Wednesday, 7 December 2011

Catholic News - hottest and latest - 06 December 2011

1. குடியேற்றம் என்பது எப்போதும் பொருளாதாரக் காரணங்களுக்காக மட்டும் இடம்பெறுவதில்லை என்பதை வளர்ந்த நாடுகள் உணரவேண்டும் - பேராயர் தொமாசி

2.  பணத்தின்மீது அதிகக் கவனம் செலுத்துவது, சுற்றுச்சூழல் சீரழிவுக்கு இட்டுச் செல்கின்றது என்கிறார் கர்தினால் Maradiaga

3. கர்தினால் மால்கம் இரஞ்சித்: குழந்தைகள் காப்பகம் மீது ஊடகங்கள் அவதூறான செய்திகளை வெளியிட்டுள்ளன

4.  எருசலேம் ஆயர் - அமைதிக்குப் பணியாற்றும்போது இறைவன் மகிமைப்படுத்தப்படுகிறார்

5. உயிர்நுண்ம ஆயதங்களில் இருந்து உலகம் பாதுகாக்கப்பட Pax Christi அழைப்பு

6.  பிலிப்பின்ஸ் நாட்டில் அமல மரி தியாகிகள் துறவுச் சபையைச் சார்ந்த அருள்தந்தைக்கு விருது

7.  ஹைதராபாத் நகரில் மனித உரிமைகளை மையப்படுத்தி நடைபெற்றுவரும் நிகழ்வுகள்

------------------------------------------------------------------------------------------------------
1. குடியேற்றம் என்பது எப்போதும் பொருளாதாரக் காரணங்களுக்காக மட்டும் இடம்பெறுவதில்லை என்பதை வளர்ந்த நாடுகள் உணரவேண்டும் - பேராயர் தொமாசி

டிச.06,2011. IOM எனும் அனைத்துலக குடியேற்றதாரர் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் குடியேற்றதாரர் குறித்தப்பிரச்சனை இன்னும் உலக அக்கறைக்கான அவசர அழைப்பை விடுப்பதாகவே உள்ளது என்றார் பேராயர் சில்வானோ தொமாசி.
ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அமைப்புக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் தொமாசி, அனைத்துலக குடியேற்றதாரர் அமைப்பின் 100வது அவைக்கூட்டத்தில் இத்திங்களன்று உரையாற்றியபோது, இன்றைய உலகின் பொருளாதார நெருக்கடிகள் குடியேற்றாதாரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதை விட அவர்களின் வாழ்வை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது என்றார்.
இன்றைய உலகில் குடியேற்றதாரர்களின் எண்ணிக்கை 21 கோடியே 40 இலட்சமாக இருப்பது மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகி வருவதையும் சுட்டிக்காட்டினார் பேராயர்.
இயற்கை பேரிடர்கள் மற்றும் மனித வன்முறைகளால் பாதிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறும் மக்களையும் மனதில் கொண்டு நேர்மையான தீர்வுகளைக் காண மனித குலம் முன்வரவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த பேராயர் தொமாசி, கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டத் தீர்வுகள் ஒத்துழைப்பின்றி தனிப்பட்டு நிற்கின்றன என்பதை எடுத்துரைத்தார்.
குடியேற்றதாரர்கள் அவர்கள் குடியேறும் நாட்டிற்கு தங்கள் பங்கை வழங்குபவர்களாக நோக்கப்பட வேண்டுமேயொழிய, சுமையாக நோக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்ற பேராயர், குடியேற்றம் என்பது எப்போதும் பொருளாதார காரணங்களுக்கு மட்டும் இடம்பெறுவதில்லை எனவும் எடுத்துரைத்தார்.

2.  பணத்தின்மீது அதிகக் கவனம் செலுத்துவது, சுற்றுச்சூழல் சீரழிவுக்கு இட்டுச் செல்கின்றது என்கிறார் கர்தினால் Maradiaga

டிச.06,2011. பணத்தின் மீது அதிகக் கவனம் செலுத்துவது, சுற்றுச்சூழல் சீரழிவுக்கும் மக்கள் மனிதாபிமானமற்றவர்களாக மாறுவதற்கும் காரணமாக இருப்பதாக அனைத்துலக காரித்தாஸ் அமைப்பின் தலைவர் கர்தினால் Oscar Rodriguez Maradiaga கூறினார்.
இம்மாதம் 9ம் தேதி வரை தென் ஆப்ரிக்காவில் இடம்பெறும் தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்த ஐ.நா. கருத்தரங்கிற்கு 20பேர் அடங்கிய காரித்தாஸ் பிரதிநிதிகள் குழு ஒன்றை வழிநடத்திச்சென்றுள்ள கர்தினால் Maradiaga பேசுகையில், பணத்தை மட்டும் தேடுவதால் தன் உண்மை நிலைகளை இழந்து நிற்கும் மனித குலத்தை மீண்டும் மனிதாபிமானமுடையதாக மாற்றுவது மதக்குழுக்களின் கடமையாகிறது என்றார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் Copenhagenல் இடம்பெற்ற தட்பவெப்ப நிலை மாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகள், பொருளாதார பிரச்சனைகள் குறித்து மட்டும் விவாதித்ததே தவிர, சுற்றுச்சூழல் குறித்து தன் கவனத்தைத் திருப்பவில்லை என்றுரைத்த கர்தினால் Maradiaga, பணத்தை மட்டுமே தேடி வரும் மக்களின் போக்கு, சுற்றுச்சூழலை சீரழித்து வருகின்றது என்றார்.
தட்பவெப்ப நிலை மாற்றம் தொடர்புடைய பிரச்சனை, சுற்றுச்சூழல் அக்கறைக்கு அழைப்பு விடுப்பது மட்டுமல்ல, ஒழுக்க ரீதியோடும் தொடர்புடையது என இக்கருத்தரங்கில் பங்குபெற்ற அனைத்து மதப்பிரதிநிதிகளும் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

3. கர்தினால் மால்கம் இரஞ்சித்: குழந்தைகள் காப்பகம் மீது ஊடகங்கள் அவதூறான செய்திகளை வெளியிட்டுள்ளன

டிச.06,2011. அருளாளர் அன்னை தெரேசாவின் பிறரன்புச் சகோதரிகளுள் ஒருவர் பொய்களின் அடிப்படையில்  தவறான முறையில் குற்றம் சாட்டப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் கூறினார்.
சட்டத்திற்குப் புறம்பாக குழந்தைகளை விற்றார் என்ற தவறான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையத்தில் விடுவிக்கப்பட்டுள்ள மேரி எலிசா என்ற அருள்சகோதரியின் மீதும், அன்னை தெரசா சகோதரிகள் நடத்தி வரும் பிரேம் நிவாஸ் எனப்படும் குழந்தைகள் காப்பகம் மீதும் ஊடகங்கள் பல அவதூறான செய்திகளை வெளியிட்டு வந்துள்ளன.
இவைகளைக் குறித்து அண்மையில் செய்தியாளர்களை அழைத்துப் பேசிய கர்தினால் மால்கம் இரஞ்சித், இச்செய்திகளைக் குறித்து தன் ஆழ்ந்த கவலையையும், கண்டனத்தையும் வெளியிட்ட அதே வேளையில், இந்த வழக்கு குறித்து சரியான தீர்வு கிடைக்கும் வரை தான் எந்தப் பொது விழாவிலும் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும் அறிவித்தார்.
பிரேம் நிவாஸ் குழந்தைகள் காப்பகத்தில் வளர்க்கப்படும் குழந்தைகள் குறிப்பிட்ட தொகைகளுக்கு அந்நிய நாட்டு மக்களுக்கு விற்கப்படுகின்றனர் என்பதும், முக்கியமாக, அங்கு பராமரிக்கப்படும் மாற்றுத் திறனுள்ள குழந்தைகளே அந்நிய நாடுகளுக்கு அதிகம் விற்கப்படுகின்றனர் என்பதும் ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகள் என்று கர்தினால் இரஞ்சித் வலியுறுத்திக் கூறினார்.
அருள் சகோதரி எலிசா மீதும், குழந்தைகள் காப்பகம் மீதும் கூறப்படும் அவதூறான செய்திகளால் அச்சபை சகோதரிகள் மனம் தளர்ந்து போகாமல், தொடர்ந்து அவர்களது தன்னலமற்ற சேவையைத் தொடர்வதற்கு கத்தோலிக்க மக்கள் தங்கள் செபங்களை விண்ணகம் நோக்கி எழுப்ப வேண்டும் என்றும் கர்தினால் இரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார்.

4.  எருசலேம் ஆயர் - அமைதிக்குப் பணியாற்றும்போது இறைவன் மகிமைப்படுத்தப்படுகிறார்

டிச.06,2011. புனித பூமியின் பெத்லேகமில் உள்ள இயேசு பிறப்பு பசிலிக்காப் பேராலயமும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் மையமும் இணைந்து கிறிஸ்துமஸ் பெருவிழாக் காலத்தின் அமைதி மற்றும் நம்பிக்கையின் செய்தியை வெளியிட்டுள்ளன.
இச்செய்தியை வெளியிட்ட எருசலேம் துணை ஆயர் வில்லியம் ஷொமாலி,  'உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!' என இயேசு பிறப்பின்போது விண்ணகத்தூதர் பேரணி இறைவனைப் புகழ்ந்து பாடியது தற்செயலாக நிகழ்ந்ததல்ல, ஏனெனில் இறைமாட்சி அமைதியோடு தொடர்புடையது, அதேவேளை மனிதனின் அமைதி இறைமாட்சியோடு தொடர்புடையது என்றார்.
மத்திய கிழக்குப் பகுதியில் அமைதிக்காக உழைப்பவர்களும், அங்குள்ள மக்களிடையே மன்னிப்பு மற்றும் ஒப்புரவிற்காகப் பாடுபடுபவர்களும் தங்கள் நடவடிக்கைகள் மூலம் இறைவனை மகிமைப்படுத்துகின்றார்கள் என அச்செய்தி மேலும் கூறுகிறது.

5. உயிர்நுண்ம ஆயதங்களில் இருந்து உலகம் பாதுகாக்கப்பட Pax Christi அழைப்பு

டிச.06,2011. உலக உயிர்நுண்ம பாதுகாப்புத் தொடர்புடையவைகளில் உலகம் பொறுப்புடன் செயல்படவேண்டியதன் அவசியம் குறித்து அழைப்பு விடுத்துள்ளது அனைத்துலக Pax Christi அமைப்பு.
உயிர் நுண்ம ஆயதங்கள் குறித்த அனைத்துலக கருத்தரங்கில் தன் கருத்துக்களை இச்செவ்வாயன்று வெளியிட்ட இந்த அமைப்பின் பிரதிநிதி Trevor Griffiths, உலகின் அமைதி மற்றும் நீதிக்கும், குறிப்பாக உயிர் நுண்ம பாதுகாப்புக்கும் நல்மனதுடையோர் தங்களால் இயன்ற அனைத்தையும் ஆற்றவேண்டும் என விண்ணப்பித்தார்.
உயிர்நுண்ம ஆயுதங்களைப் பயன்படுத்தும்போது அது நோய்களைப் பரப்பி மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிப்பது மட்டுமல்ல, கால்நடைகளையும் உணவு உற்பத்தியையும் கூட பாதிக்கின்றது என்ற நிலையில், இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது சர்வதேச சமூகத்தின் கடமையாகின்றது என மேலும் கூறினார் Griffiths.
உயிர்நுண்ம ஆயுதங்கள் குறித்த கருத்தரங்கு ஜெனீவாவின் ஐ.நா. அமைப்பில் இம்மாதம் ஐந்தாம் தேதி முதல் 22ம் தேதி வரை இடம்பெறுகிறது.

6.  பிலிப்பின்ஸ் நாட்டில் அமல மரி தியாகிகள் துறவுச் சபையைச் சார்ந்த அருள்தந்தைக்கு விருது

டிச.06,2011. பிலிப்பின்ஸ் நாட்டில் தகவல் தொடர்புத் துறையில் தலை சிறந்த சேவையாற்றியதற்காக, Ninoy மற்றும் Cory Aquino நினைவாக வழங்கப்படும் உயர்ந்ததொரு விருது அமல மரி தியாகிகள் துறவுச் சபையைச் சார்ந்த அருள்தந்தை Eduardo C. Vasquez Jr. அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இச்செவ்வாயன்று பிலிப்பின்ஸ் நாட்டின் Makati நகரில் நடைபெற்ற ஒரு விழாவில் அருள்தந்தை Vasquez இவ்விருதினை அரசுத் தலைவர் Benigno Aquinoவிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
அருள்தந்தை Vasquez 2006ம் ஆண்டு முதல் தொடர்பு சாதனங்கள் மூலம் விழிப்புணர்வையும் மக்கள் சேவையையும் வழங்கும் i-Watch என்ற ஓர் அமைப்பை நடத்தி வருகிறார்.
இவ்வமைப்பின் மூலம் ஏழை மக்களுக்குத் தொடர்புச் சாதனங்களில் பயிற்சிகள் அளிப்பதையும், சமுதாய, அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகளை மையப்படுத்திய ஊடகப் பதிவுகளை வெளியிடுவதையும் அருள்தந்தை Vasquez செய்து வருகிறார்.
ஊடகப் பதிவுகள் வழியே இவர் காட்ட விழைந்த பிரச்சனைகள் இவரையும், இவரது அமைப்பையும் பல நேரங்களில் ஆபத்தில் ஈடுபடுத்தினாலும், இவர் தளராமல் இந்தப் பணியைத் தொடர்ந்ததால், இவரது துணிவையும் ஈடுபாட்டையும் பாராட்டி அமெரிக்கத் தூதரகம் இந்த விருதை அருள்தந்தை Vasquezக்கு வழங்கியுள்ளதென்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...