ஈராக் நாட்டில் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த 11 பேருக்கு தூக்கு
ஈராக் நாட்டில் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு அந்நாடு தூக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
ஈராக் நாட்டின் நீதி துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹைதர் அல்-சாதி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள தகவலில், ஈராக் நாட்டை சேர்ந்த 11 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார். கடந்த 2006 மற்றும் 2007ம் ஆண்டுகளில் சன்னி மற்றும் ஷியா பிரிவினருக்கு இடையே மோதல் அதிகரித்தது. இதனால் ஏற்பட்ட வன்முறையில் பல்லாயிரக்கணக்கானோர் பலியானார்கள். தீவிரவாத தொடர்புடையவர்களை தூக்கிலிடுவது ஈராக்கில் கடந்தாண்டுகளில் அதிகரித்துள்ளது.
தூக்கு தண்டனையானது கடந்த 2011ம் ஆண்டில் 68 ஆகவும், 2012ம் ஆண்டில் 129 ஆகவும் மற்றும் 2013ம் ஆண்டில் 151 ஆகவும் அதிகரித்துள்ளது. இதனை நியூயார்க் நகரை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தனது உலக ஆண்டு அறிக்கையில் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் 26 பேர் ஈராக் நாட்டில் தூக்கிலிடப்பட்டனர். இதற்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு தலைவர் நவி பிள்ளே கண்டனம் தெரிவித்தார். ஈராக்கில் அதிக அளவிலான மரண தண்டனை நிறைவேற்றப்படுவதால் அது தவறான நீதி வழங்கப்படுவதற்கு ஏதுவாகும் என்றும் தனது கண்டன செய்தியில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment