செய்திகள் - 13.01.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருப்பீடத்திற்கான பல நாடுகளின் தூதர்களுக்கு திருத்தந்தையின் உரை
2. திருத்தந்தை : இறைவனின் அன்பை நாம் புரிந்துகொள்ளத் தவறினாலும் அவர் நம்மைக் கைவிடுவதில்லை
3. கடவுள் நம் இதயக் கதவுகளைத் தட்டுகிறார் – திருத்தந்தையின் Twitter செய்தி
4. திருத்தந்தை பிரான்சிஸ் - ஒவ்வொரு குழந்தையும், மகிழ்வு மற்றும் நம்பிக்கையின் கொடை
5. திருஅவையில் 19 புதிய கர்தினால்கள் அறிவிப்பு
6. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருஅவை கண்ணோட்டத்தை நடைமுறைப்படுத்துவேன் - கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள பேராயர் Yeom Soo-jung
7. யாழ்., மன்னார் ஆயர்களைக் கைது செய்யுமாறு கோரி போர்க்கொடி தூக்குவது நாகரிகமற்ற செயல்
8. இலங்கையில் 3 ஆலயங்கள் மீது தாக்குதல்
9. போலியோ அற்ற நாடு என்ற மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருப்பீடத்திற்கான பல நாடுகளின் தூதர்களுக்கு திருத்தந்தையின் உரை
சன.13,2014. அண்மைக் காலங்களில் தென்சூடானுடன் ஏற்படுத்தப்பட்ட அரசியல் உறவு, கேப் வெர்தே, ஹங்கேரி, சாட் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்ட சிறப்பு ஒப்பந்தங்கள், Equatorial Guinea நாட்டுடனான ஒப்பந்த மறுசீரமைப்பு, மத்திய அமெரிக்காவிலும் ஆப்ரிக்காவிலும் பார்வையாளர் தகுதி போன்றவை, திருப்பீடம் உலக நாடுகளுடன் கொண்டுள்ள உறவின் வளர்ச்சியைக் காண்பிக்கிறது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீடத்திற்கான உலக நாடுகளின் தூதரக அதிகாரிகளை இத்திங்கள் காலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், குடும்பங்களுக்கு ஆதரவளித்து, உதவி அவைகளைப் பலப்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
முதியோர் சுமையாகக் கருதப்படுவதும், இளையோர் சரியான நோக்கமின்றி திரிவதும் மனிதகுல நம்பிக்கைகளைச் சிதைக்கின்றன என்பதையும் கவலையுடன் வெளியிட்டார் திருத்தந்தை.
அமைதியை உருவாக்குபவர்களாகவும், மகிழ்வை வழங்குபவர்களாகவும் இருக்கவேண்டிய மனிதர்கள், சுயநலவாதிகளாகச் செயல்படுவதால் மனிதகுலம் அனுபவிக்கும் துன்பங்களையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ், சிரியா போன்ற நாடுகளில் இடம்பெறும் வன்முறை மோதல்கள் இவ்வாண்டில் முடிவுக்கு வந்து அமைதி நிலவும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.
கொரியத்
தீபகற்பத்தில் ஒப்புரவு எனும் கொடையை இறைவன் வழங்கவேண்டும் என
வேண்டுவதாகவும் தன் உரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தற்போது 180 நாடுகள் வத்திக்கானுடன் முழு அரசியல் உறவைக் கொண்டுள்ளன.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை : இறைவனின் அன்பை நாம் புரிந்துகொள்ளத் தவறினாலும் அவர் நம்மைக் கைவிடுவதில்லை
சன.13,2014. இறைவனின் அன்பை நாம் புரிந்துகொள்ளத் தவறினாலும், அந்த அன்பு, நம் பாவ வரலாற்றை நோக்காமல், நம்மை
என்றென்றும் கைவிடாமல் கரையேற்றுகிறது என இத்திங்களன்று காலை புனித
மார்த்தா இல்லச் சிற்றாலயத் திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை
பிரான்சிஸ்.
இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர்களும் தவறுச் செய்தார்கள், ஒருவர் மறுதலித்தார், மற்றவர்கள் பயத்தால் அவரைவிட்டு விலகி ஓடினார்கள், இருப்பினும் அவர்களுக்கானப் பாதையை இறைவன் தயாரித்துக் கொடுத்தார் என்ற திருத்தந்தை பிரான்சிஸ், நமக்காகவும் அப்பாதையை தலைமுறை தலைமுறையாக அவர் தயாரித்து வைத்துள்ளார் என்றார்.
இறைவன் நம்மீது கொண்டிருக்கும் அன்பைப் புரிந்துகொள்ள உதவுமாறு அவரை நோக்கி மன்றாடுவோம், ஏனெனில் அவர் நம் வாழ்வில் நம்மைத் தயாரிப்பதோடு, நம்மோடு இணைந்து நடைபோடுகின்றார் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. கடவுள் நம் இதயக் கதவுகளைத் தட்டுகிறார் – திருத்தந்தையின் Twitter செய்தி
சன.13,2014. "கடவுள் நம் இதயக் கதவுகளைத் தட்டுகிறார்; 'என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்' என்ற அட்டையை நம் மனக்கதவில் மாட்டியுள்ளோமா? என சிந்திப்போம்" என்ற தன் Twitter செய்தியை இத்திங்களன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதே நாளில், திருப்பீடச் செயலகமும் தன் Twitter பக்கத்தில், இத்திங்கள்
திருத்தந்தையைச் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கவந்த
திருப்பீடத்திற்கான பல நாடுகளின் அரசுத் தூதர்களின் குழுவுக்குத் தன்
நன்றியை வெளியிட்டுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. திருத்தந்தை பிரான்சிஸ் - ஒவ்வொரு குழந்தையும், மகிழ்வு மற்றும் நம்பிக்கையின் கொடை
சன.13,2014. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வழங்கவல்ல மிகச் சிறந்த பாரம்பரியச் சொத்து, விசுவாசமேயாகும் என்று உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவின் திருமுழுக்குத் திருவிழாவை முன்னிட்டு, வத்திக்கானில்
32 குழந்தைகளுக்குத் திருமுழுக்கு அருளடையாளத்தை வழங்கியத் திருப்பலியில்
மறையுரையாற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விசுவாசம் எனும் பாரம்பரியச் சொத்தை குழந்தைகளுக்கு வழங்கவேண்டியது பெற்றோரின் கடமை என்பதை வலியுறுத்தியதுடன், ஒவ்வொரு குழந்தையும், மகிழ்வு மற்றும் நம்பிக்கையின் கொடை என்பதையும் எடுத்துரைத்தார்.
பண்டையக் கால இறையியல் அறிஞர்களின் கூற்றை மேற்கோள் காட்டியத் திருத்தந்தை, இயேசுவுக்கு திருமுழுக்குத் தேவையில்லையெனினும், தன் தெய்வீக உடலில் திருமுழுக்குத் தண்ணீரைப் பெற்றதன் வழியாக, அவர் தண்ணீருக்குத் திருமுழுக்கு வழங்கும் சக்தியை வழங்கினார் என்று கூறினார்.
திருமுழுக்கு வழங்கும்படி, இயேசு கிறிஸ்து, விண்ணகத்திற்கு எழும்பிச் செல்லும் முன் கூறிய வார்த்தைகள், ஒரு முடிவற்றச் சங்கிலிபோல் தலைமுறை, தலைமுறையாகத் தொடர்வதுபோல், நம் பிள்ளைகள் வழியாகவும் அது தொடரவேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. திருஅவையில் 19 புதிய கர்தினால்கள் அறிவிப்பு
சன.13,2014. இயேசுவின் திருமுழுக்குத் திருவிழாவையொட்டி, தன் ஞாயிறு மூவேளை செப உரையிலும் திருமுழுக்கின் முக்கியத்துவம் குறித்தே எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ், திருஅவையில் 19 புதிய கர்தினால்களின் பெயர்களையும் அறிவித்தார்.
திருப்பீடச்செயலர் பேராயர் Pietro Parolin உட்பட 15 நாடுகளைச் சேர்ந்த 19 திருஅவை அதிகாரிகள், இஞ்ஞாயிறன்று நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின் திருத்தந்தையால் கர்தினால்கள் என அறிவிக்கப்பட்டனர்.
திருப்பீடச்செயலர், உலக ஆயர் மாமன்றத்தின் பொதுச்செயலர் பேராயர் Lorenzo Baldisseri, விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்தின் தலைவர் பேராயர் Gerhard Ludwig Műller, குருக்களுக்கான திருப்பேராயத் தலைவர் பேராயர் Beniamino Stella, பிரிட்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர் Vincent Nichols, நிக்கராகுவாவின் மனகுவா பேராயர் Leopoldo José Brenes Solórzano, கானடா பேராயர் Gérald Cyprien Lacroix, ஐவரிகோஸ்ட் பேராயர் Jean-Pierre Kutwa, Brazil பேராயர் Orani João Tempesta, இத்தாலியின் பெருஜியா பேராயர் Gualtiero Bassetti, அர்ஜென்டினாவின் Buenos Aires பேராயர் Mario Aurelio Poli, கொரியா பேராயர் Andrew Yeom Soo jung, Chile பேராயர் Ricardo Ezzati Andrello, Burkina Faso பேராயர் Philippe Nakellentuba Ouédraogo, பிலிப்பீன்ஸ் பேராயர் Orlando B. Quevedo, Haïti ஆயர் Chibly Langlois, மற்றும் ஓய்வுபெற்ற முன்னாள் பேராயர்கள் Loris Francesco Capovilla, Fernando Sebastián Aguilar, Kelvin Edward Felix ஆகியோர் கர்தினால்களாக அறிவிக்கப்பட்டு, அடுத்தமாதம் 22ம் தேதி வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் இடம்பெறும் திருப்பலியில் திருத்தந்தையால் கர்தினால்களாக உயர்த்தப்படுவர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருஅவை கண்ணோட்டத்தை நடைமுறைப்படுத்துவேன் - கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள பேராயர் Yeom Soo-jung
சன.13,2014. சமுதாயத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளவர்களுக்காகவும், ஏழைகளுக்காகவும், திருஅவை
உழைக்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டுள்ள
கண்ணோட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிப்பேன் என்று ஆசியப் பேராயர் ஒருவர்
கூறியுள்ளார்.
சனவரி, 12, இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்த 19 கர்தினால்களில் ஒருவரான, தென் கொரியாவின் Seoul உயர்மறைமாவட்டப் பேராயர், Andrew Yeom Soo-jung அவர்கள், இவ்வாறு கூறினார்.
கர்தினால் என்ற பொறுப்பை தனக்கு வழங்கியுள்ள திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்த பேராயர் Yeom Soo-jung அவர்கள், திருஅவையின்
பணிகள் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டுள்ள கனவுகளை
செயல்படுத்த தனக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று
குறிப்பிட்டார்.
Seoul பேராயர்களாகப் பணியாற்றிய, மறைந்த கர்தினால் Kim Sou-hwan அவர்களும், முன்னாள் கர்தினால் Nicholas Cheong Jin-suk அவர்களும் ஆற்றிய பணிகளுக்கு நன்றியும் தெரிவித்தார் புதிய கர்தினாலாகப் பொறுப்பேற்கவிருக்கும் பேராயர் Yeom Soo-jung.
தனக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்பை பேராயர் Yeom Soo-jung அவர்கள் திறம்படச் செய்து, கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவார் என்று முன்னாள் பேராயர் கர்தினால் Cheong Jin-suk அவர்கள் மகிழ்வுடன் கூறினார்.
ஆதாரம் : AsiaNews
7. யாழ்., மன்னார் ஆயர்களைக் கைது செய்யுமாறு கோரி போர்க்கொடி தூக்குவது நாகரிகமற்ற செயல்
சன.13,2014.
மன்னார் மற்றும் யாழ். ஆயர்கள் தாம் கேட்டறிந்த உண்மைகளையே அமெரிக்கத்
தூதரிடம் சொன்னார்களே தவிர பொய்களை அவர்கள் உரைக்கவில்லை. அவர்களைத்
தேசத்துரோகிகள் என்று சொல்லி, கைது செய்ய வேண்டுமென்று போர்க்கொடி தூக்குவது அரசியல் நாகரிகமற்ற செயலாகும் என்று கிழக்கு மாகாண ஆயர்களும், சிலாபம் மறைமாவட்ட ஆயரும் தெரிவித்தனர்.
மன்னார்
மற்றும் யாழ். ஆயர்கள் இருவரும் தேசத்துரோகச் செயல்களில்
ஈடுபடுகின்றார்கள். அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொதுபலசேனா
அமைப்பினரும் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் ஒரு சில இனவாத அமைப்பினரும்
கூறிய கருத்துக்கு மறுதலிப்பாக திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிங்ஸிலி
சுவாமிபிள்ளை, மட்டக்களப்பு
மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா மற்றும் ஆயர்மன்ற செயலாளரும் சிலாபம்
மறைமாவட்ட ஆயர் வலன்ஸ் மென்டிஸ் ஆகியோரும் ஒன்றிணைந்து வெளிட்ட கருத்திலேயே
இவ்வாறு தெரிவித்தார்கள் என தமிழ்வின் செய்தி கூறுகிறது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், யாழ். மாவட்ட ஆயர் தாமஸ் சௌந்தரநாயகம் ஆகிய இருவரும், யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த அமெரிக்காவின் தூதுவர் ஸ்டீபன் ஜே.ராப்பிடம், தாங்கள் மக்களிடமிருந்து கேட்டறிந்த உண்மைகளையும் கண்டறிந்த செய்திகளையுமே எடுத்துக் கூறியுள்ளனர், இவற்றில் உண்மைத் தன்மை உண்டா? இல்லையா? என்பதைக் கண்டறிய வேண்டிய பொறுப்பு அரசிடமேயுண்டு எனவும் கிழக்கு மாகாண ஆயர்களும், சிலாபம் மறைமாவட்ட ஆயரும் தெரிவித்துள்ளனர்.
ஆதாரம் : TamilWin
8. இலங்கையில் 3 ஆலயங்கள் மீது தாக்குதல்
சன.13,2014. இலங்கையின் தென்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை மூன்று ஆலயங்கள் தாக்கப்பட்டதாக கிறிஸ்தவக் குழுக்கள் கூறியுள்ளன.
எவருக்கும் காயம் எதுவும் ஏற்படாவிடினும் ஆலயம் ஒன்றைச் சேர்ந்த ஒருவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தெற்கே ஹிக்கடுவை பகுதியில் உள்ள மூன்று ஆலயங்கள் மீதே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
குறைந்தபட்சம் 200 பேர் கொண்ட கும்பல் 20க்கும் அதிகமான பௌத்த மதகுருமார் தலைமையில் தமது வழிபாட்டின் போது வந்து, இரு ஆலயங்களை அடுத்தடுத்து தாக்கியதாக அந்த ஆலயங்களின் போதகர்கள் கூறியுள்ளனர்.
ஜன்னல்கள், இசைக்கருவிகள் மற்றும் ஏனைய பொருட்களை அவர்கள் அடித்து நொறுக்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தலைநகருக்கு அருகில் உள்ள இன்னுமொரு ஆலயத்துக்கும் இரவில் ''தீ'' வைக்கப்பட்டதாகவும், ஆனாலும் ''தீ'' பெரிதாகப் பரவுவதற்கு முன்னதாக அது அணைக்கப்பட்டுவிட்டதாகவும் கிறிஸ்தவ அமைப்பு ஒன்று கூறுகின்றது.
ஆதாரம் : TamilWin
9. போலியோ அற்ற நாடு என்ற மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது
சன.13,2014. கடந்த மூன்றாண்டுகளில் போலியோ தாக்கிய ஒரு நிகழ்வுகூட வெளிவராத நிலையில், இந்தியா, தன்னை போலியோ அற்ற நாடு என்று அறிவிக்கும் நிலையை இத்திங்களன்று எட்டியது.
இருப்பினும், உலக நலவாழ்வு நிறுவனம், இந்தியாவிலிருந்து வந்த கடைசி ஆய்வு மாதிரிகள் சிலவற்றை பரிசோதித்துப் பார்த்துவிட்டுப் பின்னர் பிப்ரவரி 11ம் தேதியே தனது அத்தாட்சிப் பத்திரத்தை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டில் இந்தியாவில் 741 போலியோ தாக்கிய சம்பவங்கள் பதியப்பட்டிருந்த நிலையில், இந்தியாவில் போலியோ தாக்கிய கடைசி நிகழ்வு மேற்கு வங்க மாநிலத்தில் 2011ல் இடம்பெற்றது.
போலியோ தடுப்பு சொட்டு மருந்து தரும் பணியின் ஒவ்வொரு கட்டத்திலும், இந்தியாவில், ஏறத்தாழ 23 லட்சம் தன்னார்வத் தொண்டர்கள் 20 கோடியே 90 இலட்சம் வீடுகளுக்கு சென்று, ஏறத்தாழ 17 கோடி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தந்தனர்.
தற்போது புதிதாகத் தோன்றியிருக்கும் ஒரு வகை தட்டம்மையை ஒழிப்பதை இந்தியா புதிய இலக்காகக் கொண்டிருக்கிறது.1980ல் இந்தியாவில் பெரியம்மை நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், இரண்டாவதாக இப்போது போலியோ என்ற இளம்பிள்ளைவாத நோயும் ஒழிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : BBC
No comments:
Post a Comment