Sunday, 18 December 2011

Catholic News - hottest and latest - 17 December 2011

1. திருத்தந்தை, நியுசிலாந்து-பசிபிக் ஆயர்கள் சந்திப்பு

2. திருத்தந்தையின் கியுபாவுக்கானத் திருப்பயணம், சிறப்பான அருள் தரும் தருணம் - ஹவானா கர்தினால்

3. கிறிஸ்மஸ் காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் இறைவன் பற்றிச் சிந்திக்க உதவுகின்றன இரஷ்யத் திருப்பீடத் தூதர்

4. சிரியாவின் அரசியல் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படுமாறு கத்தோலிக்கத் தலைவர்கள் வேண்டுகோள்

5. இரண்டாம் உலகப் போரின் போது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான கொரியப் பெண்களுக்கு நீதி கிடைக்க ஆயர்கள் வேண்டுகோள்

6. டிசம்பர் 18, அனைத்துலக குடியேற்றதாரர் தினம்

7. ஐ.நா.வின் அவசரகாலப் பணிகளுக்கு 375 மில்லியன் டாலர் உதவிக்கு நாடுகள் உறுதி

8. இணையதளத்தில் சிறார் பாலியல் குற்றச்செயல் தொடர்பாக 112 பேர் கைது

------------------------------------------------------------------------------------------------------
1. திருத்தந்தை, நியுசிலாந்து-பசிபிக் ஆயர்கள் சந்திப்பு

டிச.17,2011. உலகாயுதப் போக்கு அதிகமாகி வரும் சமூகங்களில், கிறிஸ்தவ விசுவாசத்தை உறுதியுடன் வாழ்வதற்குப் புதிய நற்செய்திஅறிவிப்புப் பணி உதவியாக இருக்கும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
நியுசிலாந்து மற்றும் பசிபிக் பகுதி ஆயர்களை, அட் லிமினா சந்திப்பையொட்டி இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, புதிய நற்செய்திஅறிவிப்புப் பணியை மனத்தில் வைத்தே விசுவாச ஆண்டு குறித்துத் தான் அண்மையில் அறிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
குருக்களின், சிறப்பாக, துன்பங்களை அனுபவிக்கின்ற மற்றும், பிற குருக்களுடன் சிறிதளவு தொடர்பைக் கொண்டுள்ள குருக்களின் புனித வாழ்க்கையில் அக்கறை காட்டுவது ஆயர்களின் முதன்மையான மேய்ப்புப்பணிக் கடமைகளில் ஒன்றாக இருக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
புனித வாழ்வு நோக்கிக் குருக்களை வழிநடத்துவதில் ஆயர்கள் தந்தையைப் போல் இருந்து செயல்படுமாறும் அவர் பரிந்துரைத்தார்.
ஞானமும் புனிதமும் கொண்ட நல்ல குருக்கள், சிறந்த இறையழைத்தல் ஊக்குனர்கள் என்பதை நாம் அறிந்துள்ளோம் என்றும், இக்காலத்தில் இளையோர், நம் ஆண்டவரின் விருப்பத்தைத் தேர்ந்து தெளிவதற்கு, அவர்களுக்கு மிகுந்த உதவிகள் தேவைப்படுகின்றன என்றும் திருத்தந்தை தனது உரையில் தெரிவித்தார்.
நியுசிலாந்து மற்றும் பசிபிக் பகுதியில் நற்செய்தியை பரப்பும் பணியில் மறைபோதகர்களும் வேதியர்களும் அதிகமாக ஈடுபட்டுள்ளதால், ஆயர்கள் அவர்களைத் தொடர்ந்து உற்சாகப்படுத்துமாறும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.


2. திருத்தந்தையின் கியுபாவுக்கானத் திருப்பயணம், சிறப்பான அருள் தரும் தருணம் - ஹவானா கர்தினால்

டிச.17,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கியுபாவுக்கு மேற்கொள்ளும் திருப்பயணம், அந்நாட்டுக்குச் சிறப்பான அருளை வழங்குவதாக இருக்கும் என்று ஹவானா கர்தினால் Jaime Ortega Alamino கூறினார்.
2012ம் ஆண்டு கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவுக்கு முன்னர் கியுபாவுக்கும் மெக்சிகோவுக்கும் தான் திருப்பயணம் மேற்கொள்வதாகத் திருத்தந்தை அறிவித்திருப்பதையொட்டி இவ்வாறு கூறினார் கர்தினால் Alamino.
திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களது திருப்பயணம் அமைந்தது போலவே, தற்போதைய திருத்தந்தையின் திருப்பயணமும் கியுபாவுக்கு ஆசீர்வாதங்களைக் கொண்டு வரும் என்று CNA செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார் ஹவானா திருத்தந்தை 2ம் ஜான் பால், கியுபாவுக்கு 1998ம் ஆண்டில் திருப்பயணம் மேற்கொண்டார்.
கியுபத் திருச்சபையின் முயற்சியினால், 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் அந்நாட்டில் 100க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு இஸ்பெயினுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


3. கிறிஸ்மஸ் காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் இறைவன் பற்றிச் சிந்திக்க உதவுகின்றன இரஷ்யத் திருப்பீடத் தூதர்

டிச.17,2011. உலக அளவில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள இந்தக் காலத்தில் கொண்டாடப்படும் கிறிஸ்மஸ், வெளியுலகச்  சோதனைகளின் மத்தியிலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை உணருவதற்கு வாய்ப்பாக இருக்கின்றது என்று இரஷ்யாவுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் Ivan Jurkovič கூறினார்.
கடந்த காலத்தின் நுகர்வுத்தன்மையைக் குறைப்பதற்கு, இவ்வாண்டு கிறிஸ்மஸ் காலம் வாய்ப்பை வழங்கியிருக்கின்றது என்று கூறிய பேராயர் Jurkovič, இருப்பதை, இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு   கிறிஸ்தவர்களுக்கு இருக்கும் பொறுப்புணர்வை இக்காலம் அதிகமாக நினைவுபடுத்துகின்றது என்றும் தெரிவித்தார்.
இரஷ்யாவுக்குத் திருப்பீடத் தூதராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்திருப்பதையொட்டி ஆசிய செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த பேராயர் Ivan Jurkovič, இவ்வாறு கூறினார்.
கிறிஸ்தவக் கோட்பாடுகளின் அடிப்படையில், மனித மாண்பையும் குடும்பத்தையும் பாதுகாப்பதை வலியுறுத்துவதற்கு, ஆர்த்தடாக்ஸ் சபையுடன் நல்லுறவை வளர்ப்பது உதவியாக இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.


4. சிரியாவின் அரசியல் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படுமாறு கத்தோலிக்கத் தலைவர்கள் வேண்டுகோள்

டிச.17,2011. சிரியாவில் இடம் பெறும் அரசியல் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படுமாறு அந்நாட்டின் கத்தோலிக்கத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிரியாவின் பிரச்சனைக்குத் தீர்வு காணுமாறு ஐக்கிய நாடுகள் நிறுவனத்தை இரஷ்யா வலியுறுத்தி வரும்வேளை, சிரிய ஆர்த்தடாக்ஸ், கிரேக்க ஆர்த்தாடாக்ஸ் மற்றும் சிரியாவின் மெல்க்கிதே கிரேக்கரீதி கத்தோலிக்க சபைகளின் முதுபெரும் தலைவர்கள், நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுள்ளனர். 
இதற்கிடையே, சிரியாவின் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கத்தில் ஐ.நா.பாதுகாப்பு அவையில் இரஷ்யா முன்வைத்த புதிய பரிந்துரையை சிரிய நாட்டு ஊடகங்கள் புறக்கணி்ததுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


5. இரண்டாம் உலகப் போரின் போது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான கொரியப் பெண்களுக்கு நீதி கிடைக்க ஆயர்கள் வேண்டுகோள்

டிச.17,2011. இரண்டாம் உலகப் போரின் போது பல்லாயிரக்கணக்கான கொரியப் பெண்கள், ஜப்பானியப் படைவீரர்களின் பாலியல் இன்பத்திற்குப் பயன்படுத்தப்பட்டது மனித சமுதாயத்திற்கு எதிரானப் பயங்கரமான குற்றம் என்று தென் கொரிய ஆயர்கள் குறை கூறினர்.
இந்தப் பாலியல் வன்செயலுக்கு எதிராக இப்புதனன்று சியோலில், ஜப்பான் தூதரகத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட ஆயிரமாவது வார எதிர்ப்புப் பேரணியையொட்டி அறிக்கை வெளியிட்ட தென் கொரிய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையம், இந்த வன்செயல் கடவுளுக்கு எதிரான நிந்தை என்றும் கண்டித்துள்ளது.
இந்தப் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்குமாறு, அடுத்து இடம் பெறவுள்ள கொரிய-ஜப்பான் உச்சி மாநாட்டில் வலியுறு்ததுமாறு தென் கொரிய அரசுத் தலைவர் Lee Myung-bak ஐக் கேட்டுள்ளது அந்த ஆணையம். 
இரண்டாம் உலகப் போரின் போது 11க்கும் 25 வயதுக்கும் உட்பட்ட சுமார் இரண்டு இலட்சம் கொரியப் பெண்கள், வசதி நிலையஙகள் என்ற இடங்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டு அங்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் இரவும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகினர். கொரியா சுதந்திரம் அடைந்த பின்னரும் சில பெண்கள் அரசின் புறக்கணிப்பால் அந்த நிலையங்களிலே விடப்பட்டனர் என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
இந்தப் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க  வேண்டுமென்று 1992ம் ஆண்டு சனவரி 8ம் தேதி முதன் முதலாக எதிர்ப்புப் பேரணி நடத்தப்பட்டது.


6. டிசம்பர் 18, அனைத்துலக குடியேற்றதாரர் தினம்

டிச.17,2011. சரியான கொள்கைகள் மற்றும் பாதுகாப்புகளுடன் மக்களின் குடியேற்றத்திற்கு ஆதரவளிக்கப்பட்டால் அதனால் நாடுகள் நன்மைகள் பெறும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.
இஞ்ஞாயிறன்று (டிசம்பர் 18) கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக குடியேற்றதாரர் தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன், குடியேற்றதாரர் ஒரு சுமையாக நோக்கப்படுவது உட்பட அவர்கள் குறித்த பல தவறான எண்ணங்கள் பரவலாகக் காணப்படுவதாகக் கவலை தெரிவித்துள்ளார்.
குடியேற்றதாரர் தங்களது திறமைகளால் தங்களை அனுமதித்துள்ள நாடுகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும்வேளை, சட்டத்துக்குப் புறம்பே குடியேறியிருப்பவர்கள் சமுதாயத்துக்கு அச்சுறுத்தலாக நோக்கப்படுகின்றார்கள் என்றும் அவரின் செய்தி கூறுகிறது. 
அனைத்துலக மனித உரிமைகள் சட்டத்தின்படி, ஒவ்வொருவரும் அடிப்படை மனித உரிமைகளை அனுபவிக்கும் தகுதியைக் கொண்டுள்ளதால், இந்தக் குடியேற்றதாரர், திருப்பி அனுப்பப்படக் கூடாது என்றும் கூறியுள்ளார் பான் கி மூன்.
மனித உரிமைகள் பிறரன்பு சார்ந்த விவகாரம் அல்ல, மாறாக இவை ஒவ்வொருவரின் தவிர்க்க முடியாத உரிமைகள் என்றுரைக்கும் அவரின் செய்தி, நாடுகள் அனைத்தும்குடியேற்றதாரர் குறித்த அனைத்துலக சட்டத்தை மதித்து நடக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
இன்று உலகில் சுமார் 21 கோடியே 40 இலட்சம் குடியேற்றதாரர் உள்ளனர்.


7. ஐ.நா.வின் அவசரகாலப் பணிகளுக்கு 375 மில்லியன் டாலர் உதவிக்கு நாடுகள் உறுதி

டிச.17,2011. பணக்கார நாடான நார்வே தொடங்கி, ஏழை நாடுகளான நைஜர், ஆப்கானிஸ்தான் உட்பட 45 க்கும் மேற்பட்ட நாடுகள், 37 கோடியே 50 இலட்சம் டாலர் அவசரகால நிதி உதவிக்கு உறுதியளித்துள்ளன என்று ஐ.நா. அறிவித்தது.
மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா.ஒருங்கிணைப்பு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2012ம் ஆண்டின் ஐ.நா.வின் அவசரகாலப் பணிகளுக்கு நாடுகள் உறுதி வழங்கியுள்ள இந்தத் தொகையானது, 2011ம் ஆண்டைவிட ஒரு கோடியே 60 இலட்சம் டாலர் அதிகம் என்று தெரிய வந்துள்ளது.
டென்மார்க் நாடு தனது நிதியுதவியை இரட்டிப்பாக்க உறுதி தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஐ.நா.வின் 126 உறுப்பு நாடுகளும் பார்வையாளர்களும் சுமார் 30 தனியாட்களும் பொது அமைப்புகளும் கடந்த ஆறு ஆண்டுகளில் 280 கோடி டாலருக்கு அதிகமாக வழங்கியுள்ளன என்று ஐ.நா.கூறியது.


8. இணையதளத்தில் சிறார் பாலியல் குற்றச்செயல் தொடர்பாக 112 பேர் கைது

டிச.17,2011. சிறாரைப் பாலியலுக்குப் பயன்படுத்துவது குறித்த ஒளி-ஒலிப் படக்காட்சிகளை இணையதளம் வழியாக பரிமாறிக்கொண்ட சந்தேகத்தின் பேரில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் 22 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானவர்களை ஐரோப்பிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுவரை இந்தக் குற்றச்செயல் தொடர்பாக, 270 பேரை ஐரோப்பிய காவல்துறையான யூரோபோல் கண்டுபிடித்துள்ளது என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
இது தொடர்பான மிக மோசமான ஒளி-ஒலிப் படக்காட்சிகளைத் தாங்கள் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவித்துள்ள யூரோபோல், பச்சிளம் குழந்தைகளும், இளம் சிறாரும் பாலியலுக்குப் பயன்படுத்தப்படுவதை இவை காட்டுவதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடந்து வரும் இந்த நடவடிக்கையில் இதற்கு முன்னர் கண்டுபிடிக்காத புதிய வலையமைப்புக்களைத் தாங்கள் கண்டுபிடித்ததாகவும், இந்தக் குற்றமிழைத்தவர்கள் இணையதளத்தைப் பயன்படுத்தித் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இந்த வீடியோக்களை உலக அளவில் பகிர்ந்து கொண்டிருப்பது தெரியவந்திருப்பதாகவும் யூரோபோல் கூறியுள்ளது.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...