1. புதிய
மறுமலர்ச்சியில் கத்தோலிக்கர் பங்கெடுக்குமாறு திருத்தந்தை வேண்டுகோள்
2. இயேசுவின்
போதனைகளின் வழியில், கடவுளுக்கும் மனிதருக்கும் தொடர்ந்து சேவை செய்யுமாறு
திருத்தந்தை அழைப்பு
3. Pro Life அமைப்பின் தாக்கம் உரோம் நகரிலும்
ஏற்பட்டுள்ளது மிகுந்த மகிழ்வைத் தருகிறது - வத்திக்கான் உயர் அதிகாரி
4.
ஒலிம்பிக் தீப பயணத்தின்போது செபங்களையும் எடுத்துச் செல்லும் ஒரு முயற்சி
5.
மியான்மாருடன் இந்தியா கூட்டுறவு முயற்சிகள்
மேற்கொள்வது இரு நாடுகளுக்கும் மிகுந்த பயனளிக்கும்
6. அகில
உலக குடும்பங்கள் நாளையொட்டி ஐ.நா.பொதுச் செயலர் வெளியிட்டுள்ள செய்தி
7.
இந்து தலித் மக்கள் அனுபவிக்கும் அடக்குமுறைகளை கிறிஸ்தவ தலித்துகளும்
அனுபவிக்கின்றனர் – இந்திய மத்திய அமைச்சர்
8.
தமிழ் தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் மலேசிய தமிழ் சமூகத்தைப் பாதிக்கின்றன
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. புதிய மறுமலர்ச்சியில் கத்தோலிக்கர் பங்கெடுக்குமாறு திருத்தந்தை வேண்டுகோள்
மே 14,2012. இக்காலத்திய கலாச்சாரப்
புதுப்பித்தலில் கத்தோலிக்கர் முழுமையாகப் பங்கேற்க வேண்டுமென்று வலியுறுத்தினார்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இத்தாலியின் டஸ்கன் மாநிலத்தின்
Arezzo, La Verna, Sansepolcro நகரங்களுக்கு ஒருநாள் மேய்ப்புப்பணித்
திருப்பயணத்தை மேற்கொண்ட போது, Arezzo நகரில் பல்லாயிரக்கணக்கான
விசுவாசிகளுக்குத் திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, சமுதாயத்தில்
மக்கள் புளிக்காரமாகவும் கிறிஸ்தவர்களாகவும் இருந்து புத்துணர்ச்சியுடனும்
ஒத்திணங்கியும் செயல்படுமாறும் கேட்டுக் கொண்டார்.
உலகில் நற்செய்தியையும் மீட்பையும்
அறிவிப்பதற்காக அகிலத் திருஅவையும் அனுப்பப்படுகின்றது, ஆயினும் இது எப்பொழுதும்
கடவுளின் திட்டத்தாலே நடக்கின்றது, அவர் நம்மைப் பல்வேறு பணிகளுக்கு அழைக்கிறார்,
அதனால் நாம் ஒவ்வொருவரும் பொது நலனுக்காக அவரவர் பங்கை ஆற்றுகின்றோம் என்றும்
கூறினார் திருத்தந்தை.
கவிஞர் Petrarch, ஓவியரும் கட்டிடக் கலைஞருமான Varasi
போன்ற மாபெரும் மறுமலர்ச்சியாளர்கள் பிறந்த பகுதி இது, இவர்கள்
கிறிஸ்தவ விழுமியங்களிலிருந்து உரம் பெற்று மனிதன் குறித்த கருத்தியலை உறுதிப்படுத்துவதில்
உயிர்த்துடிப்புள்ள அங்கம் வகித்தார்கள், இவர்களது செயல்கள், ஐரோப்பிய வரலாற்றில்
தடம் பதித்துள்ளன என்று மேலும் அவர் கூறினார்.
இந்த முன்னோர்களின் வரலாற்று சிறப்புமிக்க
நடவடிக்கைகளைக் குறிப்பிட்ட திருத்தந்தை, மனிதன் குறித்த எத்தகைய கண்ணோட்டத்தைப்
புதிய தலைமுறைகளுக்கு நாம் பரிந்துரைக்கின்றோம் என்ற கேள்வியையும் முன்வைத்தார்.
எல்லா மக்கள் மீதும் கடவுள் காட்டும்
அன்பை வாழ்வதற்கு விடுக்கப்படும் அழைப்பு, மனிதர் அனைவரின் மாண்பை மதித்தல்,
நலிந்தவர் மீது அக்கறையும் தோழமையுணர்வும் காட்டுதல் உட்பட புதிய கிறிஸ்தவக்
கலாச்சாரத்தைக் காணச் செய்கிறது என்று கூறினார் திருத்தந்தை.
இது, குறிப்பாக மனித வாழ்வை அதன்
தொடக்க முதல் இயற்கையான மரணம் அடையும்வரை பாதுகாப்பதிலும், நீதியும், நலிந்தவர்களுக்குப்
பாதுகாப்பு வழங்கும் சட்டங்கள் மூலம் குடும்பங்களைப் பாதுகாப்பதிலும்
வெளிப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.
இத்தாலியிலும் பிற பகுதிகளிலும்
தற்போது காணப்படும் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு கிறிஸ்தவர்கள் அசிசி
நகர் தூய பிரான்சிசின் சுடர்விடும் சான்று வாழ்க்கையை வழிகாட்டியாகக் கொள்ளுமாறு
பரிந்துரைத்தார் திருத்தந்தை.
இத்திருப்பலியில் இத்தாலியப்
பிரதமர் மாரியோ மோந்தியும் பங்கு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
1224ம் ஆண்டில் அசிசி நகர் தூய
பிரான்சிஸ் ஐந்து காய வரம் பெற்ற ஆலயம் அமைந்திருக்கின்ற La Verna
வுக்கு, மோசமான காலநிலையால் திருத்தந்தை இஞ்ஞாயிறன்று செல்லவில்லை.
ஆயினும் Sansepolcro நகருக்குச் சென்றார்.
இயேசுவின் திருமுகம் என அறியப்படும் புகழ்பெற்ற திருச்சிலுவை இங்கு உள்ளது.
2. இயேசுவின் போதனைகளின் வழியில், கடவுளுக்கும் மனிதருக்கும் தொடர்ந்து
சேவை செய்யுமாறு திருத்தந்தை அழைப்பு
மே 14,2012. இயேசுவின் போதனைகள்,
டஸ்கன் பகுதித் தூயவர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் மரபுகளின்படி கடவுளுக்கும்
மனிதருக்கும் தொடர்ந்து சேவை செய்து வருமாறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையில்
மக்களைக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Arezzoவில்
திருப்பலியை நிறைவு செய்த பின்னர் அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை, அப்பகுதி மக்கள்
அன்பு செய்து போற்றும் ஆறுதல் அன்னையின் தாய்க்குரிய அரவணைப்பில் அனைவரையும்
ஒப்படைப்பதாகக் கூறி அனைவரோடும் சேர்ந்து அல்லேலூயா வாழ்த்தொலி செபத்தையும்
செபித்தார்.
ஒருநாள் மேய்ப்புப்பணித் திருப்பயணத்தை
முடித்து, இஞ்ஞாயிறு இரவு வத்திக்கான் திரும்பினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
3. Pro Life அமைப்பின் தாக்கம் உரோம் நகரிலும் ஏற்பட்டுள்ளது மிகுந்த மகிழ்வைத்
தருகிறது - வத்திக்கான் உயர் அதிகாரி
மே,14,2012. மனித வாழ்வுக்கு
மதிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் அமெரிக்காவில் உருவாகியுள்ள
Pro Life அமைப்பின் தாக்கம் இத்தாலியின்
தலைநகரான உரோம் நகரிலும் ஏற்பட்டுள்ளது மிகுந்த மகிழ்வைத் தருகிறது என்று
வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மனித வாழ்வை மதிக்கும் ஒரு முயற்சியாக
அமெரிக்காவில் நடைபெறும் Pro Life பேரணிகளைப் போல், உரோம் நகரில் இஞ்ஞாயிறன்று
7000 க்கும் அதிகமானோர் கலந்துகொண்ட முதல் பேரணியில் பல குருக்களுடன் கலந்து கொண்ட
திருஅவையின் உச்ச நீதிமன்றத் தலைவரான கர்தினால் Raymond Burke இவ்வாறு கூறினார்.
உரோம் நகரில் உள்ள 150க்கும் அதிகமான
குழுக்கள் இணைந்து நடத்திய இந்தப் பேரணி, உரோம் நகரின் Colosseum என்ற பழம்பெரும் நினைவுச் சின்னத்திலிருந்து
துவங்கி, புனித
பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தை வந்தடைந்தது.
கிறிஸ்துவத்தின் தலைமை இடமாகவும், திருத்தந்தையின் நகரமாகவும்
உள்ள உரோமில் இதுபோன்ற ஒரு பேரணியைத் தான் இதுவரைக் கண்டதில்லை என்று இப்பேரணியை
ஏற்பாடு செய்திருந்த Juan Miguel Montes கூறினார்.
இப்பேரணியில் இளையோரின் ஈடுபாடு
தனக்குப் பெரிதும் ஆறுதலாக உள்ளது என்று கூறிய Montes, உயிர்கள் மீது இளையோர் பொதுவாகவே அதிக
மதிப்பு கொண்டுள்ளனர் என்று கூறினார்.
இப்பேரணியில் இத்தாலிய இளையோர் மட்டுமல்லாமல், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஹங்கேரி ஆகிய நாடுகளின் இளையோரும்
கலந்து கொண்டனர் என்று CNA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
4. ஒலிம்பிக் தீப பயணத்தின்போது செபங்களையும் எடுத்துச் செல்லும்
ஒரு முயற்சி
மே,14,2012. மேமாதம் 19ம்
தேதி, வருகிற
சனிக்கிழமைத் துவங்கி,
70 நாட்கள் இங்கிலாந்தின் பல நகரங்கள் வழியே இலண்டன் நகருக்கு
எடுத்துச் செல்லப்பட உள்ள ஒலிம்பிக் தீப பயணத்தின்போது செபங்களையும் எடுத்துச்
செல்லும் ஒரு முயற்சியில் More Than Gold, அதாவது, 'தங்கத்தையும் விட கூடுதலாக' என்ற அமைப்பு ஈடுபட்டுள்ளது.
More Than Gold என்பது
கத்தோலிக்கத் திருஅவை, இங்கிலாந்து திருச்சபை, உட்பட
இங்கிலாந்திலும் வேல்சிலும் உள்ள பல கிறிஸ்தவ சபைகள் இணைந்து உருவாகியுள்ள ஓர்
அமைப்பாகும்.
ஒலிம்பிக் தீபம் பயணம் செய்யும்
வழியே பல ஆயிரம் கிறிஸ்தவ சபைகள் உள்ளன. அச்சபைகளில் வாழும் அனைவரும் இத்தருணத்தைப்
பயன்படுத்தி தனியாகவும், குழுக்களாகவும் செபங்களை எழுப்புவதற்கு
இது அரியதொரு வாய்ப்பு என்று More Than Goldன்
அமைப்பாளர்களில் ஒருவரான Jane Holloway கூறினார்.
ஒலிம்பிக் தீபம் பயணம் செய்யும்
அதே வேளையில் செபங்களும் பயணம் செய்கின்றன என்பதன் அடையாளமாய் தொடர் ஓட்டங்களில்
பயன்படுத்தப்படும் ஒரு கோல் பல்வேறு சபைகளால் தொடர்ந்து அனுப்பப்படும் என்று ICN கத்தோலிக்க
செய்திக் குறிப்பு ஒன்று கூறுகிறது.
70 நாட்கள் நடைபெற உள்ள இந்த
செப முயற்சியில் Truro, Durham,
Newcastle, Whitby
ஆகிய பகுதிகளின் ஆயர்களும் கலந்துகொள்ள இசைவு தெரிவித்திருப்பதாக
இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.
5. மியான்மாருடன் இந்தியா கூட்டுறவு முயற்சிகள் மேற்கொள்வது இரு நாடுகளுக்கும் மிகுந்த பயனளிக்கும்
மே,14,2012. மக்களாட்சியை நோக்கி
நடைபயிலும் மியான்மாருடன் இந்தியா, அதிலும் சிறப்பாக இந்தியாவின் வடகிழக்குப்
பகுதி கூட்டுறவு முயற்சிகள் மேற்கொள்வது இரு நாடுகளுக்கும் மிகுந்த பயனளிக்கும்
என்று இயேசு சபை அருள்பணியாளர் Walter Fernandes, கூறினார்.
இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளின்
வர்த்தகத் தலைநகர் என்று கருதப்படும் குவகாத்தியில் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு
செய்திருந்த வடகிழக்குச் சமுதாய ஆய்வு மையத்தின் இயக்குனரான அருள்தந்தை Fernandes, இவ்விரு நாடுகளுக்கும் இடையே நிலவவேண்டியக் கூட்டுறவு முயற்சிகள்
குறித்து பேசினார்.
சட்டத்திற்குப் புறம்பாக இவ்விரு
நாடுகளுக்கும் இடையே நடைபெறும் போதைப் பொருள், ஆயுதம், மனிதர்கள் போன்ற
வர்த்தகத்தால் இரு நாடுகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக் காட்டிப்
பேசிய அருள்தந்தை Fernandes, அதிகாரப் பூர்வமான, ஆக்கப்பூர்வமான
கூட்டுறவு முயற்சிகள் இரு நாடுகளையும் முன்னேற்றும் என்று எடுத்துரைத்தார்.
மியான்மாரிலும், இந்தியாவின் வடகிழக்குப்
பகுதிகளிலும் வாழும் பழங்குடியினரின் பிரச்சனைகள் குறித்தும் இக்கருத்தரங்கில்
பேசப்பட்டன என்று UCAN
செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
6. அகில உலக குடும்பங்கள் நாளையொட்டி ஐ.நா.பொதுச் செயலர் வெளியிட்டுள்ள
செய்தி
மே,14,2012. சமுதாயத்தின் பொருளாதார
வளர்ச்சிக்குப் பாடுபடும் உழைப்பாளிகளின் குடும்பங்கள் பொருளாதார வளர்ச்சியுடனும், மகிழ்வுடனும் வாழ்வதற்கு
அரசுகள் வழி செய்ய வேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
மேமாதம் 15ம் தேதி, இச்செவ்வாயன்று
கொண்டாடப்படும் அகில உலக குடும்பங்கள் நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா.பொதுச்
செயலர் இவ்வாறு கூறினார்.
உழைப்பும் குடும்பமும் சமமான
முக்கியத்துவம் பெற வேண்டும் என்ற மையக் கருத்துடன் இவ்வாண்டு கொண்டாடப்படும் அகில
உலக குடும்பங்களின் நாள் பணியிடங்களில் மிக அதிக நேரத்தையும் சக்தியையும்
செலவிடும் தொழிலாளிகளின் பிரச்சனைகளை உணர்வதற்கு ஏற்ற ஒரு நாளாக உள்ளது என்று பான்
கி மூன் கூறினார்.
வளரும் நாடுகளில் நிலவும் பணிச்சூழல்
இலாபத்தை மட்டும் கவனத்தில் கொள்வதால், பணியாளர்களின் உடல் நலம் மற்றும்
அவர்களின் குடும்பங்களில் வளரும் குழந்தைப் பராமரிப்பு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன
என்று பான் கி மூன் தன் செய்தியில் சுட்டிக் காட்டியுள்ளார்.
குடும்ப நலனைப் பாதிக்காத வகையில்
வேலை நேரம்,
விடுமுறை நாட்கள், குழந்தைப் பராமரிப்பு ஆகிய அம்சங்களை
உள்ளடக்கிய ஒரு பணிச்சூழல் அனைத்து நாடுகளிலும் உருவாக்கப்படுவது அவசியம் என்று
ஐ.நா. பொதுச் செயலர் தன் செய்தியில் வலியுறுத்தினார்.
7. இந்து தலித் மக்கள் அனுபவிக்கும் அடக்குமுறைகளை கிறிஸ்தவ தலித்
மக்களும் அனுபவிக்கின்றனர் – இந்திய மத்திய அமைச்சர்
மே,14,2012. இந்தியாவில் இந்து
தலித் மக்கள் அனுபவிக்கும் அடக்குமுறைகளைக் கிறிஸ்தவ தலித் மக்களும் அனுபவிக்கின்றனர்
என்று மத்திய அமைச்சர் ஒருவர் கூறினார்.
இச்சனிக்கிழமை ஹைதராபாதில் நடைபெற்ற
ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையின்
அமைச்சராகப் பணியாற்றும் ஜெய்பால் ரெட்டி, தலித் கிறிஸ்தவர்களின் உரிமைகளை
நிலைநாட்ட தன் ஆதரவு உண்டு என்று கூறினார்.
கிறிஸ்து மலைப்பொழிவில் கூறிய
செய்திகள் காந்தியைப் பெரிதும் பாதித்தன என்பதைக் கூறிய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, தன்னலமின்றி
எளியோர் சேவையில் ஈடுபட்டுள்ள கிறிஸ்தவ அமைப்புக்களைப் பாராட்டினார்.
இந்து தலித் மக்களுக்கு
தரப்படும் அனைத்து சலுகைகளும் கிறிஸ்தவ தலித்துகளுக்கும் கிடைப்பதற்கு தான்
முயற்சி செய்வதாக ஆந்திர மாநில வீட்டுவசதித் துறையின் அமைச்சர் உத்தம் குமார்
ரெட்டி இக்கருத்தரங்கில்
உறுதி அளித்தார்.
8. தமிழ் தொலைக்காட்சி
நெடுந்தொடர்கள் மலேசிய தமிழ் சமூகத்தைப் பாதிக்கின்றன
மே,14,2012.
இந்தியாவிலிருந்து வரும் தமிழ் தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் மலேசிய தமிழ்
சமூகத்தைப் பாதிப்பதாக பினாங்கு பயனீட்டாளர் கழக கல்வி அதிகாரி சுப்பாராவ்
குற்றம்சாட்டுகிறார்.
செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளில்
வரும் தமிழ் நெடுந்தொடர்கள் மலேசிய தமிழ் சமூகத்தில் பெரும் பாதிப்புகளை
ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டும் பினாங்கு பயனீட்டாளர் கழகம், இத்தொடர்கள்
ஒளிபரப்பப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி மலேசிய அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
நெடுந்தொடர்களில் வரும் காட்சிகளும்
கதையும் பலவிதமான கலாச்சார சீரழிவிற்கு காரணமாக அமைந்துள்ளது என்று தமிழ்
மக்களிடையே தாங்கள் நடத்தும் கலந்துரையாடல்களில் தங்களுக்குத் தெரியவந்ததாக பினாங்கு
பயனீட்டாளர் கழகத்தின் கல்வி அதிகாரி என்.வி. சுப்பாராவ் தெரிவித்தார்.
செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளை
மக்கள் தாமாக விரும்பி கட்டணம் செலுத்திப் பார்க்கிறார்கள் என்பதால், அத்தொடர்களுக்கு
நேரடியாக அரசு தடை விதிக்க முடியாது என்று மலேசிய அரசு அதிகாரிகள் தனிப்பட்ட முறையில்
தங்களுக்குத் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
நெடுந்தொடர்களை பார்த்துவரும்
இளைஞர்களின் பழக்க வழக்கங்கள் மோசமடைவதாகவும், பெரியவர்களிடம் மரியாதைக் குறைவாக நடந்துகொள்ளுதல், வன்முறை பாதையில் செல்லுதல்
போன்றவற்றுக்கு அவர்கள் ஆட்படுவதாகவும் சுப்பாராவ் கூறினார்.
தொடர்களில் மூழ்கிப்போகும் பெண்கள்
சமையல், பிள்ளைகளைப்
பராமரித்தல் போன்ற வீட்டுக் கடமைகளில் தவறுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
தம்முடைய கோரிக்கையை மலேசிய அரசாங்கம்
தொடர்ந்து நிராகரிக்குமானால் பெரிய எதிர்ப்பு பிரச்சாரத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும்
பினாங்கு பயனீட்டாளர் கழகம் கூறுகிறது.
No comments:
Post a Comment