Thursday 9 April 2015

செய்திகள்-07.04.15

செய்திகள்-07.04.15
------------------------------------------------------------------------------------------------------

1. இந்தியாவின் Bagdogra மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்

2. கென்யா நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக செபிக்க அழைப்பு

3. சிரியாவில் கிறிஸ்தவக் கோவில் ஒன்றின்மீது தாக்குதல்

4. லிபியாவிலும் கென்யாவிலும் விசுவாச‌த்திற்காக‌ கொலையுண்ட‌வ‌ர்க‌ள் ம‌றைசாட்சிக‌ளே

5. கல்வி நிலையங்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்கள்

6. உலகில் ஆபத்து நிறைந்த பத்து நாடுகள்
------------------------------------------------------------------------------------------------------
 
1. இந்தியாவின் Bagdogra மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்

ஏப்.,07,2015. இந்தியாவின் Bagdogra மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருள்பணி Vincent Aind அவர்களை இச்செவ்வாயன்று அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கலகத்தாவின் Morning Star குருத்துவக் கல்லூரியின் தத்துவ இயல் துறைத் தலைவராக பணியாற்றிவந்த அருள்பணி Vincent Aind அவர்கள், உரோம் நகர் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
மேற்குவங்கத்தின் Kalchini என்னுமிடத்தில் 1955ம் ஆண்டு பிறந்த புதிய ஆயர் Vincent Aind அவர்கள், 1984ம் ஆண்டு Jalpaiguri மறைமாவட்டத்தில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
Bagdogra மறைமாவட்ட ஆயர் Thomas D’Souza அவர்கள், கல்கத்தா பேராயராக 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் தேதி மாற்றப்பட்டதிலிருந்து, ஆயரின்றி இருந்த இம்மறைமாவட்டத்திற்கு தற்போது அருள்பணி Vincent Aind அவர்களை புதிய ஆயராக நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. கென்யா நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக செபிக்க அழைப்பு

ஏப்.,07,2015. கென்யா நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக அனைத்து விசுவாசிகளும் இந்த கிறிஸ்து உயிர்ப்புக் காலத்தில் தனிப்பட்ட விதத்தில் செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் கென்ய ஆயர் பேரவைத் தலைவர்  கர்தினால் John Njue.
இம்மாதம் 2ம் தேதி சொமாலியாவைச் சேர்ந்த al-Shabaab தீவிரவாதிகள் Garissa பல்கலைக் கழகத்தில் நுழைந்து, கிறிஸ்தவ மாணவர்களைக் குறிவைத்துத் தாக்கிக் கொன்றதைப் பற்றி தன் கவலையை வெளியிட்ட நைரோபி பேராயர் கர்தினால் Njue அவர்கள், நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கென ஒவ்வொருவரும் தங்களை அர்ப்பணிக்கவேண்டும் என்றார்.
148 பேரின் ம‌ர‌ண‌த்திற்கு கார‌ண‌மான‌ இந்த‌ Garissa பல்கலைக்கழக தாக்குதல், கென்ய ஆயர் பேரவைக்கு ஆழ்ந்த கவலையைத் தருவதாகவும், செபத்துடன் கூடிய ஒருமைப்பாட்டில் மக்களுடன் ஒன்றித்திருப்பதாகவும் கர்தினால் Njue அவர்கள் கூறினார்.
கென்யாவில் பாதுகாப்பற்ற சூழல்களிலும் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயல்படுவதோடு, இது கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே நிகழும் போரின் விளைவு என்ற தப்பெண்ணத்தை உருவாக்காமல் இருப்பதில் முக்கியக் கவனம் செலுத்தவேண்டியது அவசியம் எனவும் கேட்டுக்கொண்டார் கென்ய ஆயர் பேரவைத் தலைவர்.

ஆதாரம் : CNS\ வத்திக்கான் வானொலி

3. சிரியாவில் கிறிஸ்தவக் கோவில் ஒன்றின்மீது தாக்குதல்

ஏப்.,07,2015. சிரியாவின் Tel Nasri கிராமத்தில் உள்ள 80 ஆண்டு பழமையுடைய கிறிஸ்தவக்கோவில் ஒன்று இஸ்லாம் தீவிரவாதிகளால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
அன்னைமரிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் கோவில், இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நாளான இந்த ஞாயிறன்று ஐ.எஸ். தீவிரவாத அமைப்பால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
சிரியா மற்றும் ஈராக்கிலிருந்து விரட்டப்பட்ட கிறிஸ்தவர்களின் புகலிடமாக இருந்த இந்த Tel Nasri கோவில் தகர்க்கப்பட்டுள்ளதன் விளைவாக, கிறிஸ்தவர்களின் வாழ்வாதாரங்கள் சிறிது சிறிதாக அழிக்கப்படுவதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
தாங்கள் கைப்பற்றும் இடங்களில் உள்ள கிறிஸ்தவக் கோவில்களை அழிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளனர் ஐ.எஸ். இஸ்லாமியத் தீவிரவாதிகள்.
கிறிஸ்தவக் குன்று என்ற பொருள் கொண்ட Tel Nasri கிராமப்பகுதியில் இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிராக கிறிஸ்தவர்களும் குர்த் இன மக்களும் போராடிவருவது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Catholic Online\வத்திக்கான் வானொலி

4. லிபியாவிலும் கென்யாவிலும் விசுவாச‌த்திற்காக‌ கொலையுண்ட‌வ‌ர்க‌ள் ம‌றைசாட்சிக‌ளே

ஏப்.,07,2015. அண்மையில் லிபியாவிலும் கென்யாவிலும் த‌ங்க‌ள் விசுவாச‌த்திற்காக‌க் கொலைச்செய்ய‌ப்ப‌ட்டவர்கள், கிறிஸ்தவ மறைசாட்சிகள் என்று கான்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி அவர்கள் கூறினார்.
இஸ்லாமிய‌த் தீவிர‌வாதிக‌ளால் லிபியாவிலும் கென்யாவிலும் கொல்ல‌ப்ப‌ட்ட‌ கிறிஸ்த‌வ‌ ம‌றைசாட்சிக‌ளை நினைவுகூரும் நாம், இத்த‌கைய‌த் தீவிர‌வாத‌ தாக்குத‌த‌ல்க‌ளை அன்பின் துணைகொண்டு த‌டுக்க‌வேண்டுமேயொழிய‌, வ‌ன்முறையின் துணைகொண்ட‌ல்ல‌ என‌ எடுத்துரைத்தார் ஆங்கிலிக்க‌ன் பேராய‌ர் வெல்பி.
பிப்ர‌வ‌ரி மாத‌த்தில் 22 காப்டிக் கிறிஸ்த‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ள் விசுவாச‌த்திற்காக லிபியாவில் கொல்ல‌ப்ப‌ட்ட‌து, ம‌ற்றும், இம்மாத‌ம் இர‌ண்டாம் தேதி கென்ய கிறிஸ்த‌வ‌ர்க‌ள் 148பேர் தீவிர‌வாதிக‌ளால் கொல்ல‌ப்பட்டது ஆகிய‌வற்றைச் சுட்டிக்காட்டிப் பேசினார் பேராய‌ர்.
கிறிஸ்த‌வ‌ விசுவாச‌த்திற்காக‌ ம‌க்க‌ள் கொடுமைப்ப‌டுத்த‌ப்ப‌ட்டுக் கொல்ல‌ப்ப‌டுவ‌து த‌ற்போது ம‌ட்டும‌ல்ல‌, க‌ட‌ந்த‌ ஆண்டிலும் பெருமெண்ணிக்கையில் காண‌ப்ப‌ட்ட‌து என‌ மேலும் கூறினார் கான்ட‌ர்ப‌ரி பேராய‌ர் வெல்பி.

ஆதாரம் : The Independent\வத்திக்கான் வானொலி

5. கல்வி நிலையங்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்கள்

ஏப்.,07,2015. கல்வி நிலையங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் கடந்த 10 ஆண்டுகளில் இவ்வுலகில் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளதாக அண்மை அறிக்கை ஒன்று கூறுகிறது.
உலகில் தீவிரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளை, கல்வி நிலையங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களும் அதிகரித்துவருவதாகக் கூறும் இந்த அறிக்கை, 2004ம் ஆண்டில் 2 விழுக்காடாக இருந்த இத்தாக்குதல்கள், 2013ம் ஆண்டில் 3 விழுக்காடாக அதிகரித்துள்ளதாகவும் கூறுகிறது.
மொத்தத் தாக்குதல்களில், கல்வி நிலையங்கள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல்கள் 3 விழுக்காடாக இருப்பது பற்றி குறிப்பிடும் இந்த அறிக்கை, இத்தாக்குதல்கள் பெருமெண்ணிக்கையில் தெற்கு ஆசியாவிலும் மத்தியக் கிழக்கிலுமே இடம்பெறுவதாகவும் கூறுகிறது.
மேற்கத்திய கல்விமுறையை எதிர்க்கும் நைஜீரிய Boko Haram தீவிரவாத இயக்கம், ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஈராக்கின் தீவிரவாத அமைப்புக்கள் போன்றவற்றால் கல்வி நிலையங்கள் தாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிலையங்கள் தாக்கப்படும்போது கிட்டும் விளம்பரம், தங்களைத் தாக்கமுடியாத மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், அரசின் மீது எழும் கோபத்தைக் காண்பிப்பதற்கு அரசு நிறுவனங்களைத் தாக்குதல் போன்ற காரணங்களாலேயே, இத்தகைய கல்வி நிலையங்கள் மீது தாக்குதல்கள் இடம்பெறுகின்றன என அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களின், கல்விநிலையங்கள் மீதான அண்மை தாக்குதல்களைக் கண்டித்துள்ள இஸ்லாமியத் தலைவர்கள், அப்பாவி மக்களையும், பெண்களையும் குழந்தைகளையும் கொல்வது, இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானது என தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : The Atlantic\வத்திக்கான் வானொலி

6. உலகில் ஆபத்து நிறைந்த பத்து நாடுகள்

ஏப்.,07,2015. உலகில் ஆபத்து நிறைந்த முதல் பத்து நாடுகளின் வரிசையில் ஒன்பது இடங்களை இஸ்லாமிய நாடுகள் கொண்டுள்ளதாக அண்மையில் எக்னாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
மத்திய கிழக்கு நாடுகளான ஈராக்கும் சிரியாவும் ஆபத்து நிறைந்த நாடுகள் வரிசையில் முதல் இரண்டு இடங்களை வகித்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக நைஜீரியா, சொமாலியா, ஆஃப்கானிஸ்தான், லிபியா, ஏமன், பாகிஸ்தான், உக்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் வருகின்றன.
ஒரு நாட்டில் இடம்பெறும் தீவிரவாத நடவடிக்கைகள், தாக்குதல்கள், தீவிரவாதத்திற்கு பலியாவோர் மற்றும் காயமுறுவோரின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Christian Action\வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment