Monday, 13 January 2014

செய்திகள் - 10.01.14

செய்திகள் - 10.01.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : நம்மை முழுவதும் இறைவனிடம் கையளிக்க வேண்டும்

2. கனிவுடன் வரவேற்கும் பண்புகள், நற்செய்திக்குச் சான்று பகர்கின்றன, திருத்தந்தை பிரான்சிஸ்

3. திருத்தந்தை: நம் அன்றாட வாழ்வில் எளிமைப் பண்புக்குச் சான்றுபகர, இயேசுவின் பிறப்பு நம்மை அழைக்கின்றது 

4. பிலிப்பின்ஸ் நாட்டில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்ட 'கறுப்பு நாசரேத்தூர் மனிதர்' ஊர்வலம்

5. ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் சிரியாவில் வாழும் அனைவருக்கும் நன்மைகளைக் கொணரவேண்டும் - சிரியாவின் பேராயர்

6. நன்னெறி வழி கல்விப் புகட்டப்படுவதால் மட்டுமே 'ஊழல்' பிரச்சனையிலிருந்து இந்தியா விடுதலை பெறும் - தலாய் லாமா

7. கப்புச்சின் அருள் பணியாளர் Jacob Kani அவர்களுக்கு, பத்திரிக்கை இயலுக்கான 2013ம் ஆண்டின் Honesty விருது

8. இலங்கை போர்க் குற்றம் தொடர்பான படங்களை வெளியிட்டது அமெரிக்கா: ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவர தீவிரம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : நம்மை முழுவதும் இறைவனிடம் கையளிக்க வேண்டும்

சன.10,2014. நமது விசுவாசம் அனைத்தையும் இயலக்கூடியதாக ஆக்குகின்றது, இது வெற்றியே, எனினும்  நாம் நமது விசுவாசத்தை வாழாவிட்டால் நமக்குத் தோல்வியே கிட்டும் மற்றும், இவ்வுலகின் இளவரசன் உலகை வெற்றி கொள்வான் என்று எச்சரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வெள்ளி காலை நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில், புனித யோவான் தனது முதல் மடலில் கிறிஸ்தவ வாழ்வின் வெளிப்பாடாக குறிப்பிடும் ஆண்டவரில் நிலைத்திருத்தல் என்ற சொற்றொடரை மையப்படுத்தினார்.
உண்மையான விசுவாசம் முழுமையானதாகவும், நிறைவானதாகவும் இருக்க வேண்டும், அது ஆண்டவரில், அவரது அன்பில் நிலைத்திருப்பதில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று விளக்கிய திருத்தந்தை, கடவுளில் நிலைத்திருப்பவர், அவரது அன்பில் நிலைத்திருப்பவர் இவ்வுலகை வெற்றி காண்கிறார் என்று கூறினார்.
கனானேயப் பெண், பிறவியிலேயே பார்வையின்றி இருந்தவர் போன்றோரின் விசுவாசத்தை இயேசு பாராட்டியுள்ளார் என்றும், ஆழமான விசுவாசமுள்ளவர்கள், கடுகுவிதைகூட மலைகளை நகரச்செய்யும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருப்பவர்கள், இத்தகைய விசுவாசத்துக்கு அறிக்கையிடுதல், நம்மையே கையளித்தல் ஆகிய இரு மனநிலைகள் தேவை எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாம் கடவுளிடம் கேட்கவும், அவரிடம் நன்றி சொல்லவும் அறிந்திருக்கிறோம், ஆனால் அவரை வழிபடுவதும் அவரைப் போற்றுவதும் இவற்றைவிட இன்னும் மேலானவை என்று மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், விசுவாசமுள்ள ஒவ்வொருவரும் கடவுளிடம் தங்களை முழுமையாகக் கையளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. கனிவுடன் வரவேற்கும் பண்புகள், நற்செய்திக்குச் சான்று பகர்கின்றன, திருத்தந்தை பிரான்சிஸ்

சன.10,2014. மென்மையான மற்றும் கனிவுடன் வரவேற்கும் பண்புகள், கிறிஸ்தவ விசுவாசத்தால் உந்தப்பட்ட ஒரு வாழ்வில் உண்மையான மூலத்தைக் கொண்டிருக்கின்றன மற்றும் இப்பண்புகள் உலகப்போக்கின் எவ்விதக் கறையுமின்றி நற்செய்திக்குச் சான்று பகர்கின்றன என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கானில் திருத்தந்தையரைச் சந்திக்கவரும் பல்வேறு தலைவர்களையும் அதிகாரிகளையும் முதலில் வரவேற்கும் gentiluomini என்ற குழுவினரையும் அவர்களது குடும்பத்தினரையும் இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்மஸ் காலத்தின் நிறைவில் இருக்கும் நாம், பெத்லகேம் குகையில் கடவுள் குழந்தையாகப் பிறந்த வியப்பினால் மிகுந்துள்ளோம் என்றுரைத்த திருத்தந்தை, நம்மில் ஏற்பட்டுள்ள இந்த அக ஒளியை, நம் அன்றாட வாழ்விலும், பணியிலும், குடும்பத்திலும் காட்டுவோம் எனக் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை: நம் அன்றாட வாழ்வில் எளிமைப் பண்புக்குச் சான்றுபகர, இயேசுவின் பிறப்பு நம்மை அழைக்கின்றது 

சன.10,2014. நம் அன்றாட வாழ்வில் தாழ்மை, எளிமை, சேவையுணர்வு ஆகியவற்றுக்குச் சான்றுபகர, இயேசு பிறப்பின் பேருண்மை நம்மை அழைக்கின்றது  என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
sediari pontifici என அழைக்கப்படும் வத்திக்கானில் பணிசெய்யும் பல்லக்கு தூக்கிகள் குழுவினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ், இவர்கள் தங்களது அன்றாடப் பணிகளில் இறைமகனின் பண்புகளை வெளிப்படுத்த முடியும் எனவும் கூறினார்.
செபத்தில் நம் ஆண்டவரோடு உரையாடுவதிலும், அவரோடு நட்புறவு கொள்வதிலும் வளர்ந்தால், ஒவ்வொரு நாளும் தாங்கள் சந்திக்கும் மனிதருக்குக் கிறிஸ்தவ மகிழ்வை வழங்க முடியும் என இப்பணியாளர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ள Twitter செய்தியில், நாம் பெத்லகேம் குழந்தையின்முன் நின்று கடவுளின் கனிவு நம் இதயங்களை வெப்பமூட்ட அனுமதிப்போம் என எழுதியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. பிலிப்பின்ஸ் நாட்டில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்ட 'கறுப்பு நாசரேத்தூர் மனிதர்' ஊர்வலம்

சன.10,2014. பிலிப்பின்ஸ் மக்கள் இறைவன் மீது கொண்டிருக்கும் அன்பையும், பக்தியையும், அந்நாட்டில் நிலவும் வறுமையையும், ஊழலையும் அகற்றும் சக்திகளாகப் பயன்படுத்தவேண்டும் என்று கர்தினால் Luis Antonio Tagle அவர்கள் கூறினார்.
'கறுப்பு நாசரேத்தூர் மனிதர்' என்ற பெயருடன் வணங்கப்படும் கிறிஸ்துவின் ஒரு திரு உருவம், பிலிப்பின்ஸ் நாட்டில் மிகப் புகழ்பெற்ற ஒரு பக்தி முயற்சியாக கொண்டாடப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் சனவரி 9ம் தேதி நடைபெறும் இந்தத் திருஉருவத்தின் ஊர்வலத்தை, இவ்வியாழன் மாலை திருப்பலியுடன் துவக்கிவைத்த மணிலா பேராயர் கர்தினால் Tagle அவர்கள், கிறிஸ்துவின் மீது கொள்ளும் பக்தி, அடுத்தவர் மீது காட்டும் அக்கரையில் வெளிப்படும் என்று தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.
பிலிப்பின்ஸ் நாட்டை உலுக்கிய ஹையான் சூறாவளியையும், போஹோல் எனுமிடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையும், இன்னும் அந்நாடு சந்தித்த பல்வேறு பிரச்சனைகளையும் தன் மறையுரையில் குறிப்பிட்ட கர்தினால் Tagle அவர்கள், இப்பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டோரை மறந்துவிட்டு, பக்தி முயற்சிகளில் மட்டும் ஈடுபடுவது பொருளற்றது என்று கூறினார்.
1 கோடியே, 20 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்ட இந்த ஊர்வலத்தில், புதுமை சக்தி பெற்றதாய் கருதப்படும் இயேசுவின் திரு உருவத்தைத் தொடும் முயற்சியில் ஈடுபட்ட மக்களை காவல் துறை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், இதனால், 1600க்கும் அதிகமானோர் காயமுற்றனர் என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / UCAN


5. ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் சிரியாவில் வாழும் அனைவருக்கும் நன்மைகளைக் கொணரவேண்டும் - சிரியாவின் பேராயர்

சன.10,2014. சனவரி 22ம் தேதி, ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் மத்தியக்கிழக்கு அமைதிப் பேச்சுவார்த்தைகள் கூட்டம், சிரியாவில் வாழும் அனைவருக்கும் நன்மைகளைக் கொணரும் கூட்டமாக அமையவேண்டும் என்ற தன் ஆவலை வெளியிட்டுள்ளார் சிரியாவின் பேராயர் ஒருவர்.
சிரியாவில் போராடிவரும் அரசுத் தரப்பினருக்கும், எதிர் தரப்பினருக்கும் இடையே, ஐ.நா.அவையின் முயற்சியால் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தைகள், அனைத்து மக்களுக்கும் விடுதலையையும், குடி உரிமைகளையும் கொணரும் ஒரு கூட்டமாக அமையவேண்டும் என்று Hassaké-Nisibisன் பேராயர் Jacques Behnan Hindo அவர்கள் கூறினார்.
சிரியாவில் இஸ்லாமிய Sharia சட்ட அமைப்பினைக் கொணரவிழையும் அனைத்து முயற்சிகளையும் ஒத்துக்கிவைத்துவிட்டு, உண்மையான விடுதலையை நோக்கி அனைத்து மக்களையும் வழிநடத்தும் வகையில் ஜெனீவா கூட்டம் அமையவேண்டும் என்று பேராயர் Hindo அவர்கள் வலியுறுத்தினார்.
மதக் கோட்பாடுகள் என்ற போர்வையில் அரக்கத்தனமான அடக்குமுறைகளை, குறிப்பாக, கிறிஸ்தவர்கள் மீது திணிக்கும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் Hindo அவர்கள், கிறிஸ்தவர்களும் சிரியா நாட்டின் முக்கியக் குடிமக்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தேவை என்பதை எடுத்துரைத்தார்.

ஆதாரம் : Zenit / Fides

6. நன்னெறி வழி கல்விப் புகட்டப்படுவதால் மட்டுமே 'ஊழல்' பிரச்சனையிலிருந்து இந்தியா விடுதலை பெறும் - தலாய் லாமா

சன.10,2014. கட்டாய மதமாற்றம்என்பது, தன்னிலேயே முரணான இரு வார்த்தைகளை இணைக்கும் ஒரு முயற்சி என்று புகழ்பெற்ற மதத் தலைவர் தலாய் லாமா அவர்கள் கூறினார்.
இந்தியாவில், கிறிஸ்துவர்கள் அடிக்கடி வன்முறைக்கு உள்ளான கர்நாடகா மாநிலத்தில், அண்மையில் நடைபெற்ற ஒரு பள்ளிவிழாவில் உரையாற்றிய தலாய் லாமா அவர்கள், மதமாற்றம் என்பது ஒருவர் தானாகவே விருப்பப்பட்டு மேற்கொள்ளும் ஒரு முயற்சி என்பதால், அதில் கட்டாயம் என்ற கருத்துக்கே இடமில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
கல்வி, மருத்துவம் என்ற இரு துறைகளிலும் கிறிஸ்தவர்கள் ஒப்பற்ற பணியாற்றிவருகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டிய தலாய் லாமா அவர்கள், மக்களை மதமாற்றம் செய்வதற்கென்று இப்பணிகளைச் செய்தால், அது தவறான ஒரு வழி என்பதையும் எடுத்துரைத்தார்.
இந்தியா தற்போது சந்தித்துவரும் ஒரு முக்கிய பிரச்சனை 'ஊழல்' என்பதைச் சுட்டிக்காட்டிய தலாய் லாமா அவர்கள், நன்னெறி கோட்பாடுகளின் அடிப்படையில் கல்விப் புகட்டப்படுவதால் மட்டுமே இந்தப் பிரச்சனையிலிருந்து நாடு விடுதலை பெறும் என்பதையும் கூறினார்.

ஆதாரம் : Fides

7. கப்புச்சின் அருள் பணியாளர் Jacob Kani அவர்களுக்கு, பத்திரிக்கை இயலுக்கான 2013ம் ஆண்டின் Honesty விருது

சன.10,2014. 25 வருட வரலாறு கொண்ட Indian Currents என்ற வார இதழின் முதன்மை ஆசிரியராகப் பணியாற்றும் கப்புச்சின் அருள் பணியாளர் Jacob Kani அவர்களுக்கு, பத்திரிக்கை இயலுக்கான 2013ம் ஆண்டின் Honesty விருது வழங்கப்பட்டுள்ளது.
அருள் பணி Kani அவர்கள், இந்த வார இதழின் ஆசிரியராக, பல ஆண்டுகள், நேர்மை, அச்சமின்மை, மற்றும் துணிச்சலுடன் பணியாற்றிவருவதைப் பாராட்டும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளதாக UCAN செய்தி நிறுவனம் அறிவித்தது.
பத்திரிகை இயல் நேர்மை என்ற விருது 2013ம் ஆண்டில், முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. கோவாவிலுள்ள Honesty நிறுவனம் இவ்விருதை வழங்குகிறது.

ஆதாரம் : UCAN    

8. இலங்கை போர்க் குற்றம் தொடர்பான படங்களை வெளியிட்டது அமெரிக்கா: ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவர தீவிரம்

சன.10,2014. இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது அந்நாட்டு இராணுவத்தால் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்ட இடங்களின் புகைப்படங்களை அமெரிக்கா பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.
அமெரிக்க தூதரகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் அப்புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 2009-ம் ஆண்டில் இலங்கை இராணுவத்தின் பீரங்கித் தாக்குதலில் நூற்றுக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் கொல்லப்பட்ட இடமான செயின்ட் அந்தோனி விளையாட்டுத்திடலின் புகைப்படம் பிரதானமாக இடம்பெற்றுள்ளது.
2009 மே மாதம் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் 40,000-க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டை இலங்கை அரசு ஆரம்பம் முதலே மறுத்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீபன் ஜே.ராப் அவர்கள், இலங்கையில் தமிழர் பகுதிகளை இவ்வியாழனன்று நேரில் பார்வையிட்டார். அவரது சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்து, ட்விட்டரில் இராணுவப் போர்க் குற்றங்கள் தொடர்பான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜெனீவாவில் வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைக் குழுவின் மேல்மட்டக் கூட்டத்தில், போர்க் குற்றங்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக 3வது தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது என்று ஸ்டீபன் ஜே ராப் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆதாரம் : The Hindu

No comments:

Post a Comment