Saturday, 19 April 2014

செய்திகள் -16.04.14

செய்திகள் -16.04.14
 ------------------------------------------------------------------------------------------------------

1. ஏப்ரல் 16 - திருத்தந்தையின் புதன் பொது மறையுரை

2. திருத்தந்தையின் ஒப்புதலுடன் புனிதர்பட்ட நிலைக்கான படிகளுக்கென புதிய பரிந்துரைகள்

3. புனிதவார நிகழ்ச்சிகளின் நேரடி ஒளிபரப்பு

------------------------------------------------------------------------------------------------------

ஏப்ரல் 16 - திருத்தந்தையின் புதன் பொது மறையுரை

ஏப்.16,2014. இயேசுவின் பாடுகளையும் மரணத்தையும் அதன் உச்சகட்டமான உயிர்ப்பையும் கொணரும் புனிதவாரத்தில் இருக்கின்றோம் நாம். இப்புனித வாரத்தின் புதனன்று உரோம் நகரின் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு, புனித வார நிகழ்வுகள் குறித்தே தன் மறையுரையை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வாரம் உரோம் நகரில் திருத்தந்தையுடன் இடம்பெறும் புனிதவார நிகழ்வுகளிலும், 20ம் தேதி ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் உயிர்ப்புப் பெருவிழாச் சடங்குகளிலும், அதற்கடுத்த வாரம் 27ம் தேதி, இறை இரக்கத்தின் ஞாயிறன்று, முத்திப்பேறு பெற்ற 23ம் ஜான், மற்றும், இரண்டாம் ஜான்பால் ஆகிய இரு திருத்தந்தையரும் புனிதர்களாக அறிவிக்கப்படும் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள உலகெங்கிலுமிருந்து திருப்பயணிகள் உரோம் நகர் வந்தவண்ணம் உள்ளனர். இவர்களின் பெருமெண்ணிக்கையிலான பங்கேற்புடன் திருத்தந்தையின் புதன் பொது மறையுரை  நிகழ்ச்சி இடம்பெற்றது. இயேசுவின் பாடுகள் மற்றும் உயிர்ப்பு குறித்த அவரின் மறையுரைக்கு இப்போது செவிமடுப்போம்.
அன்பு சகோதர சகோதரிகளே, இப்புனித வாரத்தின் புதனன்று வழங்கப்பட்டுள்ள திருப்பலி வாசகம், யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுத்த நிகழ்வு குறித்து எடுத்துரைத்து, இயேசுவின் பாடுகளைத் துவக்கி வைக்கின்றது. நம்மீது கொண்ட பேரன்பால் இயேசுகிறிஸ்து தன்னையேக் கையளித்து, தாழ்ச்சியின் பாதையில் சுயவிருப்பத்துடன் நம் மீட்புக்காக நடைபோட்டார். புனித பவுல் கூறுவதுபோல், 'அவர் தம்மையே வெறுமையாக்கி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும், சிலுவைச்சாவையே ஏற்கும் அளவுக்கு கீழ்ப்படிந்து, தம்மையே தாழ்த்திக் கொண்டார் (பிலிப் 2:7-8). இயேசுவின் பாடுகள் குறித்து தியானிக்கும்போது, மனிதகுலம் அனைத்தின் துன்பங்களும் அங்கு பிரதிபலிப்பதை நாம் பார்ப்பதோடு, தீமை, துன்பம் மற்றும் மரணம் என்ற விளங்காதப் புதிர்களுக்கு இறைவன் வழங்கும் பதில்களையும் நாம் புரிந்துகொள்கிறோம்.
இறைவன் தன் மகனை நமக்குக் கொடுத்தார். அவர் நமக்காகத் தாழ்நிலையேற்று, காட்டிக்கொடுக்கப்பட்டு, கைவிடப்பட்டு, இகழ்ச்சிகளை ஏற்று இறந்தார். இருப்பினும் மனித வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், கடவுளின் வெற்றியானது, தோல்வியிலும் வீழ்ச்சியிலும் ஒளிவீசுகின்றது. இயேசுவின் பாடுகள் என்பது தந்தையாம் இறைவனின் முடிவற்ற அன்பை இயேசு வெளிப்படுத்தியதன் உச்சகட்டம், மற்றும் இயேசுவின் வார்த்தைகளில் நாம் விசுவாசம் கொள்வதற்காக விடப்படும் அழைப்பு. நமக்கு விடுதலை வழங்குவதற்காக இயேசுகிறிஸ்து தீமையின் சக்தியை தன் தோள்மேலேயே சுமந்துகொள்கிறார். 'அவரின் காயங்களின்வழி நாம் குணம்பெற்றோம்' (1பேதுரு 2:24). இவ்வாரத்தில் இயேசுவின் சிலுவைப்பாதையைப் பின்பற்றும் நாம், இறைவிருப்பத்திற்கு அன்புடன் கீழ்ப்படிபவதில் இயேசுவைப் பின்பற்ற, குறிப்பாக நம் துன்பநேரங்களிலும் நாம் தாழ்நிலைப்படுத்தப்படும் நேரங்களிலும் அவரது எடுத்துக்காட்டான வாழ்வைப் பின்பற்றி, ஒப்புரவு, மீட்பு மற்றும் புதுவாழ்வு எனும் கொடைகளுக்கு நம் இதயங்களைத் திறப்போமாக.
இவ்வாறு தன் புதன் பொதுமறையுரையை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

திருத்தந்தையின் ஒப்புதலுடன் புனிதர்பட்ட நிலைக்கான படிகளுக்கென புதிய பரிந்துரைகள்

ஏப்.16,2014. முத்திப்பேறு பெற்ற இருவரின் பரிந்துரைகளால் இடம்பெற்ற புதுமைகள் குறித்த  விவரங்களும், வீரத்துவப்பண்புகளுக்காக இரு இறையடியார்களின் பெயர்களும் இச்செவ்வாய்க்கிழமை மாலையில் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
பிரான்சிஸ்கன் துறவுச்சபையைச் சேர்ந்த இத்தாலியின் அருளாளர் கசோரியாவைச் சேர்ந்த முத்திப்பேறு பெற்ற லூதோவிக்கோவின் பரிந்துரையால் இடமெற்ற புதுமை குறித்த விவரமும், புனித பிரான்சிசின் மூன்றாம் சபையைச் சேர்ந்த இத்தாலியின் முத்திப்பேறு பெற்ற அமாத்தோ ரொங்கோனி அவர்களின் பரிந்துரையால் இடம்பெற்ற புதுமை குறித்த விவரமும் இச்செவ்வாய்க்கிழமை மாலை திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டு, புனிதர்பட்ட நிலக்கான படிகளுக்கென ஏற்றுக்கொள்ளப்பட்டன. 
மேலும், பிரான்சில் பிறந்து, இயேசுவின் திரு இருதயச் சபையில் இணைந்து குருவாகிPapua நாட்டில் பணியாற்றிய பேராயர் Alano Maria Guynot, மற்றும், ஆஸ்திரியாவில் பிறந்து புனித மீட்பர் சபை குருவான Guglielmo Janauschek, ஆகிய இரு இறையடியார்களின் பெயர்களும் அவர்களின் வீரத்துவப் பண்புகளுக்காக திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டு, புனிதர் பட்ட நிலக்கான படிகளுக்கென ஏற்றுக்கொள்ளப்பட்டன.

புனிதவார நிகழ்ச்சிகளின் நேரடி ஒளிபரப்பு

ஏப்ரல், 16, 2014.

அன்புள்ளங்களே,

புனித வாரத்தின் இறுதி மூன்று முக்கிய நாட்களான, புனித வியாழன், பெரிய வெள்ளி, மற்றும் புனித சனிக்கிழமை ஆகிய நாட்களில், வத்திக்கான் தமிழ் ஒலிபரப்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெறும். எனவே, செய்திகள் இடம்பெறாது.
இம்மூன்று நாட்களில் இடம்பெறும் சிறப்பு நிகழ்ச்சிகளைக் கேட்க விரும்புவோர், http://ta.radiovaticana.va/index.asp என்ற வலைத்தள முகவரியைச் சொடுக்கவும். இது நேரடியாக உங்களை, வத்திக்கான் வானொலி தமிழ் வலைத்தளத்தின் முகப்பு பக்கத்திற்கு அழைத்துச் செல்லும்.
இந்த முகப்பு பக்கத்தில் வலது ஓரம் அமைந்துள்ள பகுதியில், Vatican Agenda என்று துவங்கும் வரிசையில், LATEST BROADCASTS என்ற கட்டத்தில் காணப்படும் MP3 என்ற அடையாளக் குறியைச் சொடுக்கினால், எமது அன்றைய ஒலிபரப்பைக் கேட்கலாம்.


திருத்தந்தை தலைமையேற்கும் புனித வார நிகழ்ச்சிகளின் நேரடி ஒளிபரப்பைக் காண...
நீங்கள் செய்யவேண்டியது இதுதான்:
வத்திக்கான் வானொலியின் பொதுப் பக்கத்தைத் திறக்க, இங்கு கொடுக்கப்பட்டுள்ள முகவரியைச் சொடுக்கவும் - http://www.radiovaticana.va/#.
வத்திக்கான் வானொலியின் பொதுப் பக்கத்தில், திருத்தந்தையரின் உருவங்கள் அடங்கிய ஓவியத்திற்குக் கீழ், VATICAN PLAYER என்ற பகுதியில், VIDEO என்ற கட்டம் சிவப்பாக ஒளிர்ந்தால், அவ்வேளையில் திருத்தந்தையின் நிகழ்ச்சி நடைபெறுவதாகத் தெரிந்துகொள்ளலாம். அந்த VIDEO கட்டத்தைச் சொடுக்கினால், நேரடி ஒளிபரப்பை நீங்களும் காணலாம்.
இப்பகுதி சரியாக வேலை செய்யாவிடில், அதற்கு அடுத்தக் கட்டமாக, YouTube பகுதி உள்ளது. அங்கு, THE VATICAN என்ற கட்டத்தைச் சொடுக்கினால், வத்திக்கான் நேரடி ஒளிபரப்பை YouTube வழியாகக் காணலாம்.

திருத்தந்தை தலைமையேற்கும் புனித வார நிகழ்ச்சிகள் - உரோம் நேரப்படி...
(இந்திய நேரத்திலிருந்து, உரோம் நேரம் 3 மணி 30 நிமிடங்கள் பின்னோக்கி உள்ளது)

ஏப்ரல் 17, புனித வியாழன் - காலை 9.30 மணி - புனித பேதுரு பசிலிக்காவில் திருத்தந்தை நிறைவேற்றும், புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலி (Chrism Mass).
"Don Carlo Gnocchi"  என்ற அறக்கட்டளை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தோருக்கென நடத்தும் ஓர் இல்லத்தில், புனித வியாழன் மாலை 17.30 மணிக்கு, திருத்தந்தை திருப்பலி நிகழ்த்துவார்.

ஏப்ரல் 18, பெரிய வெள்ளி - பிற்பகல், 17.00 மணி - புனித பேதுரு பசிலிக்காவில் திருத்தந்தை நிறைவேற்றும் திருப்பாடுகள், திருச்சிலுவை வழிபாடு.
இரவு 21.00 மணியளவில், உரோம் நகர் Colosseum திறந்த வெளியரங்கில்
திருத்தந்தையின் தலைமையில் சிலுவைப்பாதை நடைபெறும்.

ஏப்ரல் 19, பெரியச் சனிக்கிழமை இரவு 22.00 மணி - புனித பேதுரு பசிலிக்காவில் உயிர்ப்புத் திருவிழிப்புத் திருச்சடங்கும், திருப்பலியும்.

ஏப்ரல் 20, உயிர்ப்புப் பெருவிழா - காலை 10.15 மணி - புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில், திருப்பலியும் அதைத் தொடர்ந்து, திருத்தந்தை வழங்கும், "ஊருக்கும் உலகுக்கும்" (Urbi et Orbi) என்ற சிறப்புச் செய்தியும், ஆசீரும்.



முக்கியமான செய்தி:
புனிதர் பட்ட விழாவின் நேரடி ஒளிபரப்பு

ஏப்ரல் 27, இறை இரக்க ஞாயிறன்று, முத்திப்பேறு பெற்ற திருத்தந்தையர் 23ம் ஜான், மற்றும் 2ம் ஜான்பால் ஆகிய இருவரையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனிதராக அறிவிக்க உள்ளார். இத்திருப்பலியின் நேரடி ஒளிபரப்பையும் எமது வலைதளத்தில் காணலாம்.
ஏப்ரல் 27 ஞாயிறு - புனித பேதுரு பசிலிக்கா வளாகத்திலும் இன்னும் உரோம் நகரின் பிற இடங்களிலும் கூடிவரும் பல இலட்சம் மக்களுடன் நீங்களும் இத்திருப்பலியில் கலந்து கொள்ளலாம்.
இத்திருப்பலி ஏப்ரல் 27, ஞாயிறு காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும். நேரடி ஒளிபரப்பு 30 நிமிடங்களுக்கு முன்னதாகத் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...