பழங்குடி சமூகத்திற்கு வெளியே காதலித்த பெண்ணுக்கு பாலியல் வல்லுறவு தண்டனை
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் தான் பிறந்த பழங்குடி சமூகம் சாராத ஆணை காதலித்த பழங்குடி பெண்ணை, கிராம பஞ்சாயத்தின் உத்தரவின்படி ஒரு கும்பல் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியது தொடர்பில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பழங்குடியினத்தை சாராத ஆணுடன் அந்த பெண்ணிற்கு இருந்த உறவை ஏற்றுக்கொள்ளாத கிராமத்தினர் இந்த தண்டனையை அளித்துள்ளனர். 20 வயதான அந்தப் பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இழந்த மரியாதையை மீட்பதாக கூறி தவறிழைக்கும் ஜோடிகளை கொலை செய்ய இந்தியாவின் கிராமப்புறங்களில் நடக்கும் கட்டப்பஞ்சாயத்துக்கள் அனுமதி அளிப்பது அடிக்கடி நடக்கும் ஒரு செயலாக நீடிக்கிறது.
2012 ஆம் ஆண்டு டெல்லியில் ஒரு பேருந்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட மாணவி இறந்ததைத் தொடர்ந்து இந்தியாவில் பாலியல் வன்முறை மீதான கவனம் அதிகரித்துள்ளது.அந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக நடைபெற்ற போராட்டங்களை தொடர்ந்து, இந்திய அரசாங்கம் பாலியல் வன்முறை மீதான சட்டங்களை கடுமையாக்கியுள்ள பின்னணியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
பழங்குடியினத்தைச் சேர்ந்த இந்தப் பெண், பிர்பம் என்ற பக்கத்து கிராமத்தில் பழங்குடியினத்தை சாராத ஒரு ஆணுடன் உறவு வைத்துகொண்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தச் சம்பவம் திங்கட்கிழமை இரவு நடந்ததாக காவல் துறையினர் கூறுகின்றனர்.
‘காதல் செய்த குற்றம்’
‘’கடந்த ஐந்து ஆண்டுகளாக இவர்களுக்கு இடையில் இந்தக் காதல் தொடர்பு இருந்தது. திங்கட்கிழமையன்று இந்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள சம்மதம் கேட்க அந்த பெண்ணின் இல்லத்திற்கு அந்த நபர் வந்ததை கண்டதும் கிராமத்தினர் தங்களின் கட்டப்பஞ்சாயத்தைக் கூட்டினார்கள். அதில் விசாரணை நடக்கும் பொழுது இருவரும் கைகள் கட்டி வைக்கப்பட்டிருந்தனர்”, என்று கூறினார் பிர்பம் காவல்துறை உயர் அதிகாரி சி.சுதாகர்.
காதல் புரிந்த குற்றத்திற்காக அவர்களுக்கு இந்திய பணம் 25000ரூபாய் அபராதத்தை கிராமத்தின் தலைவர் விதித்ததாகவும் காவல்துறை அதிகாரி கூறினார்.
அந்த ஆண் அபராதப் பணத்தை கட்டிவிட்டதாவும், ஆனால் பெண்ணின் குடும்பத்தால் அந்த அபராதத்தொகை கட்ட முடியவில்லை என்றும் கூறப்படுகின்றது. பின் அந்த பெண்ணின் தூரத்து உறவினரான அந்த கிராமத்தின் தலைவர் அந்த பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ய உத்தரவிட்டார் என்றும் காவல் துறை அதிகாரி கூறினார்.
‘அவளது குடும்பத்தினால் பணம் கட்ட இயலவில்லை, அதனால் அந்த பெண்ணை அனுபவித்து மகிழ்ச்சியாக இருங்கள்’ என்று அந்த தலைவர் கூறியதாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட்டுள்ளது.அந்த கட்டப்பஞ்சாயத்து தலைவர் உட்பட இதுவரை 13 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் திங்கட்கிழமையன்று நடந்தாலும் அந்த பெண்ணின் குடும்பத்தினர் புதன்கிழமை மாலைதான் காவல் துறையை அணுகினர். புதன்கிழமையன்று அந்தப் பெண்ணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
2010ஆம் ஆண்டில் பிர்பம் என்ற இந்த கிராமத்தில் குறைந்தது 3 பெண்களையாவது நிர்வாணமாக கிராமத்தினர் முன்னர் நடக்க கிராம பெரியவர்கள் உத்தரவிட்டதாக, காவல் துறையினர் கூறுகின்றனர். அந்த பெண்கள் அவர்கள் பிறந்த பழங்குடி இனத்தை சாராத ஆண்களுடன் உறவு வைத்து கொண்டதற்காக அவர்களுக்கு அந்த தண்டனை வழங்கப்பட்டது.
பாலியல் வல்லுறவு என்பது இந்தியாவில் பொதுவான ஒரு செயல் என்றும், அதில் பல சம்பவங்கள் புகார் செய்யப்படாமல் சென்றுவிடுகின்றன என்றும் பெண்ணிய செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
இந்தியாவில் பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டங்களை அரசாங்கம் கடுமையாக்கினாலும், சமூகம் இந்தச் சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக விவாதித்தாலும், இந்தியாவில் உள்ள பல பெண்கள் பாலியல் தொந்தரவிற்கு பயந்து வாழ்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் பலர் இன்னமும் காவல்துறையின் அக்கறையின்மை காரணமாக பெரும் அவதிப்படுகின்றனர்.
No comments:
Post a Comment