Wednesday, 2 April 2014

செய்திகள் - 01.04.14

செய்திகள் - 01.04.14
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : மந்தநிலையும் வெளிவேடமும் பல கிறிஸ்தவர்களின் நோய்

2. பெற்றோரே, உங்கள் குழந்தைகளுக்குச் செபிக்கக் கற்றுக்கொடுங்கள், திருத்தந்தை பிரான்சிஸ்

3. புனிதர் நிலைக்கு உயர்த்தப்படும் நிகழ்வு தூய்மையின் விழா, திருப்பீடம்

4. இந்தியத் தேர்தலுக்கு முன்னர், செபம் மற்றும் உண்ணா நோன்பு, கர்தினால் கிரேசியஸ்

5. தென் கொரியாவில் குழந்தை பிறப்பு குறைவு, தேசியப் பேரிடர், ஆயர் பேரவைத் தலைவர்

6. ஆப்ரிக்கக் குற்றவியல் நீதிமன்றம் உடனடியாகத் தேவை, கத்தோலிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர்

7. தட்பவெப்பநிலை மாற்றம் இப்புவி முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, ஐநா எச்சரிக்கை

8. தட்பவெப்பநிலை மாற்றம் ஆசியாவில் போருக்கு இட்டுச்செல்லும், ஐ.நா.

9. உலக அளவில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் குறித்து ஐ.நா. விசாரணை

             ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : மந்தநிலையும் வெளிவேடமும் பல கிறிஸ்தவர்களின் நோய்

ஏப்.01,2014.  சீடத்துவ வாழ்வுக்கு உண்மையிலேயே தங்களை அர்ப்பணிக்கவும், நற்செய்திக்காக இடர்களைச் சந்திக்கவும் கிறிஸ்தவர்கள் தயாராக இருக்கவேண்டுமென்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்செவ்வாய் காலை புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் இந்நாளைய திருப்பலி வாசகங்களை மையமாக வைத்து மறையுரை வழங்கிய  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவால் குணப்படுத்தப்பட்ட, பெத்சதா குளத்தருகில் 38 ஆண்டுகளாக உடல்நலமற்றிருந்த மனிதரின் ஆன்மீக நோயையும், இயேசு ஓய்வு நாளில் குணமாக்கியதால் அவரைத் துன்புறுத்துவதற்காக, அவருக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டிய பரிசேயர்கள் பற்றியும் விளக்கினார்.
ஆர்வமின்றி வாழும் பல கத்தோலிக்கர் பற்றியும், தனது நலத்தைப் பற்றி மட்டும் அக்கறை கொண்டு அடுத்தவரின் தேவையை உணராத பிறரன்பு இல்லாத கத்தோலிக்கர் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்தப் போக்கு மந்தநிலை நோயாகும், இது கிறிஸ்தவர்களின் கவனமின்மையால் வருவதாகும் என்றுரைத்தார்.
இந்தப் போக்கு அப்போஸ்தலிக்க ஆர்வத்தை முடக்கிவிடும், வெளியே சென்று நற்செய்தியை அறிவிப்பதற்கு அக்கறையின்மையை ஏற்படுத்தும், இவ்வாறு இருக்கும்  கிறிஸ்தவர்கள் மயக்கநிலையில் இருப்பவர்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.
வெளிவேடக் கிறிஸ்தவர்கள் பற்றியும் மறையுரையில் விளக்கிய திருத்தந்தை, விதிமுறைகளே இவர்களுக்கு முக்கியம், ஓய்வு நாள்களில் இறையருள் வேலை செய்யக் கூடாது எனச் சொல்பவர்கள் இறையருளுக்குத் தங்கள் கதவுகளை மூடி வைத்திருப்பவர்கள், இப்படி இருப்பவர்கள் திருஅவையிலும் பலர் உள்ளனர் என்றும் கூறினார்.
நீ குணமாக விரும்புகிறாயா, இதைவிட கேடான எதுவும் செய்யாதே என்று இயேசு, அந்த நோயாளியிடம் கனிவுடனும் அன்புடனும் கூறினார், இதுவே கிறிஸ்தவ வழி, இதுவே அப்போஸ்தலிக்க ஆர்வம் எனவும் தனது மறையுரையில் கூறினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. பெற்றோரே, உங்கள் குழந்தைகளுக்குச் செபிக்கக் கற்றுக்கொடுங்கள், திருத்தந்தை பிரான்சிஸ்

ஏப்.01,2014. அன்புப் பெற்றோரே, உங்கள் குழந்தைகளுக்குச் செபிக்கக் கற்றுக்கொடுங்கள், அவர்களோடு சேர்ந்து செபியுங்கள் என்று தனது இச்செவ்வாய் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திருப்பீடத் தலைமையகத்தின் பல்வேறு துறைகளின் தலைவர்களுடன், அப்போஸ்தலிக்க மாளிகையின் பொலோஞ்ஞா அறையில் இச்செவ்வாய் காலை 9.30 மணி முதல் பகல் 12 மணிவரை கூட்டம் நடத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீடத் தலைமையகத்தின் பல்வேறு துறைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Evangelii Gaudium என்ற திருத்தூது அறிவுரைகளைச் சிந்தித்ததன் பலனாக கிடைத்த கருத்துக்களும், அவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் பேசப்பட்டன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. புனிதர் நிலைக்கு உயர்த்தப்படும் நிகழ்வு தூய்மையின் விழா, திருப்பீடம்

ஏப்.01,2014. முத்திப்பேறுபெற்ற திருத்தந்தையர் 23ம் ஜான், 2ம் ஜான் பால் ஆகிய இருவரும் ஏப்ரல் 27ம் தேதி புனிதர் நிலைக்கு உயர்த்தப்படும் நிகழ்வுக்குத் தயாரிப்பாக உரோம் நகரில் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்வுகள் குறித்து திருப்பீடம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 22ம் தேதி உரோம் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவில் இளையோர் செப வழிபாடும், ஏப்ரல் 26 மாலை உரோம் நகரின் அனைத்துப் பங்கு ஆலயங்களிலும் செப வழிபாடும் இரு முக்கிய தயாரிப்பு நிகழ்வுகளாக அமையும் என இத்திங்களன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் அறிவித்தது திருப்பீடம்.
இந்தப் புனிதர்பட்ட நிகழ்வு, விசுவாசத்தின் ஓர் உண்மையான விழா என்றும், இது தூய்மையின் விழா என்றும், கர்தினால்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள் என ஏறக்குறைய ஆயிரம் பேர் கூட்டுத்திருப்பலி நிகழ்த்துவார்கள் என்றும், ஏறக்குறைய 700 அருள்பணியாளர்கள் திருநற்கருணை வழங்குவார்கள் என்றும் கூறப்பட்டது.
மேலும், உரோம் மறைமாவட்டம், இப்புனிதர்பட்ட நிகழ்வுக்கென புதிய இணையதளம், புதிய டுவிட்டர் பக்கம், முக நூல், யுடியூப் போன்றவைற்றையும் திறந்துள்ளது. புதிய இணையதளம் - http://www.2popesaints.org/
டுவிட்டர் - @2popesaints  முக நூல் - 2popesaints
இப்புனிதர்பட்ட நிகழ்வுக்கென, பெர்கமோ மறைமாவட்டத்தின் 900 அருள்பணியாளர்கள்  வேலையின்றி இருக்கும் மக்களுக்கு உதவுவதற்கென நன்கொடைகள் திரட்டவும் தொடங்கியுள்ளனர். முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் பெர்கமோ மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. இந்தியத் தேர்தலுக்கு முன்னர், செபம் மற்றும் உண்ணா நோன்பு, கர்தினால் கிரேசியஸ்
ஏப்.01,2014. நல்ல நிர்வாகம் செய்பவர்களையும், ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டுள்ளவர்கள் மீது நீதியோடும் பரிவோடும் அக்கறை காட்டுபவர்களையும் இந்திய நாடு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காக, செபம் மற்றும் உண்ணா நோன்பு நாள் ஒன்றை அறிவித்துள்ளார் மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
இந்தியாவில் முதல் கட்டத் தேர்தல் இம்மாதம் 7ம் தேதி தொடங்கவுள்ளவேளை, நாட்டின் தேர்தல்கள் நல்ல முறையில் நடந்து, சனநாயகத்தைக் காக்கும் நல்ல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்குச் செபிக்குமாறு கர்தினால் கிரேசியஸ் அவர்கள் இந்தியர்களைக் கேட்டுள்ளார்.
இம்மாதம் 4ம் தேதி வருகிற வெள்ளிக்கிழமையன்று, செபம் மற்றும் உண்ணா நோன்பைக் கடைப்பிடித்து நாட்டுக்காகச் செபிக்குமாறு கேட்டுள்ளார் கர்தினால் கிரேசியஸ்.
இந்தியா எதிர்கொள்ளும் பெரும் சாவால்களைச் சந்திப்பதற்காக 81 கோடியே 40 இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வருகிற பொதுத் தேர்தல்களில் ஓட்டளிக்கவுள்ளனர்.

ஆதாரம் : AsiaNews

5. தென் கொரியாவில் குழந்தை பிறப்பு குறைவு, தேசியப் பேரிடர், ஆயர் பேரவைத் தலைவர்

ஏப்.01,2014. தென் கொரிய அரசு பல ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவந்த குடும்பக்கட்டுப்பாடு குறித்த கொள்கைகளால் அந்நாட்டில் குழந்தை பிறப்பு குறைந்து வருவது தேசியப் பேரிடருக்கு இட்டுச்செல்லும் என அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் எச்சரித்தார்.
தென் கொரியாவில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது குறித்து அண்மையில் வெளியான புள்ளிவிபரங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என ஆசிய செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த Cheju ஆயர் Peter Kang U-il, குழந்தை பிறப்புக்களைத் தொடர்ந்து ஊக்குவிக்காவிட்டால் அந்நாடு வளர்ச்சியடைவது கடினம்  எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வாழ்வுக்கான தவக்காலச் செபம் என்ற பக்தி முயற்சியை, இவ்வாண்டு தவக்காலத்தில் ஆரம்பித்துள்ள தென் கொரிய ஆயர்கள், நாட்டில் கருக்கலைப்பு தவிர்க்கப்பட செபமாலையைத் தொடர்ந்து செபிக்கும் பக்தி முயற்சியையும் ஊக்குவித்துள்ளனர்.
தென் கொரியாவில் எடுக்கப்பட்ட தேசிய குழந்தை பிறப்பு கணக்கெடுப்பின்படி, 13 மாதங்களாகத் தொடர்ந்து குழந்தை பிறப்பு குறைந்துள்ளதாகவும், இந்நிலை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
உலகில் குழந்தை பிறப்பு விகிதத்தைக் குறைவாய்க் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள தென் கொரியாவின் குழந்தை பிறப்பு விகிதம் 1.05 விழுக்காடாகும்.

ஆதாரம் : AsiaNews                               

6. ஆப்ரிக்கக் குற்றவியல் நீதிமன்றம் உடனடியாகத் தேவை, கத்தோலிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர்

ஏப்.01,2014. ஆப்ரிக்கக் கண்டத்தில் மனித உரிமைகளைக் கடுமையாய் மீறும் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களை விசாரிப்பதற்கு ஆப்ரிக்கக் குற்றவியல் நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்படுவது அவசியம் என, அக்கண்டத்தின் காங்கோ கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Toussaint Kwambamba கருத்து தெரிவித்தார்.
ஆப்ரிக்கா குறித்த அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் கருத்துக்கள் குறித்து பேசிய பேராசிரியர் Kwambamba, ஆப்ரிக்கக் குற்றவியல் நீதிமன்றம் இல்லாத குறையை, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தீர்த்து வைக்கின்றது, இதுவே ஆப்ரிக்கர்களின் ஒரே ஆறுதலாக இருக்கின்றது என்று தெரிவித்தார்.
தற்போது பதவியில் இருக்கும் சில ஆப்ரிக்கத் தலைவர்கள் குறித்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் குறை கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய Kwambamba, நெதர்லாண்டின் ஹாக்கிலுள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம், ஆப்ரிக்கத் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் சில பிரச்சனைகளைச் சந்திக்கின்றது என்றும் கூறினார்.

ஆதாரம் : Fides

7. தட்பவெப்பநிலை மாற்றம் இப்புவி முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, ஐநா எச்சரிக்கை

ஏப்.01,2014. புவியில் ஏற்பட்டுவரும் தட்பவெப்பநிலை மாற்றங்களின் தாக்கங்கள்,  அனைத்துக் கண்டங்கள் மற்றும் அனைத்துப் பெருங்கடல்களில் ஏற்கனவே உணரப்பட்டு வருவதால், இம்மாற்றங்களைத் தடுப்பதற்குப் பெரிய அளவில் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் புதிய அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.
தட்பவெப்பநிலை மாற்றம் 2014 : தாக்கங்கள் என்ற தலைப்பில் இத்திங்களன்று ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்புவி எதிர்கொள்ளும் தட்பவெட்பநிலை மாற்றம், வெள்ளப்பெருக்கு, வறட்சி, உணவுத்தட்டுப்பாடு, மனித குலத்தின் நலவாழ்வு பாதிக்கப்படுவது போன்றவை வரும் காலங்களில் அதிகரிக்கக்கூடிய ஆபத்து அதிகமாக உள்ளது என கூறப்பட்டுள்ளது.
எனினும், இந்த மாற்றங்களில் பலவற்றுக்கு நம்மால் ஈடுகொடுக்க முடியும் என்றும், கரியமிலவாயு சுற்றுச்சூழலில் கலந்துவருவதை நாம் வேகமாக கட்டுப்படுத்தினால், மிக மோசமான பாதிப்புகளை தவிர்க்கவும் முடியும் என்றும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கடந்த ஏழு ஆண்டுகளில் புவி வெப்பமடைதலின் பாதிப்புகள் இருமடங்காகியுள்ளன எனவும், அடுத்த 20-30 ஆண்டுகளில் இயற்கையின் கட்டமைப்பில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என்றும் இந்தப் புதிய ஆய்வறிக்கை கணித்துள்ளது.
இந்த பூமிப்பந்தில் வாழும் எந்தவொரு மனிதரையும் தட்பவெப்பநிலை மாற்றத்தின் விளைவுகள் தொடாமல் இருக்கப்போவதில்லை' என்று IPCC என்ற தட்பவெப்பநிலை தொடர்பான அனைத்துலக குழுவின் தலைவர் ராஜேந்திர பச்சோரி கூறினார்.
பெருங்கடல்களில் அமிலத்தன்மையின் அடர்த்தி அதிகரித்துவருவது, பவளப்பாறைகளையும் அவற்றை ஒட்டிவாழும் உயிரினங்களையும் அச்சுறுத்தக்கூடும் என்றும் ஐநா அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : UN

8. தட்பவெப்பநிலை மாற்றம் ஆசியாவில் போருக்கு இட்டுச்செல்லும், ஐ.நா.

ஏப்.01,2014. நீர் ஆதாரங்கள், உணவு உற்பத்தி உள்ளிட்டவைகள் குறைந்து வருவதால் அது வருங்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், இதன் காரணமாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா உள்ளிட்ட நாடுகளிடையே போர் மூளும் நிலை ஏற்பட்டு வருவதாக ஐநா வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
காலநிலைகள் மாறி வருவதால் மனிதர்களின் நலவாழ்வு, இயற்கை வளங்கள் ஆகியவை பெரும் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களின் முக்கியமான உணவுப் பொருட்களில் ஒன்றாக உள்ள மீன்களும் நீரின் வெப்பம் தாளாமல் வேறு இடங்களுக்கு இடம்பெயரக்கூடும் எனவும், குறிப்பாக, வெப்பமண்டலப் பகுதிகள் பலவற்றிலும் அன்டார்ட்டிகா பகுதியிலும் மீன்வளம் 50 விழுக்காட்டுக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துவிடும் என்றும் அறிவியலாளர்கள் கணித்துள்ளனர்.
நிலத்தில் விலங்குகள், தாவரங்கள் மற்றும் மற்ற உயிரினங்கள் மேட்டு நிலங்களை நோக்கி நகரலாம். மேலும் அவை துருவங்களை நோக்கி இடம்பெயரக்கூடும். ஒட்டுமொத்தத்தில் இந்த நூற்றாண்டு மாறும்போது மனித குலமும் கடுமையான பருவநிலை பாதிப்புகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : TNN

9. உலக அளவில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் குறித்து ஐ.நா. விசாரணை

ஏப்.01,2014. வீட்டு வன்முறை, பாலியல் வன்முறை, பாலியல் நச்சரிப்பு, கட்டாய இளவயது திருமணங்கள் உட்பட உலக அளவில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் குறித்த விசாரணையை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார் ஐ.நா. வல்லுனர் ஒருவர்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து அறிக்கை தயாரிப்பதற்காக ஐ.நா.வால் குறிக்கப்பட்டுள்ள சிறப்புப் பிரதிநிதி ரஷிதா மஞ்சு இரு வாரங்கள் நடத்தவிருக்கும் இந்த விசாரணைகளை முதலில் பிரிட்டனில் தொடங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மஞ்சு, இந்தப் பணியில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களைச் சந்தித்து விபரங்களைச் சேகரிக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.

ஆதாரம் : UN

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...