Wednesday, 30 April 2014

செய்திகள் - 30.04.14

செய்திகள் - 30.04.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருப்பீடத்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே 40 ஆண்டு அரசியல் உறவு

2. கொலம்பிய அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு திருத்தந்தை காட்டிவரும் ஆர்வம் குறித்து புரட்சிக்குழு மகிழ்ச்சி

3. இவ்வார இறுதியில் இலங்கை ஆயர்களின் 'அட் லிமினா' சந்திப்பு

4. தாய்லாந்து மதங்கள் ஒன்றிணைந்து அமைதிக்கான செபவழிபாடு

5. ஆப்பிரிக்க நாடுகள் தங்களுக்குள்ளேயேத் தீர்வு காண ஆயர்கள் வேண்டுகோள்

6. அதிக நார்ச்சத்து கொண்ட உணவு மாரடைப்பு மீண்டும் வருவதைத் தடுக்கும் - ஆய்வு

7. நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் சென்னை, கொழும்பு போன்ற கடலோர நகரங்களின் பூமிமட்டம் வேகமாக உள்ளிறங்குவதாக எச்சரிக்கை

------------------------------------------------------------------------------------------------------

1. திருப்பீடத்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே 40 ஆண்டு அரசியல் உறவு

ஏப்.30,2014. திருப்பீடத்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே அரசியல் உறவு உருவாக்கப்பட்டதன் 40ம் ஆண்டு நிறைவுறும் இவ்வேளையில், அந்நாடில் கத்தோலிக்க திருஅவை ஆற்றிவரும் நலஅதரவு, கல்வி மற்றும் பிறரன்பு நடவடிக்கைகளை நன்றியுடன் நினைவுகூர்வதாக தெரிவித்தார் திருப்பீடச்செயலர் கர்தினால் Pietro Parolin. மனித உரிமைகள் மதிக்கப்படுவது மேம்படுத்தப்படுவதில் கத்தோலிக்கர்கள் ஆற்றவேண்டிய முக்கியக் கடமையை வலியுறுத்திய கர்தினால் பரோலின், சமுதாய முன்னேற்றத்தில் கத்தோலிக்கர்கள் ஆற்றவேண்டிய கடமை நிறையவே உள்ளது என்றார்.
சகோதரத்துவ அன்பிற்கு சாட்சிகளாக விளங்கவேண்டிய கத்தோலிக்கர்களின் கடமையை எடுத்துரைத்த திருப்பீடச் செயலர், திருப்பீடத்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான  அரசியல் ஒப்பந்தம் இத்தகைய செயல்பாடுகளுக்கு ஊக்கம் தந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானாலி

2. கொலம்பிய அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு திருத்தந்தை காட்டிவரும் ஆர்வம் குறித்து புரட்சிக்குழு மகிழ்ச்சி

ஏப்.30,2014. கொலம்பியாவில் அமைதிக்கென கியூப தலைநகரில் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் ஆர்வம் காட்டி வருவதற்கு தன் நன்றியை வெளியிட்டுள்ளது கொலம்பியாவின் FARC என்ற புரட்சி குழு.
கொலம்பியாவிற்கான ஹவானா அமைதிப் பேச்சுவார்த்தைகள் நல்லதொரு முடிவைக் கொணரட்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளது, தங்களுக்கு ஊக்கம்தரும் வார்த்தைகளாக உள்ளது என FARC குழுவின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் கூறினார்.
இதற்கிடையே, கொலம்பிய ஆயர் பேரவை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த வார இறுதியில் கொலம்பிய வெளியுறவு அமைச்சர் Maria Angela Holguin வத்திக்கான் வந்திருந்தபோது திருப்பீடச் செயலர் கர்தினால் Pietro Parolin கொலம்பிய அமைதிப்பேச்சுவார்த்தைகள் குறித்து ஆர்வமுடன் கேட்டுத்தெரிந்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Fides

3. இவ்வார இறுதியில் இலங்கை ஆயர்களின் 'அட் லிமினா' சந்திப்பு

ஏப்.30,2014. 5 ஆண்டிற்கு ஒருமுறை உலகின் ஆயர்கள் உரோம் நகர் வந்து தூய பேதுரு கல்லறையைத் தரிசிப்பதுடன், திருத்தந்தையுடன் கலந்துரையாடும் 'அட் லிமினா' எனும் சந்திப்பை மேமாதம் 2 மற்றும் 3 தேதிகளில் மேற்கொள்ள உள்ளனர் இலங்கை ஆயர்கள்.
கர்தினால் ஆல்ஃபிரட் மால்கம் இரஞ்சித்தின் கீழ் இயங்கும் கொழும்பு உயர் மறைமாவட்டம் மற்றும் 10 மறைமாவட்டங்களைக் கொண்டுள்ள இலங்கையிலிருந்து வரும் ஆயர்களை வெள்ளி, சனி தினங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்து உரையாடுவார்.
70 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோரை புத்த மத்ததினராகவும், 7.1 விழுக்காட்டினரை இந்துக்களாகவும், 7.6 விழுக்காட்டினரை இஸ்லாமியராகவும், 8 முதல் 9 விழுக்காட்டினரை கிறிஸ்தவர்களாகவும் கொண்டுள்ளது இலங்கை.

ஆதாரம் : வத்திக்கான் வானாலி

4. தாய்லாந்து மதங்கள் ஒன்றிணைந்து அமைதிக்கான செபவழிபாடு

ஏப்.30,2014. தாய்லாந்தில் இடம்பெற்றுவரும் அரசியல் பதட்டநிலைகளைக் களையும் நோக்கில் நாட்டின் நான்கு முக்கிய மதங்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து கத்தோலிக்கர்களுடன் அமைதிக்கான செப வழிபாட்டில் கலந்துகொண்டனர்.
செபம் என்பது சக்தி நிறைந்தது அது ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை அனைத்து மதங்களும்  ஏற்றுக்கொள்கின்றன என்ற பாங்காக் பேராயர் Francis Xavier Kriengsak Kovithavanij, குரலற்றோரின் மௌன குரலுக்கு செவிமடுத்து இந்த மதத்தலைவர்கள் அமைதிக்கான செபத்தில் ஈடுபட்டதாக உரைத்தார்.
தாய்லாந்தின் புத்த, இஸ்லாம், இந்து மற்றும் சீக்கிய மதத்தலைவர்களுடன் இணைந்து கத்தோலிக்கர்கள் நிறைவேற்றிய இந்த செபவழிபாட்டில் அமைதிக்கான செபம் மூலம் ஐந்து மதங்கள் தங்கள் கைகளை இணைத்துள்ளன.
அனைவருக்கும் சரிநிகரான நீதி, சுரண்டலின்மை, வன்முறையற்ற நிலை போன்றவைகளை, பொதுநலனை மனதில்கொண்டு வளர்ச்சிக்காகச் செயல்படுத்துவதோடு, பிரச்னைகளுக்குத் தீர்வுக் காண பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என நாட்டின் தலைவர்களுக்கு ஏற்கனவே தாய்லாந்தின் கத்தோலிக்கத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆதாரம் : CNA

5. ஆப்பிரிக்க நாடுகள் தங்களுக்குள்ளேயேத் தீர்வு காண ஆயர்கள் வேண்டுகோள்

ஏப்.30,2014. ஆயுத மோதல்களாலும், பொருளாதார வீழ்ச்சிகளாலும் துன்பங்களை அனுபவிக்கும் ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள், வெளிநாடுகளின் தலையீடுவரை காத்திருக்காமல், பிரச்சனைக்குத் தீர்வு காண உடனடியாக முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் ஆப்பிரிக்காவின் தென்மண்டல ஆயர்கள்.
வெளிநாட்டுச் சக்திகள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும்வரை காத்திருப்பது ஆப்பிரிக்காவுக்கு தலைகுனிவைக் கொணரும் என உரைக்கும் ஆயர்கள், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, நைஜீரியா, தென்சூடான் போன்ற நாடுகள் பிரச்சனைகள் வெடிக்கும்வரை கத்திருந்ததை குறித்துக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மனிதவாழ்வை பாதுகாப்பதே ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாக இருக்கவேண்டும் என்பதை தங்கள் அறிக்கையில் வலியுறுத்தியுள்ள ஆப்ரிக்க தென்மண்டல ஆயர்கள், சண்டைகளாலும், பொருளாதாரக் காரணங்களுக்காகவும் மக்கள் நாடுவிட்டு நாடு குடிபெயர்வது பலநாடுகளின்டையே தீர்வுக்காணப்படவேண்டிய பிரச்சனை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆதாரம் : CNS

6. அதிக நார்ச்சத்து கொண்ட உணவு மாரடைப்பு மீண்டும் வருவதைத் தடுக்கும் - ஆய்வு

ஏப்.30,2014. மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொண்டால் அவர்கள் நீண்ட காலம் வாழலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மாரடைப்பிலிருந்து மீண்டு வந்த நான்காயிரத்திற்கும் அதிகமான மக்களிடம் ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் பொது நலப் பிரிவு  நடத்திய ஆய்வில், மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உடகொண்டால் அவர்கள் நோயால் பாதிக்கப்பட்டு 9 வருடங்களுக்கு பிறகும் ஆரோக்கியமாக உயிர் வாழ்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த உணவுப் பழக்கம் அந்த பாதிக்கப்பட்டவர்களின் எதிர்காலத்தில் வரக்கூடிய, உயிருக்கு ஆபத்தான மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றது.
நார்ச்சத்து, பெரும்பாலும் அதிகமாக பழங்களிலும் காய்கறிகளிலும் மற்றும் முழு தானியங்களிலும் காணப்படுகிறது என்பதும், அது குடலுக்கு மிகவும் நல்லது என்பதும் ஏற்கனவே எல்லோரும் அறிந்த ஒரு விட‌யம் எனினும், பல நாடுகளில் உள்ள மக்கள் அதனை போதுமான அளவு உட்கொள்வதில்லை என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

ஆதாரம் : BBC

7. நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் சென்னை, கொழும்பு போன்ற கடலோர நகரங்களின் பூமிமட்டம் வேகமாக உள்ளிறங்குவதாக எச்சரிக்கை

ஏப்.30,2014. நிலத்தடி நீர் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி உறிஞ்சப்படுவதால் கடலோர நகரங்களின் பூமிமட்டம் வேகமாக உள்ளிறங்குவதாக நிலவியல் அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுற்றுச்சூழலில் ஏற்பட்டுவரும் கடுமையான பாதிப்புக்கள் காரணமாக புவியானது வேகமாக வெப்பமடைந்து வருபவ‌தன் விளைவாக கடலின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்துவருவதால் சென்னை, கொழும்பு போன்ற கடலோர நகரங்களின் கடற்கரையோர பகுதிகள் படிப்படியாக கடலில் மூழ்கும் ஆபத்து அதிகரிக்கும் என்று அறிவியலாளர்கள் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இது போன்ற பெரு நகரங்களில் நிலத்தடி நீரை வேக வேகமாக உறிஞ்சி எடுப்பதால் இந்த நகரங்களின் நிலமே கூட படிப்படியாக உள்ளிறங்கி வருவதாக விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்து எச்சரித்துள்ளனர்.
சில கடலோர நகரங்களில் கடலின் நீர்மட்டம் அதிகரிக்கும் வேகத்தைவிட, நிலப்பகுதியானது பத்து மடங்கு அதிக வேகமாக உள்ளிறங்கிக்கொண்டிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலவியல் அறிவியல் ஒன்றிய அவையின் கூட்டத்தில் பேசிய விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள்.

ஆதாரம் : BBC

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...