிடம் சமர்ப்பித்த 3500க்கும் அதிகமான முறையீடுகளில் அரசு இதுவரை 68 வழக்குகளுக்கே தீர்வு வழங்கியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது.
அனைத்திந்திய கிறிஸ்தவ அவை, FIDES செய்தி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள புள்ளி விவரங்களின்படி, கிறிஸ்தவர்கள் சமர்ப்பித்த ஆயிரக்கணக்கான முறையீடுகளில் காவல் துறையினர் 827 புகார்களை ஏற்றுக்கொண்டனர் என்றும், அவற்றில் 68 வழக்குகளில் 412 பேர் மட்டுமே குறைந்தபட்சம் தண்டனை பெற்றுள்ளனர், மற்றும் 1900க்கும் அதிகமானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்த வன்முறைகள் நிகழ்ந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டாலும், ஒரிஸ்ஸாவில் வாழும் 56,000 கிறிஸ்தவர்களுக்கு இன்னும் பாதுகாப்பும், நல் வாழ்வும் அமையவில்லை என்று அனைத்திந்திய கிறிஸ்தவ அவையின் பொதுச் செயலர் ஜான் தயாள் கூறினார்.
2008ம் ஆண்டு நடைபெற்ற வன்முறைகளுக்கு சாட்சிகளாய் இருப்பவர்களைப் பாதுகாத்து வந்த Rabindra Parichha என்ற கத்தோலிக்கத் தலைவர் அண்மையில் கொல்லப்பட்டது அங்கு நிலவும் பாதுகாப்பற்றச் சூழலை விளக்குகிறது என்று FIDES செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


4. பிலிப்பீன்சில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருஅவை சார்பில் 1000 வீடுகள்

சன.03,2012. பிலிப்பீன்ஸ் நாட்டின் அண்மை வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் நோக்கில் திட்டங்களைத் தீட்டி, செயல்படுத்தி வருவதாக அந்நாட்டு ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.
1200க்கும் மேற்பட்டோரைப் பலிவாங்கிபல ஆயிரக்கணக்கானோரைக் குடிபெயர்ந்தவர்களாக மாற்றிய அண்மை வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறைவிடங்களைக் கட்டித்தர கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பிடம் 16 இலட்சம் டாலருக்கான விண்ணப்பத்தை முன்வைத்துள்ளதாக கூறினார் தலத்திருஅவை அதிகாரி குரு Edwin Gariguez.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைத் தலத்திருஅவை தொடர்ந்து வழங்கி வருவதாகவும், அவர்களுக்கான உறைவிடங்களைக் கட்டும் பணி பிப்ரவரி மத்தியில் துவங்கும் எனவும் கூறினார் அவர்.
தற்காலிக முகாம்களில் வாழும் மக்களுக்கு நிரந்தர தங்குமிடங்களைக் கட்டிக் கொடுப்பதே தலத்திருஅவையின் தற்போதைய முதல் திட்டம் எனவும் உரைத்தார் குரு Gariguez.
இதற்கிடையே, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 200 புதிய வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் திட்டத்தை, இயேசு சபையினரால் நடத்தப்படும் மணிலா அத்தனேயோ பல்கலைக் கழகம்  அறிவித்துள்ளது.


5. வன்முறைகள் களையப்பட வெனிசுவேலா கர்தினால், நாட்டு மக்களுக்கு அழைப்பு

சன.03,2012. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 623 உயிரிழப்புகளுக்குக் காரணமாகியுள்ள வன்முறைகளைக் கைவிட்டு, அமைதிக்காக ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் வெனிசுவேலா கர்தினால் Jorge Urosa Savino.
ஆண்டின் இறுதி 15 நாட்களில் வெனிசுவேலா நாட்டில் வன்முறையால் இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என கவலையை வெளியிட்ட கர்தினால், அந்நாட்டு மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளுதல் மற்றும் சகிப்புத்தன்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாழவேண்டும் என்றார்.
ஒரே மாதத்தில் 623 பேர் வன்முறைக்குப் பலியாகியுள்ளது மிகுந்த வேதனை தருவதாக உள்ளது என்ற கர்தினால் Urosa Savino, பாதுகாப்பற்ற உணர்வுகளை அகற்றவும் வன்முறைகளைக் களையவும் அரசு அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் விண்ணப்பித்தார்.


6. அயர்லாந்து வளர்ச்சிக்கு திருஅவை ஆற்றியுள்ள பங்கு மிக முக்கியமானது -  Dublin பேராயர்

சன.03,2012. பொது வாழ்வில் மதத்தின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கும்போது, விசுவாசத்தை கேலிக்கண்ணோட்டத்துடன் நோக்கும் போக்கு மாறவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் அயர்லாந்தின் Dublin பேராயர் Diarmuid Martin.
அயர்லாந்து கலாச்சாரத்தின் மீது தன் பெருமளவான பாதிப்பைக்கொண்டிருந்த திரு அவை, தற்போது அதனை இழந்து வருகின்றது என்ற பேராயர், மத பாதிப்புகள் குறித்த கருத்தரையாடல்கள் நியாயமானவைகளே எனினும், அவை அனைத்தும் சமூகத்தில் திருஅவையின் பங்கைத் தெளிவாக உணர்ந்த நிலையில் இடம்பெற வேண்டும் என்றார்.
மத நம்பிக்கைகளை சமூகத்தில் கட்டாயமாகப் புகுத்தும் முயற்சிகள் தடைச் செய்யப்படவேண்டும் எனவும் விண்ணப்பித்தார் பேராயர் Diarmuid Martin.
திருஅவையின் தனியார்களும் திருஅவையும் அயர்லாந்து நாட்டின் வளர்ச்சிக்கும் சமூகக் கலாச்சாரத்திற்கும் ஆற்றியுள்ள பங்கு மிக முக்கியமானது என்பதையும் கோடிட்டுக் காட்டினார் பேராயர்.


7. பிரேசில் நாட்டில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள்

சன.03,2012. குழந்தைகள் சுரண்டப்படுவதற்கு எதிரான சட்டங்கள் பிரேசில் நாட்டில் நடைமுறையில் இருக்கின்ற போதிலும், அந்நாட்டில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
10 வயதிற்கும் 14 வயதிற்கும் இடைப்பட்ட குழந்தைகள் பணியில் அமர்த்தப்படுவது அரசின் தடைகளையும் மீறி இன்னும் தொடர்வதாகக் கூறும் இந்த ஆய்வறிக்கை, பிரேசில் நாட்டின் அமேசான் பகுதி தொழிலாளர்களுள் 10 விழுக்காட்டினர் குழந்தைகள் எனவும் கூறுகிறது.
வீடுகளில் மற்றும் சிறு பண்ணைகளில் பணியில் அமர்த்தப்படும் சிறார்கள் குறித்த புள்ளி விவரங்களைத் திரட்டுவது சிரமமாக உள்ளதால், குழந்தைத் தொழிலாளர்களின் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் எனக்கூறும் இவ்வறிக்கை, 2020ம் ஆண்டிற்குள் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என்ற அரசின் திட்டம் வெற்றி பெறுவதற்கு மேலும் அதிக அளவிலான முயற்சிகள் தேவைப்படுவதாகவும் கூறுகிறது.


8. ஈராக்கில் இதுவரை நடந்த தாக்குதல்களில் 1,62,000 பேர் உயிரிழப்பு

சன.03,2012. ஈராக்கில் கடந்த 8 ஆண்டுகளில் 1 இலட்சத்து 62 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சி வீழ்த்தப்பட்ட பின் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்கப் படைகளும் விலக்கி கொள்ளப்பட்டு வருவதால் குண்டுவெடிப்புகள் தினசரி நிகழ்வுகளாகி விட்டதாக கவலையும் வெளியிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஐ.பி.சி எனப்படும் அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், ஈராக்கில் நடந்த பல்வேறு குண்‌டுவெடிப்பு மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்களில் கடந்த 2003ம் ஆண்டிலிருந்து இதுவரை 1 இலட்சத்து 62 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் என தெரியவந்துள்ளது.
இவர்களில் 90 சதவீதம் பேர் அப்பாவி மக்கள் எனவும், மீதமுள்ளவர்கள் பாதுகாப்புப்படையினர் எனவும், கடந்த 2008-2009ம் ஆண்டுகளில்தான் அதிக எண்ணிக்கையிலான உயிர்பலி ஏற்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...