Sunday, 27 May 2012

Catholic News in TAmil - 25/05/12


1. செக் குடியரசுப் பிரதமர் Petr Necas, திருத்தந்தை சந்திப்பு

2. ஏழாவது அனைத்துலக குடும்ப மாநாட்டில் கலந்து கொள்வோருக்குப் பரிபூரண பலன்

3. வன்முறைகளுக்கு மத்தியில் எதிர்காலத்தைப் பற்றி பெண்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை மனித குலத்திற்கு ஒரு பாடம் - கர்தினால் Vegliò

4. சிரியாவுக்குள் புகுந்துள்ள வன்முறை கும்பல்களால் நாட்டின் அமைதிக்கு பெரும் ஆபத்து - Aleppo வின் அப்போஸ்தலிக்க நிர்வாகி

5. நீதியுடனும், நேர்மையுடனும் செயல்படக்கூடிய ஒருவரை அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் - தென் கொரிய ஆயர்கள் அழைப்பு

6. மன்னாரில் கத்தோலிக்க அருட்பணியாளர்களுக்கு காவல்துறை நெருக்கடி

7. சிறைக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்களை நீதி விசாரணைக்கு உட்படுத்தக் கோரி உண்ணாநோன்பு போராட்டம்

------------------------------------------------------------------------------------------------------

1. செக் குடியரசுப் பிரதமர் Petr Necas, திருத்தந்தை சந்திப்பு

மே25,2012. செக் குடியரசுப் பிரதமர் Petr Necas அவர்கள், இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை சுமார் இருபது நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசினார் என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
திருத்தந்தையைச் சந்தித்த பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே, திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் செக் பிரதமர் Necas.
இச்சந்திப்பின்போது, புனித நார்பெர்ட் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட பிராக் நகரின் மிகப் பழமையான Strahov துறவுமடத்தைச் சேர்ந்த 9ம் நூற்றாண்டு திருவிவிலியத்தைத் திருத்தந்தைக்குப் பரிசாகக் கொடுத்தார் செக் பிரதமர்.
திருத்தந்தையும், செக் பிரதமருக்கு, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்திலுள்ள பெர்னினி தூண் வடிவம் போன்ற விலைமதிப்பற்ற பேனாவை அளித்தார்.


2. ஏழாவது அனைத்துலக குடும்ப மாநாட்டில் கலந்து கொள்வோருக்குப் பரிபூரண பலன்

மே25,2012. இம்மாதம் 30 முதல் ஜூன் 3 வரை இத்தாலியின் மிலான் நகரில் நடைபெறும் ஏழாவது அனைத்துலக குடும்ப மாநாட்டில் கலந்து கொள்வோருக்குப் பரிபூரணபலன் சலுகையை வழங்கியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பாவமன்னிப்புச்சலுகை வழங்கும் அப்போஸ்தலிக்க நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள ஆணையில் திருத்தந்தை வழங்கியுள்ள இந்தப் பரிபூரணபலன் பாவமன்னிப்புச் சலுகை தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்தக் குடும்ப மாநாட்டில் பங்கு கொள்வதற்கு ஆன்மீகரீதியாகத் தங்களைத் தயாரிப்போருக்கும், இந்நிகழ்வில் கலந்து கொள்ள இயலாமல் இருக்கும், அதேவேளை செபத்தாலும், குறிப்பாக, இம்மாநாட்டு நிகழ்வுகளில் திருத்தந்தையின் உரைகளைத் தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் கேட்பவர்க்கும் இச்சலுகையைத் திருத்தந்தை வழங்குகிறார் என்றும் அந்த ஆணை தெரிவிக்கிறது.
மேலும், விசுவாசிகள், குடும்பங்களின் நலனுக்காகச் செபிக்கும் ஒவ்வொரு நேரமும் இந்தப் பரிபூரண பலனின் ஒரு பகுதியைப் பெறுகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
பரிபூரணபலன் என்பது பாவத்திற்கானத் தற்காலிகத் தண்டனை கடவுள் திருமுன் மன்னிக்கப்படுவதாகும்.


3. வன்முறைகளுக்கு மத்தியில் எதிர்காலத்தைப் பற்றி பெண்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை மனித குலத்திற்கு ஒரு பாடம் - கர்தினால் Vegliò

மே,25,2012. புலம் பெயர்ந்தோரில் பெண்கள் அதிக வன்முறைகளுக்குப் பலியாகின்றனர் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் திருப்பீடத் தூதரகம் புலம் பெயர்ந்தோரின் பிரச்சனைகளை மையப்படுத்தி உரோம் நகரில் இவ்வியாழனன்று ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில், புலம்பெயர்ந்தோர், பயணிகள் ஆகியோருக்குப் பணிபுரியும் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Antonio Maria Vegliò உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
"வாய்ப்புகளுக்கான பாலங்களை உருவாக்குதல்: பெண்களும் புலம்பெர்யர்தலும்" என்ற தலைப்பில் அமைந்திருந்த கர்தினால் Vegliòவின் உரையில், கட்டாயமாகப் புலம்பெயரும் நிலைக்குத் தள்ளப்படும் மக்களிடையே, பெண்கள் அதிக வன்முறைகளுக்குள்ளாவதால், ஆழமான உள்மனக் காயங்களை அவர்கள் வாழ்வு முழுவதும் சுமக்க வேண்டியுள்ளது என்று எடுத்துரைத்தார்.
பாலியல் வன்முறை என்பது போர்களில் பயன்படுத்தப்படும் ஒரு வன்முறைத் திட்டமாக உருவெடுத்துள்ளது என்ற ஆபத்தைச் சுட்டிக்காட்டிய கர்தினால் Vegliò,  'குலங்களைச் சுத்தமாக்குதல்' (‘ethnic cleansing’) என்ற ஒரு தவறான எண்ணத்தால் பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பதை வலியுறுத்தினார்.
மனித வர்த்தகத்தில் பெருமளவில் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதையும் எடுத்துரைத்த கர்தினால் Vegliò, இத்தனை வன்முறைகளுக்கும் மத்தியில் பெண்கள் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை கொண்டிருப்பது மனித குலத்திற்கு ஒரு பாடமாக அமைகிறது என்று கூறினார்.


4. சிரியாவுக்குள் புகுந்துள்ள வன்முறை கும்பல்களால் நாட்டின் அமைதிக்கு பெரும் ஆபத்து - Aleppo வின் அப்போஸ்தலிக்க நிர்வாகி

மே,25,2012. சிரியாவின் அமைதியைக் குலைப்பதற்கு வேற்று நாடுகளிலிருந்து அந்நாட்டுக்குள் ஊடுருவியிருக்கும் வன்முறை கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன என்று Aleppo வின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Giuseppe Nazzaro கூறினார்.
லிபியா, துனிசியா, துருக்கி, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து சிரியாவுக்குள் புகுந்துள்ள வன்முறை கும்பல்களும் அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கும் அமைப்புக்களும் சிரியாவின் அமைதிக்கு பெரும் ஆபத்தாக அமைந்துள்ளன என்று ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் ஆயர் Nazzaro கூறினார்.
சிரியாவில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே அமைதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், அமைதியை விரும்பாத பிற நாட்டு வன்முறை கும்பல்கள் சிரியாவில் குழப்பங்களை உருவாக்கி வருகின்றன என்று ஆயர் Nazzaro குற்றம் சாட்டியுள்ளார்.
வன்முறைகள் தொடர்வதால், நாட்டில் கிடைக்க வேண்டிய மருத்துவ உதவிகளும்  நாளுக்கு நாள் குறைந்து வருகிறதென்றும் ஆயர் Nazzaro குறை கூறியுள்ளார்.


5. நீதியுடனும், நேர்மையுடனும் செயல்படக்கூடிய ஒருவரை அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் - தென் கொரிய ஆயர்கள் அழைப்பு

மே,25,2012. தென் கொரியாவில் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் நீதியுடன், நேர்மையுடன் செயல்படக்கூடிய ஒருவரை மக்கள் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அந்நாட்டு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
தென் கொரிய அரசுத்தலைவர் அகில உலக அரசியல் விடயங்களில் ஈடுபடவேண்டிய ஒருவராக இருப்பதால், ஊழல், பேராசை, அநீதி ஆகிய குறைகளற்ற ஒருவரை அப்பதவிக்குத் தேர்ந்தெடுப்பது மக்களின் கடமை என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.
தென் கொரிய ஆயர்களின் எண்ணங்களை உள்ளடக்கிய ஓர் அறிக்கையைப் பேரவையின் சார்பில் செயலர் அருள்தந்தை Thaddaeus Lee Ki-shelf, Fides செய்தி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார்.
உங்கள் ஒவ்வொரு குலத்திலும் ஞானமும், அறிவாற்றலும், நற்பெயரும் கொண்டவர்களைத் தேர்வு செய்யுங்கள். நான் அவர்களை உங்களுக்குத் தலைவர்களாக ஏற்படுத்துவேன்” (இணைச்சட்டம் 1: 13) என்று விவிலியத்தின் இணைச்சட்ட நூலில் கூறப்பட்டுள்ள வார்த்தைகளை தங்கள் அறிக்கையில் மேற்கோளாகக் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், இன்றைய உலகில் கடவுள் தரும் ஒளியைக் கொண்டு தலைவர்களைத் தேர்ந்தெடுக்க அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறியுள்ளனர்.


6. மன்னாரில் கத்தோலிக்க அருட்பணியாளர்களுக்கு காவல்துறை நெருக்கடி

மே25,2012. இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வேலைவாய்ப்பு, நிலஅபகரிப்பு போன்றவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் நோக்கத்திலும்,  மன்னார் ஆயருக்கு எதிராக அமைச்சர் ஒருவர் தெரிவித்த தேவையற்ற குற்றச்சாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மன்னார் மறைமாவட்ட குருக்கள் எதிர்ப்பு நிகழ்வொன்றை இஞ்ஞாயிறன்று நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், மன்னார் கத்தோலிக்க குருகுல முதல்வர் உட்பட ஐந்து அருட்பணியாளர்களை மன்னார் நீதிமன்றத்தின் விசாரணைக்குச் செல்லுமாறு அவசரகால காவல்துறை ஆணை பிறப்பித்துள்ளது என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
மன்னார் ஆயர் ஜோசப் ராயப்பு, ஏற்கனவே இலங்கை அரசின் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அமைச்சர் ரிசாட் பதியுதீனால் தேவையற்ற விதத்தில்  விமர்சிக்கப்பட்டுள்ளார்.
மன்னாரிலிருந்து தலைமன்னார்க்குச் செல்லும் முக்கிய சாலையில் உள்ள கட்டுக்காரன் குடியிருப்பு கிராமத்தில் உள்ள மன்னார் ஆயர் இல்லம் மற்றும் அப்பகுதி மக்களுக்குச் சொந்தமான சுமார் 600 ஏக்கர் நிலத்தை இந்த அமைச்சரின் சகோதரர் ஒருவர் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததும் அண்மையில் செய்தியாக வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நில அபகரிப்பு தொடர்பாக மன்னார் ஆயர் உள்ளிட்ட அக்கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தலைமன்னார் காவல்துறையில் புகார் செய்திருந்தனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.


7. சிறைக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்களை நீதி விசாரணைக்கு உட்படுத்தக் கோரி உண்ணாநோன்பு போராட்டம்

மே,25,2012. இலங்கையில் சிறைக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை நீதி விசாரணைக்கு உட்படுத்தி, அவர்களை விடுவிக்கக் கோரி இவ்வியாழனன்று 500க்கும் அதிகமான மனித உரிமை ஆர்வலர்கள் உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2009ம் ஆண்டு மேமாதம் முடிவுற்ற உள்நாட்டுப் போருக்குப் பின் மூன்றாண்டுகள் கழிந்தபின்னரும் தமிழர்களை எவ்வித விசாரணைக்கும் உட்படுத்தப்படாமல் சிறைகளில் அடைத்து வைத்திருப்பது அநீதி என்று இந்த உண்ணாநோன்பு போராட்டத்தில் கலந்து கொண்ட பெருமாள் பூமிநாதன் கூறினார்.
பல சிறைகளில் தமிழர்கள் தாங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கோரி, சாகும்வரை உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டிய பூமிநாதன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறைக் கைதிகளில் பலரது நிலை மோசமடைந்துள்ளது என்பதையும் எடுத்துரைத்தார்.
இலங்கைச் சிறையில் விசாரணையின்றி அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு விரைவில் தீர்வு காணப்படவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் மே மாதத் துவக்கத்தில் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...