செய்திகள்-08.04.15
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. இறையடி சேர்ந்த Montreal முன்னாள் பேராயர், கர்தினால் Turcotte
2. ஈராக் கிறிஸ்தவர்களுக்கு திருத்தந்தை அனுப்பிய ‘கேக்’குகள்
3. அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு உலக ஆண்டையொட்டி, பன்னாட்டுக் கருத்தரங்கு
4. அனைத்துலக ரோமா நாளையொட்டி, வெளியிடப்பட்ட செய்தி
5. கர்தினால் Maung Bo வெளியிட்டுள்ள உயிர்ப்பு விழா செய்தி
6. மரணதண்டனைக்கு எதிராக, Massachusetts ஆயர்கள்
7. கனடா பிரதமருக்கு கிறிஸ்தவத் தலைவர்களின் விண்ணப்ப மடல்
8. அரசுத் தலைவர் ஒபாமா வழங்கிய உயிர்ப்புப் பெருவிழா காலை விருந்து
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. இறையடி சேர்ந்த Montreal முன்னாள் பேராயர், கர்தினால் Turcotte
ஏப்,08,2015. கனடாவின் Montreal உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர், கர்தினால் Jean-Claude Turcotte அவர்கள் இறையடி சேர்ந்ததையடுத்து, தன் ஆழ்ந்த அனுதாபங்களை, அவரது குடும்பத்தினருக்கும், அம்மறைமாவட்டத்திற்கும் தெரிவித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.
கிறிஸ்துவின் உயிர்ப்பைக் கொண்டாடும் இவ்வேளையில், கிறிஸ்துவின் உண்மையான ஆயராகப் பணியாற்றிய கர்தினால் Turcotte அவர்களை, முடிவில்லா வாழ்வுக்கு இறைவன் அழைத்துச் செல்வாராக என்று திருத்தந்தை தன் தந்தியில் குறிப்பிட்டுள்ளார்.
1936ம் ஆண்டு, Montreal நகரில் பிறந்த கர்தினால் Turcotte அவர்கள், இப்புதனன்று, தன் 78வது வயதில் இறையடி சேர்ந்தார்.
1959ம் ஆண்டு அருள் பணியாளராகவும், 1974ம் ஆண்டு, ஆயராகவும் திருநிலை படுத்தப்பட்ட கர்தினால் Turcotte அவர்கள், 1994ம் ஆண்டு, திருத்தந்தை, புனித 2ம் ஜான்பால் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.
1990ம் ஆண்டு முதல், 2012ம் ஆண்டு முடிய Montreal உயர் மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றிய கர்தினால் Turcotte அவர்கள், கனடா ஆயர் பேரவையின் தலைவராக மூன்றாண்டுகள் பொறுப்பேற்றார்.
கர்தினால் Turcotte அவர்களின் மறைவையடுத்து, கத்தோலிக்கத் திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை, 225 ஆகவும், இவர்களில், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடையோரின் எண்ணிக்கை 122 ஆகவும் அமைந்துள்ளது.
ஆதாரம் : / வத்திக்கான் வானொலி
2. ஈராக் கிறிஸ்தவர்களுக்கு திருத்தந்தை அனுப்பிய ‘கேக்’குகள்
ஏப்,08,2015. உரோம் நகரில், உயிர்ப்புத் திருவிழிப்புச் சடங்கை நான் முன்னின்று நடத்தினாலும், என் உள்ளம் ஈராக்கில் துன்புறும் கிறிஸ்தவர்களுடன் இருக்கும்; அவர்கள் என் எண்ணத்தைவிட்டு ஒருபோதும் அகலமாட்டார்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ISIS அடிப்படைவாத அமைப்பினரின் வன்முறைகளால், ஈராக் நாட்டில் தங்கள் இல்லங்களை இழந்து, புலம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள கல்தேய வழிபாட்டு முறை கிறிஸ்தவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பிய இச்செய்தியை, கர்தினால் பெர்னாண்டோ பிலோனி அவர்கள் பகிர்ந்துகொண்டார்.
ஈராக் நாட்டின் எர்பில் (Erbil) நகர் முகாமில் நடைபெற்ற புனித வார நிகழ்வுகளில், திருத்தந்தையின் சார்பில் கலந்துகொண்ட கர்தினால் பிலோனி அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியிருந்த இனிப்புக்களையும், செபமாலைகளையும் அம்மக்களுக்கு அளித்தார்.
கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை முதலாம் லூயிஸ் சாக்கோ அவர்கள் தலைமையேற்று நடத்திய புனித வார நிகழ்வுகளில், எர்பில் பேராயர் பஷார் வர்தா அவர்களும் கலந்துகொண்டார்.
உரோம் மறைமாவட்ட கத்தோலிக்கர்கள், திருத்தந்தையின் பெயரால் அனுப்பியிருந்த 6000 கேக்குகள் மற்றும் 10,000 செபமாலைகளை இத்தாலிய விமானம், எர்பில் நகருக்கு சுமந்து சென்றது என்று CNA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இதற்கிடையே, அன்டார்டிகாவில் தங்கி பணியாற்றும் ஆர்ஜென்டீனா இராணுவ வீரர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிர்ப்புத் திருநாளன்று தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததாக Zenit செய்தி கூறுகிறது.
ஏப்ரல் 4, புனித சனிக்கிழமையன்று, திருத்தந்தையின் அழைப்பை, தொலைபேசி வழியே பெற்ற இராணுவத் தலைவர், Gabriel Almada அவர்கள், தன்னால் மறக்க முடியாத நாள் அதுவென்று கண்ணீர் மல்கக் கூறினார்.
ஆதாரம் : CNA / Zenit / வத்திக்கான் வானொலி
3. அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு உலக ஆண்டையொட்டி, பன்னாட்டுக் கருத்தரங்கு
ஏப்,08,2015. தற்போது நடைபெற்றுவரும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு உலக ஆண்டையொட்டி, உரோம் நகரில் ஏப்ரல் 7, இச்செவ்வாய் மாலை, ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கு ஆரம்பமானது.
அர்ப்பண வாழ்வை மேற்கொள்வோரைப் பயிற்றுவிக்கும் வழிகாட்டிகள் 1200க்கும் அதிகமானோர் கலந்துகொள்ளும் இந்தக் கருத்தரங்கு, செவ்வாய் மாலை, புனித ஏழாம் கிரகோரி ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியோடு துவங்கியது.
அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு அமைப்புக்களின் பேராயத் தலைவர் கர்தினால் João Braz de Aviz அவர்கள் ஏற்பாடு செய்துள்ள இக்கருத்தரங்கில், இளையோரை, இன்றைய உலகிற்குத் தகுந்த வகையில் உருவாக்கும் வழிகள் விவாதிக்கப்படும் என்று இப்பேராயம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு கூறுகிறது.
"கடந்த காலத்தை நன்றியோடு காணுதல், தற்காலத்தை ஆர்வமாக வாழ்தல், எதிர்காலத்தை நம்பிக்கையோடு அரவணைத்தல்" என்ற தலைப்பில், கர்தினால் Braz de Aviz அவர்கள், தலைமை உரையை, இப்புதனன்று வழங்கினார்.
அர்ப்பண வாழ்வை மேற்கொள்வோரைப் பயிற்றுவிக்கும் வழிகாட்டிகள் கலந்துகொள்ளும் இக்கருத்தரங்கு, ஏப்ரல் 11, இச்சனிக்கிழமை நிறைவடையும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. அனைத்துலக ரோமா நாளையொட்டி, வெளியிடப்பட்ட செய்தி
ஏப்,08,2015. பல்வேறு மொழிகளையும், கலாச்சாரங்களையும் சார்ந்தவர்களாயினும், ஒவ்வொரு மனிதரும் இறைவனின் சாயலில் உருவாக்கப்பட்டவர்கள் என்று ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் தலைவர், கர்தினால் Peter Erdo அவர்கள் கூறினார்.
ஏப்ரல் 8, இப்புதனன்று கொண்டாடப்படும் அனைத்துலக ரோமா நாளையொட்டி, ஐரோப்பிய கத்தோலிக்க ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பும், ஏனைய கிறிஸ்தவ சபைகளும் இணைந்து வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
சிறுபான்மையினரான ரோமா இனத்தவர், பல்வேறு பிரச்சனைகள் நடுவிலும், தங்கள் கலாச்சாரத்தைப் பேணிக் காத்து வருவது போற்றுதற்குரியது என்று ஒன்றிணைந்த கிறிஸ்தவ சபைகளின் செய்தி பாராட்டு தெரிவித்துள்ளது.
குடும்ப உணர்வு, குழந்தைகளிடம் காட்டப்படும் அக்கறை, இறந்தோருக்கு வழங்கப்படும் மரியாதை போன்ற உன்னதமான கலாச்சாரக் கூறுகளைக் கொண்ட ரோமா இனத்தவர் மத்தியில், தகுதியான கல்வியறிவு இல்லாமை, வேலையில்லா நிலை, ஆகிய பிரச்சனைகளும் உள்ளன என்று கிறிஸ்தவத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
ரோமா இனத்தவர் சந்தித்து வரும் பிரச்சனைகளைத் தீர்ப்பது, அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள ஒரு சவால் என்றும் கிறிஸ்தவத் தலைவர்கள் தங்கள் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. கர்தினால் Maung Bo வெளியிட்டுள்ள உயிர்ப்பு விழா செய்தி
ஏப்,08,2015. மதத்தின் பெயரால் வன்முறைகளையும், படுகொலைகளையும் சந்தித்து வரும் மக்களுடனும், பட்டினியால்
மரணமடையும் குழந்தைகளுடனும் இந்த உயிர்ப்புக் காலத்தில் நாம் ஒருங்கிணைய
வேண்டும் என்று ஆசியக் கர்தினால் ஒருவர் .கூறியுள்ளார்.
மியான்மார் நாட்டின் யாங்கூன் பேராயராக பணியாற்றும் கர்தினால் Charles Maung Bo அவர்கள் வெளியிட்டுள்ள உயிர்ப்பு விழா செய்தியில், மியான்மார் தலத்திருஅவை, உயிர்த்தெழுந்துள்ள திருஅவை என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈவு இரக்கமின்றி கொல்லப்படும் கிறிஸ்தவர்களைக் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள கர்தினால் Maung Bo அவர்கள், இத்தகையக் கொலைகள் தொடரும் வரை, அமைதியை நிலைநாட்டும் நமது பணி தொடரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
மியான்மார் நாடு பல வழிகளிலும் சீரமைக்கப்பட்டு வருவது நம்பிக்கை தருகிறது என்றாலும், இன்னும் நாம் செல்லவேண்டிய தூரம் அதிகம் உள்ளதென்று கர்தினால் Maung Bo அவர்கள், தன் செய்தியில் கூறியுள்ளார்.
மியான்மார் நாடு, தனக்குத் தானே அமைத்துக் கொண்ட கல்லறைகளிலிருந்து உயிர் பெற்று எழுவதற்கு, இளைய தலைமுறையினர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, குறிப்பாக, கல்வித் திட்டங்களில் அவர்கள் உருவாக்க விழையும் மாற்றங்களுக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் கர்தினால் Maung Bo அவர்கள் தன் உயிர்ப்பு விழாச் செய்தியில் விடுத்துள்ளார்.
ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி
6. மரணதண்டனைக்கு எதிராக, Massachusetts ஆயர்கள்
ஏப்,08,2015. ஒவ்வொரு மனித உயிரும் இறைவன் வழங்கும் கொடை என்பதால், அந்தக் கொடையை மாண்புடன் பேணிக் காப்பது நம் கடமை என்று Massachusetts பகுதியைச் சேர்ந்த அமெரிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
2013ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி நடைபெற்ற பாஸ்டன் மாரத்தான் பந்தய நிகழ்வின் போது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் பிடிப்பட்ட Dzhokhar Tsarnaev என்ற இளைஞரின் வழக்கு தீர்ப்பை நெருங்கியுள்ள இவ்வேளையில், அவருக்கு மரணதண்டனை வழங்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தி Massachusetts பகுதியைச் சேர்ந்த அமெரிக்க ஆயர்கள் செய்தியொன்றை வெளியிட்டுள்ளனர்.
மனித உயிர் தன்னிலேயே மாண்பு மிக்கது என்றும், எக்காரணத்தைக்
கொண்டும் மனித உயிரைப் பறிக்கும் உரிமை நமக்கு இல்லை என்றும் திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள செய்தியை அமெரிக்க ஆயர்கள் தங்கள்
செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
2013ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி, பாஸ்டன் மாரத்தான் நிகழ்வில் நடைபெற்ற குண்டு வெடிப்பில், மூவர் கொலையுண்டனர், மற்றும் காயமடைந்த 264 பேரில், 17 பேர் தங்கள் உடல் உறுப்புக்களை இழந்துள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி
7. கனடா பிரதமருக்கு கிறிஸ்தவத் தலைவர்களின் விண்ணப்ப மடல்
ஏப்,08,2015. இராணுவ முயற்சிகள் மட்டும் நிலையான, உண்மையான அமைதியைக் கொணராது; மாறாக, பன்னாட்டு அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சியே ஈராக்கிலும், சிரியாவிலும் அமைதியைக் கொணரும் என்று கனடா நாட்டு கிறிஸ்தவத் தலைவர்கள் விண்ணப்ப மடல் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
கனடா நாட்டு ஆயர் பேரவையின் தலைவர், Paul-André Durocher அவர்களும், ஏனைய கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களும் இணைந்து, கனடா நாட்டுப் பிரதமர், Stephen Harper அவர்களுக்கு அனுப்பியுள்ள மடலில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
மனிதாபிமான முயற்சிகளை மேற்கொள்ளும் அதே வேளையில், அப்பகுதியில் பரவிவரும் ஆயுதங்களின் அத்துமீறிய பயன்பாடு, மனித உரிமை மீறல்கள் ஆகிய அநீதிகளையும் தடுப்பதற்கு, கனடா நாட்டு அரசு முயற்சிகள் மேற்கொள்ளவேண்டுமென்று மதத் தலைவர்கள் தங்கள் மடலில் வலியுறுத்தியுள்ளனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
8. அரசுத் தலைவர் ஒபாமா வழங்கிய உயிர்ப்புப் பெருவிழா காலை விருந்து
ஏப்,08,2015. தன் பாடுகளின்போது கிறிஸ்து அனுபவித்த ஆழ்ந்த இருளை நாம் புரிந்துகொள்வதன் வழியாக, இறைவனின் ஒளியை நாம் பெறமுடியும் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவர்கள் கூறினார்.
உயிர்ப்புப் பெருவிழாவையொட்டி, வெள்ளை மாளிகையில் அரசுத் தலைவர் ஒபாமா அவர்கள் வழங்கிய காலை விருந்தில் இவ்வாறு கூறினார்.
அரசுத் தலைவர் ஒபாமா அவர்கள் வழங்கிய உரையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்றுக்களையும், மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்களின் கூற்றுக்களையும் மேற்கோள்களாகக் கூறினார் என்று CNS செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
நடைபெறும் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வாஷிங்டன் நகருக்கு வருகை தருவது குறித்துப் பேசிய அரசுத் தலைவர் ஒபாமா அவர்கள், சமுதாயத்தின் விளிம்பில் வாழும் மக்களைத் தேடிச் செல்லுதல், அமைதியைத் தேடுதல் ஆகிய எண்ணங்கள் திருத்தந்தையின் மனதிற்கு நெருக்கமான கருத்துக்கள் என்று குறிப்பிட்டார்.
உயிர்ப்பு விழா காலை விருந்தில் பேசிய துணை அரசுத் தலைவரும், கத்தோலிக்கருமான ஜோ பைடன் (Joe Biden) அவர்கள், நமது நம்பிக்கையையும், நன்னெறி விழுமியங்களையும் நம் குழந்தைகளுக்கு விட்டுச் செல்வதே நாம் அவர்களுக்கு வழங்கக்கூடிய பெரும் பரிசு என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment