Wednesday, 1 January 2014

01-01-14

01-01-14


1திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புத்தாண்டு நாளன்று வழங்கிய மறையுரை

2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புத்தாண்டு நாளன்று வழங்கிய நண்பகல் மூவேளை செப உரை

3. ஆண்டின் இறுதி நாளன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய Te Deum சிறப்புச் செய்தி

*********************************************************************

1திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புத்தாண்டு நாளன்று வழங்கிய மறையுரை

சன.01,2014. புலர்ந்துள்ள 2014ம் ஆண்டின் முதல் நாள், இப்புதனன்று கொண்டாடப்பட்ட அன்னை மரியா இறைவனின் தாய் என்ற பெருவிழாவன்று காலை, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் காலை 10 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி நிறைவேற்றினார்.
பசிலிக்காவிலும், புனித பேதுரு வளாகத்திலும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு, இன்றையத் திருநாளன்று முதல் வாசகமாக வழங்கப்பட்டுள்ள எண்ணிக்கை நூலில் காணப்படும் ஆசீர் மொழியுடன் திருத்தந்தை தன் மறையுரைத் துவக்கினார். திருத்தந்தை வழங்கிய மறையுரையின் சுருக்கம் இதோ:
இறைவன் மோசேக்கு வழங்கிய இந்த ஆசீர், ஆரோன், அவரது புதல்வர்கள் வழியாக தலைமுறை, தலைமுறையாகத் தொடர்ந்து வருகிறது. இறைவன் வழங்கியுள்ள அசீரை இன்று நாம் செவிமடுத்தோம்.
ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக! (எண்ணிக்கை நூல் 6:24-26) எண்ணிக்கை நூலிலிருந்து ஒலிக்கும் இவ்வார்த்தைகளைக் கேட்பதற்கு புத்தாண்டின் முதல் நாளைப் போல் பொருத்தமான நாள் கிடைக்காது. இந்த நம்பிக்கை, மனிதர்கள் தரும் வாக்குறுதிகளின் மீது அமைந்ததல்ல, இறைவன் தரும் ஆசீரின் மீது அமைந்துள்ளது.
நம்பிக்கை தரும் இந்த ஆசீர், மரியா என்ற பெண்ணிடம் முதன்முறையாக முழுமையாக நிறைவேறியது. மரியாவுக்கு வழங்கப்பட்டுள்ள பல அடைமொழிகளில், 'இறைவனின் தாய்' என்ற அடைமொழியே முதன்மையும், முக்கியமும் வாய்ந்தது.
கிறிஸ்தவ மக்களின் மனங்களிலும், பக்தியிலும், திருப்பயணங்களிலும் மரியன்னை எப்போதும் வாழ்ந்துவருகிறார். நாம் மேற்கொள்ளும் நம்பிக்கை பயணத்தைப் போலவே மரியாவும் மேற்கொண்டார் என்பதே அவரை நமக்கு மிகவும் நெருக்கமாகக் கொணர்கிறது. துயரங்கள், இருள் சூழ்ந்த நேரங்கள் என்று நாம் மேற்கொள்ளும் உலகப் பயணத்தைப் போலவே அன்னை மரியாவும் இவ்வுலகில் கடினமான பயணம் மேற்கொண்டார்.
கல்வாரி மலையில் இறைமகன் இயேசு தன் அன்னையை நமக்கு அன்னையாகத் தந்த நேரம் முதல், அவரை நம் அன்னையாக ஏற்றுக் கொண்டுள்ளோம்.
தன் மகனை சிலுவையில் பறிகொடுத்த அந்த அன்னை, துயர் நிறைந்த தன் உள்ளத்தை விரிவாக்கி, அவ்வுள்ளத்தில் மனிதர்களாகிய நம் அனைவருக்கும் இடமளித்தார். நல்லவர்கள், பொல்லாதவர்கள் என்ற அனைவரையும் அரவணைக்கும் அன்னையாக மாறினார்.
இந்த அன்னையிடம் நம்மை முழமையாக ஒப்படைப்போம், நமது தேவைகள், உலகின் தேவைகள் அனைத்தையும் அவரிடம் ஒப்படைப்போம். குறிப்பாக, உலகில் நீதியையும், அமைதியையும் தேடுவோர் அனைவரின் தேவைகளையும் அவரிடம் ஒப்படைப்போம் என்று கூறி தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புத்தாண்டு நாளன்று வழங்கிய நண்பகல் மூவேளை செப உரை

சன.01,2014. இறைவனின் தாயான மரியா, மற்றும் உலக அமைதி நாள் என்ற இரு அழகிய பாதைகள் இன்று சந்திக்கின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
புத்தாண்டு நாளன்று வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அமைதியையும், அனைத்து நன்மைகளையும் இறைவன் வழங்கவேண்டும் என்ற வாழ்த்துக்களுடன் நண்பகல் மூவேளை செப உரையைத் துவக்கினார் திருத்தந்தை.
தன்னைச்சுற்றி நிகழ்ந்ததையெல்லாம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்த மரியன்னையை நாம் இன்று நம் உள்ளத்திலும் வரவேற்போம், அவரைப் போல அமைதியை இவ்வுலகில் நிலைநாட்ட நம்மையே அர்ப்பணிப்போம் என்று திருத்தந்தை கூறினார்.
பிறர் மீது கொள்ளும் மதிப்பே உலக அமைதியை உறுதி செய்யும் சிறந்த வழி என்று கூறியத் திருத்தந்தை, ஒருவர் மற்றவர் மீது காட்டும் அக்கறையின் அடிப்படையில் உலக அமைதியைக் கட்டியெழுப்புவோம் என்ற உறுதிமொழியை உலக அமைதி நாளன்று அனைவரும் மேற்கொள்வோம் என்று வலியுறுத்தினார்.
அன்னையின் பரிந்துரையால், இவ்வுலகம் வன்முறைகள் அனைத்தையும் களைந்து வாழும் வரம் பெற வேண்டும் என்ற வேண்டுதலுடன், திருத்தந்தை அவர்கள், கூடியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.
மூவேளை செப உரையின் இறுதியில், இத்தாலியின் அரசுத் தலைவர் நாட்டுக்கு அளித்த செய்தியில், தன்னை வாழ்த்தியதற்கு திருத்தந்தை தன் நன்றியைக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. ஆண்டின் இறுதி நாளன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய Te Deum சிறப்புச் செய்தி

சன.01,2014. 'இதுவே கடைசி காலம் என தூய யோவான் தன் முதல் திருமுகம் 2ம் பிரிவில் எழுதியுள்ளார். இறைவன் வரலாற்றில் வரும் இறுதி காலத்தில் நாம் உள்ளோம் என்பதை இந்த வார்த்தைகள் குறிக்கின்றன. இந்த கடைசிக் காலத்திற்குப் பின் வரும் அடுத்த படி என்பது இயேசுவின் இறுதி வருகையாகும். நாம் இங்கு பேசுவது காலத்தின் அளவைப் பற்றியல்ல, மாறாக அதன் தரத்தைப்பற்றியது. காலம் நிறைவுற்றபோது அதாவது, மீட்பின் காலம் முழுமைபெற்றபோது இயேசு இவ்வுலகிற்கு வந்தார். இதே கண்ணோட்டத்தில் பார்க்கும்போது நாம் கடைசி காலத்தில் உள்ளோம் எனலாம். நம் வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் கடைசி காலமே. இன்று நாம் அவருக்கு வழங்கும் பதில்,  நம் வருங்காலத்தைப் பாதிக்கின்றது. காலம் மற்றும் வரலாறு பற்றிய விவிலிய கண்ணோட்டமும், நம் புரிந்துகொள்ளுதலும், ஓர் இலக்கை, முடிவை நோக்கி இட்டுச்செல்லும் பாதையைப்பற்றியதாகும். ஆகவே, ஓர் ஆண்டு முடிந்துள்ளது என்பது ஓர் உண்மைத்தன்மையின் முழுமையைக் குறிக்கவில்லை, மாறாக நம் இலக்கை நோக்கி ஓரடி முன்னெடுத்து வைப்பதையேக் குறிக்கிறது. 2013ம் ஆண்டு முடிவுக்கு வரும் இவ்வேளையில், கடந்துள்ள நாட்க‌ளை, வாரங்க‌ளை, மாதங்க‌ளை ஒரு  கூடையில் சேகரித்து இறைவனிடம் சமர்ப்பிப்போம். நாம் எப்படி வாழ்ந்தோம்? நமக்காகவா? பிறருக்காகவா? இறைவனோடு இணைந்திருக்க எவ்வளவு நேரத்தைச் செலவிட்டோம்?  நம் வாழ்வின் தரம் என்ன?
உரோம் நகரை எடுத்துக்கொண்டால் அதன் மொசைக் தரையின் ஒவ்வொரு சிறு சதுரமாக அந்நகர் மக்கள் ஒவ்வொருவரும் உள்ளனர். உரோம் நகரம் தனக்கேயுரிய அழகையும் கலாச்சார பாரம்பரியத்தையும் உடையது. இங்கும் ஏழ்மையும் துன்பங்களும் உள்ளன. ஆகவே, இங்குள்ள அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமக்களின் மனச்சான்றிற்கும் அழைப்பொன்றை விடுக்கிறேன். இங்கு சுற்றுலாப்பயணிகளும் நிறைந்துள்ளனர், அதேவேளை அகதிகளும் குவிந்துள்ளனர். இங்கு வாழும் அனைவரும் அவர்களுக்கேயுரிய மனித மாண்புடன் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
இன்று ஆண்டின் கடைசி நாள். வரும் ஆண்டில் இந்த நகரை மேலும் சிறப்புடையதாக்க நாம் என்னச் செய்யப்போகிறோம்? நாம் ஒருமைப்பாட்டுணர்வுடனும் தாராளமனதுடனும் பணியாற்ற முன்வந்தால், இது மனிதாபிமானம் நிறைந்ததாக, நட்புணர்வுடன் கூடியதாக மாறும். இவ்வேளையில் உரோம் தலத்திருஅவை இறை இரக்கத்தின் கருவியாக, இந்நகரின் வருங்கால வாழ்வுக்கு தன்னையே அர்ப்பணித்து, தன் பங்கையாற்ற ஆவல் கொள்கிறது.
இன்றிரவு நாம் இறைவனிடம் மன்னிப்பை வேண்டி அவருக்கு நன்றி நவின்று 2013ம் ஆண்டை நிறைவுச்செய்கின்றோம். அவர் நமக்கு வழங்கியுள்ள அனைத்து கொடைகளுக்காக, நன்றிகூறுவோம். இறைவனின் தாயின் பெயரால் நாளை  நாம் துவக்கவிருக்கும் இவ்வுலகப்பயணத்தின் புதிய அத்தியாயத்தில், ஒவ்வோர் ஆண்டையும், மாதத்தையும், நாளையும் முடிவற்ற அன்பால் நிறைக்கும் மனுமகனை வரவேற்க அத்தாய் நமக்கு கற்றுத்தருவாராக.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...