செய்திகள் - 21.04.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : இயேசு உயிர்த்துவிட்டார் என்ற மகிழ்வுச் செய்தி நம் இதயங்களில் பொறிக்கப்படவேண்டும்
2. புனிதர் பட்ட நிகழ்ச்சிக்கு வருபவர்களை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் தயார்
3. இவ்வாண்டு முதல் கியூபாவில் புனிதவெள்ளி அரசு விடுமுறையாக அறிவிப்பு
4. தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடச் சென்ற கத்தோலிக்கத் தலைவர்களுக்கு அனுமதி மறுப்பு
5. பொய்க் குற்றச்சாட்டுடன் பாகிஸ்தான் சிறையில் வாடும் கிறிஸ்தவர்களுக்கான சிறப்புச் செபம்
6. நேபாள கிறிஸ்தவர்களுடன் இணைந்து இந்து மற்றும் புத்த மதத்தினரும் உயிர்ப்புப் பெருவிழாவை கொண்டாடியுள்ளனர்
7. இலங்கையில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கிறது, மத்திய வங்கி அறிக்கை
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : இயேசு உயிர்த்துவிட்டார் என்ற மகிழ்வுச் செய்தி நம் இதயங்களில் பொறிக்கப்படவேண்டும்
ஏப்.21,2014. இயேசு உயிர்த்துவிட்டார் என நற்செய்தியில் எழுதப்பட்டுள்ள மகிழ்வின் வார்த்தைகள், நம் இதயங்களிலும் வாழ்விலும் பொறிக்கப்படவேண்டும் என இத்திங்களன்று அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உயிர்ப்புத் திருவிழாவுக்கு மறுநாளும் இத்தாலியில் விடுமுறை நாளாகச் சிறப்பிக்கப்படுவதையொட்டி, தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகளோடு இணைந்து, நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலிச் செபத்தைச் செபித்து உரையும் வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிர்ப்பு ஞாயிறு வழங்கும் வியத்தகு மகிழ்ச்சி நம் எண்ணங்களையும், பார்வைகளையும், நடவடிக்கைகளையும் வார்த்தைகளையும் ஒளிர்விக்கட்டும் என எடுத்துரைத்தார்.
உயிர்த்த இயேசுவைக் காணும் அனுபவத்தைப் பெறுபவர்களது வாழ்வின் அனைத்து நிகழ்வுகளிலும் அது ஒளிர்விடுவதோடு, சுயநலன்களிலிருந்து விடுதலை வழங்கி, துன்ப வேளைகளில் நம்பிக்கையையும் வழங்குகிறது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மகனின் மரணத்தையும் உயிர்ப்பையும் கண்ட அன்னை மரியின் இதயம் தற்போது அமைதி, ஆறுதல், நம்பிக்கை மற்றும் கருணையின் ஆதாரமாக மாறியுள்ளது எனவும் எடுத்துரைத்தார்.
இயேசுவோடு இறந்து அவரோடு உயிர்த்த நம் அன்னைமரி, துயரங்களின் தாயாக இருக்கும் அதேவேளை, நம்பிக்கையின் தாயாகவும் உள்ளார் எனவும் கூறிய திருத்தந்தை, எச்சூழலிலும் தன் நம்பிக்கையை இழக்காத அன்னைமரி, திருத்தூதர்களின் தாயாகவும் திருஅவையின் தாயாகவும் உள்ளார் என்றார்.
இயேசுவின் மரணம் மற்றும் உயிர்ப்புக்கு மௌனச் சாட்சியாக இருந்த அன்னைமரி, நம்மையெல்லாம் உயிர்ப்பின் மகிழ்வு நோக்கி அழைத்துச் செல்லவேண்டும் என வேண்டுவோம் எனக்கூறி, அனைவருடன் இணைந்து அல்லேலூயா வாழ்த்தொலி செபத்தைச் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதற்கிடையே, இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘இயேசுவுடன் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு சந்திப்பின்போதும், கடவுள் மட்டுமே வழங்கவல்ல ஆழமான மகிழ்வால் நிறைக்கப்படுகிறோம்’ என தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. புனிதர் பட்ட நிகழ்ச்சிக்கு வருபவர்களை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் தயார்
ஏப்.21,2014. ஏப்ரல் 27, வரும்
ஞாயிறன்று வத்திக்கான் பேராலய வளாகத்தில் இடம்பெறும் புனிதர்
பட்ட நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளுடன் உரோம் நகர் தயாராக இருப்பதாக
அந்நகர மேயர் இஞ்ஞாசியோ மரினோ அவர்கள் அறிவித்தார்.
திருத்தந்தையர்கள் 23ம் ஜான் அவர்களும், இரண்டாம் ஜான் பால் அவர்களும்,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதர்களாக அறிவிக்கப்படும் ஞாயிறு
திருப்பலியில் கலந்துகொள்ளவரும் திருப்பயணிகளுக்கு அனைத்து வசதிகளும்
செய்யப்பட்டுள்ளதாக நகர மேயர் மரினோ அவர்கள் தெரிவித்தார்.
இத்தாலிய உள்துறை அமைச்சகத்தின் கணிப்புப்படி, உலகெங்கிலுமிருந்து எட்டு இலட்சம் முதல் பத்து இலட்சம் திருப்பயணிகள் அந்நாள் வைபவத்தில் கலந்துகொள்வர்.
54 நாடுகளிலிருந்து, 61 அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் குழு, 19 அரசுத்தலைவர்கள், 24 பிரதமர்கள் இவ்விழாவுக்கு வந்திருந்து சிறப்பிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2000
பேருந்துகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவற்றை நகருக்குள்ளேயே
நிறுத்திவைப்பதற்கான ஏற்பாடுகளையும் நகர அதிகாரிகள் ஏற்கனவே
செய்துள்ளதாகவும் மேயர் மரினோ அவர்கள் தெரிவித்தார்.
ஆதாரம் : ANSA
3. இவ்வாண்டு முதல் கியூபாவில் புனிதவெள்ளி அரசு விடுமுறையாக அறிவிப்பு
ஏப்.21,2014. 2012ம் ஆண்டிலிருந்து, ஒவ்வோர் ஆண்டும் சிறப்புப் பரிந்துரைகள் மூலம், புனித வெள்ளியை, தற்காலிக, விருப்ப விடுமுறை நாளாக அறிவித்துவந்த கியூப அரசு, இவ்வாண்டிலிருந்து அதனை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.
புனித வெள்ளி அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவிக்கப்படவேண்டும் என, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், கியூப நாட்டிற்கு 2012ம் ஆண்டு மேற்கொண்ட திருப்பயணத்தின்போது விண்ணப்பித்ததைத் தொடர்ந்து, வரும் ஜூன் மாதத்திலிருந்து இப்புதிய விதிமுறை அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1959ம் ஆண்டு ஃபிதெல் காஸ்த்ரோ அவர்கள், கியூபாவில் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து மத வழிபாடுகளும் மதம் தொடர்பான விடுமுறைகளும் தடைச்செய்யப்பட்டன.
1998ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் கியூபா நாட்டில் திருப்பயணம் மேற்கொண்டபின்னரே, அந்நாட்டில் மத ஊர்வலங்களும், கிறிஸ்து பிறப்புவிழாக் கொண்டாட்டங்களும் அனுமதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : CNA
4. தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடச் சென்ற கத்தோலிக்கத் தலைவர்களுக்கு அனுமதி மறுப்பு
ஏப்.21,2014. அனுராதபுரம் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, முன் அனுமதியுடன், உயிர்ப்புப் பெருவிழாவன்றுப் பார்வையிடச் சென்ற மன்னார் மற்றும் அனுராதபுரம் மறை மாவட்ட உயர் அதிகாரிகள், கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர்.
உயிர்ப்புப் பெருவிழாவை முன்னிட்டு, தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்து அவர்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கும் நோக்குடன் இவ்விரு மறை மாவட்ட உயர் அதிகாரிகளும், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சகத்திடம் அனுமதி பெற்றிருந்தும், சிறைச்சாலைக்குச் செல்வதற்குத் தயாரான வேளையில் அனுமதி மறுப்பு குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி அழைப்பொன்றின் மூலமே அனுமதி மறுக்கப்பட்டுள்ள விவரம் தங்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டது என்றும், பாதுகாப்பு
அமைச்சகத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவரின் கட்டளையின் பேரிலேயே தாங்கள்
தடுத்து நிறுத்தப்பட்டுள்ளோம் என்றும் இவ்வதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உண்மையானதொரு நல்லிணக்கத்தை நோக்கி நாடு பயணிக்கும் வேளையில், இத்தகைய நிகழ்வுகள் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் கவலையை வெளியிட்டனர்.
ஆதாரம் : TamilWin
5. பொய்க் குற்றச்சாட்டுடன் பாகிஸ்தான் சிறையில் வாடும் கிறிஸ்தவர்களுக்கான சிறப்புச் செபம்
ஏப்.21,2014.
பாகிஸ்தானின் தெய்வ நிந்தனைச் சட்டத்தின்கீழ் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு
மரணதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் இரு கிறிஸ்தவர்களின் விடுதலைக்கான செப
மற்றும் உண்ணாநோன்பு நாளாக கடந்த பெரிய வெள்ளி தினத்தை சிறப்பித்தனர்
அந்நாட்டு கிறிஸ்தவர்கள்.
தேவ நிந்தனைச் சட்டத்தின்கீழ் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்கள் Sawan Masih அவர்களுக்கும், Asia Bibi அவர்களுக்கும் இப்பெரிய வெள்ளி நாளில் சிறப்பு செபங்களை வெளியிடுவதோடு, ஒடுக்கப்பட்டுள்ளோருக்கும் வாழ்க்கையின் ஓரத்திற்கு தள்ளப்பட்டுள்ளோருக்கும், செபிக்குமாறும் தன் அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார் இஸ்லாமாபாத் இராவல்பிண்டி ஆயர் Rufin Anthony.
பாகிஸ்தானின் தேவநிந்தனைச் சட்டத்தை ஒரு கறுப்புச் சட்டம் என அழைத்த ஆயர் அந்தோணி அவர்கள், பாகிஸ்தானின் மத சிறும்பான்மையினர் தங்கள் விசுவாசத்திற்காக தொடர்ந்து சித்ரவதைப்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டினார்.
தனிப்பட்ட நபர்களால் பொய்யான முறையில் தேவநிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட Sawan Masih, Asia Bibi என்ற இரு கிறிஸ்தவர்களும், தற்போது மரணதண்டனையை எதிர்நோக்கி பாகிஸ்தான் சிறையில் வாடி வருகின்றனர்.
ஆதாரம் : AsiaNews
6. நேபாள கிறிஸ்தவர்களுடன் இணைந்து இந்து மற்றும் புத்த மதத்தினரும் உயிர்ப்புப் பெருவிழாவை கொண்டாடியுள்ளனர்
ஏப்.21,2014. நேபாளத்தில் கிறிஸ்தவர்களுடன் இணைந்து, இந்து மற்றும் புத்த மதத்தினர் இவ்வாண்டு உயிர்ப்புப் பெருவிழாவை, சிறப்பான விதத்தில் கொண்டாடியுள்ளனர்.
உயிர்ப்புநாளில்
இயேசு கொணர்ந்த செய்தி அனைத்து மதத்தினருக்கும் பொருத்தமுடையதாகவும்
நம்பிக்கையைத் தருவதாகவும் உள்ளது என உரைத்த காத்மண்ட் பேராலய அருள்
பணியாளர் Richard Rai அவர்கள், விரைவில், இத்திருநாள், நேபாளத்தின் அனைத்து மதங்களுக்கும் சமூகங்களும் இணைந்து கொண்டாடும் திருவிழாவாக மாறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.
நேபாளத்தில், இந்த உயிர்ப்புப் பெருவிழா நாளின்போது, பிறமதத்தினரும் தங்களுக்கிடையே வாழ்த்து அட்டைகளையும் செய்திகளையும் பரிமாறிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : AsiaNews
7. இலங்கையில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கிறது, மத்திய வங்கி அறிக்கை
ஏப்.21,2014.
இலங்கையில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதாக அந்நாட்டு மத்திய
வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
வேலையில்லா திண்டாட்டம் பற்றி கருத்து வெளியிட்ட யாழ் பல்கலைக்கழக
சமூகவியல் துறையின் விரிவுரையாளர் இராஜேஸ்வரன் இராஜேஸ் கண்ணன் அவர்கள், இன்றைய இளைஞர்கள் தமக்குப் பொருத்தமான வேலைகளைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள் என குறிப்பிட்டார்.
அத்துடன், தமது கல்வித்தரத்திற்கும் அவரவர் துறைசார்ந்த வகையிலும் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக இளைஞர்கள் இருப்பதாகவும், இதனால், சில வேளைகளில் பலர் தங்கள் தகுதிக்கு குறைந்த வேலையில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும், இன்னுமொரு
பிரிவினர் எவ்விதமான தொழிலையும் பெற்றுக்கொள்ள முடியாமல் பட்டப்படிப்பை
முடித்துக்கொண்டு வேலைவாய்ப்புக்காகத் தமது பெயர்களைப் பதிவு செய்துவிட்டு, வேலையில்லாமல் இருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
வேலைவாய்ப்புப் பயிற்சிகளை அரசு வழங்கிவருகின்ற போதிலும், இளைஞர்கள்
அந்தப் பயிற்சியைப் பயன்படுத்தி தமக்கென நிரந்தரமான தொழில் வாய்ப்புகளைப்
பெற முடியாதவர்களாகவே இருக்கிறார்கள் என்றும் இராஜேஸ் கண்ணன்
சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment