Saturday, 19 April 2014

செய்திகள்- 15.04.14

செய்திகள்- 15.04.14
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி. சிறைக் கைதிகளுக்கு திருத்தந்தையின் பாஸ்கா கொடை.

2. வரலாற்றில் தாக்கம் ஏற்படுத்தியவர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் என்கிறார் முன்னாள் திருப்பீடச் செய்தித் தொடர்பாளர்

3. இயேசுவின் தியாகத்திலிருந்து அரசியல் தலைவர்கள் கற்க வேண்டும் என்கிறார் நேபாள ஆயர்

4. மனித வியாபாரத்தால் பாதிக்கப்பட்டோருக்கு திருஅவையின் பணி

5. தென் சூடானில் போரிட்டுவரும் குழுக்கள் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்வரவேண்டும் - கிறிஸ்தவத் தலைவர்கள் அழைப்பு

6. தென் சூடானில் பெரும் எண்ணிக்கையில் பட்டினிச் சாவுகள் இடம்பெறும் ஆபத்து

7. உலக அளவில் ஆயுத வர்த்தகத்தில் ஆசியப் பகுதியே முதலிடம் வகிக்கிறது

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி. சிறைக் கைதிகளுக்கு திருத்தந்தையின் பாஸ்கா கொடை.

ஏப்.15,2014. 'இயேசுவுடன் நாம் கொள்ளும் ஒவ்வொரு சந்திப்பும் நம் வாழ்வை மாற்றியமைக்கிறது' என இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி வெளியான இதே நாளில், திருப்பீடம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உரோம் நகரின் ரெஜினா சேலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு திருவிவிலியப்பிரதிகள் திருத்தந்தையின் சார்பில் இப்புதனன்று விநியோகிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தையின் பிறரன்பு நடவடிக்கைகளுக்கான அலுவலகத்தின் அதிகாரி பேராயர் கொன்ராட் க்ரயேவிஸ்கி அவர்கள், 1,200 கையடக்கப்பிரதிகளை சிறைக்கைதிகளுக்கு உயிர்ப்புக்காலக் கொடையாக, திருத்தந்தையின் சார்பில் வழங்குவார் என தெரிவிக்கிறது திருப்பீடம்.
புதிய ஏற்பாட்டின் நான்கு நற்செய்தி நூல்களையும், திருத்தூதர் பணி நூலையும் கொண்டுள்ள இந்த கையடக்க விவிலியப்பிரதி, ஏற்கனவே பொதுமக்களுக்கு இம்மாதம் 6ம் தேதி, உரோம் தூய பேதுரு வளாகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி

2. வரலாற்றில் தாக்கம் ஏற்படுத்தியவர் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் என்கிறார் முன்னாள் திருப்பீடச் செய்தித் தொடர்பாளர்

ஏப்.15,2014. திருத்தந்தையர்களின் வரலாற்றில் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களின் தலைமைப்பணிக்காலம் ஒரு புதிய அத்தியாயமாக இருந்தது எனத் தெரிவித்தார் திருப்பீடத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் Joaquin  Navarro Valls.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் கீழ் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு மேல் திருப்பீடச் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றியுள்ள நவாரோ வால்ஸ் அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த நேர்முகத்தில், திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், மனம் திறந்தவராய், மகிழ்ச்சி கொண்டவராக, ஒரு சீரிய நோக்குடன் அவரின் பதவிகாலம் முழுவதும் பணியாற்றியதை தான் நேரடியாகக் காணமுடிந்தது என்றார்.
திருஅவையின் வரலாற்றில் மட்டுமல்ல, மனிதகுல வரலாற்றிலும், படித்தவர் முதல் பாமரமக்கள் வரை அனைவர் வாழ்விலும் நல்லதொரு தாக்கத்தை அத்திருத்தந்தை ஏற்படுத்திச் சென்றுள்ளார் எனவும் கூறினார் நவாரோ வால்ஸ்.
அவர் செபத்தின் மனிதராக மட்டும் இல்லாமல், சிறந்த சமூகத் தொடர்பாளராகவும், தன்னலத்தைக் கைவிட்டு தாராளமனப்பான்மைக்கு எப்போதும் அழைப்பு விடுப்பவராகவும் இருந்தார் எனவும், இம்மாதம் 27ம்தேதி புனிதராக அறிவிக்கப்பட உள்ள திருத்தந்தை ஜான்பால் குறித்த தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார் முன்னாள் திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் நவாரோ வால்ஸ்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி

3. இயேசுவின் தியாகத்திலிருந்து அரசியல் தலைவர்கள் கற்க வேண்டும் என்கிறார் நேபாள ஆயர்

ஏப்.15,2014. மக்கள் நலனுக்காகவும் நாட்டு நலனுக்காகவும் எவ்வாறு தங்களைத் தியாகம் செய்வது என்பதை நேபாள நாட்டு அரசியல் தலைவர்கள், இயேசுவின் வாழ்விலிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என அழைப்புவிடுத்தார் அந்நாட்டு அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஆன்டனி ஷர்மா.
தேர்தல் காலத்தில் பெரும் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, பின்னர் அவற்றை நிறைவேற்றத் தவறுவது, மக்களைக் கேலிச்செய்வதற்கு ஈடாகும் என்ற ஆயர் ஷர்மா அவர்கள், மதச்சார்பற்ற அரசியலமைப்பை உருவாக்குவோம் என்ற தேர்தல் கால வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
உதவித் தேவைப்படுபவர்களுக்கு பணிசெய்வது கத்தோலிக்கர்களின் கடமையாக இருக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்திய நேபாள அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஷர்மா அவர்கள், இறைவனின் நற்செய்தியை மற்றவர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டிய கடமையையும் வலியுறுத்தினார்.

ஆதாரம்: AsiaNews

4. மனித வியாபாரத்தால் பாதிக்கப்பட்டோருக்கு திருஅவையின் பணி

ஏப்.15,2014. நவீன கால அடிமைத்தளைகளிலிருந்து விடுதலைப் பெற்றுள்ள மக்களுக்கு, வாழும் வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது திருஅவையின் கடமையாகிறது என்றார் இங்கிலாந்தின் Westminster பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ்.
மனித வியாபாரம் குறித்த திருப்பீடக் கருத்தரங்கில் கலந்துகொண்டபின், பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த கர்தினால் நிக்கோல்ஸ் அவர்கள், மனித வியாபாரத்தால் பாதிக்கப்பட்டு பின்னர் விடுதலையடைந்த நால்வரின் வாக்குமூலங்களை இக்கருத்தரங்கில் தான் செவிமடுத்தபோது, அவை தன் இதயத்தை ஆழமாகத் தொட்டன என்றார்.
தங்கள் இல்லங்கள் மூலம் துறவுசபைகள் ஆற்றிவரும் பணி, மனித வியாபாரத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மிகுந்த ஆறுதலாகவும் நம்பிக்கைத் தருவதாகவும் உள்ளது எனவும் கூறினார் கர்தினால் நிக்கோல்ஸ்.
பாதிக்கப்பட்டவர்களை வியாபாரிகளின் கைகளில் இருந்து விடுவிப்பது மட்டுமல்ல, அவர்களுக்கு தொழில் கல்வியை வழங்கி வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதும் திருஅவையின் பணியாகவும் அர்ப்பணமாகவும் இருந்து வருகிறது என மேலும் கூறினார் கர்தினால் நிக்கொல்ஸ்.

ஆதாரம்: EWTN

5. தென் சூடானில் போரிட்டுவரும் குழுக்கள் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்வரவேண்டும் - கிறிஸ்தவத் தலைவர்கள் அழைப்பு

ஏப்.15,2014. தென் சூடானில் போரிட்டுவரும் குழுக்கள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு உடனடியாக முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர் அந்நாட்டுக் கிறிஸ்தவத் தலைவர்கள்.
அரசியல் வேறுபாடுகளுக்குத் தீர்வு காண, போரும் வன்முறையுமே வழிகள் என்று கூறிவரும் தென் சூடான் தலைவர்களின் அணுகு முறை குறித்து தாங்கள் கவலையடைந்துள்ளதாக எடுத்துரைத்தக் கிறிஸ்தவத் தலைவர்கள், அமைதிப் பேச்சு வார்த்தைகள் காலத்தாமதமாவதும், போருக்கானச் சூழல் உருவாகிவருவதும் மிகுந்த கவலை தருகின்றன என்றும் கூறியுள்ளனர்.
Juba வின் பேராயர் Paulino Lukudo Loro அவர்கள் உட்பட, ஒன்பது கிறிஸ்தவத் தலைவர்கள் இணைந்து கையெழுத்திட்டுள்ள ஓர் அறிக்கையில், விவசாயிகள் வேறு இடங்களுக்குக் குடிபெயரும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுவதால், விவசாயம் பாதிக்கப்பட்டு, 70 இலட்சம் மக்கள் வரை பஞ்சத்தால் உயிரிழக்கும் ஆபத்து சூழ்ந்துள்ளதாகவும் ஆழ்ந்த கவலை வெளியிடப்பட்டுள்ளது.

ஆதாரம் : CNS

6. தென் சூடானில் பெரும் எண்ணிக்கையில் பட்டினிச் சாவுகள் இடம்பெறும் ஆபத்து

ஏப்.15,2014. வரும் மேமாதத்திற்குள் தென் சூடான் நாட்டுக்கு, போதிய உணவு உதவிகள் அனுப்பப்படவில்லையெனில், பெரும் பஞ்சத்தால் பட்டினிச் சாவுகள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக, ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1980ம் ஆண்டுகளுக்குப் பின், தென் சூடானில் பெரும் எண்ணிக்கையில் பட்டினிச் சாவுகள் இடம்பெறும் ஆபத்து இருப்பதாகக் கூறும் அதிகாரிகள், 37 இலட்சம் பேர் உணவின்றி தவிப்பதாகவும், இவர்களில் பெரும்பான்மையானோர் கிறிஸ்தவர்கள் என்றும் தெரிவித்தனர்.
2011ம் ஆண்டு தனி நாடாக விடுதலை பெற்ற தென் சூடானில், அரசுக்கு எதிராகப் புரட்சிக் குழுக்களின் போராட்டமும், வட பகுதியின் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல்களும் தொடர்வதால், மக்கள் விவசாய நிலங்களை கைவிட்டு, அகதிகளாக வெளியேறி வருவதன் காரணமாக, பஞ்சம் நிலவும் சூழல் அந்நாட்டில் அதிகரித்துள்ளது.
உணவு, குடிநீர், தானிய விதைகள் ஆகியவற்றுடன், நாட்டில் நிலையான வாழ்வுக்கு உரியச் சூழலும் தேவைப்படுகின்றன என்று ஐ.நா. அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : CatholicOnline

7. உலக அளவில் ஆயுத வர்த்தகத்தில் ஆசியப் பகுதியே முதலிடம் வகிக்கிறது

ஏப்.15,2014. உலக அளவில் ஆயுத வர்த்தகம் இடம்பெறுவதில் ஆசியப் பகுதியே முதலிடம் வகிப்பதாக Stockholmலுள்ள உலக அமைதி ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
உலக ஆயுத வர்த்தகத்தில் முன்னணியில் நிற்கும் 15 நாடுகளுள் 8 நாடுகள் ஆசியாவைச் சேர்ந்த நாடுகள் என்று கூறும் இம்மையத்தின் அறிக்கை, முதல் பத்து நாடுகள் வரிசையில், சீனா, இரஷ்யா, சவூதி அரேபியா, ஜப்பான், இந்தியா போன்றவை இருப்பதாகத் தெரிவிக்கிறது.
2013ம் ஆண்டில் இராணுவச் செலவில் முதலிடம் வகிக்கும் அமேரிக்கா ஐக்கிய நாடு, 64,000 கோடி டாலர்களையும், அதற்கு அடுத்தபடியாக, சீனா 18,800 கோடி டாலர்களையும், செலவிட்டுள்ளன.
ஆசியப் பகுதியில், சீனாவுக்கு அடுத்தபடியாக, இரஷ்யா 8,780 கோடி டாலர்களையும், சவூதி அரேபியா 6,700 கோடி டாலர்களையும், ஜப்பான் 4,860 கோடி டாலர்களையும், இந்தியா 4,740 கோடி டாலர்களையும், இராணுவத் தளவாடங்களுக்கென செலவிட்டுள்ளன.

ஆதாரம் : AsiaNews

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...