செய்திகள் - 06.01.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் - சமுதாயத்தின் விளிம்புகளில் வாழும் இறைவனைக் கண்டுகொள்ள உதவும் திருவிழா
2. திருக்காட்சித் திருநாளன்று திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை - இறைவனும் மனிதரும் இத்திருநாளில் சந்திக்கின்றனர்
3. திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செப உரை.
4. புனித பூமியில் திருத்தந்தையின் திருப்பணயம் மே மாதத்தில்
5. மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளை விரும்புகிறார் திருத்தந்தை.
6. சகோதரத்துவமும் அமைதியும் 2014ம் ஆண்டில் திளைக்க மியான்மார் பேராயர் அழைப்பு
7. இந்தோனேசிய அடையாள அட்டைகளில் ஒருவரின் மதச்சார்பு குறிக்கப்படுவதற்கு எதிர்ப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் - சமுதாயத்தின் விளிம்புகளில் வாழும் இறைவனைக் கண்டுகொள்ள உதவும் திருவிழா
சன.06,2014. “ஒளியைக் காண ஒளி தேவை” என்ற பொருள்படும் “Lumen requirunt lumine” என்ற இலத்தீன் வார்த்தைகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருக்காட்சிப் பெருவிழா காலை திருப்பலியில், தன் மறையுரைத் துவக்கினார்.
சனவரி 6, இத்திங்களன்று இத்தாலியில் கொண்டாடப்பட்ட திருக்காட்சிப் பெருவிழாவையொட்டி, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், காலை 10 மணிக்குத் திருப்பலியாற்றிய திருத்தந்தை அவர்கள், ஒளியைத் தேடி, ஒளியைப் பின்பற்றிய மூன்று ஞானிகளை தன் மறையுரையின் மையமாக்கினார்.
மூன்று ஞானிகளைப் போலவே, நாம் ஒவ்வொருவரும் படைப்பு, இறைவாக்கு என்ற இரு நூல்களை வாழ்வில் பெற்றுள்ளோம். இவ்விரு நூல்களின் வழியாக இறைவன் தங்களிடம் பேசியதை, மூன்று ஞானிகள் கேட்டு, செயலாற்றியதுபோல நாமும் செவிமடுக்கவேண்டும் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
மக்களின் ஒளியாகத் திகழ்வதற்கு அழைக்கப்பட்டிருந்த எருசலேம் நகர், ஒளியின்றி இருந்தது; குறிப்பாக, ஏரோது மன்னனின் அரண்மனை இருளில் மூழ்கியிருந்தது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏரோது மன்னனின் மனதைச் சூழ்ந்திருந்த இருள், அவன் வாழ்ந்த இல்லத்தையும் சூழ்ந்தது என்று சுட்டிக்காட்டினார்.
ஏரோது மன்னனின் அரண்மனையில் இருளை அனுபவித்த மூன்று ஞானிகள், தங்கள் மனதில் ஒலித்த இறைவாக்கினை தொடர்ந்து நம்பியதால், அந்த இருளிலிருந்து மீண்டும் வெளியேறினர்.
இருளின்
சக்திகள் விரிக்கும் வலைகளிலிருந்து தப்பிக்கும் வழிகளை மூன்று ஞானிகள்
நமக்குச் சொல்லித் தருகின்றனர் என்பதையும் கூறியத் திருத்தந்தை, அவர்களைப் போலவே நாமும், ஒளியைக் காண்பதற்கும், இருளை விலக்கும் தந்திரங்களைத் தெரிந்துகொள்வதற்கும் முயற்சிகள் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தோற்றங்கள்
தரும் ஈர்ப்புக்களில் மயங்கி நாம் உண்மையான ஒளியை இழந்துவிடாமல் இருக்க
இந்த விழா நமக்கு அழைப்புவிடுக்கிறது என்பதை வலியுறுத்தியத் திருத்தந்தை, உலகம் காட்டும் பாதைகளில் மயங்கிவிடாமல், எளிமையில், சமுதாயத்தின்
விளிம்புகளில் வாழும் இறைவனைக் கண்டுகொள்ள இந்த விழா நமக்கு உதவட்டும்
என்ற வேண்டுதலுடன் தன் மறையுரையை நிறைவு செய்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருக்காட்சித் திருநாளன்று திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை - இறைவனும் மனிதரும் இத்திருநாளில் சந்திக்கின்றனர்
சன.06,2014. இறைவன் மனுக்குலத்தை நாடி வருவதையும், மனிதர்கள்
இறைவனை நாடிச்செல்வதையும் இணைக்கும் ஓர் அழகியத் திருநாள்
இத்திருக்காட்சித் திருநாள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
கூறினார்.
சனவரி 6, இத்திங்களன்று கொண்டாடப்பட்ட திருக்காட்சிப் பெருவிழாவையொட்டி, வத்திக்கான்
புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான
பக்தர்களுக்கு திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரையில் இவ்வாறு கூறினார்.
இறைவன் உலகமனைத்திற்கும் தன்னையே வெளிப்படுத்திய அழகு, திருக்காட்சித் திருநாளன்று கொண்டாடப்படுகிறது என்று முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தன் நூலில் குறிப்பிட்டுள்ளதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையின் துவக்கத்தில் சுட்டிக்காட்டினார்.
இறைவனும் மனிதரும் இத்திருநாளில் சந்திக்கின்றனர் என்று கூறும்போது, இந்த சந்திப்பிற்கு முதல் முயற்சியை மேற்கொள்வது இறைவனே என்பதையும் நாம் உணரவேண்டும் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
சனவரி 7, இச்செவ்வாயன்று கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாடும் கீழை வழிபாட்டு முறை சபையினருக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூவேளை செப உரைக்குப் பின்னர் தன் சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
கூடியிருந்த குழந்தைகளையும், இளையோரையும் சிறப்பாக வாழ்த்தியத் திருத்தந்தை, திருஅவைக்காகவும் தனக்காகவும் செபிப்பது அவர்களிடம் தான் கேட்டுக்கொள்ளும் ஒரு சிறப்பான வேண்டுகோள் என்று கூறினார்.
கூடியிருந்த அனைவருக்கும் தன் திருவிழா வாழ்த்துக்களை வெளியிட்டத் திருத்தந்தை, அவர்களுக்கு தன் அப்போஸ்தலிக்க அசீரை வழங்கினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செப உரை.
சன.06,2014. ‘வார்த்தை மனுவுருவானார், நம்மிடையே குடிகொண்டார்’ என்ற புனித யோவான் நற்செய்தி வார்த்தைகளை மையமாக வைத்து இஞ்ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவன் மனிதரைப்போல் பிறந்து நம் ஒவ்வொருவருக்கும் தன் வாழ்வையும் மகிழ்வையும் எடுத்துரைக்க விரும்பினார், மனித குலம் மீது இறைவன் கொண்டுள்ள அளவற்ற அன்பின் வெளிப்பாடே கிறிஸ்து பிறப்புப் பெருவிழா என்ற திருத்தந்தை, பாவிகளாகிய நமக்கு அருளை வழங்கவந்த இறைவனை, பலவேளைகளில் ஒதுக்கி வைக்கிறோம் எனவும் கூறினார்.
நாம் அவரைவிட்டு விலகிச் சென்றாலும் அவர் நமக்காக எப்போதும் காத்திருக்கிறார், அதில் அவர் சோர்வடைவதில்லை என்ற திருத்தந்தை, நாமும் அவர் கொணர்ந்த வாழ்வு, ஒளி, நம்பிக்கை, மற்றும் அன்பு எனும் செய்தியின் சாட்சிகளாக இருக்க அழைப்புப் பெற்றுள்ளோம் என்றார்.
கடவுள் நம்மோடு உள்ளார், அவரின் தெய்வீக ஒளியைப் பின்பற்றுவோம், அந்த ஒளியே தூய கன்னி மரியா மற்றும் புனித யோசேப்பின் இதயங்களை நிறைத்து வழிந்தோடியது, இடையர்களையும் கீழ்த்திசை ஞானிகளையும் வழிநடத்தியது, அவ்வொளியே இன்றும் நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கிறது என தன் மூவேளை செபஉரையில் மேலும் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : SEDOC
4. புனித பூமியில் திருத்தந்தையின் திருப்பணயம் மே மாதத்தில்
சன.06,2014. இயேசு பிறந்து, வாழ்ந்து, இறந்த புனித பூமியில், இவ்வாண்டு
மே மாதம் 24 முதல் 26 வரை திருப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக இஞ்ஞாயிறு மூவேளை
செப உரைக்குப்பின் அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை 6ம் பவுலுக்கும் கிறிஸ்தவ முதுபெரும் தலைவர் Athenagorasக்கும் இடையே இடம்பெற்ற வரலாற்று சிறப்புவாய்ந்த சந்திப்பின் 50 ஆண்டு நிறைவு, இந்த சனவரி 5ம் தேதி இடம்பெற்றதையொட்டி இத்திருப்பயணத்தை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜோர்தனின் அம்மன், மற்றும், பெத்லகேம், எருசலேம் என மூன்று இடங்களில் இத்திருப்பயணம் இடம்பெறும் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு
அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் கான்ஸ்டான்டிநோபிளின் முதுபெரும் தலைவர்
பர்த்தலோமேயு உட்பட பல கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளுடன்
நடைபெறவிருக்கும் கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டத்தில் தான் கலந்துகொள்ள
உள்ளதாகவும் அறிவித்தார்.
தன் மூவேளை செப உரையின் இறுதியில், தனக்கு இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் வாழ்த்துக்களை அனுப்பியுள்ள அனைவருக்கும் தனித்தனியாக நன்றி தெரிவிக்க விரும்பினாலும், அதற்கான நேரம் இன்மையால் அனைவருக்கும் தற்போது தன் நன்றியை வெளியிடுவதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : SEDOC
5. மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளை விரும்புகிறார் திருத்தந்தை.
சன.06,2014. மதங்களிடையே பேச்சுவார்த்தைகளைப் பலப்படுத்துவதில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆர்வம் கொண்டுள்ளதாகவும், அவரின் எளிமையான அணுகுமுறை, இது குறித்த நம்பிக்கைகளை பிறப்பித்துள்ளதாகவும் அறிவித்தார் கர்தினால் Jean Louis Tauran.
மதங்களிடையே உரையாடல் பணியில் ஈடுபட்டுள்ள திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் தவ்ரான் அவர்கள், "L’Osservatore Romano" என்ற திருப்பீடச்சார்பு இதழுக்கு வழங்கிய நேர்முகத்தில் இவ்வாறு உரைத்தார்.
முந்தையத் திருத்தந்தையர்களின் பாதையில் நடக்கவிரும்பும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து மதங்களுடனும் நல்லுறவைப்பேண முயல்வதுடன், அனைத்து மதங்களும் மதிக்கப்படவும் ஊக்கமளித்து வருகிறார் என்று கர்தினால் தவ்ரான் அவர்கள் கூறினார்.
மதங்களிடையே உரையாடலை ஊக்குவிப்பது என்பது, கிறிஸ்தவ விசுவாசத்தையோ ஒழுக்க வழிமுறைகளையோ விட்டுக்கொடுப்பது என்று அர்த்தம் கொள்ளக்கூடாது என்ற கர்தினால் தவ்ரான் அவர்கள், நாம் எதையும் எவர் மீதும் திணிப்பதில்லை, மாறாக வாழ்வுமூலம் மகிழ்வுநிறை எடுத்துக்காட்டுக்களாக உள்ளோம் என மேலும் கூறினார்.
ஆதாரம் : vaticaninsider
6. சகோதரத்துவமும் அமைதியும் 2014ம் ஆண்டில் திளைக்க மியான்மார் பேராயர் அழைப்பு
சன.06,2014. இந்தப் புத்தாண்டின் துவக்கத்தில் அமைதியும், சகோதரத்துவமும் சனநாயகமும் மியான்மார் அனைத்து மக்களின் நம்பிக்கையாக இருக்கும் வேளை, விடுதலையும்
அமைதியும் நீதியும் நிறைந்த ஒரு புதிய காலத்தைத் துவக்க மியான்மார்
தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது என்றார் அந்நாட்டு பேராயர் Charles Maung Bo.
கடந்த ஈராண்டுகளில் மியான்மார் நாடு கண்டுள்ள பலவித முன்னேற்றங்களையும், அது உலகிற்குத் தன்னைத் திறந்துள்ளதையும் குறித்து எடுத்துரைத்த யாங்கூன் பேராயர் போ, இன்னும் பல அரசியல் கைதிகள் சிறையில் வாடுவது, பேச்சுவார்த்தைகள் நடைபெறும்போதே பொதுமக்கள் இரானுவத்தால் தாக்கப்படுவது, பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் வன்முறைகளும் சண்டைகளும் ஊக்குவிக்கப்படுவது போன்றவை குறித்த வருத்தத்தையும் வெளியிட்டுள்ளார்.
குடியரசு சீர்திருத்தங்கள் என்பவை போர்நிறுத்தத்திற்கு உறுதியளிக்கவில்லை என்ற எச்சரிக்கையையும் விடுத்தார் பேராயர்.
மியான்மார்
சிறுபான்மை சமூகங்களிடையே அமைதியைக் கொணரும் பேச்சுவார்த்தைகளை
உள்ளடக்கியதாக தொடரப்படும் முயற்சிகளே உண்மையான அமைதியைக் கொணரும் என
மேலும் எடுத்துரைத்தர் யாங்கூன் பேராயர் போ.
ஆதாரம் : Fides
7. இந்தோனேசிய அடையாள அட்டைகளில் ஒருவரின் மதச்சார்பு குறிக்கப்படுவதற்கு எதிர்ப்பு
சன.06,2014. இந்தோனேசியாவில்
குடிமக்களின் அடையாள அட்டைகளில் அவர்கள் சார்ந்திருக்கும் மதங்களின்
பெயர்கள் குறிக்கப்படுவது நீக்கப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்
அந்நாட்டின் கிறிஸ்தவ அரசியல்வாதி ஒருவர்.
ஜகார்த்தா மாவட்டத்தின் துணை ஆளுனர் Basuki Tjahaja Purnama அவர்கள், மத்திய அரசுக்கு விடுத்துள்ள அழைப்பில், மத சகிப்புத்தன்மை இருப்பது உண்மையெனில், பாகுபாட்டுடன் நடத்தப்படுவதற்கு வழிவகுக்கும் இந்தப் பழையச் சட்டம் அகற்றப்படவேண்டும் எனக்கூறியுள்ளார்.
இஸ்லாம், கிறிஸ்தவம், கத்தோலிக்கம், இந்து, புத்தம் அல்லது கன்பூசியனிசம் என்ற மதங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டவைகளாக இருக்கும் நிலையில், இந்தோனேசியாவின் 17,000 தீவுகளில் வாழும் மக்களுள் பலர் பாரம்பரிய மதங்களைப் பின்பற்றி வந்தாலும், அவர்கள் இஸ்லாமியர்கள் என்றே அடையாள அட்டைகளில் குறிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : Fides
No comments:
Post a Comment