செய்திகள் - 07.01.14
------------------------------ ----------------------------- ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : நம் எண்ணங்களையும் விருப்பங்களையும் பரிசோதிக்க வேண்டும்
2. திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி : தனிமையில் இருப்போருக்காக நம் உணவு மேஜைகளில் ஓர் இடம் ஒதுக்குவோம்
3. மறைமாவட்ட அருள்பணியாளர்க்கு ‘பேரருள்திரு’ என்ற மதிப்புக்குரிய அடைமொழியில் வரையறை
4. எருசலேம் முதுபெரும் தந்தை : திருத்தந்தையின் புனிதபூமித் திருப்பயணம் அமைதிக்கான அறைகூவலாக அமையும்
5. அமைதிக்கான முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் அமெரிக்க ஆயர் புனிதபூமிக்குச் சுற்றுப்பயணம்
6. இலங்கையின் போர்க்காலக் குற்றங்களை ஆய்வு செய்வதற்கு பன்னாட்டுப் புலன்விசாரணை தேவை, மன்னார் ஆயர்
7. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் இடம்பெற்றுவரும் சண்டை சமயப் போராக மாறக்கூடும், ஐ.நா. எச்சரிக்கை
8. அமெரிக்க ஐக்கிய நாட்டில் பல பகுதிகளில் கடும் உறைபனி
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : நம் எண்ணங்களையும் விருப்பங்களையும் பரிசோதிக்க வேண்டும்
சன.07,2014. நம் எண்ணங்களும் விருப்பங்களும் நம் ஆண்டவரில் நிலைத்திருக்க அல்லது அவரைவிட்டு விலகிச்செல்ல உதவுகின்றனவா, நம்
எண்ணங்களும் ஆசைகளும் கிறிஸ்துவிடமிருந்து அல்லது எதிர்க்
கிறிஸ்துவிடமிருந்து வருகின்றனவா என்பதை நாம் பரிசோதித்துப் பார்க்க
வேண்டும், ஏனெனில் பல போலி இறைவாக்கினர்கள் இவ்வுலகுக்கு வந்துள்ளனர் என்று இச்செவ்வாயன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்மஸ்
விடுமுறை காலம் முடிந்து வத்திக்கான் புனித மார்த்தா இல்லச்
சிற்றாலயத்தில் பொதுநிலை விசுவாசிகளுக்கென நிறைவேற்றிய காலை திருப்பலியில், இந்த நம் உலகில் பல போலி இறைவாக்கினர்களும், போலி இறைவாக்குகளும், போலிப் பரிந்துரைகளும் புகுந்துள்ளன என எச்சரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆண்டவரில் நிலைத்திருங்கள் என்ற புனித யோவானின் அறிவுரையை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், புனித யோவான் மிகுந்த விருப்பத்துடன் மீண்டும் மீண்டும் சொல்லியுள்ள இவ்வறிவுரை நல்ல ஆலோசனையாகும் என்று கூறினார்.
ஆவிகளைப் பிரித்தறியும் அறிவை நாம் ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டும் என்றும், நம் இதயங்கள் எப்போதும் பேராசைகளையும், எண்ணங்களையும், விருப்பங்களையும் கொண்டுள்ளன,
ஆனால் இவை நம் ஆண்டவரை நெருங்கிச் செல்வதற்கு அல்லது அவரிடமிருந்து
விலகிச் செல்வதற்கு உதவுகின்றனவா என்பதைத் தேர்ந்துதெளிய நாம் அறிந்திருக்க
வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
நம்
இதயங்களில் என்ன நடக்கின்றன என்பதை நாம் ஒவ்வொருவரும் பரிசோதித்துப்
பார்க்க வேண்டுமென இச்செவ்வாய் காலை திருப்பலி மறையுரையில் அழைப்பு
விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி : தனிமையில் இருப்போருக்காக நம் உணவு மேஜைகளில் ஓர் இடம் ஒதுக்குவோம்
சன.07,2014. நம் உணவு மேஜைகளில் ஓர் இடம் ஒதுக்குவோம். அடிப்படை வசதிகளின்றியும், தனிமையிலும்
இருப்போருக்காக அந்த இடம் இருக்கட்டும் என்ற செய்தியை இச்செவ்வாயன்று தனது
டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், கடந்த ஆண்டு ஜூலையில் பிரேசிலின் ரியோ டி ஜெனெய்ரோவில் நடைபெற்ற உலக இளையோர் தின நிகழ்வுகளையொட்டி, அந்நகர் உயர்மறைமாவட்டத்துக்கு ஏற்பட்டுள்ள கடனைக் கட்டுவதற்கு உதவியாக, ஏறக்குறைய 50 இலட்சம் டாலர் நிதியுதவி செய்வதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உறுதியளித்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 23 முதல் 28 வரை நடைபெற்ற உலக இளையோர் தின நிகழ்வுகளுக்கு 3 கோடியே 84 இலட்சம் டாலர் கடன் ஏற்பட்டுள்ளது என Ernst & Young நிறுவனம் நடத்திய தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது.
இக்கடனைத்
திருப்பிக் கட்டுவதற்கென கடந்த அக்டோபர் முதல் டிசம்பர்வரை நடத்தப்பட்ட
பொது நடவடிக்கைகளில் 3 இலட்சத்து 36 ஆயிரத்து 600 டாலர் திரட்டப்பட்டது.
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களும் இக்கடனைத் திருப்பிக் கட்டுவதற்கென நிதியுதவி
செய்வதற்கு உறுதியளித்துள்ளார் என அவ்விளையோர் தின தயாரிப்புக் குழு
அறிவித்துள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. மறைமாவட்ட அருள்பணியாளர்க்கு ‘பேரருள்திரு’ என்ற மதிப்புக்குரிய அடைமொழியில் வரையறை
சன.07,2014. மறைமாவட்ட அருள்பணியாளர்க்கு “monsignor” அதாவது ‘பேரருள்திரு’ என்ற மதிப்புக்குரிய அடைமொழி வழங்கப்படுவதில் வரையறையைக் கொண்டுவருவதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தீர்மானித்திருப்பதாகவும், குறைந்தது
65 வயதுடையவர்களே இன்றிலிருந்து இந்த மதிப்புக்குரிய அடைமொழியைப்
பெறுவார்கள் எனவும் திருப்பீடச் செயலர் பேராயர் பியத்ரோ பரோலின்
அறிவித்துள்ளார்.
இது குறித்து உலகின் அனைத்து திருப்பீட தூதர்களுக்கும் பேராயர் பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில், இந்த மாற்றம் திருப்பீட தலைமையகத்தில் பணிசெய்யும் அதிகாரிகளையும், துறவற சபைகளின் உறுப்பினர்களையும் பாதிக்காது எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த
மதிப்புக்குரிய அடைமொழிக்கு விண்ணப்பித்து இதுவரை வழங்கப்படாமல் இருக்கும்
பரிந்துரைகள் இந்தப் புதிய விதிகளின்படி இரத்து செய்யப்படும் எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
monsignor என்ற மதிப்புக்குரிய அடைமொழியிலுள்ள மூன்று நிலைகளில், chaplain of His Holiness என்பது மட்டுமே, புதிய விதிமுறைகளின்படி இனிமேல் வழங்கப்படும் எனவும் பேராயரின் கடிதம் கூறுகிறது.
திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், இந்த மதிப்புக்குரிய அடைமொழிகளை 1968ம் ஆண்டில் மூன்றாகக் குறைத்தார், இதனை
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேலும் எளிமையாக்கியுள்ளார் என்று
திருப்பீட பேச்சாளர் அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி சே.ச.நிருபர்
கூட்டத்தில் குறிப்பிட்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. எருசலேம் முதுபெரும் தந்தை : திருத்தந்தையின் புனிதபூமித் திருப்பயணம் அமைதிக்கான அறைகூவலாக அமையும்
சன.07,2014. வருகிற மே மாதத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனிதபூமிக்குத் மேற்கொள்ளும் திருப்பயணம், அமைதிக்கான அறைகூவலாக, குறிப்பாக, மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலியர்கள், சிரியா
மக்கள் மற்றும் அனைவருக்கும் அமைதிக்காக அழைப்புவிடுப்பதாக அமையும் எனக்
கூறினார் எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை Fouad Twal.
வருகிற மே 24 முதல் 26 வரை புனிதபூமியின் Amman, பெத்லகேம், எருசலேம் ஆகிய மூன்று நகரங்களில் மூன்று நாள்கள் திருப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக, சனவரி 5, கடந்த ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் திருத்தந்தை அறிவித்துள்ளது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய முதுபெரும் தந்தை Twal இவ்வாறு தெரிவித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இவ்வறிவிப்பை வரவேற்றுள்ள அதேவேளை, வன்முறை
மற்றும் பொருளாதார நெருக்கடியால் எண்ணிக்கையில் குறைந்துவரும்
அரபுநாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களுக்குத் திருத்தந்தையின் ஊக்கமூட்டும்
வார்த்தைகள் தேவைப்படுகின்றன எனவும் கூறினார் முதுபெரும் தந்தை Twal.
திருத்தந்தையின் இவ்வறிவிப்பு, புனிதபூமிக் கிறிஸ்தவர்கள்மீது திருத்தந்தை கொண்டுள்ள கரிசனையைக் காட்டுகின்றது எனவும் உரைத்த முதுபெரும் தந்தை Twal,
தொன்மைக் காலத்தில் இப்பகுதியில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும்
இடையே நிலவிய நல்லுறவை மீண்டும் வலுப்படுத்துவதாக இத்திருப்பயணம் அமையும்
என்றும் கூறினார்.
ஜோர்தன் தலைநகர் Amman, மேற்குக்கரை நகரமான பெத்லகேம், எருசலேம் ஆகிய மூன்று நகரங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலிகள் நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆதாரம் : CNS
5. அமைதிக்கான முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் அமெரிக்க ஆயர் புனிதபூமிக்குச் சுற்றுப்பயணம்
சன.07,2014.
புனிதபூமியின் அமைதிக்கான முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கும் நோக்கத்தில்
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்குச் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார்
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் பன்னாட்டு நீதி-அமைதி பணிக்குழுத்
தலைவர் ஆயர் Richard Pates.
மத்திய கிழக்குப் பகுதியில் சண்டைகளால் பாதிக்கப்பட்டுள்ள தலத்திருஅவைகளுக்கு ஆதரவு வழங்கும் நோக்கத்திலும், அத்திருஅவைகளுக்கு ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் எண்ணத்திலும் அப்பகுதிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளார் Des Moines ஆயர் Pates.
இத்திங்கள் முதல் இம்மாதம் 17வரை மத்திய கிழக்குப் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அப்பகுதி எதிர்கொள்ளும் அமைதிக்கான சவால்கள் குறித்தும் ஆய்வுசெய்யத் திட்டமிட்டுள்ளார் அமெரிக்க ஆயர் Pates.
புனிதபூமித் தலத்திருஅவைகளுக்கு ஆதரவு வழங்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஐரோப்பா, வட அமெரிக்கா, தென்னாப்ரிக்கா ஆகிய பகுதிகளின் ஆயர் பிரதிநிதிகளை உள்ளடக்கிய பேரவை நடத்தும் கூட்டத்திலும் ஆயர் Pates கலந்துகொள்வார்.
ஆதாரம் : CNA
6. இலங்கையின் போர்க்காலக் குற்றங்களை ஆய்வு செய்வதற்கு பன்னாட்டுப் புலன்விசாரணை தேவை, மன்னார் ஆயர்
சன.07,2014.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் போர்க்காலக் குற்றங்களை
ஆய்வு செய்யும் உள்நாட்டு நடவடிக்கைகளில் இனிமேலும் நம்பிக்கை வைக்க
முடியாது என்பதால், இக்குற்றங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கு, பன்னாட்டுப் புலன்விசாரணை தேவை என, மன்னார் ஆயர் ஜோசப் இராயப்பு கேட்டுள்ளார்.
போர்க்காலக் குற்றங்கள் குறித்து ஆய்வுசெய்யும் அமைப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முயற்சிக்கும் பல குருக்களும், வழக்கறிஞர்களும், பத்திரிக்கையாளர்களும், மனித
உரிமை ஆர்வலர்களும் அச்சுறுத்தப்பட்டு கேள்விகளால் நச்சரிக்கப்படுகின்றனர்
என்று பீதெஸ் செய்தி நிறுவனத்துக்கு அனுப்பிய செய்தியில்
குறிப்பிட்டுள்ளார் ஆயர் ஜோசப்.
காவல்துறையும், மனித உரிமைகள் குழுவும் புகார்களை ஏற்க பல நேரங்களில் மறுத்துள்ளன என்று கூறியுள்ள மன்னார் ஆயர், மனித உரிமை மீறல்கள், பாலியல் வன்கொடுமைகள், கொலைகள், காணமாற்போதல்,
சட்டத்துக்குப் புறம்பேயான கொலைகள் ஆகியவற்றின் ஆயிரக்கணக்கான வழக்குகளில்
குற்றவாளிகள் தண்டிக்கப்படாமலே விடப்பட்டுள்ளனர் என்பதையும் ஆயர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
பன்னாட்டுப் புலன்விசாரணை குழுவை இலங்கை அரசு நிராகரித்துவரும்வேளை, இலங்கையில், கைதுகள், காணமாற்போதல், சித்ரவதைகள், சிறைக்கொலைகள் போன்றவற்றில் பல முரண்பாடான விவகாரங்கள் உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார் ஆயர் ஜோசப்.
ஆதாரம் : Fides
7. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் இடம்பெற்றுவரும் சண்டை சமயப் போராக மாறக்கூடும், ஐ.நா. எச்சரிக்கை
சன.07,2014. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் இடம்பெற்று வரும் மோதல்கள் நாளுக்குநாள் வலுவடைந்துவரும் நிலையில், இவை அந்நாட்டின் எல்லைகளையும் கடந்து, ஒரு சமயப் போராக உருவெடுத்து அப்பகுதி முழுவதும் உறுதியற்ற தன்மையை உருவாக்கக்கூடும் என ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
தலைநகர் Bangui மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் ஒவ்வொரு நாளும் கொலைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என்றும், மக்களும் மதம் வாரியாகப் பிளவுபட்டுள்ளனர் என்றும் ஐ.நா.வின் அரசியல் ஆலோசனைகளுக்கான நேரடிப் பொதுச் செயலர் Jeffrey Feltman, பாதுகாப்பு அவையிடம் கூறியுள்ளார்.
கடும் சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஏறக்குறைய 10 இலட்சம் பேர் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர் மற்றும் 22 இலட்சம் பேருக்கு, அதாவது அந்நாட்டின் பாதிப்பேருக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்றும் கூறினார் Feltman.
கடந்த மார்ச் மாதத்தில் அரசுத்தலைவர் François Bozizé பதவி விலகுவதற்கு, செலேக்கா
முஸ்லிம் தீவிரவாத அமைப்பு காரணமாக இருந்ததையொட்டி முஸ்லிம் மற்றும்
கிறிஸ்தவப் புரட்சிக்குழுக்களுக்கிடையே சண்டை தொடங்கியது.
அந்நாட்டில்
அமைதியை ஏற்படுத்தி சனநாயகத் தேர்தல்களுக்கு இடைக்கால அரசு முயற்சித்து
வருகின்றது. ஆயினும் இப்புரட்சிக்குழுக்களிடையே கடந்த இரு வாரங்களாக
இடம்பெற்றுவரும் கடும் ஆயுதம் தாங்கிய மோதல்கள் இதற்குத் தடையாக இருந்து
வருகின்றன என ஊடகங்கள் கூறுகின்றன.
ஆதாரம் : UN
8. அமெரிக்க ஐக்கிய நாட்டில் பல பகுதிகளில் கடும் உறைபனி
சன.07,2014. அமெரிக்க
ஐக்கிய நாட்டின் சில பகுதிகளில் நிலவும் கடுங்குளிர் நாட்டின் தெற்கு
மற்றும் கிழக்குப் பகுதிகளை நோக்கிப் பரவிக்கொண்டிருக்கிறது.
நியுயார்க் மற்றும் வாஷிங்டன் நகரங்களும் இந்த ஆர்க்டிக் குளிர் காற்றால் உறைந்துள்ளன.
வெப்பநிலை வேகமாகக் குறைந்துவரும் நிலையில், நியுயார்க் மாநில ஆளுநர் ஆண்ட்ரூ குவொமோ சில பெரிய நெடுஞ்சாலைகள் மூடப்படும் என்று கூறியுள்ளார்.
கடுமையான வானிலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன மற்றும் ஆயிரக்கணக்கான விமானப் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
பல இலட்சக்கணக்கான மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இத்திங்கள்கிழமை, மின்னெசோட்டா மாநிலத்தில் பாபிட் நகரில் மிகக் குளிரான வெப்பநிலை நிலவியது (-38 டிகிரி செல்சியஸ்) .
குளிரான காற்று , ஏற்கனவே நிலவும் கடுங்குளிரை மேலும் குளிராக இருப்பது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்துவதாக மக்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment