Wednesday, 23 April 2014

செய்திகள் - 23.04.14

செய்திகள் - 23.04.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை 23ம் ஜான் - "என்னைப் புனிதத் தந்தை என்று மக்கள் அழைக்கின்றனர்; அதற்குத் தகுந்ததுபோல், நான் புனிதனாக வாழ முயற்சி செய்யவேண்டும்"

2. கடந்த 50 ஆண்டுகளில் திருஅவையை வழிநடத்திய அனைத்துத் திருத்தந்தையரும் உலக அமைதியை வலியுறுத்தியுள்ளனர் - திருப்பீடச் செயலர்

3. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரு திருத்தந்தையரையும் ஒரே நாளில் புனிதர்களாக உயர்த்துவது பொருத்தமான முயற்சி - கர்தினால் Poupard

4. புனிதர் பட்டத் திருவிழாவுக்கு முன்னோடியாக, உரோம் நகரில் இளையோரை மையப்படுத்திய நிகழ்வுகள்

5. இறை இரக்க ஞாயிறன்று, போலந்தில் உள்ள அனைத்து பங்குக் கோவில்களிலும் "இறை இரக்கத்தின் சுடரை" ஏந்தியபடி மக்கள் செபத்தில் இணைவர்

6. திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிவரும் காலைத் திருப்பலி மறையுரைகளின் தொகுப்பு வெளியீடு

7. அரசின் அடக்கு முறைகளையும் தாண்டி, வியட்நாம் கத்தோலிக்க மக்கள், புனித வார நிகழ்ச்சிகளில் ஆர்வமானப் பங்கேற்பு

8. ஏப்ரல் 23 - உலக புத்தக தினம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை 23ம் ஜான் - "என்னைப் புனிதத் தந்தை என்று மக்கள் அழைக்கின்றனர்; அதற்குத் தகுந்ததுபோல், நான் புனிதனாக வாழ முயற்சி செய்யவேண்டும்"

ஏப்.23,2014. திருத்தந்தை 23ம் ஜான் அவர்களை எண்ணிப்பார்க்கும்போது, எளிமை, தாராள மனப்பான்மை, மற்றும் உண்மையான மகிழ்ச்சி ஆகிய உணர்வுகளே நம் உள்ளத்தை நிறைக்கின்றன என்று அருள் பணியாளர் Giovangiuseppe Califano அவர்கள் கூறினார்.
ஏப்ரல் 27, வருகிற ஞாயிறன்று திருத்தந்தையர் 23ம் ஜான் அவர்களும், 2ம் ஜான்பால் அவர்களும் புனிதர்களாக உயர்த்தப்படும் முக்கிய நிகழ்வையொட்டி, திருப்பீடச் செய்தித் தொடர்பகம், இச்செவ்வாயன்று செய்தியாளர்களுக்கு முதல் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தது.
திருத்தந்தையர்களின் புனிதர் படி நிலைக்காக தரவுகளைத் திரட்டிய அருள் பணியாளர் Califano அவர்களும், அருள் பணியாளர் Slawomir Oder அவர்களும் செய்தியாளர்களிடம் பேசுகையில், இவ்விரு திருத்தந்தையரின் சிறப்பான குணங்களைக் குறித்துப் பேசினர்.
"என்னைப் புனிதத் தந்தை என்று மக்கள் அழைக்கின்றனர்; அதற்குத் தகுந்ததுபோல், நான் புனிதனாக வாழ முயற்சி செய்யவேண்டும்" என்று திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் குறிப்பிட்டுள்ளதை நினைவுபடுத்திய அருள் பணியாளர் Califano அவர்கள், தன் சிறுவயது முதல் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் புனிதராக மாறும் ஆவலை வெளியிட்டுள்ளார் என்று கூறினார்.
திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களைக் குறித்துப் பேசிய அருள் பணியாளர் Oder அவர்கள், திருத்தந்தையின் செப வாழ்வு, துன்பங்களைத் தாங்கிய பொறுமை ஆகியவற்றை வலியுறுத்தினார்.
புனிதர் பட்டத் திருவிழாவுக்கு முன்னர், திருப்பீடச் செய்தித் தொடர்பகம் இன்னும் சில கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. கடந்த 50 ஆண்டுகளில் திருஅவையை வழிநடத்திய அனைத்துத் திருத்தந்தையரும் உலக அமைதியை வலியுறுத்தியுள்ளனர் - திருப்பீடச் செயலர்

ஏப்.23,2014. கடந்த 50 ஆண்டுகளில் திருஅவையை வழிநடத்திய அனைத்துத் திருத்தந்தையரும் உலக அமைதியை வலியுறுத்தி செய்திகளும், சுற்றுமடல்களும், உரைகளும் வழங்கியுள்ளனர் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
வருகிற ஞாயிறன்று நடைபெறும் புனிதர் பட்ட விழாவையொட்டி, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், "அமைதிக்கானத் திருத்தந்தையர்" (The Popes of Peace) என்ற பெயரில் வெளியான ஒரு நூலுக்கு அளித்தப் பேட்டியொன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், இரஷ்யாவுக்கும் இடையே போர் மூளும் அளவுக்கு, கியூபா ஏவுகணை நெருக்கடி உருவான நேரத்தில், திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும், அவர் உலகினர் அனைவருக்கும் வழங்கிய "உலகில் அமைதி" (Pacem in Terris) என்ற புகழ்மிக்க சுற்றுமடலையும் கர்தினால் பரோலின் அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், உலக அமைதி குறித்து மடல்கள், செய்திகள், உரைகள் பலவும் வழங்கியதோடு, போர்ச் சூழலால் பாதிக்கப்பட்ட பல நாடுகளுக்கு நேரடியாகச் சென்று, அமைதிக்காக விண்ணப்பித்தார் என்று கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்தார்.
இவ்விரு திருத்தந்தையரின் அமைதி முயற்சிகள் உலக மக்களின் கவனத்தை ஈர்த்தாலும், 2ம் உலகப் போர் மூண்டபொழுது அதற்கு எதிராகக் குரல்கொடுத்த திருத்தந்தை 12ம் பயஸ், ஐ.நா.அவையில் உலக அமைதி குறித்துப் பேசிய திருத்தந்தை 6ம் பவுல் ஆகியோரும், மேற்கொண்ட முயற்சிகளை நாம் மறக்கக்கூடாது என்று கூறினார், திருப்பீடச் செயலர்.
நாம் கடந்து வந்த நூற்றாண்டில் பெரிதும், சிறிதுமாக இவ்வுலகம் சந்தித்துள்ள போர்களைக் குறித்து கவலை வெளியிட்டுள்ள திருத்தந்தையரின் வழிவந்துள்ள முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், தற்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், உலக அமைதிக்காகத் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்று கர்தினால் பரோலின் அவர்கள், தன் பேட்டியில் வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரு திருத்தந்தையரையும் ஒரே நாளில் புனிதர்களாக உயர்த்துவது பொருத்தமான முயற்சி - கர்தினால் Poupard

ஏப்.23,2014. இறைவனுக்குத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த அழகாலும், மக்களுக்குப் பணியாற்றிய உண்மையான அருள் பணியாளர்களாக வாழ்ந்ததாலும், திருத்தந்தையர் 23ம் ஜான் அவர்களும், 2ம் ஜான்பால் அவர்களும் இன்று புனிதர்களாகப் போற்றப்படுகின்றனர் என்று முன்னாள் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
திருத்தந்தை 23ம் ஜான் அவர்களின் பதவிக் காலத்தில் திருப்பீடச் செயலர் அலுவலகத்தில் பணியாற்றி, பின்னர், திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் பதவிக் காலத்தில், திருப்பீடக் கலாச்சார அவையின் தலைவராக பணியாற்றிய கர்தினால் Paul Poupard அவர்கள், CNA கத்தோலிக்கச் செய்திக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
"கீழ்ப்படிதலும் அமைதியும்" என்ற விருதுவாக்குடன் பணியாற்றிய திருத்தந்தை 23ம் ஜான் அவர்களும், "முற்றிலும் உமக்கே" என்ற விருதுவாக்குடன் பணியாற்றிய திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களும் தங்களை முற்றிலும் இறைவனுக்கு அர்ப்பணித்தவர்கள் என்பதை அவர்களது விருதுவாக்குகளே பறைசாற்றுகின்றன என்று கூறினார் கர்தினால் Poupard.
திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் திருஅவையின் கதவுகளைத் திறந்ததால், திருத்தந்தை 2ம் ஜான் அவர்களால் எளிதாகப் பணியாற்ற முடிந்தது என்றும், இவ்விருவரையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரே நாளில் புனிதர்களாக உயர்த்துவது பொருத்தமான முயற்சி என்றும் கர்தினால் Poupard அவர்கள் எடுத்துரைத்தார்.
இவ்விரு திருத்தந்தையரும் பல குணங்களில் ஒத்திருந்தாலும், இருவரும் இன்னும் பல வழிகளில் வேறுபட்டுள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் Poupard அவர்கள் புனிதம் அடைவதற்குப் பல வழிகள் உள்ளன என்பதை இந்நாளில் கடவுள் நமக்கு நினைவுறுத்துகிறார் என்று கூறினார்.

ஆதாரம் : CNA/EWTN

4. புனிதர் பட்டத் திருவிழாவுக்கு முன்னோடியாக, உரோம் நகரில் இளையோரை மையப்படுத்திய நிகழ்வுகள்

ஏப்.23,2014. வருகிற ஞாயிறன்று நடைபெறவிருக்கும் புனிதர் பட்டத் திருவிழாவுக்கு ஒரு முன்னோடியாக, இளையோரை மையப்படுத்திய நிகழ்வுகள் இச்செவ்வாய் மாலை உரோம் நகரின் புனித லாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தில் துவங்கின.
"புனிதர்களின் உரிமைப்பேறு" என்ற தலைப்பில் நடத்தப்படும் இம்முயற்சிகளின் முதல் நிகழ்வில் கலந்துகொள்ள பல்லாயிரம் இளையோர் புனித லாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தில் கூடியிருந்தனர்.
திருத்தந்தை 23ம் ஜான் அவர்களின் புனிதர் பட்ட நிலைக்கென உழைத்த அருள் பணியாளர் Giovangiuseppe Califano அவர்கள் இளையோரிடம் பேசியபோது, முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் தன் பணிக்காலத்தில் இளையோரைத் தேடி பங்குத் தளங்களுக்கும், சிறைச் சாலைகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் சென்றார் என்பதைக் குறிப்பிட்டார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் வழியாக, திருஅவையின் கதவுகள், சன்னல்களைத் திறந்த திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், உரையாடல் கலாச்சாரத்தில் வளர்வதற்கு இன்றும் நம்மை அழைக்கிறார் என்று அருள் பணியாளர் Califano அவர்கள் வலியுறுத்தினார்.
திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் காட்டியுள்ள புனித வாழ்வு நாம் அனைவருமே பின்பற்றக் கூடிய எளிய வழியே என்பதை அருள் பணியாளர் Califano அவர்கள் சுட்டிக்காட்டினார்.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் புனிதர் பட்ட நிலைக்கென உழைத்த அருள் பணியாளர் Slawomir Oder அவர்கள், உலகெங்கிலும் உள்ள இளையோரைக் கவர்ந்து, அவர்கள் மத்தியில், குறிக்கோள் உள்ள வாழ்வில் பிடிப்பை உருவாக்கியவர், திருத்தந்தை 2ம் ஜான்பால் என்று கூறினார்.

ஆதாரம் : CNA/EWTN

5. இறை இரக்க ஞாயிறன்று, போலந்தில் உள்ள அனைத்து பங்குக் கோவில்களிலும் "இறை இரக்கத்தின் சுடரை" ஏந்தியபடி மக்கள் செபத்தில் இணைவர்

ஏப்.23,2014. திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் புனிதராக உயர்த்தப்படும் இஞ்ஞாயிறன்று, போலந்து நாட்டில் உள்ள அனைத்து பங்குக் கோவில்களிலும் "இறை இரக்கத்தின் சுடரை" ஏந்தியபடி மக்கள் செபத்தில் இணைவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2002ம் ஆண்டு போலந்தின் Lagiewnikiல் அமைந்துள்ள 'இறை இரக்கத்தின் திருத்தல'த்தை அர்ச்சிக்கும்போது, முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், "இறை இரக்கத்தின் சுடர் உலகெங்கும் செல்லவேண்டும்" என்று புனித Faustina Kowalska கூறியதை நினைவுறுத்தி, மறையுரை வழங்கினார்.
இறை இரக்க ஞாயிறன்று திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் புனிதராக உயர்த்தப்படும் வேளையில், இறை இரக்கத்தின் சுடர் இப்புனித தலத்திலிருந்து ஒவ்வொரு பங்குக் கோவிலுக்கும் எடுத்துச் செல்லப்படும் என்றும், இச்சுடரிலிருந்து மக்கள் ஏற்றும் மெழுகு திரிகளுடன் வழிபாடுகளும், திருப்பலிகளும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முத்திப்பேறு பெற்றத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் பரிந்துரையை வேண்டி மக்கள் அனுப்பியுள்ள பல்லாயிரம் விண்ணப்பங்களும் இந்நாளில் பலிபீடங்களில் ஒப்புக்கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கிவரும் காலைத் திருப்பலி மறையுரைகளின் தொகுப்பு வெளியீடு

ஏப்.23,2014. கடந்த 83 ஆண்டுகளாக திருத்தந்தையரின் குரலாகச் செயல்பட்டு வரும் வத்திக்கான் வானொலி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தனிப்பட்டக் கருத்துக்களை மக்கள் கேட்கும்படி செய்வதில் பெருமை கொள்கிறது என்று வத்திக்கான் வானொலி தலைமை இயக்குனர் அருள் பணியாளர் FL அவர்கள் கூறினார்.
கடந்த ஓராண்டிற்கும் மேலாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தான் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிவரும் காலைத் திருப்பலிகளில் வழங்கியுள்ள மறையுரைகளின் தொகுப்பாக, நூலொன்று ஏப்ரல் 24, இவ்வியாழனன்று வெளியாகிறது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இதுவரை வழங்கியுள்ள 186 மறையுரைகள் அடங்கிய இந்நூல், "உண்மை ஒரு நேரடி சந்திப்பு: சாந்தா மார்த்தாவிலிருந்து மறையுரைகள்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
வத்திக்கான் வானொலி தலைமை இயக்குனர் அவர்களும், CC என்ற இத்தாலிய இதழின் ஆசிரியர் இயேசு சபை அருள் பணியாளர் AS அவர்களும் இந்நூலுக்கு முன்னுரை வழங்கியுள்ளனர்.
மேமாதம் 7ம் தேதி முதல் விற்பனைக்கு வரவிருக்கும் இந்நூலுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் குரல் அடங்கிய ஒரு குறுந்தகடும் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : ICN/VIS

7. அரசின் அடக்கு முறைகளையும் தாண்டி, வியட்நாம் கத்தோலிக்க மக்கள், புனித வார நிகழ்ச்சிகளில் ஆர்வமானப் பங்கேற்பு

ஏப்.23,2014. வியட்நாம் அரசின் அடக்கு முறைகளையும் தாண்டி, அந்நாட்டு கத்தோலிக்க மக்கள், புனித வார நிகழ்ச்சிகளில் ஆர்வமாகப் பங்கேற்றனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
மலைகள் அதிகம் நிறைந்த Konum பகுதியில், பொதுவான வழிபாட்டுத் தலங்கள் அமைக்கக் கூடாது என்று வியட்நாம் அரசு கட்டுப்பாடு விதித்துள்ளதால், அப்பகுதியின் ஆயர் Michael Duc Hoang Oanh அவர்கள், தனியார் இல்லம் ஒன்றில் புனித வார வழிபாடுகளை நிகழ்த்தினார்.
அதேபோல், Dak Mot மாவட்டத்திலும் பல இடங்களில் அரசின் கவனத்தை ஈர்க்காமல், நடைபெற்ற புனித வார நிகழ்ச்சிகளில் 3000த்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர் என்று ஆசிய செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
மத உரிமைகள் பெரும்பாலும் மறுக்கப்பட்டுள்ள வியட்நாமில், கிறிஸ்தவ மற்றும் புத்த மதத்தலைவர்கள் அரசின் அடக்கு முறைகளுக்கு அதிகம் உள்ளாகின்றனர் என்றும் இச்செய்திக் குறிப்பு கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews

8. ஏப்ரல் 23 - உலக புத்தக தினம்

ஏப்.23,2014. ஏப்ரல் 23, இப்புதனன்று உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. எல்லா வேறுபாடுகளையும் கடந்த உலக வாசகர்களின் பிறந்த நாளாக புத்தக தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலகின் தலைசிறந்த எழுத்தாளர்கள் என்று கருதப்படும் Miguel de Cervantes Saavedra, Maurice Druon, Inca Garcilaso de la Vega, Haldor Kiljan Laxness, Manuel Mejía Vallejo, Vladimir Nabokov, Josep Pla, William Shakespeare ஆகியோரின் பிறந்த அல்லது இறந்த நாளாக ஏப்ரல் 23ம் தேதி இருப்பதால், ஐ.நா.வின் கல்வி மற்றும் கலாச்சார நிறுவனம், UNESCO, 1995ம் ஆண்டு முதல், ஏப்ரல் 23ம் தேதியை உலகப் புத்தக தினமாகக் கொண்டாடி வருகிறது.
ஸ்பெயின் நாட்டின் கட்டலோனியா நகரத்தில், இந்நாளைக் காதலர் தினம் போலக் கொண்டாடுகின்றனர். ஆடவர் தங்கள் மனம் கவர்ந்த நங்கையர்க்கு ரோஜா மலர்களைப் பரிசாக அளிக்கும் வேளையில், பதிலுக்கு, அப்பெண்கள் புத்தகங்களை வழங்குவர்.
இந்நாளில் 4 மில்லியன் மலர்களும், 8 லட்சம் நூல்களும் கை மாறும் என்றும், ஆண்டு முழுவதும் நடக்கும் புத்தக விற்பனையில் சரிபாதி இந்த ஒரு நாளில் விற்றுவிடும் என்றும் இணையதள குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

ஆதாரம் : தி இந்து

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...