Tuesday, 22 April 2014

செய்திகள் - 22.04.14

செய்திகள் - 22.04.14
 ------------------------------------------------------------------------------------------------------

1. புனித பட்டமளிப்பு விழாவிற்கு முன்னர் இளையோரின் இரவு கண்விழிப்பு செபம்

2. இந்திய ஆயர் பேரவைத் தலைவரின் உயிர்ப்புப் பெருவிழாச் செய்தி

3. இந்தியாவில் அமைதித் தேர்தல் நடவடிககைகளுக்கு கத்தோலிக்கர்கள் செபம்

4. உல‌கிலேயே அதிக‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் வாழும் நாடாக‌ சீனா மாறும்

5. தாயின் வ‌யிற்றில் க‌ருவாக‌ இருக்கும் குழ‌ந்தைக்கும் உரிமைக‌ள் உண்டு, அல‌பாமா உயர்‌ நீதிம‌ன்ற‌ம்

6. இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்த  கிறிஸ்தவ இளைஞர் ஒருவர் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

------------------------------------------------------------------------------------------------------

1. புனிதர் பட்டமளிப்பு விழாவிற்கு முன்னர் இளையோரின் இரவு கண்விழிப்பு செபம்

ஏப்.22,2014. திருத்தந்தையர்கள் 23ம் ஜான் மற்றும் இரண்டாம் ஜான்பால் ஆகியோரின் புனிதர் பட்டமளிப்பு விழாவிற்கு முந்தைய நாள் இரவு கண்விழிப்புச் செபத்தில் கலந்துகொள்ள இத்தாலி மற்றும் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த இளையோர் திட்டமிட்டுள்ளனர்.
இரண்டாம் வத்திக்கான் சங்கம் வழியாகவும் இளையோருடன் மேற்கொண்ட சிறப்புச் சந்திப்புகள் வழியாகவும் இவ்விரு திருத்தந்தையர்களும் ஆற்றியுள்ள சேவைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த இரவு கண்விழிப்பு திருவழிபாட்டில் கலந்துகொள்வதாக உலகக் கத்தோலிக்க இளையோர் நடவடிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
உரோமை மறைமாவட்டத்தின் சிறப்புப் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்செப வழிபாடு, சனிக்கிழமை உரோம் நகரில் இரவு 10.30 மணிக்குத் துவங்கி அடுத்த நாளான புனிதர் பட்டமளிப்பு ஞாயிறன்று காலை 5 மணிக்கு நிறைவுக்கு வரும்.
புதிதாக புனிதர்களாக அறிவிக்கப்படவுள்ள இரு திருத்தந்தையர்களுக்காக இறைவனுக்கு நன்றிசொல்ல இந்த நாளை பயன்படுத்துவதுடன், உலகின் பலப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுடன் பழகி தெரிந்து கொள்ளவும் இது நல்லதொரு வாய்ப்பாக அமையும் என உலக கத்தோலிக்க இளையோர் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. இந்திய ஆயர் பேரவைத் தலைவரின் உயிர்ப்புப் பெருவிழாச் செய்தி

ஏப்.22,2014. கிறிஸ்துவின் சீடர்கள் என்ற முறையில் துன்பங்களையும் தியாகங்களையும் சந்திக்கவேண்டியிருந்தாலும் நற்செய்தியின் வழி நடக்க அழைக்கப்பட்டுள்ளோம் என்று இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கூறினார்.
அண்மையில் கொண்டாடப்பட்ட உயிர்ப்புப் பெருவிழாவையொட்டி இந்திய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் மார் பசிலியோஸ் கிளீமிஸ் தொட்டுங்கல் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியை, ஆசிய செய்தி நிறுவனம் இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளது.
இந்தியர்களாகிய நமக்கு 'கடவுள் நம்மோடு' என்ற வடிவில் இறைவன் எப்போதும் உடன் இருக்கிறார், குறிப்பாக, சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ள மக்கள் மத்தியில் அவர் வாழ்கிறார் என்று கர்தினால் தொட்டுங்கல் அவர்கள் கூறியுள்ளார்.
கிறிஸ்துவின் உயிர்ப்புக்குச் சான்று பகரும் வாழ்க்கைக்கு அழைக்கப்பட்டுள்ள நாம், நம்பகத்தன்மை உடையவர்களாக வாழவேண்டிய கடமையைப் பெற்றுள்ளோம் என்று கர்தினால் தொட்டுங்கல் அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்தவர்களாக நாம் கருதப்பட்டாலும், உலகில் அமைதி, புதிய விழுமியங்கள் ஆகியவற்றைக் கொணரும் கடமையிலிருந்து கிறிஸ்துவர்களாகிய நாம் பின்வாங்கக்கூடாது என்றும் இந்திய ஆயர் பேரவையின் தலைவர் கூறியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews

3. இந்தியாவில் அமைதித் தேர்தல் நடவடிககைகளுக்கு கத்தோலிக்கர்கள் செபம்

ஏப்.22,2014. இந்தியாவில் த‌ற்போது இட‌ம்பெற்றுவ‌ரும் பொதுத்தேர்த‌ல் சுத‌ந்திர‌மாக‌வும் ச‌ன‌நாய‌க‌ முறையிலும் இட‌ம்பெறும் என்ற‌ ந‌ம்பிக்கையை வெளியிட்டுள்ளார் இந்தியாவின் பெல்லாரி ஆய‌ர்  Henry D’Souza.
இம்மாதம் 7ம் தேதி முதல் மேமாதம் 12ம் தேதி வரை ஒன்பது கட்டங்களாக இடம்பெறும் இத்தேர்தலில் நாட்டிற்கான சிறந்த தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என செபிக்குமாறு ஏற்கனவே இந்திய ஆயர்கள் பேரவை சுற்றுமடல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கும் வாக்களிக்கவேண்டிய கடமையை தங்கள் சுற்றுமடலில் வலியுறுத்தியுள்ள இந்திய ஆயர்கள், நல்லத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பை, கிறிஸ்தவர்கள் தவற விடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.
81 கோடியே 40 இலட்சம் வாக்காளர்களைக் கொண்டுள்ள இந்தியாவில் இடம்பெறும் பொதுத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை மேமாதம் 16ம் தேதி இடம்பெறும். குறைந்தபட்சம் 272 தொகுதிகளை வெல்லும் கட்சியே ஆட்சி அமைக்கும் தகுதிப் பெறும்.

ஆதாரம் : EWTN

4. உல‌கிலேயே அதிக‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் வாழும் நாடாக‌ சீனா மாறும்

ஏப்.22,2014. அடுத்த‌ 15 ஆண்டுக‌ளில் சீனாவில் கிறிஸ்த‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை பெரும‌ள‌வில் அதிக‌ரித்து உல‌கிலேயே அதிக‌க் கிறிஸ்த‌வ‌ர்க‌ளைக் கொண்ட‌ நாடாக‌ அது மாறும் வாய்ப்பு உள்ள‌தாக‌ அமெரிக்க‌ ஐக்கிய‌ நாட்டின் க‌த்தோலிக்க‌ச் செய்தி நிறுவ‌ன‌ம் ஒன்று தெரிவிக்கிற‌து.
Catholic Online என்ற செய்தி நிறுவனத்தின் கணிப்புப்படி, 2030ம் ஆண்டில் சீனாவில் 16 கோடி எவாஞ்சிலிக்கல் பிரிவினைச்சபைக் கிறிஸ்தவர்களும் 8 கோடியே 70 இலட்சம் கத்தோலிக்கர்களும் இருப்பர்.
உலகிலேயே அதிக மக்கள்தொகையைக் கொண்ட சீனாவில், அரசின் கடவுள் மறுப்புக் கொள்கைகளையும் தாண்டி, கிறிஸ்தவ மறையை மக்கள் தழுவுவது அதிகரித்து வருவதாகவும், விரைவில் கிறிஸ்த‌வ‌ம் சீன‌ அர‌சிய‌லிலும் த‌ன் தாக்க‌த்தைக் கொண்டிருக்கும் என‌வும் தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.
கிறிஸ்த‌வ‌ம் மீது எண்ண‌ற்ற‌ க‌ட்டுப்பாடுக‌ளைக் கொண்டுள்ள‌ சீனாவில், கிறிஸ்த‌வ‌ம் வேக‌மாக‌ ப‌ர‌வி வ‌ருவ‌தை, த‌ற்போது அரசு அதிகாரிக‌ள் நினைத்தாலும் நிறுத்த‌முடியாத‌ நிலைக்குச் சென்றுள்ள‌து என‌ Catholic Online செய்தி நிறுவ‌ன‌ம் க‌ருத்துத் தெரிவித்துள்ள‌து.

ஆதாரம் : Catholic Online

5. தாயின் வ‌யிற்றில் க‌ருவாக‌ இருக்கும் குழ‌ந்தைக்கும் உரிமைக‌ள் உண்டு, அல‌பாமா உயர்‌ நீதிம‌ன்ற‌ம்.

ஏப்.22,2014. தாயின் வ‌யிற்றில் க‌ருவாக‌ இருக்கும் குழ‌ந்தைக்கும் ஏனைய‌ குழ‌ந்தைக‌ள் போல் முழு உரிமைக‌ள் உண்டு என‌ புதிய‌ வ‌ர‌லாற்று சிற‌ப்புமிக்க‌ தீர்ப்பு ஒன்றை வ‌ழ‌ங்கியுள்ளது அமெரிக்க‌ ஐக்கிய‌ நாட்டின் அல‌பாமா மாநில உயர்‌ நீதிம‌ன்ற‌ம்.
கருக்கலைப்புக் குறித்த அமெரிக்க ஐக்கிய நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் முடிவுகளுக்குச் சவால் விடுவதாக அமைந்துள்ள இந்த மாநில உயர்நீதிமன்ற தீர்ப்பு, கருவில் உருவானது முதல் குழந்தைகளைக் காப்பாற்றவேண்டிய சமூகத்தின் கடமைகளை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.
கருத்தாங்கியிருந்த தாய் ஒருவர் Cocaine எனப்படும் போதை மருந்தை உட்கொண்டதால் வயிற்றிலிருந்த குழந்தை இறந்ததையொட்டி தொடரப்பட்ட வழக்கில், கருவில் வளரும் குழந்தைக்கும் வாழ்வதற்குரிய முழு உரிமையும் மாண்பும் உள்ளது என தீர்ப்பு வழங்கியுள்ளது அலபாமா உயர் நீதிமன்றம்.
குழந்தை என்று கூறும்போது, தாயின் வயிற்றில் கருவில் வளரும் உயிரையும் அது உள்ளடக்குகின்றது எனக் கூறும் இந்த உயர் நீதிமன்ற தீர்ப்பு, இறைவனால் வழங்கப்பட்ட இயற்கையான உரிமைகளை மாற்றவோ, அழிக்கவோ எந்த மனிதருக்கும் உரிமையில்லை எனவும் எடுத்துரைக்கிறது. 
கருவில் வளரும் குழந்தைகளின் கூறுபடா உரிமைகள் குறித்து தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ள நீதிபதிகள் Roy Moore மற்றும் Tom Parker என்ற இருவரும் கருத்து தெரிவிக்கையில், வாழும் உயிர்களுக்கு இருக்கும் உரிமையை வழங்குவது இறைவனேயன்றி மனிதர்கள் அல்ல என்பதால் அதனை மனிதர்கள் மீறமுடியாது எனக் கூறியுள்ளனர்.

ஆதாரம் : Catholic Online

6. இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்த  கிறிஸ்தவ இளைஞர் ஒருவர் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

ஏப்.22,2014. இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்ததற்காக 22 வயது பாகிஸ்தான் கிறிஸ்தவ இளைஞர் ஒருவர் அந்நாட்டு இஸ்லாமிய தீவிரவாதி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
லாகூரில் உள்ள இஸ்லாமிய மையம் ஒன்றில் துப்புரவுப் பணியாளராக வேலைச் செய்துவந்த  Haroon என்ற கிறிஸ்தவ இளைஞர், அம்மையத்தின் Umer Farooq என்ற பாதுகாப்புப் பணியாளரால் மதம் மாறக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.
அதிகப் பணம் தருவதாக ஆசைக் காட்டியும் இந்தக் கிறிஸ்தவ இளைஞர் இஸ்லாமிற்கு மாற மறுத்ததால், பாதுகாப்பு பணியாளரால் துப்பாக்கியால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.
இத்தகையச் செயல்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அரசு தவறி வருவதாலும், இஸ்லாமியத் தலைவர்களின் ஆதரவு குற்றவாளிகளுக்கு இருப்பதாலும் இத்தகையத் தாக்குதலகள் தொடர்வதாக இங்கிலாந்தைச் சேர்ந்த சட்ட உதவி மையம் கவலை தெரிவிக்கிறது.

ஆதாரம் : Christian headlines

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...