Saturday, 19 April 2014

செய்திகள் - 19.04.14

செய்திகள் - 19.04.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் - சிலுவைகளைத் தாங்களே சுமக்குபடி கைவிடப்பட்ட அனைவருக்காகவும் மன்றாடுவோம்

2. உரோம் நகர் சிலுவைப்பாதை பக்தி முயற்சியில், சிலுவையை ஏந்திச் சென்றோரைக் குறித்த விவரங்கள்

3. புற்றுநோயால் வாடும் குழந்தைகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள 'Easter Egg' பரிசுகள்

4. 'இவ்வுலகம் வழிபட்டு வரும் பொய் தெய்வங்களிலெல்லாம் தலையானது பணம்' - திருத்தந்தையர் இல்ல மறையுரையாளர்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் - சிலுவைகளைத் தாங்களே சுமக்குபடி கைவிடப்பட்ட அனைவருக்காகவும் மன்றாடுவோம்

ஏப்.19,2014. அருவருப்பான இவ்வுலகத் தீமை அனைத்தையும் தனக்குள் ஏற்றுக்கொண்டதால், சிலுவை கனமாக இருந்ததென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித வெள்ளியன்று மாலை கூறினார்.
உரோம் நகரில், Colosseum திறந்த வெளியரங்கைச் சுற்றி, புனித வெள்ளி இரவு 9 மணியளவில் நடைபெற்ற சிலுவைப்பாதை பக்தி முயற்சியின் இறுதியில், திருத்தந்தை அவர்கள் பகிர்ந்துகொண்ட சிறு உரையில், சிலுவையின் பாரம் குறித்து பேசினார்.
காயின் தன் சகோதரனுக்கு எதிராகச் செய்த குற்றம் துவங்கி, பேதுரு, யூதாசு ஆகியச் சீடர்கள் செய்த குற்றங்களையும் சேர்த்து, இன்றும் மனிதர்கள் ஒருவர் மற்றவருக்கெதிராக இழைக்கும் குற்றங்களின் பாரம் அனைத்தையும் தந்தையாம் இறைவன் தன் மகன் இயேசுவின் தோள்மீது சுமத்தினார் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
பாவத்தின் பாரங்கள் பெருமளவு கூடினாலும், இதே சிலுவை, மீட்பின் விடிவையும் கொணர்ந்தது என்பதையும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
உடலாலும், மனதாலும் துன்புறும் அனைவருக்காகவும், குறிப்பாக, தங்கள் சிலுவைகளைத் தாங்களே சுமக்குபடி கைவிடப்பட்ட அனைவருக்காகவும் மன்றாடுவோம் என்ற விண்ணப்பத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் சிந்தனையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. உரோம் நகர் சிலுவைப்பாதை பக்தி முயற்சியில், சிலுவையை ஏந்திச் சென்றோரைக் குறித்த விவரங்கள்

ஏப்.19,2014. ஏப்ரல் 18, புனித வெள்ளியன்று உரோம் நகர் Colosseum திறந்த வெளியரங்கில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில், பல்லாயிரம் மக்கள் கலந்துகொண்ட சிலுவைப்பாதை பக்தி முயற்சியில், ஒவ்வொரு நிலையிலும் சிலுவையை ஏந்திச் சென்றோரைக் குறித்த விவரங்களை திருப்பீடம் இச்சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.
உரோம் மறைமாவட்டத்தின் பல பங்குத் தளங்களிலிருந்து தெரிவு செய்யப்பட குழந்தைகள், இளையோர், குடும்பத்தினர், வயது முதிர்ந்தோர் என்ற பல நிலைகளையும் சார்ந்த பிரதிநிதிகள் சிலுவையைச் சுமந்து சென்றனர்.
அதேபோல், சிறைக் கைதிகளில் இருவர், வீடற்றோர் இருவர், சக்கர நாற்காலியில் இருந்த மாற்றுத்திறனாளி ஒருவர் ஆகியோரும் சிலுவை சுமந்து சென்றனர்.
திருத்தந்தையின் சார்பில் உரோம் ஆயராக பணியாற்றும் கர்தினால் அகோஸ்தினோ வல்லினி அவர்கள், புனித பூமியில் பணியாற்றும் பிரான்சிஸ்கன் துறவிகளில் இருவர், அருள் சகோதரிகள் இருவர் ஆகியோரும் சிலுவையைச் சுமந்து சென்றனர்.
உரோமைய அரசு கிறிஸ்தவர்களை வேட்டையாடிய Colosseum என்ற திறந்த வெளியரங்கில், பாரம்பரியச் சிலுவைப்பாதை பக்தி முயற்சியை, திருத்தந்தையர் பலர் முன்னின்று நடத்தி வந்துள்ளனர்.
பாரம்பரியச் சிலுவைப்பாதையைச் சிறிதளவு மாற்றி, விவிலியத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட சிலுவைப்பாதையை, 1991ம் ஆண்டு திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் முதன்முறையாக துவக்கிவைத்தார்.
இதைத் தொடர்ந்து, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் விவிலிய அடிப்படையில் நடத்தப்படும் இந்த பக்தி முயற்சியைத் தொடர்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. புற்றுநோயால் வாடும் குழந்தைகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள 'Easter Egg' பரிசுகள்

ஏப்.19,2014. "கொரியாவில் நிகழ்ந்துள்ள உல்லாசக் கப்பல் விபத்தில் இறந்த அனைவருக்காகவும், அவர்கள் குடும்பத்தினருக்காகவும் என்னோடு இணைந்து தயவுசெய்து செபியுங்கள்" என்ற Twitter செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமை வெளியிட்டுள்ளார்.
ஏப்ரல் 16, இப்புதனன்று, தென்கொரிய உல்லாசக் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 475 பேரில், 287 பேரின் நிலை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவர்களில் பெரும்பாலானோர் பள்ளியில் பயின்றுவரும் மாணவ, மாணவியர்.
மேலும், உரோம் நகரில், 'Bambino Gesu' என்றழைக்கப்படும் குழந்தை இயேசு குழந்தைகள் மருத்துவமனையில் புற்றுநோயால் வாடும் குழந்தைகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 'Easter Egg' என்று சொல்லப்படும் 'உயிர்ப்பு முட்டை'களை, பரிசாக அனுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி, கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தை இயேசு மருத்துவமனைக்குச் சென்று, குழந்தைகளுக்கு தன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை நேரடியாகத் தெரிவித்தார்.
உயிர்ப்புப் பெருவிழாவையொட்டி, அங்கு புற்றுநோயால் வாடும் 150 குழந்தைகளுக்கு இனிப்பு வகைகள் அடங்கிய சாக்கலேட்டால் செய்யப்பட்ட 'உயிர்ப்பு முட்டை'களைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் பரிசாக அனுப்பியுள்ளார்.
1924ம் ஆண்டு, குழந்தைகளுக்கென்று உருவாக்கப்பட்ட 'Bambino Gesu' எனப்படும் இச்சிறப்பு மருத்துவமனை, திருத்தந்தையர் பலரின் தொடர்ந்த ஆதரவைப் பெற்று வருவதால், 'திருத்தந்தையின் மருத்துவமனை' என்றும் அழைக்கப்படுகிறது.
1958ம் ஆண்டு, திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், இம்மருத்துவமனைக்கு நேரில் சென்று, குழந்தைகளைச் சந்தித்த நிகழ்ச்சிக்குப் பின், அவரைத் தொடர்ந்த அனைத்து திருத்தந்தையரும் 'Bambino Gesu' மருத்துவமனைக்குச் சென்று குழந்தைகளை அவ்வப்போது சந்தித்து வருகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. 'இவ்வுலகம் வழிபட்டு வரும் பொய் தெய்வங்களிலெல்லாம் தலையானது பணம்' - திருத்தந்தையர் இல்ல மறையுரையாளர்

ஏப்.19,2014. 'இவ்வுலகம் பல்வேறு பொய் தெய்வங்களை வழிபட்டு வருகிறது. அந்தப் பொய் தெய்வங்களிலெல்லாம் தலையானது, பணம்' என்று திருத்தந்தையர் இல்ல மறையுரையாளரான அருள்பணி Raniero Cantalamessa அவர்கள் கூறினார்.
புனித வெள்ளியன்று மாலை 5 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் இடம்பெற்ற திருப்பாடுகள் மற்றும் திருச்சிலுவை வழிபாட்டில், அருள்பணி Cantalamessa அவர்கள், பணத்தாசை இவ்வுலகில் விளைவிக்கும் தீமைகளை மையப்படுத்தி மறையுரை வழங்கினார்.
இயேசுவின் சீடர்களில் ஒருவராக தன் வாழ்வைத் துவக்கிய யூதாசு, இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் துரோகியாக மாறும் அளவுக்கு அவரை மாற்றியது பணத்தாசை என்பதை அருள்பணி Cantalamessa அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.
யூதாசிடம் பணப்பை இருந்ததென்றும் (யோவான் 13: 29), அவர் பொதுப் பணத்தை எடுத்துச் செலவழித்தார் என்றும் வாசிக்கும்போது, பொதுமக்கள் பணத்தைக் கண்காணிப்போருக்குச் செய்திகள் சொல்லப்படுகின்றனவா என்ற கேள்வியை அருள்பணி Cantalamessa அவர்கள் எழுப்பினார்.
அண்மைய ஆண்டுகளில், உலக நாடுகள் அனுபவித்த, குறிப்பாக, இத்தாலி நாடு இன்னும் அனுபவித்துவரும் பொருளாதாரச் சரிவு ஒரு சிலரின் தீராதப் பணத்தாசையால் விளைந்தது என்பதையும் அருள்பணி Cantalamessa அவர்கள் சுட்டிக்காட்டினார்.
மனிதர்களை, குறிப்பாக, இளையோரை, போதைப் பொருள்களுக்கு அடிமையாக்குதல், அழிவுக் கருவிகளை உருவாக்குதல் மற்றும் விற்பனை செய்தல், குழந்தைகளைக் கடத்திச் சென்று அவர்கள் உள் உறுப்புக்களை அகற்றி விற்பனை செய்தல் போன்ற கொடுமைகள் இவ்வுலகில் தாண்டவமாடுவதற்கு ஆணிவேராக விளங்குவது பணத்தாசையே என்று அருள்பணி Cantalamessa அவர்கள் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
அளவுக்கதிகமாக மாத ஊதியமும், ஓய்வூதியமும் பெறுவோரைக் குறிப்பிட்டுப் பேசிய அருள்பணி Cantalamessa அவர்கள், எளிய மக்களைக் காட்டிலும் 100 மடங்கு அதிகமாக திரட்டியச் செல்வத்தால் சுகம்காண நினைத்த இவர்களில் பலர், சிறைகளுக்குச் செல்லவேண்டியச் சூழலையும் சுட்டிக்காட்டினார்.
தவறுகள் செய்வது அனைத்து மனிதர்களின் பலமற்ற நிலை என்றாலும், அந்நிலையிலிருந்து மீண்டும் இறைவனிடம் வருவதற்கு, புனித பேதுருவைப் போல முயலவேண்டுமே தவிர, தீமையிலேயே தங்கி வாழ்வை முடித்துக் கொண்ட யூதாசைப் போல இருப்பது தவறு என்பதையும் தன் மறையுரையின் இறுதியில், திருத்தந்தையர் இல்ல மறையுரையாளரான அருள்பணி Cantalamessa அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...