Wednesday, 8 January 2014

செய்திகள் - 04.01.14

செய்திகள் - 04.01.14
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ்:இளையோரே, உங்களின் நண்பராக இருக்க இயேசு விரும்புகிறார்

2. திருத்தந்தை பிரான்சிஸ் : துறவற சபைகள் உலகைத் தட்டியெழுப்ப வேண்டும்

3. காயங்கள் பரிவுடன் கவனிக்க முடியாமல் போகும்போது அதிக வலிதரும், திருத்தந்தை பிரான்சிஸ்

4. தேர்தலுக்கு முன்னான வன்முறைகளுக்கு மத்தியில் கிறிஸ்தவர்கள் அமைதிக்காகச் செபிக்க பங்களாதேஷ் பேராயர் வேண்டுகோள்

5. 2013ல் உலகில் 22 திருஅவைப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

6. மலேசியாவில் விவிலியப் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது சட்டத்துக்குப் புறம்பான செயல், ஹெரால்டு ஆசிரியர்

7. இந்தியாவின் ஓர் இந்துமதக் கோவிலில் விவிலியம்

8. சூரியனை ஆராய செயற்கைகோள்: இந்திய அறிவியலாளர்

9. சனவரி 10-ல் மலாலா இந்தியாவிற்கு வருகை

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ்:இளையோரே, உங்களின் நண்பராக இருக்க இயேசு விரும்புகிறார்

சன.04,2014. அன்பு இளையோரே, உங்களின் நண்பராக இருக்க இயேசு விரும்புகிறார், இந்த நட்பின் மகிழ்வை எல்லா இடங்களிலும் நீங்கள் பரப்ப வேண்டுமெனவும் அவர் விரும்புகிறார் என்று, தனது டுவிட்டர் செய்தியாக, இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஸ்பெயினில் அருள்சகோதரிகள் இல்லமொன்றுக்குத் தொலைபேசியில் பேசி அவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
புத்தாண்டுக்கு முந்திய தினம் தென் இஸ்பெயினின் அருள்சகோதரிகள் இல்லமொன்றுக்குத் தொலைபேசி எடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அச்சகோதரிகள் அந்நேரத்தில் தொலைபேசியை எடுக்காததால் தனது குரலைப் பதிவு செய்து, பின்னர் அவர்களை அழைத்துப் பேசியிருக்கிறார்.
செபம் முடிந்து வந்தவுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தொலைபேசிப் பதிவுச் செய்தியைக் கேட்ட அச்சகோதரிகள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர், பின்னர் மீண்டும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் தொலைபேசியில் பேசியுள்ளனர்.
அக்கன்னியர் இல்லத்திலுள்ள அர்ஜென்டீனா நாட்டைச் சேர்ந்த சில சகோதரிகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பதால்  புத்தாண்டுக்கு முந்திய தினம் அவர்களுக்கு வாழ்த்துச் சொல்ல விரும்பி தொலைபேசியை எடுத்திருக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் : துறவற சபைகள் உலகைத் தட்டியெழுப்ப வேண்டும்

சன.04,2014. அர்ப்பணிக்கப்பட்ட துறவுவாழ்வைத் தேர்ந்துகொண்டவர்கள் உலகைத் தட்டியெழுப்ப வேண்டுமென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுள்ளதாக, La Civiltà Cattolica என்ற உரோமை மையமாகக் கொண்டு இயங்கும் இயேசு சபையினரின் வார இதழில் வெளியான ஒரு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த நவம்பரில் நடைபெற்ற துறவற சபைகள் அதிபர்களின் 82வது பொதுப் பேரவையின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், துறவு சபைகளின் 120 அதிபர்களுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்புப் பற்றி அந்த இதழின் முதன்மை ஆசிரியர் இயேசு சபை அருள்பணி Antonio Spadaro எழுதியுள்ள ஒரு கட்டுரையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
துறவற வாழ்வு குறித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கண்ணோட்டத்தை 15 பக்க கட்டுரையாக எழுதியுள்ள அருள்பணி Spadaro, உலகைத் தட்டியெழுப்புங்கள்,  வாழும்முறையிலும், செயல்களைச் செய்வதிலும் வித்தியாசமாகச் செய்து உலகுக்குச் சாட்சிகளாக இருங்கள், இவ்வுலகில் வித்தியாசமாக வாழ்வது இயலக்கூடியதே என்று கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
திருஅவையில் ஆயர்களுக்கும் துறவிகளுக்கும் இடையேயான உறவுகள் குறித்து துறவிகள் பேராயமும், ஆயர்கள் பேராயமும் இணைந்து 1978ம் ஆண்டில் வெளியிட்ட Mutuae Relationes என்ற ஏடு மறுபரிசீலனை செய்யப்படுமாறு திருத்தந்தை கேட்டிருப்பதாகவும் அந்தக் கட்டுரை கூறுகிறது.
துறவற சபைகள் மறைமாவட்டங்களுக்குத் தேவைப்படுவதால் அச்சபைகளின் தனிப்பட்ட வரங்கள் மதிக்கப்பட்டு ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதாகவும் அந்தக் கட்டுரையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. காயங்கள் பரிவுடன் கவனிக்க முடியாமல் போகும்போது அதிக வலிதரும், திருத்தந்தை பிரான்சிஸ்

சன.04,2014. காயங்கள் வலி தரும், குறிப்பாக, அந்தக் காயங்கள் பரிவுடன் கவனிக்க முடியாமல் போகும்போது இன்னும் அதிக வலிதரும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
அர்ஜென்டீனா நாட்டின் புவனோஸ் ஐரெஸ் நகரில் அமைந்திருந்த ‘Crom’ இரவு விடுதியொன்றில் 2004ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதியன்று ஏற்பட்ட தீ விபத்தில் 194 பேர் இறந்தனர். இந்தத் துன்பகரமான விபத்தின் 9ம் ஆண்டு நிறைவு அந்நகர் பேராலயத்தில் கடைப்பிடிக்கப்பட்டபோது, இவ்விபத்து குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய மடல் ஒன்று அங்கு வாசிக்கப்பட்டது.
காயங்களைக் குணமாக்கப் பரிவு தேவை என்பதை தனது செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், குழந்தை இயேசுவின் மென்மையான மனதில் இப்பரிவினை நாம் உணர முடியும் என்று கூறியுள்ளார்.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த விபத்தில் உயிரிழந்தோரின் உறவினர்களைத் தான் சிறப்பாக நினைவுகூர்ந்து செபிப்பதாக, அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. தேர்தலுக்கு முன்னான வன்முறைகளுக்கு மத்தியில் கிறிஸ்தவர்கள் அமைதிக்காகச் செபிக்க பங்களாதேஷ் பேராயர் வேண்டுகோள்

சன.04,2014. பங்களாதேஷில் இஞ்ஞாயிறன்று நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலையொட்டி வன்முறைப் போராட்டங்களும் எதிர்ப்பு ஊர்வலங்களும் இடம்பெற்றுவரும்வேளை, அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள் நாட்டின் அமைதிக்குத் தங்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுள்ளார் டாக்கா பேராயர் பாட்ரிக் டி ரொசாரியோ.
இப்பொதுத்தேர்தலையொட்டி Church in Need என்ற பிறரன்பு நிறுவனத்துக்குப் பேட்டியளித்த பேராயர் டி ரொசாரியோ, பங்களாதேஷின் அனைத்துக் கிறிஸ்தவர்களும் அமைதி மற்றும் ஒப்புரவுக்காகச் செபிக்குமாறு கேட்டுள்ளதோடு, நமது செபம் வீணாய்ப் போகாது என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையே, இந்தத் தேர்தல் நேர்மையுடனும் ஒளிவுமறைவின்றியும் நடைபெறுவதை உறுதிசெய்வதற்கென, தற்காலிகப்பொறுப்பு அரசு ஒன்றை அமைக்குமாறு எதிர்க்கட்சி விடுத்த வேண்டுகோளை ஆளும்கட்சி நிராகரித்துள்ளது.
90 விழுக்காட்டு முஸ்லீம்களைக் கொண்ட பங்களாதேஷ், உலகில் ஊழல் மிகுந்த நாடுகளில் ஒன்றாகக் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், பங்களாதேஷில் இடம்பெற்றுவரும் எதிர்ப்பு வன்முறைகளில் குறைந்தது 30 வாக்குச்சாவடிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டிருப்பதாக இச்சனிக்கிழமை காலை செய்திகள் கூறுகின்றன.  

ஆதாரம் : CNA

5. 2013ல் உலகில் 22 திருஅவைப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

சன.04,2014. 2013ம் ஆண்டில் இந்தியா உட்பட உலகில் 22 திருஅவைப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஃபீதெஸ் செய்தி நிறுவனம் கூறியது.
2012ம் ஆண்டில் 13 மேய்ப்புப்பணியாளர்கள் வன்முறை இறப்புகளை எதிர்கொண்டவேளை, 2013ம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை ஏறக்குறைய இரு மடங்காகியுள்ளது எனவும் அச்செய்தி நிறுவனம் கூறியது.
இலத்தீன் அமெரிக்காவில் மறைப்பணியாளர்கள் கொலைசெய்யப்படுவது 5வது ஆண்டாக அதிகமான எண்ணிக்கையைக் கொண்டுள்ளது எனவும், 2013ம் ஆண்டில் கொலைசெய்யப்பட்டுள்ள 19 அருள்பணியாளர்களில் 15 பேர் இலத்தீன் அமெரிக்கர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியா, சிரியா, இத்தாலி, டான்சானியா, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகளில் அருள்பணியாளர்களும், மடகாஸ்கரில் ஓர் அருள்சகோதரியும், நைஜீரியா மற்றும் பிலிப்பீன்சில் பொதுநிலை திருஅவைப் பணியாளர்களும் கொலைசெய்யப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : Fides                         

6. மலேசியாவில் விவிலியப் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது சட்டத்துக்குப் புறம்பான செயல், ஹெரால்டு ஆசிரியர்

சன.04,2014. மலேசியாவின் Selangor மாநிலத்தில் 300க்கும் அதிகமான விவிலியப் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது முழுவதும் தவறானது மற்றும் சட்டத்துக்குப் புறம்பான செயல் என்று ஹெரால்டு என்ற கத்தோலிக்க வார இதழ் ஆசிரியர் அருள்பணி லாரன்ஸ் ஆன்ட்ரூ கூறினார்.
அரசு அதிகாரிகள் கிறிஸ்தவ மையத்தில் நுழைவதற்கும், அரசியல் அமைப்புக்கு முற்றிலும் முரணாண செயல்களைச் செய்வதற்கும் அவர்களுக்கு அதிகாரம் கிடையாது எனவும் அருள்பணி லாரன்ஸ் தெரிவித்தார்.
கிறிஸ்தவக் கடவுளைக் குறிப்பதற்கு அல்லா என்ற சொல் பயன்படுத்தப்படுவதை எதிர்க்கும் நோக்கத்தில் Selangorலுள்ள மலேசிய விவிலிய மையத்திலிருந்து 321 விவிலியப் பிரதிகளைப் பறிமுதல் செய்துள்ளதோடு,  இரு கிறிஸ்தவத் தலைவர்களைக் கைதுசெய்து பின்னர் பிணையலில் விடுதலை செய்துள்ளனர் அம்மாநில அரசு அதிகாரிகள்.
மலேசியாவில் அனைத்து மதத்தினரும் தங்கள் கடவுளைக் குறிப்பதற்கு அல்லா என்ற சொல்லைப் பயன்படுத்திவருகின்றனர். 
கிறிஸ்தவக் கடவுளைக் குறிப்பதற்கு அல்லா என்ற சொல் பயன்படுத்தப்படுவது குறித்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் உள்ளது. இது குறித்த புதிய விசாரணை வருகிற பிப்ரவரி 24ம் தேதி இடம்பெறும்.
மலேசியாவில் 400 ஆண்டுகளுக்கு முன்னர் அச்சிடப்பட்ட இலத்தீன்-மலாய் அகராதியில், விவிலியத்தில் கடவுளைக் குறிப்பதற்கு உள்ளூர் மொழியில் அல்லா என்ற சொல் பயன்படுத்தப்படுவது காட்டப்பட்டுள்ளது.  

ஆதாரம் : Reuters/Asianews

7. இந்தியாவின் ஓர் இந்துமதக் கோவிலில் விவிலியம்

சன.04,2014. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் ஓர் இந்துமதக் கோவிலில் விவிலியம் வழிபடப்படும் தனிப்பட்ட மரபு இருந்து வருகின்றது என ஆங்கில நாளிதழ் ஒன்று கூறியுள்ளது.
Dharwad மாவட்டத்தின் Navalgund நகரிலுல்ள Ajata Nagalingaswami கோவில் குருக்கள் அங்குள்ள விவிலியப் பிரதிக்கு மலர்கள் சூடி ஆரத்தி எடுத்து எண்ணெய் விளக்குகளை ஏற்றுகின்றனர் என, The Hindu நாளிதழ் கூறியுள்ளது.
19ம் நூற்றாண்டில் வாழ்ந்த யோகி நாகலிங்கசாமி இக்கோவிலில் முக்கிய தெய்வமாக வழிபடப்பட்டு வருகிறார். இவருக்கும் இந்த விவிலியப் பிரதிக்கும் தொடர்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஒருமுறை Kallappa என்ற பக்தரை யோகி நாகலிங்கசாமி சந்தித்தபோது, சில காரணங்களுக்காக Kallappa தன்னிடமிருந்த விவிலியத்தை இந்த யோகியிடமிருந்து மறைத்துள்ளார். இவ்விருவரும் உரையாடிக்கொண்டிருக்கும்போது யோகி எப்படியோ அந்த விவிலியத்தை Kallappaவிடமிருந்து வாங்கி அதில் ஒரு துளை போட்டு, அதில் ஒரு வெள்ளி நாணயத்தை வைக்க அது மறுபுறமாக வெளியே வந்துவிட்டது. இந்தத் துளை தானாக மறையும்போது தான் மீண்டும் மறுபிறவி எடுப்பதாக யோகி கூறினார் என்று சொல்லப்படுகிறது.  

ஆதாரம் : The Hindu                               

8. சூரியனை ஆராய செயற்கைகோள்: இந்திய அறிவியலாளர்

சன.04,2014. மங்கள்யான் செயற்கைகோளைத் தொடர்ந்து சூரியனைப் பற்றி ஆய்வு செய்வதற்காக ஆதித்யா என்ற செயற்கைகோள் ஏவப்பட உள்ளதாகவும், இதற்கான திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் இஸ்ரோ அறிவியலாளரும், மங்கள்யான் திட்டக்குழுத் தலைவருமான மயில்சாமி அண்ணாத்துரை தெரிவித்துள்ளார்.
நான்கு ஆண்டுகளில் இத்திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட மயில்சாமி அண்ணாத்துரை இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், சூரியன் பற்றி ஆராய்வதற்காக நவீன செயற்கைகோள் ஒன்றை 2013ம் ஆண்டு ஜூன் 29ம் தேதியன்று அமெரிக்க ஐக்கிய நாட்டு நாசா விண்வெளி ஆய்வு மையம் விண்ணில் ஏவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு கோள்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக, நாசா ஆய்வு மையம் விண்கலங்களை அனுப்பியுள்ளது.
இந்த வகையில் சூரியனின் கீழ்ப் பகுதி பற்றி ஆராய, ஐ.ஆர்.ஐ.எஸ் வகையைச் சேர்ந்த செயற்கைக்கோளை கலிபோர்னியாவிலிருந்து, பிகாசஸ் ராக்கெட் மூலம் நாசா ஏவியது.
சூரியனைப் பற்றி ஆய்வு நடத்துவதற்காக ஏறக்குறைய  1,100 கோடி ரூபாய் செலவில் இந்த செயற்கைகோள் உருவாக்கப்பட்டு விண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆதாரம் : செய்தி நிறுவனங்கள்

9. சனவரி 10-ல் மலாலா இந்தியாவிற்கு வருகை

சன.04,2014. இம்மாதம் 10ம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த 16 வயது மலாலா யூசாப்சாய், மியான்மார் நாட்டின் எதிர்கட்சித் தலைவர் Aung San Suu Kyi, ஆகியோர் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகராஷ்டிரா மாநிலம் புனேயில் நடைபெறவுள்ள இந்திய மாணவப் பாராளுமன்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவ்விருவரும் வருகின்றனர் என மாணவர் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் Rahul Karad தெரிவித்துள்ளா.
பெண் கல்வி, சமூகத்தில் இந்திய இளையோரின் முக்கியத்துவம், இளையோர் மத்தியில் அரசியல் போன்றவை குறித்து இவ்விழாவில் மலாலா பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் பாகிஸ்தானில் பெண்கல்வியை ஊக்குவித்ததால் தலிபான்களால் சுடப்பட்டார்.
மேலும், மியான்மார் எதிர்கட்சித் தலைவர் Suu Kyi, 15 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தவர்.

ஆதாரம் : The Times of India

No comments:

Post a Comment