செய்திகள் - 08.01.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் - சமுதாயத்தில் ஈடுபாடு கோள்வது, அடித்தள கிறிஸ்தவ குழுமங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிறப்பான அழைப்பு
2. திருத்தந்தை பிரான்சிஸ், அகில உலகச் சீன செய்தி நிறுவனங்கள் தேர்ந்துள்ள மிக முக்கியமான மனிதர்களில் ஒருவர்
3. திருத்தந்தையின் புனித பூமி பயணம், கீழை வழிபாட்டு முறை சபைகளும் கத்தோலிக்கத் திருஅவையும் இணைந்து வர சிறந்த வாய்ப்பு
4. திருத்தந்தையின் Evangelii Gaudium திருத்தூது அறிவுரையை மையமாகக் கொண்டு, கிரகோரியன் பாப்பிறை பல்கலைக் கழகத்தில் கருத்தரங்கு
5. எகிப்து அரசுத்தலைவர், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் தலைவருக்கு கிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்துக்கள்
6. அன்னை தெரேசாவை மையப்படுத்திய ஓர் இசை நாடகம், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் அரங்கேறும்
7. இயேசு சபை அருள்பணியாளர் Linus Maria Zuchol அவர்கள் இறையடி சேர்ந்தார்
8. தங்கள் எதிர்காலத்தை இழந்துவரும் சிரியாவின் குழந்தைகளைக் காப்பதற்கு 100 கோடி டாலர் நிதி உதவி தேவை - ஐ.நா. நிறுவனம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் - சமுதாயத்தில் ஈடுபாடு கோள்வது, அடித்தள கிறிஸ்தவ குழுமங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிறப்பான அழைப்பு
சன.08,2014. நற்செய்தியைப் பறைசாற்றுவதும், நற்செய்தியின் மகிழ்வை ஒவ்வொரு மனிதருக்கும் கொணர்வதும் திருஅவை முழுமைக்கும், இறைமக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள பணி என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
சனவரி 7, இச்செவ்வாய் முதல், சனவரி 11, இச்சனிக்கிழமை முடிய பிரேசில் நாட்டின் அடித்தள கிறிஸ்துவ குழுமங்கள் இணைந்து Juazeiro do Norte என்ற நகரில் நடத்தும் கருத்தரங்கிற்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
"இறைவாக்குரைப்பதும், நீதியும்
வாழ்வின் பணி" என்ற மையக்கருத்தில் கூடியுள்ள உங்கள் அனைவரையும்
வாழ்த்துவதில் நான் மகிழ்கிறேன் என்று தன் செய்தியைத் துவக்கியத்
திருத்தந்தை, நற்செய்தியின் சார்பில் சமுதாயத்தில் ஈடுபாடு கோள்வது, அடித்தள கிறிஸ்தவ குழுமங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிறப்பான அழைப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரேசில்
நாட்டில் உள்ள 272 மறைமாவட்டங்களில் செயல்படும் 1 இலட்சத்திற்கும் அதிகமான
அடித்தள கிறிஸ்தவ குழுமங்களின் 4000த்திற்கும் அதிகமான பிரதிநிதிகள்
கலந்து கொள்ளும் இந்த 13வது தேசியக் கருத்தரங்கு, சனவரி 11, இச்சனிக்கிழமையன்று நிறைவடையும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ், அகில உலகச் சீன செய்தி நிறுவனங்கள் தேர்ந்துள்ள மிக முக்கியமான மனிதர்களில் ஒருவர்
சன.08,2014.
2013ம் ஆண்டின் மிக முக்கியமான மனிதர்கள் என அகில உலகச் சீன செய்தி
நிறுவனங்கள் தேர்ந்துள்ள பத்து பேரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்
பெயர் இடம் பெற்றுள்ளது.
டிசம்பர் மாதம் Hainan எனும் நகரில், அகில
உலகச் சீன செய்தி நிறுவனங்கள் ஏற்பாடு செய்திருந்த 15வது ஆண்டு
கூட்டத்தில் வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஏனைய மனிதர்கள் அனைவரும் ஈரான், எகிப்து, இரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்களாக உள்ளனர் என்றும், அண்மையில் காலமான தென் ஆப்ரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலா அவர்களும் இவர்களில் ஒருவர் என்றும் Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
அகில உலகச் சீன செய்தி நிறுவனங்கள் வெளியிடும் இந்தப் பட்டியலில் இதுவரை எந்த ஒரு திருத்தந்தையும், வேறு மதத் தலைவர்களும் இடம்பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : Fides / Zenit
3. திருத்தந்தையின் புனித பூமி பயணம், கீழை வழிபாட்டு முறை சபைகளும் கத்தோலிக்கத் திருஅவையும் இணைந்து வர சிறந்த வாய்ப்பு
சன.08,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற மே மாதம் புனித பூமியில் மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணம், கீழை
வழிபாட்டு முறை சபைகளும் கத்தோலிக்கத் திருஅவையும் இன்னும் நெருக்கமாக
இணைந்து வர மற்றுமொரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று கத்தோலிக்க ஊடகங்கள்
கூறியுள்ளன.
சென்ற மார்ச் மாதம் 19ம் தேதியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றத் திருப்பலியில் Constantinople கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்கள் கலந்துகொண்டது, 1054ம் ஆண்டுக்குப் பிறகு, வரலாற்றில் முதல் முறையாக நிகழ்ந்தது.
திருப்பலிக்குப் பின்னர் திருத்தந்தையைத் தனிப்பட்ட முறையில் சந்தித்த முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்கள் திருத்தந்தையும், தானும் இணைந்து புனித பூமியில் திருப்பயணம் மேற்கொள்ளும் ஆவலை வெளியிட்டார்.
முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்களின் இந்த ஆவலை நிறைவேற்றும் விதமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எருசலேமில்
அமைந்துள்ள புனிதக் கல்லறைக் கோவிலில் முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு
அவர்களுடன் கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வார் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
1054ம் ஆண்டு கிழக்கு, மேற்கு என்று பிரிக்கப்பட்ட திருஅவை, 50 ஆண்டுகளுக்கு முன்னர், திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், புனித பூமியில் மேற்கொண்ட திருப்பயணத்தால் மீண்டும் இணைந்துவரும் வாய்ப்பு பெற்றது.
ஆதாரம் : CNA/EWTN
4. திருத்தந்தையின் Evangelii Gaudium திருத்தூது அறிவுரையை மையமாகக் கொண்டு, கிரகோரியன் பாப்பிறை பல்கலைக் கழகத்தில் கருத்தரங்கு
சன.08,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் வெளியிட்ட Evangelii Gaudium, அதாவது, நற்செய்தியின் மகிழ்வு என்ற திருத்தூது அறிவுரையை மையமாகக் கொண்டு, சனவரி 14, வருகிற செவ்வாயன்று உரோம் நகர் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக் கழகத்தில் கருத்தரங்கு ஒன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தை வழங்கியுள்ள இந்த அறிவுரை மடலை எவ்விதம் அணுகுவது? இந்த மடலில் காணப்படும் எண்ண ஓட்டங்கள் யாவை? இதனை வாசிப்பதற்குத் தேவையான மனநிலை என்ன? என்ற கேள்விகள் இக்கருத்தரங்கில் விவாதிக்கப்படும்.
நன்னெறி
இறையியல் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கருத்தரங்கில்
பல்வேறு அறிஞர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை வழங்கவிருக்கின்றனர்.
நமது இறையியல், பல்வேறு
கண்ணோட்டங்களை ஒன்றிணைத்து வளர்ச்சி அடைய வேண்டும் என்று திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் இந்த மடலில் குறிப்பிட்டுள்ளதற்கு ஏற்ப, இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென்று இப்பல்கலைக் கழகத்தின் நன்னெறி இறையியல் துறைத் தலைவர் இயேசு சபை அருள் பணியாளர் Miguel Yáñez அவர்கள் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. எகிப்து அரசுத்தலைவர், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் தலைவருக்கு கிறிஸ்து பிறப்பு விழா வாழ்த்துக்கள்
சன.08,2014. சனவரி 7, இச்செவ்வாயன்று எகிப்தில் கொண்டாடப்பட்ட காப்டிக் வழிபாட்டு முறை கிறிஸ்மஸ் பெருவிழாவை முன்னிட்டு, சனவரி 5, கடந்த ஞாயிறன்று, எகிப்து அரசுத்தலைவர், Adly Mansour அவர்கள், Abasseya பேராலயத்திற்குச் சென்று, காப்டிக் ஆர்த்தடாக்ஸ் தலைவர் இரண்டாம் Tawadros அவர்களைச் சந்தித்து வாழ்த்துக்களைக் கூறினார்.
முன்னாள் எகிப்து அரசுத்தலைவராக இருந்த Gamal Abdel Nasser அவர்கள் 1960ம் ஆண்டு, Abasseya பேராலயத்திற்குச் சென்றதற்குப் பிறகு, தற்போதைய அரசுத்தலைவர் அங்கு சென்றது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு என்று ஊடகங்கள் கணித்துள்ளன.
மேலும், எகிப்து நாட்டின் காப்டிக் வழிபாட்டு முறை கிறிஸ்தவர்கள் சனவரி 7, இச்செவ்வாயன்று
காவல்துறையினரின் பலத்த கண்காணிப்புடன் கிறிஸ்து பிறப்பு விழாவைக்
கொண்டாடினர் என்று கிறிஸ்தவச் செய்திகள் கூறுகின்றன.
கடந்த
ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் எகிப்தில் உள்ள 48 கிறிஸ்தவ கோவில்கள்
அடிப்படைவாதக் குழுக்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருந்ததென்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
ஆதாரம் : Fides / AsiaNews
6. அன்னை தெரேசாவை மையப்படுத்திய ஓர் இசை நாடகம், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் அரங்கேறும்
சன.08,2014. அன்னை தெரேசாவை மையப்படுத்திய ஓர் இசை நாடகம், இந்தியாவின் கொல்கத்தா, பூனே, பெங்களூரு போன்ற பல்வேறு நகரங்களில் 100 முறைக்கு மேல் அரங்கேறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மனதைத் தொடும் ஓர் அற்பத நாடகம் இது என்று, இந்த இசை நாடகத்தை பார்த்த ஹைதராபாத் உயர் மறைமாவட்டப் பேராயர் தும்மா பாலா அவர்கள் கூறினார்.
ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள அம்ருதவாணி கலைத்தொடர்பு மையம் தயாரித்து வழங்கும் இந்த இசை நாடகம், அன்னை தெரேசா அவர்களின் வாழ்வை இளமை முதல் காட்டுகிறது என்றும், இந்த இசை நாடகத்தில் ஆந்திராவின் பல்வேறு ஊடகக் கலைஞர்கள் நடித்துள்ளனர் என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இரண்டு மணி நேரங்கள் நீடிக்கும் இந்த இசை நாடகம், 23 காட்சிகளைக் கொண்டதென்றும் இதில் 80க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மேடையிலும், 30க்கும் மேற்பட்டோர் திரைக்குப் பின்னரும் உழைக்கின்றனர் என்றும் இந்நாடகத்தை இயக்கும் அருள் பணியாளர் Balashowry அவர்கள் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. இயேசு சபை அருள்பணியாளர் Linus Maria Zuchol அவர்கள் இறையடி சேர்ந்தார்
சன.08,2014. இந்தியாவின் வறியோர் மத்தியில் பல ஆண்டுகள் பணியாற்றிய இயேசு சபை அருள்பணியாளர் Linus Maria Zuchol அவர்கள், சனவரி 6, இத்திங்களன்று இரவு தன் 97வது வயதில் இறையடி சேர்ந்தார்.
1916ம் ஆண்டு இத்தாலியின் ஆல்ப்ஸ் பகுதியில் பிறந்த Zuchol அவர்கள், தன் 24வது வயதில் மறைமாவட்டக் குருவாகத் திருநிலைப் படுத்தப்பட்டு, பின்னர், தன் 27வது வயதில் இயேசு சபையில் சேர்ந்தார்.
ஜப்பானிலும், ஆப்ரிக்காவின் சில நாடுகளிலும் பணியாற்றிய அருள்பணியாளர் Zuchol அவர்கள், 1948ம் ஆண்டு, தனது 32வது வயதில் இந்தியாவுக்குச் சென்றார்.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில், குறிப்பாக, கேரளாவில் பணியாற்றிய அருள்பணியாளர் Zuchol அவர்கள், வறியோருக்கென 10,000க்கும் அதிகமான வீடுகளைக் கட்டியுள்ளார்.
அருள்பணியாளர் Zuchol அவர்களின் அடக்கச்சடங்கு, சனவரி 8, இப்புதனன்று, அவர் 39 ஆண்டுகள் பங்குப் பணியாற்றிய மரியபுரம் என்ற ஊரில் நடைபெற்றது.
ஆதாரம் : MattersIndia
8. தங்கள் எதிர்காலத்தை இழந்துவரும் சிரியாவின் குழந்தைகளைக் காப்பதற்கு 100 கோடி டாலர் நிதி உதவி தேவை - ஐ.நா. நிறுவனம்
சன.08,2014.
சிரியாவின் உள்நாட்டுப் போரினால் தங்கள் எதிர்காலத்தை இழந்துவரும் பல
இலட்சம் குழந்தைகளைக் காப்பதற்கு 100 கோடி டாலர் நிதி உதவி தேவை என்று
ஐ.நா. நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
சிரியாவுக்குத் தேவைப்படும் மனிதாபிமான உதவிகளைப் பற்றி கலந்து ஆலோசிக்க, இன்னும் ஒரு வாரத்தில் குவைத்தில் கூடவிருக்கும் பன்னாட்டு கூட்டத்திற்கு முன்பாக, இந்தக் குழந்தைகளைக் குறித்து, ஐ.நா. புலம்பெயர்ந்தோர் அவையின் உயர் அதிகாரி António Guterres அவர்கள் இந்த விண்ணப்பத்தை இச்செவ்வாயன்று வெளியிட்டார்.
உடல்நலம், கல்வி என்ற உரிமைகளை இழந்து, பல்வேறு
வன்முறைகளுக்குப் பலியாகிவரும் 40 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள்
தங்கள் எதிர்காலத்தை முற்றிலும் இழக்கும் ஆபத்தில் உள்ளனர் என்று Guterres அவர்கள் சுட்டிக்காட்டினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
No comments:
Post a Comment