Sunday, 14 April 2013

Catholic News in Tsmil - 13/04/13

1. அருள்திரு Udumala Bala வாரங்கல் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் 

2. திருத்தந்தை பிரான்சிஸ், ECOSOC தலைவர் சந்திப்பு

3. திருத்தந்தை பிரான்சிஸ் : கடவுளில் நம்பிக்கை வைத்து நல்லதையும் தீயதையும் ஏற்க வேண்டும்

4. உலகளாவியத் திருஅவையின் நிர்வாகத்தில் உதவுவதற்கென 8 கர்தினால்கள் கொண்ட ஆலோசனை குழுவை நியமித்துள்ளார் திருத்தந்தை

5. கர்தினால் டர்க்சன் : அமைதி, மனித மாண்பை ஏற்பதிலிருந்து மலருவது

6. வத்திக்கான் அதிகாரி : நற்செய்தியை அறிவிப்பதற்கு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அழைப்பு

7. ஐ.நா. ஆயுத வியாபாரம் குறித்த ஒப்பந்தத்தைத் துரிதமாகச் செயல்படுத்துமாறு வேண்டுகோள்

8. குழந்தைகள் இல்லாத ஒரு நாடு, எதிர்காலம் இல்லாத நாடு

------------------------------------------------------------------------------------------------------

1. அருள்திரு Udumala Bala வாரங்கல் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் 

ஏப்.13,2013. ஆந்திர மாநிலத்தின் வாரங்கல் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்திரு Udumala Bala Show Reddy அவர்களை இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
C.C.B.I என்ற இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள் பேரவையின் பொதுச் செயலராக 2006ம் ஆண்டுமுதல் பணியாற்றிவரும் புதிய ஆயர் Udumala Bala Show Reddy, வாரங்கல் மறைமாவட்டத்தின் Ghanpurல் 1954ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி பிறந்தவர்.
1979ம் ஆண்டு குருவாக அருள்பொழிவு செய்யப்பட்ட இவர், உரோம் நகரில் 1994ம் ஆண்டில் அறநெறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். ஹைதராபாத் புனித யோவான் குருத்துவக் கல்லூரியில் 1997ம் ஆண்டுவரை பேராசிரியராகவும், 2006ம்  ஆண்டுவரை  அக்கல்லூரியின் அதிபராகவும் பணியாற்றினார் புதிய ஆயர் Udumala Bala.
இவர் 2006ம் ஆண்டு பெங்களூருவிலுள்ள C.C.B.I அலுவலகத்தில் பொதுச் செயலராகப் பணியைத் தொடங்கினார். 
வாரங்கல் மறைமாவட்ட முன்னாள் ஆயர் தும்மா பாலா ஹைதராபாத் உயர்மறைமாவட்டத்துக்கு 2011ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி மாற்றப்பட்டதையடுத்து வாரங்கல் மறைமாவட்டம் இதுவரை ஆயரின்றி இருந்தது. 1952ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வாரங்கல் மறைமாவட்டத்தில் 66,385 கத்தோலிக்கர் உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ், ECOSOC தலைவர் சந்திப்பு

ஏப்.13,2013. ECOSOC என்ற ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொருளாதார மற்றும் சமூக அவையின் தலைவர் Néstor Osorio அவர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீட ஆயர்கள் பேராயத் தலைவர் கர்தினால் Marc Ouellet, திருப்பீட பொதுநிலையினர் அவைத் தலைவர் கர்தினால் Stanislaw Rylko ஆகியோரையும் இச்சனிக்கிழமையன்று சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் மாலை 5.30 மணிக்கு உரோம் புனித பவுல் பசிலிக்காவில் திருப்பலி நிகழ்த்துவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் : கடவுளில் நம்பிக்கை வைத்து நல்லதையும் தீயதையும் ஏற்க வேண்டும்

ஏப்.13,2013. கிறிஸ்தவர்கள் வாழ்வில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது குறுக்கு வழிகளைத் தேடாமல் எப்போதும் கடவுளில் நம்பிக்கை வைக்க வேண்டும், ஏனெனில் அவர் நமக்கு உதவி செய்வதில் தவறமாட்டார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் ஒரு மாதம் நிறைவடையும் ஏப்ரல் 13ம் தேதியான இச்சனிக்கிழமை  காலையில் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் கலந்து கொண்ட வத்திக்கான் காவல்துறை மற்றும் தீயணைப்புப்படையினருக்கு ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
வாழ்வில் காரியங்கள் தவறாகச் சென்றுகொண்டிருக்கும்போது வாழ்வு எதனாலும் சரிசெய்யப்பட முடியாது, ஏனெனில் அப்படிச் செய்யும்போது வாழ்வின் ஆண்டவராகிய கடவுள்மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பதாகும் என்றுரைத்த திருத்தந்தை, அதற்கு மாறாக, வாழ்வில் நடப்பதை ஏற்பதற்குக் கிறிஸ்தவருக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று கூறினார்.
முதல் கிறிஸ்தவச் சமூகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளை வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், பிரச்சனைகளைக் கண்டு பயப்படக் கூடாது, ஏனெனில் இயேசு நம்மோடு இருக்கிறார் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. உலகளாவியத் திருஅவையின் நிர்வாகத்தில் உதவுவதற்கென 8 கர்தினால்கள் கொண்ட ஆலோசனை குழுவை நியமித்துள்ளார் திருத்தந்தை

ஏப்.13,2013. உலகளாவியத் திருஅவையின் நிர்வாகத்தில் தனக்கு ஆலோசனை சொல்வதற்கு உதவியாக இந்தியாவின் மும்பை கர்தினால் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த எட்டு கர்தினால்கள் குழு ஒன்றை இச்சனிக்கிழமையன்று உருவாக்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீடச் செயலகம் இச்சனிக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில், திருஅவையின் 266வது திருத்தந்தையாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கான்கிளேவ் அவை தொடங்குவதற்கு முன்னர் இடம்பெற்ற கர்தினால்களின் பொதுக் கூட்டங்களில் பரிந்துரைக்கப்பட்டதற்கிணங்க, திருத்தந்தை இந்தக் கர்தினால்கள் குழுவை உருவாக்கத் தீர்மானித்தார் என்று கூறப்பட்டுள்ளது.
திருப்பீடத் தலைமையகம் குறித்த Pastor bonus என்ற அப்போஸ்தலிக்க சட்ட  அமைப்பை மறுபரிசீலனை செய்வதற்கும் இக்கர்தினால்கள் குழு உதவும் எனவும் திருப்பீடச் செயலகத்தின் அறிக்கை கூறுகிறது.
மத்திய அமெரிக்க நாடான Honduras நாட்டு Tegucigalpa பேராயர் கர்தினால் Oscar Andrés Maradiaga Rodríguez S.D.B., அவர்கள் இக்கர்தினால்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார். இக்குழுவின் முதல் கூட்டம் வருகிற அக்டோபர் 1 முதல் 3 வரை இடம்பெறும்.
இக்கர்தினால்கள் குழுவில்,
வத்திக்கான் நாட்டின் நிர்வாகத் தலைவர் கர்தினால் Giuseppe Bertello,
தென் அமெரிக்க நாடான Chileயின் Santiagoவின் ஓய்வுபெற்ற பேராயர்  கர்தினால் Francisco Javier Errazuriz Ossa,
இந்தியாவின் மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்,
ஜெர்மனியின் München மற்றும் Freising பேராயர் கர்தினால் Reinhard Marx,
ஆப்ரிக்காவின் காங்கோ சனநாயகக் குடியரசின் Kinshasa பேராயர் கர்தினால் Laurent Monswengo Pasinya,
அமெரிக்க ஐக்கிய நாட்டின் Boston பேராயர் கர்தினால் Sean Patrick O’Malley,
ஆஸ்திரேலியாவின் சிட்னி பேராயர் கர்தினால் George Pell,
Honduras நாட்டு Tegucigalpa பேராயர் கர்தினால் Oscar Andrés Maradiaga Rodríguez S.D.B..
ஆகிய 8 கர்தினால்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழுவின் செயலராக இத்தாலியின் அல்பானோ ஆயர் Marcello Semeraro நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. கர்தினால் டர்க்சன் : அமைதி, மனித மாண்பை ஏற்பதிலிருந்து மலருவது

ஏப்.13,2013. மனிதரின் மாண்பிலிருந்து மலரும் அமைதி ஒவ்வொருவருக்கும் அவசியமானது என்று திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் கூறினார்.
முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 23ம் அருளப்பரின் அவனியில் அமைதி” (Pacem in Terris) என்ற திருமடல் வெளியிடப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவையொட்டி வாஷிங்டனிலுள்ள கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் இவ்வாரத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் டர்க்சன் இவ்வாறு கூறினார்.
நாம் அடிக்கடி அமைதி பற்றிக் கேட்கிறோம், ஆனால் அமைதி என்றால் என்ன என்பது குறித்து பலவேளைகளில் தவறாகப் புரிந்துகொள்கிறோம் என்று பேசிய கர்தினால் டர்க்சன், சண்டையும் கலவரங்களும் இன்றி இருப்பது அமைதி அல்ல, ஆனால் அமைதி கடவுளிடமிருந்து வரும் ஒரு கொடை என்று கூறினார்.
இக்கொடையை இப்பூமியில் மனிதர் ஏற்றுக்கொள்ளும்போது அது உண்மையாகிறது, எனவே அமைதி மனிதரிலிருந்து தொடங்குகிறது என்றும் உரையாற்றிய கர்தினால் டர்க்சன், கடவுளே அமைதி, படைப்பனைத்தும் அமைதிக்காக ஏங்குகிறது என்றும் கூறினார்.
உலகில் பனிப்போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலக்கட்டத்தில், 1963ம் ஆண்டில் முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 23ம் அருளப்பர் “Pacem in Terris” (அவனியில் அமைதி) என்ற திருமடலை வெளியிட்டார்.

ஆதாரம் : CNA

6. வத்திக்கான் அதிகாரி : நற்செய்தியை அறிவிப்பதற்கு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அழைப்பு

ஏப்.13,2013. நற்செய்தி அறிவிக்கும் பணியில் புதிய தொழில்நுட்பத்தைத் துணிச்சலுடன் பயன்படுத்துமாறு கத்தோலிக்கருக்கு அழைப்பு விடுத்துள்ளார் திருப்பீட சமூகத்தொடர்பு அவையின் தலைவர் பேராயர் Claudio Maria Celli.
சிலே நாட்டு சந்தியாகோவில் நடைபெற்ற திருஅவையில் சமூகத்தொடர்பு சாதனங்கள் குறித்த இரண்டாவது பன்னாட்டுக் கருத்தரங்கில் உரையாற்றிய பேராயர் Celli, சமூகத்தொடர்பு சாதனங்கள் பல்வேறு தலைமுறைகளால் பயன்படுத்தப்பட்டுவந்ததன் பரிணாம வளர்ச்சி குறித்த புள்ளிவிபரங்களையும் வெளியிட்டு, இவை இளையோர் மத்தியில் ஏற்படுத்தியுள்ள பெரும் தாக்கங்கள் குறித்தும் விளக்கினார்.
புதிய தொழில்நுட்பங்கள் திருஅவையின் மறைப்பணியின் அங்கங்களாக இருக்கின்றன என்றும், திருஅவையில் சமூகத்தொடர்பு சாதனங்கள் மனிதர் பற்றிய உண்மையை அறிவிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்வதற்கு முந்தைய திருத்தந்தையர்கள் நமக்கு உதவியுள்ளார்கள் என்றும் கூறினார் பேராயர் Celli.
 “சமூகத்தொடர்பு சாதனங்களும் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கமும் : 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற பொதுச்சங்கம் இக்காலத்துக்கும் பொருத்தமானதாக இருக்க முடியுமா?” என்ற தலைப்பில் இக்கருத்தரங்கில் உரையாற்றினார் பேராயர் Celli.

ஆதாரம் : CNA

7. ஐ.நா. ஆயுத வியாபாரம் குறித்த ஒப்பந்தத்தைத் துரிதமாகச் செயல்படுத்துமாறு வேண்டுகோள்

ஏப்.13,2013. அனைத்துலக எல்லைகளில் ஆயுத வியாபாரங்களைக் கட்டுப்படுத்தும் ஐ.நா. ஆயுத வியாபாரம் குறித்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்கு, துரிதமாக நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுத் தலைவர் அந்நாட்டுத் தலைவர்களைக் கேட்டுள்ளார்.
ஐ.நா. ஆயுத வியாபாரம் குறித்த ஒப்பந்தத்தை விரிவாக ஆய்வு செய்யுமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டுச் செயலர் John Kerryக்கு அழைப்பு விடுத்துள்ள ஆயர் Richard E. Pates,  இதன்மூலம் அமெரிக்க செனட் அவை தீர்மானங்களைக் கொண்டு வரவும், அரசுத்தலைவர் Barack Obama, வருகிற ஜூனில் கையெழுத்திடவும் உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
உலகில் வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் ஒரு கருவியாக, ஆயுதக் கட்டுப்பாட்டைக் கத்தோலிக்கத் திருஅவை நோக்குகிறது என்று John Kerryக்கு கடிதம் எழுதியுள்ள ஆயர் Pates, ஆயுதப் புழக்கங்கள் குறைக்கப்படுவதில் முயற்சிகளை எடுப்பதில்  அமெரிக்க ஐக்கிய நாடு, மற்ற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா.பொது அவையில் இம்மாதம் 2ம் தேதி கொண்டுவரப்பட்ட ஐ.நா. ஆயுத வியாபாரம் குறித்த ஒப்பந்தத்தில் 154 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. ஈரான், வடகொரியா, சிரியா ஆகிய மூன்று நாடுகளும் அதற்கு எதிராக ஓட்டளித்தன.

ஆதாரம் : CNS

8. குழந்தைகள் இல்லாத ஒரு நாடு, எதிர்காலம் இல்லாத நாடு

ஏப்.13,2013. குழந்தைகள் இல்லாத ஒரு நாடு எதிர்காலம் இல்லாத நாடு என்று போர்த்துக்கல் நாட்டின் குறைவான குழந்தை பிறப்பு விகிதம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் அந்நாட்டு அரசுத்தலைவர் Aníbal Cavaco Silva.
போர்த்துக்கல் நாட்டில் 1980களிலிருந்து குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து வருவதையொட்டி, மக்கள்தொகை விவகாரம் குறித்து இணையதளத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அரசுத்தலைவர் Cavaco Silva.
தற்போது பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்கநிலையினால் இளையோர் வேலைதேடி வேறு நாடுகளுக்குச் செல்கின்றனர் எனவும், இளையோரின் வேலைவாய்ப்பின்மை 38.3 விழுக்காடாக உள்ளது எனவும் கூறியுள்ளார் அரசுத்தலைவர் Cavaco Silva.
மேலும், ஐரோப்பாவில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்துவரும்வேளை, 2010ம் ஆண்டில் 73 கோடியே 80 இலட்சமாக இருந்த மக்கள்தொகை, இந்நூற்றாண்டு முடிவதற்குள் 48 கோடியே 20 இலட்சமாகக் குறையக்கூடும் எனப் புள்ளிவிபரங்கள் எச்சரிக்கின்றன.
பிரிட்டனில் 2030ம் ஆண்டுக்குள் 65ம் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை 50 விழுக்காடு அதிகரிக்கக்கூடும் என்றும் ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

ஆதாரம் : Zenit

No comments:

Post a Comment