Monday, 13 January 2014

செய்திகள் - 09.01.14

செய்திகள் - 09.01.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவ அன்பு செயல்களில் வெளிப்படும் உண்மையான அன்பு

2. நற்செய்தியின் வழி அரசியல் தலைவர்களை உருவாக்கும் பணியில் கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் ஈடுபட வலியுறுத்தல், கர்தினால் டர்க்சன்

3. கிறிஸ்துவின் படையணியினர் என்ற அருள் பணியாளர்களின் சிறப்பு அவை

4. இலங்கை உள்நாட்டுப் போர் குறித்து பன்னாட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும், மன்னார் ஆயர்

5. வன்முறை நிறைந்துள்ள பங்களாதேஷ் நாட்டில் கிறிஸ்தவர்கள் நம்பிக்கை தரும் செய்தி, Dhaka பேராயர்

6. தென் சூடானின் வன்முறைகள் நிறுத்தப்படுவதற்கு உலக நாடுகளின் தலையீடு உடனடியாகத் தேவை, ஆயர்கள்

7. கானா நாட்டில் நிலவும் ஊழலை வேரோடு ஒழிக்க இன்னும் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், ஆயர் Michael Osei Bonsu

8. அமெரிக்காவில் மிதமிஞ்சிய பனி மற்றும் குளிருக்கான காரணம் அறிவதில் ஐரோப்பிய அறிவியலாளர்கள்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவ அன்பு செயல்களில் வெளிப்படும் உண்மையான அன்பு

சன.09,2014. கிறிஸ்தவ அன்பு சொற்களைக் காட்டிலும் செயல்களில் வெளிப்படும் உண்மையான அன்பு என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
சனவரி 9,  இவ்வியாழனன்று காலை புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் புனித யோவான் எழுதிய திருமுக்த்தில் வாசிக்கப்பட்ட வார்த்தைகளை தன் மறையுரையின் மையமாக்கினார்.
கிறிஸ்தவ அன்பு, உணர்வுப்பூர்வமான வார்த்தைகளை வெளிப்படுத்தும் அன்பு அல்ல என்றும், பெறுவதைக் காட்டிலும் கொடுப்பதில் அதிகக் கவனம் செலுத்தும் அன்பு என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
இவ்வுலகம் காட்டும் அன்பு மேலோட்டமானது, பொய்யான தெய்வ வழிபாடு போன்றது  மற்றும் தன்னையே மையப்படுத்துவது என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ், இறைவனில் தங்கி இறையாவியை மையப்படுத்தும் அன்பு முற்றிலும் வேறானது என்று கூறினார்.
பசித்தோருக்கு உணவளிப்பது, நோயுற்றோரைக் காணச் செல்வது போன்ற நடைமுறை வாழ்வுச் செயல்களில் இந்த அன்பு அடங்கியுள்ளது என்பது புனித யோவானின் திருமுகமும், நற்செய்தியும் இன்று விளக்குகின்றன என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நடைமுறைச் செயல்களில் வெளிப்படும் இந்த அன்பு நாளை என்பதைவிட இன்றே மேற்கொள்ளப்படும்  செயல்களில் அடங்கியுள்ளது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது மறையுரையில் வலியுறுத்தினார்.
மேலும், "வறுமையில் பிறந்த இறைமகனின் தாழ்ச்சியை நாம் தியானிப்போம்; நலிவுற்றோருடன் அவர் தன் வாழ்வைப் பகிர்ந்ததை நாமும் பின்பற்ற முயல்வோம்" என்ற Twitter செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று ஒன்பது மொழிகளில் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. நற்செய்தியின் வழி அரசியல் தலைவர்களை உருவாக்கும் பணியில் கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் ஈடுபட வலியுறுத்தல், கர்தினால் டர்க்சன்

சன.09,2014. நற்செய்தியின் வழி இவ்வுலகை வழிநடத்தும் அரசியல் தலைவர்களை உருவாக்கும் பணியில் கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் ஈடுபடவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பிலிப்பின்ஸ் நாட்டின் Davao நகரில் சனவரி 9, இவ்வியாழனன்று துவங்கிய, கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களின் தேசிய கருத்தரங்கின் துவக்க விழாவில், திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் ஆற்றிய உரையில் இவ்வாறு கூறினார்.
கத்தோலிக்கப் பல்கலைக் கழகங்கள், ஆய்வு, சமுதாய ஈடுபாடு, கல்வி புகட்டுதல் ஆகிய மூன்று இலக்குகளைக் கொண்டு செயல்படவேண்டும் என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் வெளியிட்ட 'Pacem in Terris' என்ற சுற்றுமடலையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் வெளியிட்ட 'Evangelii Gaudium' என்ற திருத்தூது அறிவுரை மடலையும் தன் உரையில் மேற்கோள்களாகக் கூறிய கர்தினால் டர்க்சன் அவர்கள், வர்த்தக உலகம் வகுக்கும் வழிகளிலிருந்து மாணவ, மாணவியரைத் திசைதிருப்பி, நன்னெறி வழிகளில் அவர்களை நடத்துவது கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களின் முக்கியமான கடமை என்பதை வலியுறுத்தினார்.
திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் முன்னாள் தலைவர், கர்தினால் François-Xavier Nguyen Van Thuân அவர்கள், "அரசியல் தலைவர் பேறுபெற்றோர்" என்ற சொற்களுடன், வெளியிட்ட எட்டு 'பேறுபெற்றோர்' வரிகளை கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் வாசித்தார்.
இவ்வுலகம் இருக்கும் நிலை, குறிப்பாக, வறியோரின் வாழ்வு இவற்றால் பாதிக்கப்படும் நல்ல மனசாட்சி கொண்ட அரசியல் தலைவர்களை இறைவன் இவ்வுலகிற்குத் தரவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுப்பிய வேண்டுதலின் ஒரு பகுதியை தன் உரையின் இறுதியில் கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் செபமாக வாசித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. கிறிஸ்துவின் படையணியினர் என்ற அருள் பணியாளர்களின் சிறப்பு அவை

சன.09,2014. கிறிஸ்துவின் படையணியினர் (Legionaries of Christ) என்ற அருள் பணியாளர்களின் சிறப்பு அவையொன்று சனவரி 9 இவ்வியாழன் முதல் உரோம் நகரில் நடைபெறுகிறது.
கர்தினால் Velasio de Paolis அவர்களின் தலைமையில், இப்புதன் மாலை நடைபெற்ற ஒரு திருப்பலியுடன் துவங்கிய இந்தச் சிறப்பு அவை, பிப்ரவரி மாதம் இறுதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1941ம் ஆண்டு, மெக்சிகோவில் துவக்கப்பட்ட கிறிஸ்துவின் படையணியினர் என்ற இக்குழுவின் செயல்பாடுகளை மறுபரிசீலினை செய்யும் பொறுப்பை, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கர்தினால் Paolis அவர்களிடம் 2010ம் ஆண்டு ஒப்படைத்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற இந்த ஆய்வின் இறுதிக் கட்டமாக, அருள் பணியாளர்களின் இந்தக் கூட்டம் இவ்வியாழனன்று உரோம் நகரில் துவங்கியுள்ளது.
துவங்கியுள்ள இந்தச் சிறப்பு அவையின் நடவடிக்கைகளைக் குறித்து, கர்தினால் Paolis அவர்களை, வத்திக்கான் வானொலி இயக்குனர் அருள்பணியாளர் Federico Lombardi அவர்கள் பேட்டி கண்டார்.
2012ம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி, கிறிஸ்துவின் படையணியினர் குழுவில், 3 ஆயர்கள், 953 அருள் பணியாளர்கள், ஏறத்தாழ 1900 குரு மாணவர்கள் உள்ளனர் என்றும், இக்குழுவைச் சார்ந்தவர்கள் 22 நாடுகளில் பணியாற்றுகின்றனர் என்றும் தெரிகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. இலங்கை உள்நாட்டுப் போர் குறித்து பன்னாட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும், மன்னார் ஆயர்

சன.09,2014. இலங்கை உள்நாட்டுப் போர் குறித்து இலங்கை அரசால் நடத்தப்படும் ஆய்வு, மக்கள் மனதில் நம்பிக்கையைத் தராது என்றும், எனவே, பன்னாட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் கூறினார்.
பாகுபாடற்ற, நடுநிலையான இத்தகைய ஓர் ஆய்வே மக்கள் மத்தியில் மீண்டும் ஒப்புரவை வளர்க்கும் வழியாக அமையும் என்றும் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் UCAN செய்தியிடம் வலியுறுத்திக் கூறினார்.
இலங்கைத் தமிழர்களுக்கு நடந்துள்ள கொடுமைகள் அரசியல் என்ற குறுகிய கண்ணோட்டத்திற்கும் மேற்பட்ட ஓர் மனிதாபிமான, ஆன்மீக ஆய்வாக மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை ஆயர் இராயப்பு ஜோசப் தன் வேண்டுகோளாக முன்வைத்தார்.
சிறுபான்மை வெள்ளை இனத்தவர், பெரும்பான்மை கறுப்பினத்தவரை அடக்கி ஆண்ட தென் ஆப்ரிக்கா நாட்டில் நிகழ்ந்த ஒப்புரவு, இலங்கைக்கு ஒரு பாடமாக அமைந்து, பெரும்பான்மை சிங்கள மக்கள், சிறுபான்மை தமிழர்களுடன் இணைந்து வாழும் வழிகளைச் சொல்லித்தர முடியும் என்றும் மன்னார் ஆயர் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : UCAN

5. வன்முறை நிறைந்துள்ள பங்களாதேஷ் நாட்டில் கிறிஸ்தவர்கள் நம்பிக்கை தரும் செய்தி, Dhaka பேராயர்

சன.09,2014. வன்முறையும் குழப்பமும் நிறைந்துள்ள பங்களாதேஷ் நாட்டில் வாழும் சிறுபான்மையான கிறிஸ்தவர்கள், அந்நாட்டிற்கு நம்பிக்கை தரும் செய்தியாக விளங்குகின்றனர் என்று Dhaka பேராயர் Patrick D'Rozario அவர்கள் கூறினார்.
சனவரி 5, கடந்த ஞாயிறன்று பங்களாதேஷில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலையொட்டி நிகழ்ந்த வன்முறைகளின் மத்தியில் கிறிஸ்தவர்கள் தங்கள் தாயகத்திற்காக எழுப்பிய செபங்கள் நம்பிக்கை தருகின்றன என்று பேராயர் Patrick D'Rozario அவர்கள், Fides செய்திக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
இதற்கிடையே, Mymensingh மறைமாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களில் சிலர் வாக்களிக்கச் சென்றபோது, இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களால் தாக்கப்பட்டனர் என்றும், இத்தாக்குதலில் அம்மறை மாவட்ட ஆயர் Paul Ponen Kubi அவர்களின் சகோதரரும் காயமடைந்தார் என்றும் ஆசிய செய்திக் குறிப்பு கூறுகிறது.
2008ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 70 விழுக்காட்டு மக்கள் வாக்களித்தனர் என்றும், 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 20 விழுக்காட்டு மக்களே வாக்களிப்பில் கலந்து கொண்டனர் என்றும் ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides / AsiaNews

6. தென் சூடானின் வன்முறைகள் நிறுத்தப்படுவதற்கு உலக நாடுகளின் தலையீடு உடனடியாகத் தேவை, ஆயர்கள்

சன.09,2014. தென் சூடானில் நடைபெறும் வன்முறைகளும் கொலைகளும் உடனடியாக நிறுத்தப்படுவதற்கு உலக நாடுகளின் தலையீடு மிகவும் துரிதமாகத் தேவைப்படுகிறது என்று தென் சூடான் ஆயர்கள் கூறியுள்ளனர்.
அரசியல் தலைவர்களுக்கும் இராணுவத்திற்கும் இடையே உருவாகியுள்ள மோதல்களால் இதுவரை அப்பாவி மக்கள் 1000க்கும் அதிகமாகக் கொல்லப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி, தென் சூடான் ஆயர்கள் ஏனைய மதத் தலைவர்களுடன் இணைந்து அறிக்கையொன்றை Sudan Tribune என்ற பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.
தற்போது தென் சூடான் அரசுத் தலைவராக இருக்கும் Salva Kiir Mayardit அவரின் குழுவுக்கும், முன்னாள் உதவித் தலைவர் Riek Macharக்கு நம்பிக்கையாக இருக்கும் இராணுவத்திற்கும் இடையே நடைபெற்றுவரும் மோதல்களால், இதுவரை 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை இழந்து பக்கத்து நாடுகளுக்குப் புலம் பெயர்ந்துள்ளனர் என்று Zenit செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மக்களின் நலனை முதன்மைப் படுத்தி நாட்டில் முதலில் அமைதியை உறுதிப்படுத்தவும், அதன் பின் அரசியல் கருத்து வேறுபாடுகளை பேச்சு வார்த்தைகள் வழியாகத் தீர்க்கவும் இரு தரப்பினரும் முன்வர வேண்டுமென மதத் தலைவர்கள் தங்கள் அறிக்கையில் விண்ணப்பித்துள்ளனர்.

ஆதாரம் : Zenit

7. கானா நாட்டில் நிலவும் ஊழலை வேரோடு ஒழிக்க இன்னும் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், ஆயர் Michael Osei Bonsu

சன.09,2014. கானா நாட்டில் நிலவும் ஊழலை வேரோடு ஒழிக்க இன்னும் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கானா கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர், ஆயர் Michael Osei Bonsu அவர்கள் கூறினார்.
கானா அரசுத் தலைவர் John Dramani Mahama அவர்கள் நாட்டில் நிலவும் ஊழலை ஒழிக்க முயற்சிகள் மேற்கொள்வதாக இச்செவ்வாயன்று அளித்த பேட்டியையடுத்து, ஆயர் Bonsu அவர்கள், Eye Witness News என்ற ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
ஊழல் என்று குறிப்பிடுவது அரசியலில் மட்டும் காணப்படும் ஒரு போக்கு அல்ல என்பதைச் சுட்டிக் காட்டிய ஆயர் Bonsu அவர்கள், நீதித் துறை, வர்த்தகம், திருஅவை என்ற பல்வேறு தலங்களிலும் நிலவும் ஊழலைக் களைய அனைவரும் இணைந்து செயலாற்றவேண்டும் என்ற அழைப்பை விடுத்தார்.

ஆதாரம் : Zenit

8. அமெரிக்காவில் மிதமிஞ்சிய பனி மற்றும் குளிருக்கான காரணம் அறிவதில் ஐரோப்பிய அறிவியலாளர்கள்

சன.09,2014. அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு பனி மற்றும் குளிர் நடுக்கத்திற்கான காரணம் என்ன என்ற ஐரோப்பிய அறிவியலாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
அமெரிக்காவில் சிகாகோ உட்பட பல நகரங்கள் பனியில் உறைந்துவிட்டன. வெப்பநிலை பூஜ்யத்திற்குக் கீழ் 51 டிகிரிக்கு போய்விட்டது. இதனால் விமான சேவை அடியோடு பாதிக்கப்பட்டது. பல இடங்களிலும் நிறுவனங்கள் மூடப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டன.
இந்நிலையில் ஐரோப்பிய அறிவியலாளர்கள் குழு இது தொடர்பாக ஆராய்ச்சி நடத்தி வருகிறது. இக்குழுவின் ஆய்வு அறிக்கையின்படி, வட துருவப் பகுதிகள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம் கொண்டதாக உள்ளன. உலக வெப்பமயமாதலின் விளைவு தான் இது. இதை போலார் வொர்டெக்ஸ்‘Polar Vortex’ என்று கூறுவர்.
வட துருவ பிரதேசங்கள் மற்றும் இடைப்பட்ட பிரதேசங்களில் நிலவும் வெப்ப வேறுபாடு தான் இப்படிப்பட்ட மாறான வானிலைக்கு காரணம் என்றும் இனி வரும் ஆண்டுகளில் அமெரிக்கா உட்பட்ட சில நாடுகளில் இந்த காலகட்டங்களில் கடுங்குளிர், பயங்கர பனிப்பொழிவு நீடிக்கும் ஆபத்து உண்டு எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

ஆதாரம் : BBC / TamilWin

No comments:

Post a Comment