Monday, 2 January 2012

கத்தோலிக்க செய்திகள்: 02 ஜனவரி 2012

 
1. திருத்தந்தை: நீதியிலும் அமைதியிலும் இளைய தலைமுறையினரை வளர்க்கும் பொறுப்பு குடும்பங்களில் ஆரம்பமாகிறது

2. புத்தாண்டின் முதல் நாளன்று திருத்தந்தை வழங்கிய மூவேளை செபஉரை

3. ஆண்டின் இறுதிநாள் மாலைத் திருவழிபாட்டில் திருத்தந்தை வழங்கிய சிந்தனைகள்

4. கத்தோலிக்க மதத்தில் இணைய விரும்பும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் பிற கிறிஸ்தவ சபையினருக்கென புதிய அமைப்பு

5. கிறிஸ்தவர்களுக்கு மானிய உதவி வழங்க உள்ள தமிழக முதல்வருக்கு நன்றி

6. ஆண்டிறுதியில் கர்நாடக மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நான்கு தாக்குதல்கள்

7. தென் சூடானில் அமைதி காப்புத்துருப்புகளை நிறுத்துதியுள்ளது ஐநா அமைப்பு

8. 2012ல் ஐந்து லட்சம் வேலை வாய்ப்பு உருவாகும் என நிபுணர்கள் கணிப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை: நீதியிலும் அமைதியிலும் இளைய தலைமுறையினரை வளர்க்கும் பொறுப்பு குடும்பங்களில் ஆரம்பமாகிறது

சன.02,2012. நீதியிலும் அமைதியிலும் இளைய தலைமுறையினரை வளர்க்கும் பொறுப்பு, குடும்பங்களில் ஆரம்பமாகி, பின்னர் பள்ளிகளிலும், இளையோரை நெறிப்படுத்தும் பல்வேறு அமைப்புக்களிலும் இருக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
நீதியிலும் அமைதியிலும் இளையோருக்கு கல்வி புகட்டுவது என்ற மையக் கருத்தில் 45வது உலக அமைதி நாளுக்கென தான் ஏற்கனவே வழங்கியிருந்த செய்தியை மையப்படுத்தி, புத்தாண்டின் முதல் திருப்பலியை நிறைவேற்றுகையில் தன் மறையுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
புலர்ந்திருக்கும் புத்தாண்டின் முதல் திருப்பலியை வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் நிறைவேற்றிய திருத்தந்தை, உண்மை என்பது பல வழிகளிலும் மறைக்கப்பட்டு வரும் இவ்வுலகில் இளையோருக்கு உண்மையை வழங்கும் பொறுப்பு முதியோராகிய நமக்கு அதிகம் உள்ளது என்று எடுத்துரைத்தார்.
அமைதியாக வாழ்வது என்பது இளையோர் சுயமாக விரும்பும் ஒரு நல்ல பண்பு; ஆயினும், உலகின் பல்வேறு எதிர்மறை சக்திகள் இளையோருக்கு அமைதிப் பாதையைக் காட்டத் தவறுவதால், அவர்கள் வன்முறைகளில் ஈடுபடவும் தூண்டுகின்றன என்று கூறியத் திருத்தந்தை, “பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்: நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும்: விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். என்ற 84வது திருப்பாடலின் வரிகளை மேற்கோள் காட்டி, வானின்று வரும் அமைதியையும், நீதியையும் இளையோரின் கவனத்திற்குக் கொண்டு வருவது நமது கடமை என்று கூறினார்.
புத்தாண்டின் முதல் நாளன்று திருத்தந்தை ஆற்றிய திருப்பலியில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்த்தோனே, திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் உட்பட பல திருப்பீட அதிகாரிகளும், பன்னாட்டு தூதர்களும் கலந்து கொண்டனர்.


2. புத்தாண்டின் முதல் நாளன்று திருத்தந்தை வழங்கிய மூவேளை செபஉரை 

சன.02,2012. அன்னை மரியாவின் வழியாகவும், குழந்தை இயேசுவின் முகத்திலும் இறைவனின் முகத்தைக் கண்டு, புலர்ந்திருக்கும் 2012ம் ஆண்டை நாம் துவக்குகிறோம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
புதிய ஆண்டின் முதல் நாளன்று புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இவ்வாண்டின் முதல் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை, சனவரி முதல் நாளன்று கொண்டாடப்படும் மரியா, இறைவனின் தாய் என்ற திருநாளைக் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்தார்.
45வது உலக அமைதி நாளுக்கென்று செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை, அச்செய்தியில் வலியுறுத்தியுள்ள இளையோர் குறித்த தன் கருத்துக்களை மக்களுக்கு மீண்டும் இம்மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார்.
கல்வி, வேலைதேடுதல், வாழ்க்கைத்துணையைத் தேர்தல், குடும்பம் அமைத்தல் என்று வாழ்வின் முக்கியமான முடிவுகளில் சரியான பாதையைத் தேடும் இளையோருக்கு அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் ஆகிய அனைத்து அமைப்புக்களும் சரியான வழியைக் காட்ட வேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.
நீதியையும், அமைதியையும் உலகில் நிலை நிறுத்துவது மிகப் பெரிய சவால் என்று சுட்டிக் காட்டியத் திருத்தந்தை, அமைதி என்பது ஒரு நாளில் அடையக்கூடிய ஓர் இலக்கு அல்ல என்றும், தொடர்ந்து நாம் மேற்கொள்ள வேண்டிய ஒரு சவாலான பயணம் என்றும் திருத்தந்தை கூறினார்.
கிறிஸ்மஸ் காலத்தில் நாம் கொண்டாடும் அமைதியின் அரசர் மற்றும், அவரது தாய் நம் உலகத் தலைவர்கள் அனைவரையும் அமைதி மற்றும் நீதியின் பாதையில் வழிநடத்த வேண்டும் என்ற செபத்துடன் தன் மூவேளை உரையை நிறைவு செய்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கூடியிருந்தோர் அனைவருக்கும் தன் சிறப்பான ஆசீரையும் வழங்கினார்.


3. ஆண்டின் இறுதிநாள் மாலைத் திருவழிபாட்டில் திருத்தந்தை வழங்கிய சிந்தனைகள்

சன.02,2012. ஒவ்வோர் ஆண்டும் நம்மைக் கடந்து செல்லும்போது, மறுமுறை வரமுடியாத வண்ணம் காலம் கடந்துவிட்டதே என்ற கவலை நம்மைச் சூழ்ந்தாலும், கடவுளின் அன்பில் நாம் வாழ்கிறோம் என்ற உறுதி அனைத்து கவலைகளையும் போக்கிவிடும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
சனிக்கிழமை மாலை “Te Deum” என்ற நன்றிப்பாடல் இசைக்கும் ஆண்டின் இறுதிநாள் மாலைத் திருவழிபாட்டை நடத்தியத் திருத்தந்தை, கடந்து செல்லும் ஆண்டையும், எதிர்வரும் ஆண்டையும் குறித்து தன் சிந்தனைகளை மறையுரையாக வழங்கினார்.
நிலையற்ற வாழ்வை நினைவுறுத்தும் காலத்தைப் பற்றி சிந்திக்க புதிய ஆண்டின் வாசலில் இருக்கும் நமக்கு ஒரு வாய்ப்பு தரப்பட்டுள்ளது என்று சுட்டிக் காட்டியத் திருத்தந்தை, நிலையான கடவுளின் முகத்தைக் காணும்போது, காலத்தின் நிலையாமை பற்றிய கவலைகள் நம்மிடம் இருந்து விடை பெறுகின்றன என்று தெளிவுபடுத்தினார்.
“Te Deum” என்று நாம் பாடும் இந்தப் பாரம்பரியப் பாடல் இறைவனின் பராமரிப்பில் நம்பிக்கை கொண்ட பல கோடி மக்கள் பல நூற்றாண்டுகளாய் பாடி வந்த ஒரு பாடல் என்பதை கூறியத் திருத்தந்தை, இப்பாடலைப் பாடுவதன் மூலம் நமது நன்றியை இறைவனுக்குக் கூறுவதுடன், நம் வாழ்வையும் அவர் பராமரிப்பில் ஒப்படைக்கிறோம் என்பதை எடுத்துரைத்தார்.


4. கத்தோலிக்க மதத்தில் இணைய விரும்பும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் பிற கிறிஸ்தவ சபையினருக்கென புதிய அமைப்பு

சன.02,2012. கத்தோலிக்க மதத்தில் இணைய விரும்பும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆங்கிலிக்கன் மற்றும் எப்பிஸ்கோபல் கிறிஸ்தவ சபையினருக்கு உதவுவதற்கென மறைமாவட்டத்தையொத்த ஓர் அமைப்பு முறையை இஞ்ஞாயிறன்று உருவாக்கியுள்ளது திருப்பீடம்.
எப்பிஸ்கோப்ப‌ல் கிறிஸ்தவ சபையின் முன்னாள் ஆயர், குரு Jeffrey Neil Steensonஐ அவ்வ‌மைப்பினை வ‌ழிந‌ட‌த்துப‌வ‌ராக‌வும் அறிவித்த‌ திருப்பீட‌ம், இவ்வ‌மைப்பு டெக்ச‌ஸ் மாநில‌த்திலிருந்து செய‌ல்ப‌ட்டாலும், தேசிய‌ அள‌வில் அதிகார‌த்தைக் கொண்டுள்ளதாக‌ இருக்கும் என‌வும் தெரிவித்த‌து.
க‌டந்த‌ ஆண்டு இத்த‌கைய‌ ஓர் அமைப்பு முறையை இங்கிலாந்தில் உருவாக்கிய‌ திருப்பீடம், த‌ற்போது அமெரிக்க‌ ஐக்கிய‌ நாட்டிலும் இத்த‌கைய‌ ஓர் அமைப்பை உருவாக்கியுள்ள‌த‌ன் மூல‌ம் ஆங்கிலிக்க‌ன் ம‌ற்றும் எப்போபிஸ்கோப்ப‌ல் கிறிஸ்த‌வ‌ ச‌பைக‌ளிலிருந்து க‌த்தோலிக்க‌த்தில் சேர‌ விரும்புப‌வ‌ர்க‌ளுக்கு வ‌ழி அமைத்துள்ள‌து.
த‌ற்போது இவ்வ‌மைப்பை வ‌ழிந‌ட‌த்துப‌வ‌ராக‌ திருப்பீட‌த்தால் நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ குரு Neil Steenson, 2007ம் ஆண்டுவரை எப்பிஸ்கோப்பல் கிறிஸ்தவ சபையில் ஆயராகப் பணியாற்றிய பின் அதிலிருந்து விலகி கத்தோலிக்கத் திருஅவையில் இணைந்தார். திருமணம் புரிந்து 3 குழந்தைகளுக்குத் தந்தையான இவர், 2009ம் ஆண்டு கத்தோலிக்கத் திருஅவையில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.


5. கிறிஸ்தவர்களுக்கு மானிய உதவி வழங்க உள்ள தமிழக முதல்வருக்கு நன்றி

சன.02,2012. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தமிழக முதல்வர், எருசலம் செல்லும் கிறிஸ்தவர்களுக்கு மானிய உதவி கிடைக்கும் என்றும் முதற்கட்டமாக, 500 பேருக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளதற்கு இந்திய கத்தோலிக்கத் திருஅவை சார்பில், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் நிருபர்களிடம் கூறினார்.
வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா ஆலயம் பசிலிக்காவாக உயர்த்தப்பட்டதன் 50 ஆண்டு நிறைவை முன்னிட்டு, பத்திரிகையாளர்களைச் சந்தித்த  தஞ்சை ஆயர், கீழ்த்திசையின் லூர்து என்ற சிறப்பு பெற்ற வேளாங்கண்ணி ஆலயத்தின் சிறப்பு பற்றி எடுத்துரைத்ததோடு, கிறஸ்தவர்களுக்கு மான்ய உதவி வழங்க முன் வந்திருக்கும் தமிழக முதல்வருக்கு நன்றியையும் தெரிவித்தார்.
இதற்கிடையே, வேளாங்கண்ணி பசிலிக்கா சார்பில் அனைத்து மத நல்லிணக்க விழாக்கள் இலவசத் திருமணங்கள், மற்றும் எளியோருக்கு உதவிகள் இடம்பெற உள்ளன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


6. ஆண்டிறுதியில் கர்நாடக மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நான்கு தாக்குதல்கள்

சன.02,2012. கிறிஸ்மஸ் காலத்தில் கர்நாடகா மாநிலத்தில் இடம்பெற்ற நான்கு தாக்குதல்களும், மத அடிப்படைவாதிகள் மனித மாண்பை மதிக்காதப் போக்கைக் காண்பிக்கும் அதேவேளை, அம்மாநில அரசு தன் மௌனம் மூலம் இசைவு அளிப்பதையும் வெளிப்படுத்துகிறது என்றார் இந்திய கிறிஸ்தவர்களின் உலக அவை தலைவர் Sajan George.
கிறிஸ்மஸ் நாளன்று ஒரு தாக்குதலும் 28ம் தேதி மேலும் மூன்று தாக்குதல்களும் கிறிஸ்தவர்கள் மீது இந்து அடிப்படைவாதக் குழுக்களால் நடத்தப்பட்டுள்ளது பற்றி க‌வலையை வெளியிட்ட ஜார்ஜ், 2011ம் ஆண்டில் கர்நாடக மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 49 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள‌ன எனவும் கூறினார்.
கிறிஸ்தவர்களின் வீடுகளுக்குள் புகுந்து அவர்களின் உடமைகளை சேதப்படுத்தியுள்ளதுடன், உடலளவிலும் தாக்கியுள்ள இச்செயல்களில் ஈடுபட்டுள்ளோர் எவ்வித தண்டனையும் இன்றி தப்ப அனுமதிப்பது, மேலும் தாக்குதல்களுக்கு ஊக்கமளிப்பதாகவே இருக்கும் என மேலும் தெரிவித்துள்ளார் இந்திய கிறிஸ்தவர்களின் உலக அவை தலைவர் Sajan George.


7. தென் சூடானில் அமைதி காப்புத்துருப்புகளை நிறுத்துதியுள்ளது ஐநா அமைப்பு

சன.02,2012. தென் சூடானில் ஆயுதம் ஏந்திய கும்பலின் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் Pibor நகர் மக்களைக் காப்பாற்ற அமைதிகாப்புத் துருப்புகளை நிறுத்தியுள்ளது ஐ.நா. அமைப்பு.
இந்நகரில் இரு பழங்குடி இனங்களிடையே இடம்பெறும் மோதல்களில் ஆயுதம் தாங்கிய ஏறத்தாழ 6,000 இளைஞர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக உரைத்த தென் சூடானுக்கான மனிதாபிமானப்பணிகளின் ஐ.நா. துணை ஒருங்கிணைப்பாளர் லிசே கிராந்தே, பொது மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் வந்துள்ள‌தாகவும் மக்களைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கட‌மை எனவும் தெரிவித்தார்.
வன்முறைகளைத் தடுத்து நிறுத்தவும், மக்களைக் காப்பாற்றுவதில் அரசுக்கு உதவவும் ஐ.நா. துருப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் கிராந்தே.


8. 2012ல் ஐந்து லட்சம் வேலை வாய்ப்பு உருவாகும் என நிபுணர்கள் கணிப்பு

சன.02,2012. இந்தியாவில் வேலை தேடுவோருக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கும் எனவும், புதிதாக ஐந்து இலட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் பொருளாதாரச் சூழ்நிலை மோசமாக இருந்ததாலும், நிலையற்றதன்மை நிலவியதாலும், இந்திய வேலை வாய்ப்புச் சந்தையில், கடந்த ஆண்டில், சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது எனக் கூறும் இந்திய நிபுணர்கள், இந்த ஆண்டில் வேலை வாய்ப்புகள்  உருவாவது தொடரும் எனவும், 2012ம் ஆண்டில் புதிதாக ஐந்து இலட்சம் ஊழியர்களை  நிறுவனங்கள் வேலைக்குச் சேர்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைத் துறைகளில் மட்டும் இந்த ஆண்டில் மூன்று இலட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...