Wednesday, 30 April 2014

செய்திகள் - 29.04.14

செய்திகள் - 29.04.14
------------------------------------------------------------------------------------------------------

1. அமைதியிலும் மன்னிப்பிலும் ஏழ்மை உணர்விலும் சிறந்து விளங்க திருத்தந்தை அழைப்பு

2. திருத்தந்தையின் டுவிட்டர். பராகுவாய் அரசுத்தலைவருடன் சந்திப்பு

3. ஏழ்மையிலிருந்து மக்களை விடுவிக்க, வேலைவாய்ப்புக்களை உருவாக்குவோம், கர்தினால் டர்க்ஸன்

4. இரண்டாயிரம் கிலோமீட்டரை நடந்தேக் கடந்த திருப்பயணிகள்

5. பாகிஸ்தானில் பாலியல் வன்முறைகள் களையப்பட செப வழிபாடு

6. உஸ்பேகிஸ்தானில் அரசுக் கல்லறைத் தோட்டத்தில் இஸ்லாமியர் அருகே கிறிஸ்தவர் புதைக்கப்பட இஸ்லாமிய குரு எதிர்ப்பு

7. பிரிட்டன் இன்னும் கிறிஸ்தவ நாடே, அந்நாட்டு பிரதமர்

------------------------------------------------------------------------------------------------------

1. அமைதியிலும் மன்னிப்பிலும் ஏழ்மை உணர்விலும் சிறந்து விளங்க திருத்தந்தை அழைப்பு

ஏப். 29,2014. ஆதிகாலக் கிறிஸ்தவர்கள் அமைதியிலும் மன்னிப்பதிலும், ஏழ்மை உணர்விலும் சிறந்து விளங்கியதைபோல் நாமும் வாழவேண்டும் என்ற அழைப்புடன் இச்செவ்வாய்க்கிழமை காலை திருப்பலியில் மறையுரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதிகாலக் கிறிஸ்தவர்கள், ஒருவர் ஒருவரைப்பற்றி பொறாமைக் கொள்ளாமல், புறம்பேசாமல், பெயரைக் கெடுக்காமல் வாழ்ந்தமையால் அங்கு அமைதி நிலவியது என, தான் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில் மறையுரையாற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ், அன்பே அனைத்தையும் ஆட்சி புரிந்ததால் மன்னிப்பு என்பது அங்கு எளிதாக இருந்தது என்றார்.
எளிமை உள்ளம் கொண்டவர்களாக, தாழ்ச்சியுடையவர்களாக இருக்கும்போது அங்கு அதிகாரத்திற்கான போட்டியோ பொறாமையோ இல்லை, ஏனெனில் போட்டியும் பொறாமையும் இயேசுவின் பாதைக்கு உகந்ததல்ல, எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்து உண்மையில் உயிர்த்தார் என நம்பும் கிறிஸ்தவ சமூகங்கள், ஏழ்மை உணர்வைக் கொண்டவர்களாக, ஏழைகள்பால் கருணைக் காட்டுபவர்களாகச் செயல்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தையின் டுவிட்டர். பராகுவாய் அரசுத்தலைவருடன் சந்திப்பு

ஏப். 29,2014. 'நான் பாவியில்லை என்று எவரும் கூறமுடியாது. நம் பாவங்களுக்கான மன்னிப்பை இறைவனிடம் வேண்டுவோம்' என தன் டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாய்க்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
மேலும், இச்செவ்வாய்க்கிழமையன்று பராகுவாய் அரசுத்தலைவர் Horacio Manuel Cartes Jaraவை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதற்கிடையே, இத்திங்கள் முதல் புதன் வரை திருப்பீடத்தில் இடம்பெறும் எட்டு கர்தினால்கள் அடங்கிய சிறப்பு அவைக்கூட்டத்திலும் பங்குபெற்றார் திருத்தந்தை. திருஅவையின் நிர்வாக அமைப்பு முறை குறித்து விவாதிக்க 5 கண்டங்களைச் சேர்ந்த எட்டு கர்தினால்கள் அடங்கிய குழு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டது. இதில் மும்பை கர்தினால் Oswald Graciasம் அங்கம் வகிக்கிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. ஏழ்மையிலிருந்து மக்களை விடுவிக்க, வேலைவாய்ப்புக்களை உருவாக்குவோம், கர்தினால் டர்க்ஸன்

ஏப். 29,2014. ஏழ்மையிலிருந்து மக்களை விடுவிப்பதற்கான சிறந்த வழி, அனைவருக்கும் தரமான வேலைவாய்ப்புக்களை உருவாக்கி தருவதேயாகும் என இச்செவ்வாய்க்கிழமையன்று உரோம் கருத்தரங்கில் உரையாற்றினார் கர்தினால் பீட்டர் டர்க்ஸன்.
அரசு சாரா கத்தோலிக்க அமைப்புக்கள், திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி அவை, அனைத்துலக தொழிலாளர் அமைப்பு ஆகியவை இணைந்து உரோம் நகரில் ஏற்பாடுச் செய்துள்ள கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் டர்க்ஸன், தொழில்புரட்சி, உலகமயமாக்கல் என பல்வேறு வளர்ச்சிகள் இவ்வுலகில் காணப்பட்டாலும், பல கோடிக்கணக்கானோர் ஏழ்மையில் வாடுவதும் அதிகரித்து வருகிறது என்ற கவலையை வெளியிட்டர்.
வேலைவாய்ப்பின்மை, தகுதிக்கேற்ற வேலையின்மை போன்றவைகளால் மக்கள் துன்புறுவது குறித்தும் தன் கவலையை வெளியிட்ட கர்தினால், பணம் என்பதை மையமாக வைத்தே பொருளாதார அமைப்பு முறை இயங்கிவருவதே இதற்கு காரணம் என்பதை உணர்ந்துள்ள நாம், நீதி மற்றும் ஒருமைப்பாட்டின் அடிப்படையில் பிறிதொரு அணுகுமுறையை கைக்கொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்தார்.
வேலைவாய்ப்பின்மைகள், கல்வி மற்றும் நல ஆதரவு நடவடிக்கைகளிலும் கொண்டிருக்கும் பாதிப்புகளையும் சுட்டிக்காட்டிய திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத்தலைவர் கர்தினால் டர்க்ஸன், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் காட்டவேண்டிய அக்கறை குறித்தும் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. இரண்டாயிரம் கிலோமீட்டரை நடந்தேக் கடந்த திருப்பயணிகள்

ஏப். 29,2014. திருத்தந்தை 2ம் ஜான் பால் புனிதராக அறிவிக்கப்பட்டத் திருப்பலியில் கலந்துகொள்ள போலந்திலிருந்து உரோம் நகர் வரை 22 பேர் ஓடியே வந்தடைந்துள்ளனர்.
இரண்டாயிரம் கிலோமீட்டர் தூரத்தை கால்நடையாகவே கடக்கும் நோக்குடன் ஒவ்வொருநாளும் 300 கிலோமீட்டர்கள் ஓடி உரோம் நகரை வந்தடைந்ததை, இறைவனுக்கு நன்றி செலுத்தும் ஒரு செயலாகக் கருதுவதாக இத்திருப்பயணிகள் தெரிவித்தனர்.
நல்லவராக, கடவுளின் மனிதராக இருந்து, உலகில், குறிப்பாக ஐரோப்பாவிலும் போலந்திலும் பெரும் மாற்றத்தைக் கொணர்ந்த புதிய புனிதர் இரண்டாம் ஜான் பாலுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்த 2000 கிலோமீட்டரை கால்நடையாகவே கடந்து வந்ததாக இக்குழு தெரிவித்தது.

ஆதாரம் : CNA

5. பாகிஸ்தானில் பாலியல் வன்முறைகள் களையப்பட செப வழிபாடு

ஏப். 29,2014. பாலியல் வன்முறைகளுக்கு சிறார்கள் உள்ளாக்கப்படுவதை குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் விதமாக பாகிஸ்தானில் அனைத்துக் கோவில்களிலும் மெழுகுதிரி தாங்கிய செபவழிபாடுகளும் ஊர்வலமும் இடம்பெற்றன.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் அரசின் மௌனத்தாலும், காவல்துறையின் நடவடிக்கையின்மையாலும் சிறுமிகள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்வதாக அப்பகுதியின் மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
கடந்த சில நாட்களில் பஞ்சாப் மாநிலத்தில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளாக 2133 புகார்கள் பதிவாகியுள்ளன. பெண்களுக்கு எதிரான வன்முறைகளுள் 10 விழுக்காடே வெளியே தெரிய வருவதால், உண்மையான எண்ணிக்கை மிகப்பெரியதாக இருக்கும் என மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

ஆதாரம் : AsiaNews

6. உஸ்பேகிஸ்தானில் அரசுக் கல்லறைத் தோட்டத்தில் இஸ்லாமியர் அருகே கிறிஸ்தவர் புதைக்கப்பட இஸ்லாமிய குரு எதிர்ப்பு

ஏப். 29,2014. மதச் சார்பற்ற நாடான உஸ்பேகிஸ்தானில் இறந்த கிறிஸ்தவர்களின் உடல்கள் இஸ்லாமியர்களின் கல்லறைகள் அருகே புதைக்கப்படக்கூடாது என, இஸ்லாம் மதத்தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அரசின் கீழ் உள்ள பொது கல்லறைகளில் கிறிஸ்தவர்கள் அடக்கம் செய்யப்படக்கூடாது என இஸ்லாம் மதத்தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து அரசும் மௌனம் காக்கிறது என செய்தி நிறுவனங்கள் அறிவிக்கின்றன.
உஸ்பேகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட் அருகே வாழ்ந்துவந்த சில கிறிஸ்தவ குடும்பங்கள் ஏற்கனவே இஸ்லாமியர்களாக இருந்து கிறிஸ்தவத்திற்கு மாறியவர்கள் என்பதால், அவர்களை அரசு பொதுக்கல்லறைகளில் அவர்களின் இஸ்லாமிய உறவினர்களின் கல்லறை அருகே புதைக்க இஸ்லாமிய மதக்குரு எதிர்ப்பு தெரிவித்திள்ளார்.
கல்லறைத் தோட்டம் அரசுக்கு சொந்தமானது எனினும், இஸ்லாமியர் அருகே பிறமதத்தினர் புதைக்கப்படுவதற்கு ஷாரியா சட்டம் இடமளிக்காது என்றார் அப்பகுதி இஸ்லாமிய குரு.
உஸ்பேகிஸ்தான் நாட்டில் 88 விழுக்காட்டினர் இஸ்லாமியர், எட்டு விழுக்காடினர் கிறிஸ்தவர்.

ஆதாரம் : AsiaNews

7. பிரிட்டன் இன்னும் கிறிஸ்தவ நாடே, அந்நாட்டு பிரதமர்

ஏப். 29,2014. இங்கிலாந்து இன்னும் கிறிஸ்தவத்தைப் பின்பற்றும் நாடாகவே உள்ளது என்ற அந்நாட்டு பிரதமரின் கூற்று உண்மையே என அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இரண்டாயிரம் பிரிட்டானியர்களிடம் அண்மையில் The Telegraph இதழ் நடத்திய ஆய்வில், பெரும்பான்மையினோர் தங்களைக் கிறிஸ்தவர்கள் என அடையாளம் காட்டியுள்ளனர்.
பிரிட்டன் நாடு இன்னும் கிறிஸ்தவ நாடாகவே உள்ளது என்ற பிரதமர் டேவிட் கமரோனின் கூற்றை, ஆய்வில் கலந்துகொண்ட 60 விழுக்காடு ஆண்களும் 53 விழுக்காடு பெண்களும் ஆமோதித்துள்ளனர்.
65 வயதிற்கு மேற்பட்டவர்களுள் 75 விழுக்காட்டினர் பிரிட்டனை கிறிஸ்தவ நாடு என கூறியுள்ளவேளை, ஆய்வில் கலந்துகொண்டோருள் 30 விழுக்காட்டினர் பிரிட்டனை மதச்சார்பற்ற நாடு எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : ChristianHeadlines

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...