Wednesday, 2 May 2012

Catholic News in Tamil - 30/04/12

1. திருப்பீட சமூக அறிவியல் கழகக் கூட்டத்திற்குத் திருத்தந்தையின் செய்தி

2. திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை

3. ஆப்ரிக்காவில் நடைபெற்றுள்ள கோவில் தாக்குதல்களுக்குத் திருப்பீடப் பேச்சாளரின் கண்டனம்

4. பார்வை இழந்தோரை மையப்படுத்தி வத்திக்கானில் நடைபெறும் கருத்தரங்கு

5. மியான்மாரில் மக்களை மையப்படுத்திய மாற்றங்களை அரசுத் தலைவரும், எதிர்கட்சித் தலைவரும் இணைந்து உருவாக்க வேண்டும் - ஐ.நா. பொதுச்செயலர்

6. இலங்கை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மிக விரைவில் அமுல்படுத்த ஐ.நா பொதுச்செயலர் கோரிக்கை

7. இரஷ்யாவில் வேதிப்பொருள் ஆயுதங்கள் அழிப்பு

8. தென் ஆப்ரிக்காவில் 35,000 கைதிகள் விடுதலை

------------------------------------------------------------------------------------------------------

1. திருப்பீட சமூக அறிவியல் கழகக் கூட்டத்திற்குத் திருத்தந்தையின் செய்தி

ஏப்ரல்,30,2012. திரு அவையின் சமூகப் படிப்பினைகளுக்கு சிறப்புப் பங்கீட்டை வழங்கிய திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் எழுதிய Pacem in Terris என்ற சுற்றுமடலின் 50ம் ஆண்டு விழாவைச் சிறப்பிக்கும் திருப்பீட சமூக அறிவியல் கழகக் கூட்டத்திற்குத் தன் வாழ்த்துக்களை வழங்கியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
உரோம் நகரில் 18வது நிறையமர்வுக் கூட்டத்தை நடத்தும் இத்திருப்பீட அவையின் தலவர் பேராசிரியர் மேரி ஆன் கெளண்டனுக்குத் தன் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளத் திருத்தந்தை, வல்லரசுகளிடையே பனிப்போர் உச்சக்கட்டத்தில் இருந்த வேளையில் திருத்தந்தை 23ம் ஜான் அவர்களால் வெளியிடப்பட்ட சுற்றுமடல் Pacem in Terris, நீதியும் அமைதியும் எல்லாக்காலத்திலும் சமூகத்தின் மற்றும் நாடுகளின் எல்லா நிலைகளிலும் ஊக்குவிக்கப்படவேண்டும் என்ற அழைப்பை விடுப்பதாக இருந்தது என்றார்.
கடந்த 50 ஆண்டுகளில் உலக நிலைகளில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்றுள்ள போதிலும், அமைதி மற்றும் நீதிக்கான சவால்களை எதிர்கொள்வதில் அத்திருத்தந்தையின் படிப்பினைகள் இன்றும் உதவிபுரிபவைகளாக உள்ளன என்றார் திருத்தந்தை.
"நீதியின்றி அமைதியில்லை, மன்னிப்பின்றி நீதியில்லை" என்ற திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் வார்த்தைகளையும் தன் வாழ்த்துச் செய்தியில் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.


2. திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை

ஏப்ரல்,30,2012. இறைவன் மனிதர்களுக்கு எப்போதும் அழைப்பை விடுத்துக்கொண்டே இருக்கிறார், ஆனால் நாம்தான் பலவேளைகளில் அதற்குச் செவிமடுப்பதில்லை என இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தேவ அழைத்தலுக்கான செப நாளான இஞ்ஞாயிறன்று ஒன்பது பேரை குருக்களாக‌ திருநிலைப்படுத்திய திருப்பலிக்குப்பின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளுக்கு அல்லேலுயா வாழ்த்தொலி உரை வழங்கிய பாப்பிறை, உலகின் மேலோட்டமான பல ஒலிகளால் நம் கவனம் திரும்பியுள்ளதாலும், இறைவனின் குரலுக்கு செவிமடுப்பதால் நம் சுதந்திரம் பறிபோய்விடும் என்ற தவறான அச்சத்தாலும் நாம் அவர் குரலுக்கு செவிமடுப்பதில்லை என்றார்.
நம் துன்பகரமான வேளைகளில் பலத்தை வழங்கும் இறை அன்பு சுவாசிக்கப்படும் முதலிடம் குடும்பமே என்பதையும் வலியுறுத்திய திருத்தந்தை, கடவுளால் விதைக்கப்பட்ட அனைத்து தேவ அழைத்தல் விதைகளும் தோட்டத்தில் முளைத்து மிகுந்த பயன் தரவேண்டும் என அனைவரும் செபிக்குமாறும் தன் இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையின்போது அழைப்பு விடுத்தார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.


3. ஆப்ரிக்காவில் நடைபெற்றுள்ள கோவில் தாக்குதல்களுக்குத் திருப்பீடப் பேச்சாளரின் கண்டனம்

ஏப்ரல்,30,2012. நைஜீரியாவிலும் கென்யாவிலும் அண்மையில் கிறிஸ்தவ மத வழிபாடுகளின்போது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மிகக் கொடூரமானவை என தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார் திருப்பீடப் பேச்சாளர்.
அனைவருக்கும் அமைதியையும் அன்பையும் அறிவிக்கும் ஒரு மதம் அமைதியான முறையில் தன் வழிபாட்டுக் கொண்டாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும்போது இடம்பெற்ற இத்தாக்குதல்களினால் துன்புறும் மக்களுடன் திருஅவை தன் அருகாமையை அறிவிக்கிறது என தன் செய்தியில் கூறியுள்ளார் இயேசுசபை அருள்தந்தை ஃபெதரிக்கோ லொம்பார்தி.
இக்கொலைகள் மீண்டும் கொலைகளுக்கே இட்டுச்செல்லும் வழிகளை மக்கள் தேர்ந்தெடுக்காமல், மதங்கள் ஒன்றையொன்று மதிக்கவும், மக்கள் அமைதியில் வாழவும் உதவும் வழிகள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என மேலும் கூறியுள்ளார் திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை லொம்பார்தி.
நைஜீரியாவின் Kano நகர் பல்கலைக்கழக வளாகத்தின் ஞாயிறு வழிபாட்டுக் கொண்டாட்டங்களின்போதும் Maiduguri நகர் கிறிஸ்தவக் கோவிலில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தாக்குதல்களிலும் 21 கிறிஸ்தவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, கென்ய தலைநகர் கோவிலில் ஞாயிறு வழிபாட்டின்போது குண்டு வீசி தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார், 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


4. பார்வை இழந்தோரை மையப்படுத்தி வத்திக்கானில் நடைபெறும் கருத்தரங்கு

ஏப்ரல்,30,2012. மே மாதம் 45 தேதிகளில் பார்வை இழந்தோரை மையப்படுத்தி வத்திக்கானில் கருத்தரங்கு ஒன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நலமளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோர் திருப்பீட அவையும், பார்வை இழந்தோர் கிறிஸ்தவ பணி அமைப்பும் இணைந்து நடத்தும் இக்கருத்தரங்கில் இறையியலாளர்கள், விவிலிய ஆய்வாளர்கள், சமுதாய ஆர்வலர்கள், கல்வித் துறை அறிஞர்கள் என்று பலரும் கலந்து கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் நோயால் துன்புறும் ஏழைகளுக்கு நிதி உதவி செய்வதற்காக 2004 ம் ஆண்டு அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களால் உருவாக்கப்பட்ட 'நல்ல சமாரியன்' என்ற அறக்கட்டளையின் உதவியுடன் இக்கருத்தரங்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவிலியத்திலும், திருஅவை வரலாற்றிலும் பார்வை இழந்தோருக்கு ஆற்றப்பட்டுள்ள பணிகள் குறித்து இக்கருத்தரங்கில் பேசப்படும் என்றும், தற்போதைய மருத்துவ உலகில் பாவை இழப்பைத் தடுப்பது, பார்வை இழப்பை குணமாக்குவது போன்ற கருத்துக்கள் விவாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


5. மியான்மாரில் மக்களை மையப்படுத்திய மாற்றங்களை அரசுத் தலைவரும், எதிர்கட்சித் தலைவரும் இணைந்து உருவாக்க வேண்டும் - ஐ.நா. பொதுச்செயலர்

ஏப்ரல்,30,2012. மாற்றங்களைத் துவக்கியிருக்கும் மியான்மாரில் மக்களை மையப்படுத்திய மாற்றங்களைத் தொடர்ந்து சிந்திக்க அரசுத் தலைவர் Thein Seinம், எதிர்கட்சித் தலைவர் Aung San Suu Kyiம் இணைந்து உழைக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டார்.
எதிர்கட்சியினர் முதன்முறையாகப் பங்கேற்கும் மியான்மார் பாராளுமன்றக் கூட்டத்தில் இத்திங்களன்று உரையாற்றிய பான் கி மூன், இராணுவ அரசின் தலைவரும், எதிர்கட்சித் தலைவரும் மியான்மார் அரசியலில் கொண்டுவந்துள்ள முயற்சிகளைப் பாராட்டிப் பேசினார்.
2009ம் ஆண்டு பான் கி மூன் மியான்மாருக்குப் பயணம் மேற்கொண்டபோது, அங்கு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த Suu Kyiயைச் சந்திக்க முடியாமல் திரும்ப வேண்டியிருந்தது.
இவ்விரு தலைவர்கள் மத்தியில் மட்டுமல்லாது, மியான்மாரில் பல நிலைகளிலும் ஒப்புரவு வளர்க்கப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலர் தன் உரையில் வலியுறுத்தினார்.
இதற்கிடையே, பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கவேண்டிய வாக்குறுதியில் இருந்த வார்த்தைகளை மாற்றவேண்டும் என்று Suu Kyi விடுத்திருந்த நிபந்தனைக்குத் தகுந்ததுபோல் இந்தப் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது என்றும், Suu Kyi உட்பட அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் விரைவில் வாக்குறுதி எடுத்து கலந்து கொள்வர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.


6. இலங்கை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மிக விரைவில் அமுல்படுத்த ஐ.நா பொதுச்செயலர் கோரிக்கை

ஏப்ரல்,30,2012. இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ஸாவிடம் வலுவான அரசியல் அதிகாரம் உள்ள நிலையில், கூடிய விரைவில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கி மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த பான் கி மூன், ‘இந்தியா டுடேக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற கடினமான வழியை இலங்கை மேற்கொண்டதைத் தான் மதிக்கும் வேளை, இராணுவ நடவடிக்கையின் இறுதி சில மாதங்களில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொலலப்பட்டது மற்றும் மனித உரிமைகள் மிக மோசமாக மீறப்பட்டது குறித்து பொருத்தமான சமூக அரசியல் வழியில் பதிலளிக்குமாறு இலங்கை அரசுத்தலைவரிடம் கேட்டுக்கொண்டதாகக் கூறினார் ஐ.நா. பொதுச்செயலர்.
இலங்கை அரசே நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ள ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன், போர் குறித்த முழுமையான பொறுப்பு கூறும் பொறிமுறை மிக விரைவில் உருவாக்கப்பட வேண்டும் என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஸாவை விண்ணப்பித்துள்ளார்.


7. இரஷ்யாவில் வேதிப்பொருள் ஆயுதங்கள் அழிப்பு

ஏப்ரல்,30,2012. இரஷ்யா தன்வசம் வைத்திருந்த ஏறத்தாழ 25 ஆயிரம் மெட்ரிக் டன் வேதிப்பொருள் ஆயுதங்களை அழித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் வேதிப்பொருள் ஆயுதங்களை பயன்படுத்தவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இரஷ்யா கடந்த 15 ஆண்டுகளாக தன் வசம் வைத்திருந்த வேதிப்பொருள் ஆயுதங்களை சிறிது சிறிதாக அழித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலவரப்படி சுமார் 62 விழுக்காடு அளவிற்கு ஆயுதங்களை அழிக்கப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ளவைகள் வரும் 2015ஆம் ஆண்டிற்குள் 100 விழுக்காடு அளவிற்கு அழித்து விட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


8. தென் ஆப்ரிக்காவில் 35,000 கைதிகள் விடுதலை

ஏப்ரல்,30,2012. தென் ஆப்ரிக்காவில் தேர்தல் தினத்தையொட்டி 35 ஆயிரம் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளையர்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட தென் ஆப்ரிக்காவில் கடந்த 1994ம் ஆண்டு தேர்தல் நடந்து, அந்த தேர்தலில் நெல்சன் மண்டேலா போட்டியிட்டு அதிபராக பதவியேற்ற தினத்தை கொண்டாடும் விதமாக அந்நாட்டில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இந்தச் சிறப்பு தினத்தைக் கொண்டாடும் விதமாக, பல்வேறு சிறைகளில் சிறு குற்றங்களுக்காக அடைக்கப்பட்டிருந்த 35 ஆயிரம் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...