1. திருத்தந்தை பிரான்சிஸ் : உயிர்த்த கிறிஸ்துவின் சக்தி ஒவ்வொருவரையும், குறிப்பாக, துன்புறுவோர் மற்றும் நம்பிக்கை தேவைப்படும் இடங்களைச் சென்றடையட்டும்
2. சமுதாயத்தின் விளிம்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ளவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அரவணைத்தார் - அருள்தந்தை Lombardi
3. மத்தியக்கிழக்குப்பகுதி பிரச்சனைகள் குறித்து முதுபெரும் தலைவர் Twal
4. வன்முறைகள் நிறுத்தப்பட யங்கூன் பேராயர் அழைப்பு
5. கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து இந்தோனேசிய பேராயர் கவலை
6. முடிவில்லாத கல்வாரியாகத் தெரியும் ஆப்கானிஸ்தான் நிலை விரைவில் உயிர்ப்பையும் காணவேண்டும் - அருள்தந்தை Moretti
7. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் 20 இலட்சம் சிறாருக்கு அடிப்படை வசதிகள் கிடையாது
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : உயிர்த்த கிறிஸ்துவின் சக்தி ஒவ்வொருவரையும், குறிப்பாக, துன்புறுவோர் மற்றும் நம்பிக்கை தேவைப்படும் இடங்களைச் சென்றடையட்டும்
ஏப்.01,2013. கிறிஸ்து தீமையை முழுமையாகவும் முடிவாகவும் வென்றுவிட்டார், ஆயினும், இவ்வெற்றியை தங்களது வாழ்விலும், வரலாறு மற்றும் சமுதாயத்தின் உண்மைத்தன்மைகளிலும் ஏற்றுக்கொள்வது நம்மைச் சார்ந்தது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
வானதூதரின்
திங்கள் என அழைக்கப்படும் உயிர்ப்பு ஞாயிறுக்கு அடுத்த நாளான திங்களன்று
பகல் 12 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த
இலட்சக்கணக்கான மக்களுக்கு, அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு கூறினார்.
நம்மைக் கடவுளின் பிள்ளைகளாக ஆக்கும் திருமுழுக்கும்,
நம்மைக் கிறிஸ்துவோடு இணைக்கும் திருநற்கருணையும் நமது வாழ்வாக மாற
வேண்டுமென்றும் விசுவாசிகளிடம் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், இவை நமது எண்ணங்களிலும், நமது புரிந்துகொள்ளுதலிலும், நமது நடத்தைகளிலும், செயல்களிலும், நாம் தெரிந்தெடுப்பவைகளிலும் வெளிப்பட வேண்டுமென்றும் கூறினார்.
உமது திருஅவையை வளரச்செய்யும் எம் வானகத்தந்தையே, உமது விசுவாசிகளாகிய நாங்கள் பெற்றுக்கொண்ட விசுவாசத்தை திருவருள்சாதன வாழ்வில் வெளிப்படுத்த உதவி செய்யும் என, இதற்காகவே இன்றைய திருவழிபாட்டில் நாம் செபிக்கிறோம் என்றும் திருத்தந்தை கூறினார்.
பாஸ்கா திருவருள்சாதனத்தில் அடங்கியுள்ள திருவருள் நமது தனிப்பட்ட, குடும்ப மற்றும் சமூக வாழ்வைப் புதுப்பிப்பதற்கு அளவற்ற சக்தியைக் கொண்டுள்ளது என்றுரைத்த திருத்தந்தை, ஒவ்வொன்றும் மனித இதயங்களின் வழியாகச் செல்வதால், உயிர்த்த கிறிஸ்துவின் அருளோடு நாம் ஒத்துழைத்தால், நமக்கும் மற்றவருக்கும் தீமையை விளைவிப்பவற்றை அவ்வருள் நன்மையாக மாற்றும், அவ்வருள், நம் வாழ்விலும், உலகிலும் பெரிய மாற்றத்தைக் கொணரும் என்றும் கூறினார்.
இறையருளின்றி நம்மால் ஒன்றும் செய்ய இயலாது, திருமுழுக்கு மற்றும் திருநற்கருணையின் அருளால் நாம் கடவுளின் கருணையின் கருவியாக மாற முடியும் என்றும் திருத்தந்தை கூறினார்.
பாஸ்கா மறைபொருள், நம்மிலும் நம் காலத்திலும், வெறுப்பை அன்பாகவும், பொய்மையை மெய்மையாகவும், பழிவாங்குதலை மன்னிப்பாகவும், வருத்தத்தை மகிழ்ச்சியாகவும் மாற்றும்பொருட்டு அன்னைமரியின் பரிந்துரை வழியாக உயிர்த்த கிறிஸ்துவிடம் செபிப்போம் என்று தனது அல்லேலூயா
வாழ்த்தொலி உரையை நிறைவு செய்து அனைவரோடும் சேர்ந்து அல்லேலூயா வாழ்த்தொலி
செபத்தையும் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், வத்திக்கான்
தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்துக்குக் கீழே இருக்கின்ற தூய பேதுருவின்
கல்லறைக்கு இத்திங்கள் மாலையில் சென்று திருத்தந்தை பிரான்சிஸ் செபிப்பது
இத்திங்களன்று அவரது செயல் திட்டங்களில் ஓன்றாக உள்ளது.
ஆதாரம் – வத்திக்கான் வானொலி
2. சமுதாயத்தின் விளிம்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ளவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அரவணைத்தார் - அருள்தந்தை Lombardi
ஏப்ரல்,01,2013.
சமுதாயத்தின் விளிம்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒரு சிறு குடும்பத்தின்
உறுப்பினர்களை அரவணைக்கும் வகையில் திருத்தந்தை பிரான்சிஸ் புனித வியாழன்
மாலை திருப்பலியில் இளம் கைதிகளின் பாதங்களைக் கழுவித் துடைத்தார் என்று
திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை Federico Lombardi கூறினார்.
புனித வியாழன் மாலை 'இயேசுவின் இறுதி இரவுணவுத் திருப்பலி'யை உரோம் நகரில் உள்ள Casal del Marmo எனப்படும் வளர் இளம் கைதிகள் இல்லத்தில் கொண்டாடியத் திருத்தந்தை, அப்பலியின்
ஒரு முக்கிய பகுதியான பாதம் கழுவும் சடங்கின்போது இரு இளம்பெண்களின்
பாதங்களைக் கழுவினார் என்பதை ஒரு பிரச்சனையாக ஊடகங்கள் பேசி வந்ததற்குப்
பதிலிறுக்கும் வகையில் அருள்தந்தை Lombardi விளக்கம் ஒன்றை வெளியிட்டார்.
அனைத்து
மக்களின் முன்னிலையில் மேற்கொள்ளப்படும் ஒரு பொதுவான திருவழிபாட்டில்
பாதம் கழுவும் சடங்கிற்கு ஆண்களே தெரிவு செய்யப்பட்டிருப்பர் என்று
விளக்கம் அளித்த அருள்தந்தை Lombardi, இளம் கைதிகள் இல்லமோ ஒரு தனிப்பட்ட குழுமம் என்றும், அங்கு பெண்களை ஒதுக்கிவைப்பது பொருள் தராத சடங்காக மாறும் என்றும் கூறினார்.
அடுத்தவருக்கு பணிவிடை செய்தல் என்ற உயர்ந்ததோர் பாடத்தை இயேசு பாதம் கழுவும் சடங்கில் நமக்குச் சொல்லித்தருகிறார் என்றும், அத்தகைய
உன்னதமான ஒரு செயலில் ஆண் பெண் என்ற வேறுபாடுகளுக்கு அதிக முக்கியத்துவம்
தருவது அந்த எடுத்துக்காட்டின் மேன்மையைக் குறைக்கும் என்றும் அருள்தந்தை Lombardi விளக்கினார்.
ஆதாரம் – CNA
3. மத்தியக்கிழக்குப்பகுதி பிரச்சனைகள் குறித்து முதுபெரும் தலைவர் Twal
ஏப்.01,2013. அண்டைநாடுகளில் அகதிகளாக வாழும் சிரியா நாட்டு மக்கள் குறித்தும், வேறுநாடுகளில்
குடியேற முயலும் மத்தியக்கிழக்குப்பகுதி கிறிஸ்தவர்கள் குறித்தும் தன்
அக்கறையை வெளியிட்டுள்ளார் எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்
தலைவர் Fouad Twal.
மத்தியக்கிழக்குப்பகுதியில்
பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் திருஅவை குறித்து இந்த
உயிர்ப்புவிழாத் திருப்பலி மறையுரையில் எடுத்துரைத்த முதுபெரும் தலைவர் Twal, மத்தியக்கிழக்குப்பகுதியின்
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணமாக இருக்கும் பாலஸ்தீனியப்
பிரச்சினைக்கு நீதியான தீர்வு காண சர்வதேச சமூகம் உதவவேண்டும் என்ற
வேண்டுகோளை முன்வைத்தார்.
மத்தியக்கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவராக வாழ்வது என்பது நாம் தேர்ந்துகொண்டதல்ல, மாறாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள அழைப்பு என்றார் முதுபெரும் தலைவர் Twal.
பலவேளைகளில் வாழ்வுக்கு எதிரானதாகத் தோன்றும் சிலுவை, நமக்கு அச்சத்தைத் தரலாம், ஆனால் அது உண்மையல்ல, ஏனெனில் அன்பின் உன்னத வெளிப்பாடான சிலுவையே வாழ்வின் ஊற்றாக உள்ளது என்றார் அவர்.
தற்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் அர்ஜென்டீனாவில் தான் சந்தித்தபோது, மத்தியக்கிழக்குப்பகுதியின் பிரச்சனை குறித்து விவாதித்ததாகவும், அப்பிரச்சினைகள் குறித்து தெரிந்துள்ள திருத்தந்தை, அதன்
தீர்வுகளுக்காக உழைப்பார் என்பதில் உறுதியான நம்பிக்கைக் கொண்டுள்ளதாகவும்
தெரிவித்தார் எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தலைவர் Twal.
ஆதாரம் – ANSA
4. வன்முறைகள் நிறுத்தப்பட யங்கூன் பேராயர் அழைப்பு
ஏப்.01,2013. மியான்மார் நாட்டின் மத்தியப்பகுதியில் அமைதி நிலவ, அந்நாட்டின்
முஸ்லீம் மற்றும் புத்த மதத்தவரிடையே நடைபெறும் வன்முறைகள்
நிறுத்தப்படவேண்டும் என அழைப்பு விடுத்தார் அந்நாட்டு யங்கூன் பேராயர்.
பலரின்
உயிரிழப்புக்கும் பல வீடுகள் மற்றும் வழிபாட்டுத்தலங்களின்
சேதமடைதலுக்கும் காரணமான அண்மை வன்முறைகள் நிறுத்தப்படவேண்டும் என தன்
அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ள யங்கூன் பேராயர் சார்லஸ் போ, அன்பும் இரக்கமும் அனைத்து மதங்களுக்கும் பொதுவானவை என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு
மதத்தவரும் ஒருவருக்கொருவர் செவிமடுத்து ஒன்றிணைந்த நடவடிக்கைகளில்
ஈடுபடவேண்டும் என்பது இன்றைய சூழலில் அவசரமானதும் அத்தியாவசியமானதும் என
பேராயர் விடுத்திருந்த அழைப்பை மியான்மாரின் கிறிஸ்தவ, இஸ்லாம், புத்த மற்றும் இந்து இளைய தலைமுறையினர் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாதம் 20ம் தேதி Meikhtila எனுமிடத்தில் இஸ்லாமியர்களுக்கும் புத்த மதத்தினர்களுக்கும் இடையே துவங்கிய வன்முறைகளால் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர், 37 சமய நிறுவனக் கட்டிடங்களும், 1227 வீடுகளும் சேதமடைந்துள்ளன.
ஆதாரம் - ASIANEWS
5. கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து இந்தோனேசிய பேராயர் கவலை
ஏப்.01,2013.
இந்தோனேசியாவில் தங்கள் வழிபாட்டுதலங்கள் அழிவுக்குள்ளாக்கப்பட்டுள்ளது
மற்றும் வழிபாடுகள் தடைச்செய்யப்பட்டுள்ளதால் துன்பங்களை அனுபவிக்கும்
அந்நாட்டு கிறிஸ்தவர்கள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்
அந்நாட்டு பேராயர் ஒருவர்.
இந்நாட்களில் வன்முறைச் சம்பவங்கள் மிக எளிதாக இடம்பெறுகிண்றன என தன் உயிர்ப்புவிழாச் சிந்தனைகளில் குறித்துள்ள செம்ராங் பேராயர் Johannes Maria Trilaksyanta Pujasumarta, பிரச்சினைகளுக்கு வன்முறைகள் ஒருநாளும் தீர்வாக முடியாது என்பதையும் அச்செய்தியில் கோடிட்டுக்காட்டியுள்ளார்.
கிறிஸ்தவர்களூக்கு எதிரான வன்முறைகள் இந்தோனேசியாவில் இடம்பெற்றுவருவது குறித்தும் தன் கவலையை வெளியிட்ட பேராயர் Pujasumarta, கிறிஸ்தவ வழிபாட்டு தலங்கள் மற்றும் பள்ளிக்கட்டிடங்கள் தொடர்புடைய பிரச்சினைகளில், அவைகளை முறியடிக்க பிறரால் வன்முறைகள் பயன்படுத்தப்படுகின்றன என்றார்.
உள்நாட்டுப்
பாதுகாப்பில் கவனம் செலுத்தவேண்டிய சில குழுக்களே கிறிஸ்தவ கட்டிடங்கள்
மீதான தாக்குதல்களை ஆதரிப்பது வருத்தம் தருவதாக உள்ளது என்ற பேராயர் Pujasumarta, மார்ச்
மாதம் 21ம் தேதி பெகாசி மாவட்டத்தின் கிறிஸ்தவக் கோவில் ஒன்று தல அரசு
அதிகாரிகளால் இடித்து சேதமாக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.
ஆதாரம் - UCAN
6. முடிவில்லாத கல்வாரியாகத் தெரியும் ஆப்கானிஸ்தான் நிலை விரைவில் உயிர்ப்பையும் காணவேண்டும் - அருள்தந்தை Moretti
ஏப்ரல்,01,2013. ஆப்கானிஸ்தான் நாட்டில் போர், வெறுப்பு, வறுமை என்ற பல துன்பங்களில் பங்கேற்கும் பல்லாயிரம் மக்கள் கிறிஸ்துவின் உயிர்ப்பிலும் பங்கேற்பர் என்ற நம்பிக்கையை வெளியிட்டார், அந்நாட்டில் பணிபுரியும் ஓர் அருள் பணியாளர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள இத்தாலிய தூதரகத்திற்குள் அமைந்துள்ள ஒரு சிறு பங்குதளத்தில் பணியாற்றும் அருள்தந்தை Giuseppe Moretti, முடிவில்லாத கல்வாரியாகத் தெரியும் அந்நாட்டின் நிலை விரைவில் உயிர்ப்பையும் காணவேண்டும் என்று கூறினார்.
ஆப்கானிஸ்தானில் இயங்கும் திருஅவை, முன்னைய காலத்தில் உரோம் நகரைச் சுற்றி புதைகுழிகளில் வாழ்ந்த கிறிஸ்தவர்களின் வாழ்வை நினைவுருத்துகிறது என்று கூறிய அருள்தந்தை Moretti, இத்திருஅவையின் அமைதியான சாட்சிய வாழ்வு பலரையும் இறைவன் பாதத்திற்கு அழைத்து வருகிறது என்றும் கூறினார்.
99
விழுக்காடு இஸ்லாமியர்களைக் கொண்டுள்ள ஆப்கானிஸ்தானில் செயல்பட்டுவரும்
அயல்நாட்டு இராணுவ வீரர்கள் மத்தியில் 6 பேர் ஆன்மீகக் குருக்களாகப்
பணிபுரிகின்றனர்.
இந்த 6 அருள் பணியாளர்களும், புனித
வியாழனன்று புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியில் திருத்தந்தை
பிரான்சிஸ் அருள் பணியாளர்களுக்கு விடுத்த சவால்களைக் கேட்டு தங்கள்
பணியில் இன்னும் ஆழப்பட்டதாக அருள்தந்தை Moretti கூறினார் என்று ஆசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆதாரம் – ஆசிய செய்தி நிறுவனம்
7. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் 20 இலட்சம் சிறாருக்கு அடிப்படை வசதிகள் கிடையாது
ஏப்.01,2013. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் ஏறக்குறைய 20 இலட்சம் சிறார் அடிப்படை சமூகநல உதவிகள் இன்றி உள்ளனர் மற்றும் அவர்கள், Séléka
புரட்சிக்குழுவின் வன்முறைக்கு உட்படும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர் என்று
யூனிசெப் என்ற ஐ.நா.வின் குழந்தை நல நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஆப்ரிக்காவில் மிகுந்த ஆபத்தை எதிர்நோக்கும் சில பகுதிகளிலுள்ள சிறாரில், மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் சிறாரும் உள்ளடங்குவர் என்று யூனிசெப் நிறுவனத்தின் மாகாண இயக்குனர் Manuel Fontaine கூறினார்.
மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள இச்சிறாருக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட Fontaine, மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் குறைந்தது 41 இலட்சம் பேர் நேரிடையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர், இவர்களில் ஏறக்குறைய பாதிப்பேர் சிறார் என்றும் தெரிவித்தார்.
அந்நாட்டில் கடந்த டிசம்பரிலிருந்து 12 இலட்சம் பேர் அடிப்படை வசதிகளின்றி துன்புறுகின்றனர் என்றும் யூனிசெப் கூறியுள்ளது.
No comments:
Post a Comment